மனித உடல் வளர்ச்சியில் பெரும்பங்கு வகிப்பதில் கனிமங்களுக்கும் இடம் உண்டு. அதில் குறிப்பிடத்தக்கவை கால்சியம், பொட்டாசியம், போன்றவையாகும். உடல் வளர்ச்சிக்கு தேவைப்படும் கணிமங்களில் சல்பர் கனிமமும் முக்கியமானது.
70 கிலோ எடையுள்ள ஒருவரின் உடலில் 140 கிராம் சல்பர் உள்ளது. மனித உடலில் உள்ள எல்லா செல்களிலும் திசுக்களிலும் இது ஓரளவுக்குக் காணப்படுகிறது என்றாலும் தோல், தசை, நரம்பு, நகம், முடி போன்ற இடங்களில் உள்ள செல்களில் மிகுதியாகக் காணப்படுகின்றது. இது நாம் சாப்பிடும் உணவுகளிலிருந்து சிறுகுடலில் உறிஞ்சப்படுகிறது. அதிகப்படியாக உள்ள சல்பர் சிறுநீரிலும், மலத்திலும் வெளியேறுகிறது. தினமும் ஒரு கிராம் சல்பர் சிறுநீரில் வெளியேறுகிறது.
சல்பர் கனிமமானது மனித உடலில் ஓரளவு தனித்தும் செயல்படுகிறது. பிற தாதுக்களுடன் இணைந்து சல்பேட் அல்லது சல்பைடு எனும் வேதி நிலைக்கு மாறியும் செயல்படுகிறது.
உதாரணமாக சல்பர் கால்சியத்துடன் இணைந்து கால்சியம் சல்பேட்டாகவும், சோடியத்துடன் இணைந்து சோடியம் சல்பேட்டாகவும், மெக்னீசியத்துடன் இணைந்து மெக்னீசியம் சல்பேட்டாகவும் மாற்றமடைந்து பல வேதி வினைகளில் ஈடுபடுகிறது. சல்பர் இம்மாதிரியான வேதி வினைகளில் ஈடுபடுவதுதான் அதிகம்.
சல்பர் மிகுந்துள்ள உணவுகள்.
வழக்கமாக நாம் உண்கிற பல உணவுகளில் சல்பர் உள்ளது. கேழ்வரகு, கம்பு, சோளம், அரிசி போன்ற தானியங்களிலும், பலாப்பழம், தர்ப்பூசணி, பிளம்ஸ், அன்னாசிப்பழம், தக்காளி போன்ற பழங்களிலும் காலிஃப்ளவர், பச்சைப் பட்டாணி, முருங்கைக்காய், முட்டைக் கோஸ், புரோக்கோலி, அவரை, வெங்காயம், வெள்ளைப் பூண்டு, டர்னிப் போன்ற காய்களிலும் சல்பர் உள்ளது. முட்டையின் மஞ்சள் கரு, கோழி, இறைச்சி, மீன் போன்ற அசைவ உணவுகளில் சல்பர் மிகுந்துள்ளது. பால் மற்றும் பாலில் தயாரிக்கப்பட்ட நெய், வெண்ணெய், பாலாடைக் கட்டி, பால்கோவா, பால் அல்வா போன்ற உணவுப் பொருள்களிலும் சல்பர் கனிமம் உள்ளது.
சல்பர் என்ன செய்யும்.
நமது உடலின் வளர்ச்சியில் சல்பர் நேரடியாக உதவுவதைவிட மறைமுகமாக உதவுவதுதான் அதிகம். உதாரணமாக உடல் தசைகளின் வளர்ச்சிக்கு அடிப்படையாக இருக்கும் உணவுச் சத்து புரதம். அந்தப் புரதங்களின் அடிப்படை அலகு அமினோ அமிலங்கள், அதாவது அமினோ அமிலங்கள்தான் புரதச்சத்து உருவாக்கத்தில் பெரும்பங்கு வகிப்பது.
சல்பர் கனிமமானது, கிளைசின், செரின், மெத்தியோனின், சிஸ்டைன் எனும் நான்கு அமினோ அமிலங்களில் காணப்படுகிறது. இந்த அமினோ அமிலங்களின் உற்பத்திக்கு சல்பர் தேவைப்படுகிறது. வேதிக் கட்டமைப்பின்படி இந்த அமினோ அமிலங்கள் உருவாவதற்கு எஸ்.எஸ் இணைப்புகள் தேவை. இந்த இணைப்புகளைத் தருவது சல்பர்தான்.
வளர்ச்சி அடையும் எலும்புகள் மற்றும் குருத்தெலும்புகளில் சல்பர் கனிமமானது “கான்ட்ராய்டின் சல்ஃபேட் (Chondroitin Sulfate ) எனும் வேதி நிலையில் உள்ளது. ஆகவே, எலும்புகளின் வளர்ச்சிக்கும் வலிமைக்கும் சல்பர் உதவுகிறது என்பது தெளிவு.
இதுபோல் நகத்தின் வளர்ச்சிக்கு அடிப்படையாக உள்ள கேராடின் ‘ Keratin’ எனும் புரதப் பொருளில் சல்பர் மிகுந்துள்ளது. நகத்தின் கடினத் தன்மைக்கும் பலத்துக்கும் சல்பர்தான் காரணம். தலைமுடியிலும் சல்பர் உள்ளது. தலைமுறையின் நிறம், கனம் மற்றும் ஆரோக்கியத்தைக் காப்பதிலும் சல்பர் பங்கெடுத்துக் கொள்கிறது.
தயாமின், பயாடின் போன்ற வைட்டமின்களின் உற்பத்திக்கும் சல்பர் தேவைப்படுகிறது. தயாமின் வைட்டமின் தோலின் ஆரோக்கியத்தைக் காக்கிறது. பயாடின் வைட்டமின் தலைமுடியைக் காக்கிறது. ஆக, இந்த வைட்டமின்களின் உற்பத்திக்கு சல்பர் உதவுவதால் தோல் மற்றும் தலைமுடி ஆரோக்கியத்துக்கும் சல்பரின் பங்களிப்பு உள்ளது. பித்த அமிலங்களில் காணப்படுகின்ற ‘டாரின்’ (Taurine) எனும் அமினோ அமிலம் கொழுப்புணவு செரிமானமாவதற்கு உதவுகிறது. இந்த டாரின் உடலில் செயல்படுவதற்கு சல்பர் தேவைப்படுகிறது.
இது மட்டுமல்ல, இன்சுலின் ஹார்மோன் மற்றும் இமுனோ குளோபுலின் உற்பத்திக்கும் சல்பர் தேவை. இதுபோல், பென்டோதெனிக் அமிலம், லிப்பாயிக் அமிலம், குளுட்டதயான் போன்றவை உருவாக்கும் துணை என்சைம்களிலும் சல்பர் உள்ளது. இவற்றின் பணிகளுக்கும் சல்பர் உதவுகிறது.
நமக்கு மூட்டுவலி வராமலிருக்க சல்பர் அவசியம். எப்படி? எலும்புகளும் தசைகளும் இணைகிற இடங்களில் இணைப்புத் திசுக்கள் (Connective Tissues) இருக்கும். இந்த இணைப்புத் திசுக்களில் முறையாக உருவாகவும் சரியான வளர்ச்சியைப் பெறவும் சல்பர் அவசியம். குறிப்பாகக் கூறினால், இணைப்புத் திசுக்களில் உள்ள கொலஜன் எனும் புரதப் பொருள் உற்பத்திக்கு சல்பர் உதவுகிறது.
கொலஜன் உடலில் சரியான அளவில் இருந்தால்தான் கால் மூட்டுகள், கை மூட்டுகள், முதுகெலும்பு, மூட்டுகள் போன்றவை முறையாக இயங்கும் என்பதால், மூட்டுகளின் இயக்கத்துக்கும் மறைமுகமாக சல்பர் உதவுகிறது.
நமக்கு தினமும் சல்பர் எவ்வளவு தேவைப்படுகிறது எனும் அளவு இதுவரை கணிக்கப்படவில்லை. புரதப் பொருள்களில் உள்ள பல அமினோ அமிலங்களில் இந்தக் கனிமம் உள்ள காரணத்தால் இதன் தேவை தனியாக அறியப்படவில்லை. மேலும், ஒருவர் உடலில் தேவையான அளவுக்குப் புரதச் சத்து தேவைப்படுகின்ற சல்பர் கிடைத்துவிடும் என்பதை மட்டும் புரிந்து கொண்டால் போதும். அடுத்து, இந்தியர்களின் உணவுப் பழக்கத்தின்படி பல உணவுகளில் சல்பர் உள்ள காரணத்தால, நம் உடலில் சல்பர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பே இல்லை. இதுவரை சல்பர் குறைபாடு காரணமாக எந்தநோயின் அறிகுறியும் மனித உடலில் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.