பொங்கல் பண்டிகை என்றாலே நினைவுக்கு வருவது தோகையுடன் கூடிய கரும்பு, ஔவை பிராட்டியார் விநாயகரிடம் சங்கத்தமிழ் மூன்றையும் கொடுக்க வேண்டி, அவற்றுக்கு பதிலாக பாலும், தெளிதேனும், பாகும், பருப்பு இவை நான்கும் கொடுப்பதாக கூறுகிறார். இதில் பாகு என்பது கரும்பின் பாகு இனிமைக்கு எடுத்துக் காட்டு கரும்பு.
பல வகைகளுள்ள கரும்பு 2 லிருந்து 6 மீட்டர் உயரம் வரை வளரும். கணுக்கள் உள்ள துண்டுகளை நட்டு பயிரிடப்படும். ஒரு தடவை நட்டால், பல தடவை அறுவடை செய்யலாம். முதல் அறுவடையில் கிடைக்கும் கரும்பின் அளவு அடுத்த அறுவடைகளில் குறைந்து கிடைக்கும். விவசாய முறைகளின் படி, 2 லிருந்து 10 அறுவடைகள் வரை கிடைக்கலாம்.
தென் அமெரிக்காவில் அறுவடையின் போது, கரும்பு நிலத்தை நெருப்பிட்டு விடுவார்கள். காய்ந்த உலர்ந்த இலைகள் எரிந்து, கூடவே விஷப்பாம்புகளும் எரிந்து விடும். ஆனால் கரும்போ, வேர்களோ நெருப்பினால் பாதிக்கப்படாது! பிறகு அறுவடை செய்வது சுலபம்.
உலகிலேயே கரும்பு அதிகம் விளைவது தென் அமெரிக்க கண்டத்திலுள்ள ‘பிரேசில்‘ நாட்டிலாகும். அடுத்தது இந்தியா. பிறகு சீனா, மற்றபடி தென் அமெரிக்க நாடுகள், மேற்கிந்திய தீவுகள், க்யூபா இவைகளிலும் கரும்பு பயிரிடப்படுகிறது.
இந்த நாடுகளில் கரும்புத் தோட்டங்களில் வேலை செய்ய பல இந்தியர்கள் ஆங்கிலேயர்களால் கொண்டு செல்லப்பட்டனர். அடிமைகளாக நடத்தப்பட்ட இவர்கள் பட்ட வேதனைகளை மகாகவி பாரதியார் ‘கரும்புத் தோட்டத்திலே‘ என்ற பாடலில் சித்தரித்தார்.
உலகில் கிட்டத்தட்ட 200 தேசங்களில் கரும்பு பயிரிடப்பட்டு, 1324 மில்லியன் டன்கள் சர்க்கரை உற்பத்தி செய்யப்படுகிறது. முதலில் இந்தியாவில் தான் 2500 வருடங்களுக்கு முன் சர்க்கரை உருவாக்கப்பட்டது. கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் அரேபியர்கள் மத்திய தரைக்கடல் தேசங்களில் சர்க்கரையை அறிமுகப்படுத்தினர். ஸ்பெயினில் ஆரம்பித்த கரும்பு, அங்கிருந்து வட தென் அமெரிக்காவுக்கு பரவியது. கிறிஸ்டோபர் கொலம்பஸ்ஸால் மேற்கிந்திய தீவுகளில் பயிரிடப்பட்டது. கரும்புத் தோட்டங்களில் வேலை செய்ய போதிய உள்ளூர்வாசிகள் இல்லாததால், ஆப்ரிக்கா, இந்தியா தேசங்களிலிருந்து அடிமைகள் கொண்டு செல்லப்பட்டனர்.
கரும்பு, பருத்தி இந்த இரண்டு பயிர்களின் விவசாயத்திற்காகத்தான், அடிமைத் தொழிலே ஆரம்பித்தது என்று சொல்லாம். கரும்பு முழுப்பயன் தரும் தாவரம். ஆலைகளில் சர்க்கரை எடுக்கப்பட்ட பிறகு நார் போன்ற கழிவுப்பொருள் எரிபொருளாக ஆலையிலேயே பயன்படுத்தப்படுகிறது. ஆலையின் எரிபொருள் தேவை போக மிஞ்சிய மாட்டுதீவனமாக, காகிதம் தயாரிக்க மற்றும் மின்சாரம் தயாரிக்கவும் உதவுகிறது.
ஆலையில் கரும்புச்சாறுடன் சுண்ணாம்பு கலக்கப்படுவதால், அதிலுள்ள கசடுகள் நீக்கப்படுகின்றன. சாறு சுண்ணாம்பு கலவை அப்படியே உலர வைக்கப்படுகிறது. உலர வைக்கும் தட்டுக்களில் சர்க்கரை படிமங்களாக தேங்கிவிடுகிறது. இது பிரிக்கப்பட்டு மிஞ்சும் சிரப் லிருந்து பல தடவை மறுபடியும் சர்க்கரை எடுக்கப்படுகிறது.
இந்த சர்க்கரை மஞ்சள் அல்லது பழுப்பு நிறமாக இருக்கும். வெள்ளை சர்க்கரை செய்ய, முதலிலேயே கரும்புச்சாற்றில் சல்பர்-டை-ஆக்ஸைட் செலுத்த வேண்டும். இவ்வாறு கிடைக்கும் வெண் சர்க்கரை தான் உலகெங்கும் உபயோகப்படும் சர்க்கரை. இது மறுபடியும் பல வித சுத்திகரிப்பு நிலைகளை கடந்த பின் தான், ‘பண்பட்ட‘ சர்க்கரை ஆகிறது.
சரகஸம்ஹிதையின் படி கரும்பு 13 வகைப்படும். கரும்பு வாத பித்தங்களை தணிக்கும். சிறுநீரை வெளியேற்றும்.
கரும்பின் சிறப்பான தன்மைகள்
கரும்பு மலத்தை வெளியேற்றும்.
உடலுக்கு செழிப்பையும், மகிழ்ச்சியையும் தரும்.
இரத்த தோஷத்தை வெளியேற்றும்.
பாணிதம் எனப்படும் பாகு போல் காய்ச்சிய கருப்பஞ்சாறு உடலை வளர்க்கும்.
விந்துவையும் கபத்தையும் வளர்க்கும். சிறுநீர்ப்பையை தூய்மைப்படுத்தும்.
மத்ஸ்யண்டி
சிறிதளவே நீர் மிகுந்திருக்க காய்ச்சிய கருப்பஞ்சாறு மத்ஸ்யண்டி எனப்படும். இது விந்துவை வளர்க்கும்.
வெல்லம்
இது நீர்ப்பசையின்றி கெட்டியாக காய்ச்சப்பட்ட கருப்பஞ்சாறு, விந்துவை வளர்க்கும்.
சிறுநீரை தூய்மைப்படுத்தும்.
மூலநோய், காமாலை, இரத்த பித்தம், சிறுநீர்ப்பை கல் இவற்றுக்கு நல்லது.
கற்கண்டு
குளுமைத்தன்மை கொண்டது.
விந்துவையும், உடல் வலிமையையும் வளர்க்கும்.
கண்களுக்கு நன்மை தரும்.
கபத்தை வளர்க்கும்.
சர்க்கரை
இனிப்பும், குளுமைத்தன்மையும் உடையது
வாதம், பித்தம், காய்ச்சல் இவற்றை போக்கும்.
தவிர கரும்புப்பாலால் செய்த மது கிரஹணியை தணிக்கும். கருப்பஞ்சாற்றில் தேன் கலந்து பருக சோகை நோய் தணியும்.
கருப்பஞ்சாற்றில் சர்க்கரை கலந்து தடவினால் அக்கி தணியும்.
எச்சரிக்கை
கரும்பு, கரும்பு பொருட்களை அளவோடு பயன்படுத்த வேண்டும். மேற்கூறியவை சரகஸம்ஹிதையில் சொல்லப்பட்டவை. நம் நாட்டு மருந்துகளில் கரும்பின் பாகு முக்கிய அங்கம் வகிக்கிறது. சூரணம், லேகியம் எதுவாகினும், கரும்புச்சர்க்கரை பாகு தான் உபயோகிக்கப்படுகிறது. கரும்பை நிலத்திலிருநது பிடுங்கி பற்களால் கடித்து உண்பதில் பற்கள், ஈறு பலப்படுகின்றன. வெய்யில் காலத்தில் கிடைக்கும் இஞ்சி, எலுமிச்சம் சாறு சேர்ந்த கரும்பு ஜுஸ் வெப்பத்தை தணிக்கும். தினசரி சாப்பிடாமல் வாரம் 3 நாட்கள் இந்த சாற்றை பருக பித்தம், உடல் வறட்சி குறையும்.
கரும்பு சாற்றில் அத்திப்பழத்தை வேக வைத்து பருக மூலநோய் சரியாகும். கல்கண்டு சேர்த்து காய்ச்சிய பாலில், 1 ஸ்பூன் முருங்கைப் பூ சேர்த்து பருகி வர தாது வலிமை பெருகும். முருங்கைப்பூவிற்கு பதில் பேரிச்சம்பழமும் சேர்க்கலாம். பொதுவாக மஞ்சள், கற்கண்டு கலந்து காய்ச்சி பால், தொண்டை வலி, இருமலுக்கு நல்லது. கருப்பஞ்சாறு வாதத்தையும், கபத்தையும் போக்கும்.
உணவு நலம் ஜனவரி 2011
கரும்பின், இனிமை, பொங்கல் பண்டிகை, பொங்கல், சர்க்கரை உற்பத்தி, மாட்டுதீவனமாக, காகிதம், மின்சாரம், சிரப், சல்பர்டைஆக்ஸைட், சரகஸம்ஹிதை, வாத பித்தங்கள், சிறுநீர், கரும்பின், சிறப்பான, தன்மைகள், மலம், உடலுக்கு இரத்த தோஷம், விந்து, சிறுநீர்ப்பை, வெல்லம், கருப்பஞ்சாறு, மூலநோய், காமாலை, இரத்த பித்தம், சிறுநீர்ப்பை கல், கற்கண்டு, கண்கள், சர்க்கரை, வாதம், பித்தம், சோகை நோய்,
எச்சரிக்கை, மருந்துகள், தொண்டை வலி,