மாதமொரு கீரை மணத்தக்காளிக்கீரை

Spread the love

வாய்ப்புண்ணா? மணத்தக்காளி கீரையை வாயில் போட்டு மென்று துப்புங்கள் எனும் பாட்டி வைத்தியம் இன்றும் பலன் தரும். மணத்தக்காளியில் இலைகள் மட்டுமல்ல, இதன் காய்களும் பலன் தருபவை. மணத்தக்காளி ஒரு மீட்டர் உயரம் வளரும் செடி. இலைகள் பச்சை நிறமாகவும், பூக்கள் வெள்ளை நிறமாகவும் இருக்கும். காய்கள் முதலில் பச்சை நிறமாகவும், பின்பு சிவப்பாகி கருமையாகும். காய்கள் கருமிளகு போல் இருப்பதால் இது மிளகு தக்காளி என்றும் அழைக்கப்படும்.

கீரையின் பொதுத் தன்மைகள்

உடல் தேற்றி, சிறுநீர் பெருக்கி, வியர்வைப் பெருக்கி, கோழை அகற்றி.

மருத்துவப் பயன்கள்

வாய்ப்புண், வயிற்றுப்புண்களை ஆற்றும் ஆற்றல் படைத்தது மணத்தக்காளிக்கீரை. கையளவு கீரையை எடுத்து வாயில் போட்டு மெல்ல வாய்ப்புண்கள், நாக்குப் புண்கள் ஆறும். உடலுறுப்புகளில் வேறெங்கும் புண் இருந்தால் அவையும் குணமாகும்.

வெறும் கீரையை உண்டாலே வாய்ப்புண்களை ஆறும். சிறிது மஞ்சள் பொடியை சேர்த்து கீரையை வேக வைத்து உண்டால் புண்கள் சீக்கிரம் ஆறும். குடல் புண்களையும், மணத்தக்காளி ஆற்றும். வாய்ப்புண், நாக்குப்புண், வாய்வேக்காடு, குடல் புண் போன்றவற்றுக்கு மணத்தக்காளிகீரை கண்கண்ட மருந்தாகும். வாய் வெந்திருக்கும் போது மணத்தக்காளி + சிறிது சீரகம் + ஒரு மிளகாய் வற்றல் சேர்த்து, எண்ணெய்யில் வதக்கி, தண்ணீர் சேர்த்து வேக வைத்து, பிறகு அதில் தேங்காய்ப்பால் சேர்த்து வேக வைத்து உண்டால் வாய்ப்புண் உடனே குணமாகும்.

காய், கீரை இரண்டையும் உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் காங்கை (சூடு) தணியும். உடல் குளிர்ச்சியடையும். ஒரு கைப்பிடி அளவு கீரையுடன் ஒரு ஸ்பூன் பார்லி, நான்கு சிட்டிகை மஞ்சள் பொடி சேர்த்து கஷாயமாக செய்து குடித்து வர சிறுநீர் நன்கு பிரியும். நீர்க்கடுப்பு, எரிச்சர் குணமாகும்.

இலைச்சாற்றை வெளிப்புண்கள் மேல் தடவினாலும் ஆறிவிடும்.

இலைச்சாற்றை சர்மம், தேமல், சொறி சிரங்கு இருக்கும் இடத்தில் தடவினால் அவை மறையும். மணத்தக்காளி இலைச்சாற்றுடன் பால் சேர்த்து குடித்து வர, காமாலை குணமாகும்.

உடல் இளைத்திருப்பவர்கள் மணத்தக்காளி சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட உடல் பருக்கும். வாத நோய்கள் குணமாக, மணத்தக்காளி கீரையை உப்பு போட்டு சமைத்து சாப்பிட வேண்டும். கப நோய்களுக்கும் நல்ல மருந்தாகும். கப நோய்கள் தீர, ஒரு கைப்பிடி மணத்தக்காளிக்கீரையை எடுத்து 10 மிளகு, 3 திப்பிலி, 4 சிட்டிகை மஞ்சள் பொடி கலந்து விழுதாக அரைத்து, அதில் தேன் கலந்து சாப்பிட்டால் சளி, கபம், இருமல் தணியும்.

மணத்தக்காளிக்கீரை மலச்சிக்கலை போக்கும்.

உடல் எடை குறைய, மணத்தக்காளி கீரையை 100 கிராம் எடுத்து கொதிக்கும் நீரில் 5 (அ) 10 நிமிடம் போட்டு எடுத்து 2 வெங்காயம் (அரிந்தது) + பாதி எலுமிச்சை பழச்சாறு சேர்த்து கஷாயம் தயாரிக்கவும். இதை காலை உணவுக்கு பின் சாப்பிட்டால் அதிஸ்தூலம் (அதிக உடல் பருமன்) குறையும்.

மணத்தக்காளிப்பழம் கர்ப்பிணிகளுக்கு நல்லது. கருவை வலிமையாக்கும்.

மணத்தக்காளி செடியை இலை, காய், பழம் இவற்றுடன் சேர்த்து இடித்து பிழிந்தெடுத்த சாறு கல்லீரல் வீக்கம், கணைய வீக்கம் ஆகியவற்றுக்கு சிறந்த மருந்தாகும்.

100 கிராம் மணத்தக்காளியில் உள்ள சத்துக்கள்

நீர்ச்சத்து         – 82.1 கிராம்

புரதம்             – 5.9 கிராம்

கொழுப்பு         1.0 கிராம்

தாது உப்புகள்    2.1 கிராம்

சர்க்கரைச்சத்து   8.9 கிராம்

சுண்ணாம்புச்சத்து – 410 மி.கி.

பாஸ்பரஸ்         70 மி.கி.

இரும்பு             – 20.5 மி.கி.

ரிபோஃபிளேவின்  0.59 மி.கி.

நியாசின்            0.9 மி.கி.

வைட்டமின் சி     11 மி.கி.

கலோரித் திறன்    68 கலோரி

மணத்தக்காளி சூப்

தேவை

மணத்தக்காளி கீரை  – 2 கப்

பெரிய வெங்காயம்    – 1

பூண்டு                  3 பல்

தேங்காய்ப்பால்        – 1 கப்

உப்பு                    – சுவைக்கேற்ப

மிளகுத்தூள்            – சிறிதளவு

எண்ணெய்             1 டேபிள்ஸ்பூன்

செய்முறை

கீரையை ஆய்ந்து சுத்தம் செய்யுங்கள் வெங்காயம் பூண்டு தோலுரித்து பொடியாக நறுக்குங்கள். குக்கரில் எண்ணெயைக் காயவைத்து பூண்டு, வெங்காயம் சேர்த்து சிறிது வதக்கி, பிறகு கீரையையும் சேர்த்து மேலும் 2 நிமிடம் வதக்கி, 2 கப் தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வைத்து இறக்குங்கள். ஒரு நிமிடம் கழித்து, குக்கரை திறந்து மிளகுத்தூள், தேங்காய்ப்பால் சேர்த்துக் கலந்து பரிமாறுங்கள்.

உணவு நலம் அக்டோபர் 2010

மாதமொரு, கீரை, மணத்தக்காளிக்கீரை, வைத்தியம், கீரையின் பொதுத் தன்மைகள், உடல் தேற்றி, சிறுநீர் பெருக்கி, வியர்வைப் பெருக்கி, கோழை அகற்றி, மருத்துவப் பயன்கள், வாய்ப்புண்கள், நாக்குப்புண்கள், உடலுறுப்பு, வாய்வேக்காடு, குடல் புண், மருந்து, உடல் காங்கை, சூடு, உடல் குளிர்ச்சி, சிறுநீர், நீர்க்கடுப்பு, வெளிப்புண்கள், சர்மம், தேமல், சொறி, சிரங்கு, காமாலை, வாத நோய்கள், கப நோய்கள், சளி, கபம், இருமல், மலச்சிக்கல், உடல் எடை, அதிஸ்தூலம், உடல் பருமன், கர்ப்பிணிகள், கல்லீரல் வீக்கம், கணைய வீக்கம், 100, கிராம், மணத்தக்காளியில், சத்துக்கள், நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புகள், சர்க்கரைச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு, ரிபோஃபிளேவின், நியாசின், வைட்டமின் சி, கலோரித் திறன், மணத்தக்காளி சூப், செய்முறை, மணத்தக்காளி கீரை, பெரிய வெங்காயம், பூண்டு, தேங்காய்ப்பால், உப்பு, மிளகுத்தூள், எண்ணெய்,


Spread the love
error: Content is protected !!