உப்பும் உடல் நலமும்

Spread the love

லவணம் (உப்பு) பசி, ஜீரணத்தை தூண்டும். தனியாகவோ, அதிகமாகவோ உபயோகிப்பதால், ரத்தத்தை கெடுத்து, உஷ்ணத்தை உண்டாக்கும், சரும வியாதிகளை உண்டாக்கும், ரண வீக்கங்களை உடைக்கும், ஆண்மையை குறைக்கும், தலை முடி நரைக்கச் செய்யும், முகத்தில் சுருக்கங்கள் தோன்றும். உடலின் உள், ரத்தம் கசிவதற்கும், மயக்கத்திற்கும் உப்பு காரணமாகும்.

சரகஸம்ஹிதை.

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும், டாக்டர் உட்பட அனைவரும் கூறும் முதல் ஆலோசனை, உப்பைக்குறை என்பது தான்.

உப்பு இயற்கையாக கடல் நீர்களிலிருந்து பெரும்பாலும் கிடைக்கும். கடல் நீரை உலர வைத்து எளிய முறையில் தயாரிக்கப்படும். உப்பு உணவின் முக்கிய அம்சம். ஆனால் தற்போது உப்பே பல கோளாறுகளுக்கு முக்கியமாக உயர் இரத்த அழுத்தத்திற்கு காரணம் என்று கருதப்படுகிறது. இதனால் மாரடைப்புக்கும் உப்பே காரணமாகும். சாதாரண, ‘நார்மல்ரத்த அழுத்தம் உள்ளவர்களில் 25 சதவிகிதமும், உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்களில் 60 சதவிகிதமும், உப்பிற்கு ஒவ்வாதவர்கள். அதாவது இவர்கள் அதிக உப்பு உட்கொணடால் அதற்கேற்ப ரத்த அழுத்தமும் ஏறும். இதில் காரணம் உப்பில் உள்ள சோடியம். சோடியம் தண்ணீரை தக்க வைக்கும் குணமுடையது. இதனால் ரத்த கொள்ளளவு அதிகமாகும். இதனால் ரத்த அழுத்தம் அதிகமாகும். சிறுநீர் வெளியேறுதல் குறைந்து, உடல் உப்புசம் அடையும். தவிர சோடியம் சிறு ரத்தக்குழாய்களை சுருக்கும். ரத்த ஒட்டம் இதனால் தடைப்படும்.

உப்புக்கும், உயர் அழுத்தத்திற்கும் உள்ள தொடர்பு குறைவான முக்கியத்துவம் உடையதே என்று மாறுபாடான கருத்தை ஒரு காலத்தில் இங்கிலாந்து மெடிக்கல் ஜர்னலில் குறிப்பிடப்பட்டு ஒரு கட்டுரை வந்திருந்தது. ஆனால் இதை மற்ற மருத்துவ நிபுணர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. தீவிர ஆராய்ச்சி, தவிர கண்கூடாக காணும் அனுபவங்களால், உணவில் உப்பை குறைத்தால் உயர் இரத்த அழுத்தம் சீராகிறது என்று நிரூபிக்கப்பட்ட உண்மை. எனவே உணவில் உப்பை தவிருங்கள்.

நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் உப்பின் விஞ்ஞானப் பெயர் சோடியம் குளோரைட். இதில் உள்ள சோடியம், உடலின் நீர்மச்சத்துக்களை சீராக சம அளவில் வைத்திருத்தல், இதயத்துடிப்பை சீராக வைத்திருத்தல், நரம்பு இயக்கங்கள், தசைகள் விரிந்து சுருங்கவும் உதவுகிறது. உணவுக்கு சுவையூட்டுகிறது. உணவு செரிக்க உதவும்.

உப்பை இருவகையாக பிரிக்கலாம்.

இயற்கையாக கிடைக்கும் உப்பு

செயற்கையாக தயாரிக்கும் உப்பு.

இயற்கை உப்புகள்

சைந்தவ லவணம் – பாறை உப்பின் சமஸ்கிருதம் பெயர். தமிழில் இந்துப்பு எனப்படுகிறது. இவை களிமண், கால்சியம் சல்பேட், மினரல்களும் சேர்ந்து, பாறைகளில் கிடைக்கிறது. இந்த பாறையில் துளைகள் போடப்படுகின்றன. இந்த துளைகளில் பாறையிலிருந்து சுரக்கும் நீரை, உலர வைத்து உப்பு தயாரிக்கப்படுகிறது.

இந்துப்பு சிறிய அளவில், கொடுத்தால் அஜீரணத்திற்கு நல்லது. பசியை தூண்டி, ஜீரணத்தை தூண்டும். அதிக அளவில் வாந்தியை உண்டாக்கும். பசியின்மை, வாய்வு, பித்தக்கோளாறுகளுக்கு கொடுக்கப்படும் ஆயுர்வேத சூரணங்களில் இந்துப்பு இடம் பெறுகிறது. பஞ்சாபில் கனிமப் பொருளாக இந்துப்பு வெட்டியெடுக்கப்படுகிறது.

சமுத்திர லவணம் – பெயருக்கேற்ப சமுத்திரங்களிலிருந்து கிடைக்கும் உப்பு. தினமும் சமையலறையில் பயன்படுத்தப்படும் உப்பு, ஆன்டி – செப்டிக், வயிற்றுப்பூச்சிகளை அழிக்கும் குணங்களுடையது. நாக்கில் உமிழ்நீரை அதிகம் பெருக்கி, உணவுப்பொருட்களை வாயில் மெல்வதற்கு உதவுகிறது. உப்பின்றி மற்ற பொருட்கள் ஜீரணமாவது கடினம். இதனால் தான் உப்பில்லா பண்டம் குப்பையிலேஎன்கிறார்கள்.

ஆனால் உப்பை அதிகம் சேர்த்துக் கொள்வது அபாயமானது. பல நோய்களுக்கு ஆயுர்வேதம் உப்பில்லா பத்தியத்தை வலியுறுத்துகிறது. உப்பு நிறைந்த உணவு வலி, துக்கம், நோய்களை தரும் என்கிறது பகவத்கீதை.

சிறுநீர் பிரியாமல் வீக்கங்கள் இருந்தால் உப்பை தவிர்க்க வேண்டும். மேற்சொன்ன இருவகை உப்புக்கள் முக்கியமானவை.

இதர உப்புகள்

ஸாம்பர் உப்பு – இந்த வகை உப்பு பஞ்சாபிலுள்ள சாம்பர் ஏரியிலிருந்து கிடைக்கும்.

சான்சல் கிருஷ்ணலவணம், கரும்உப்பு – செயற்கையாக தயாரிக்கப்படும் இந்த உப்பு கருமை வண்ணம் என்றாலும் உண்மையில் பழுப்பு நிறமானது. இது உணவுக்கு பலமான வாசனை, ருசியை தரும் உப்பு. சாஸ்தீரிய, பரம்பரை இந்திய சமையலில் இடம் பெறுகிறது. வயிற்றுக்கோளாறுகள், அஜீரணம், கல்லீரல், மண்ணீரல் வீக்கங்கள், வாய்வுத்தொல்லை போன்றவற்றுக்கு மருந்தாக பயனாகிறது.

சுவர்சலை – சாதாரண உப்பை சோடா கரைசலில் கரைத்து உலர வைத்து தயாரிக்கப்படுகிறது. இதில் சோடியம் குளோரைட் சோடா சல்பேட், காஸ்டிக் சோடா ஆகியவை உள்ளன. வயிற்று குன்மங்களுக்கு மருந்தாகும். மலமிளக்கி, ஜீரணத்தை தூண்டும். வயிற்றுப்பூச்சிகளை அழிக்கும். பித்தத்தை போக்கும்.

ஔத்பிதலவணம் – உலர் மண்ணிலிருந்து கிடைக்கும் உப்பு. பஞ்ச லவணங்களில் ஒன்று. கசப்பு சுவையுடன் உள்ள அல்கலீன் சோடியம் சல்ஃபேட் செறிந்த இந்த உப்பில் சோடியம் குளோரைட் குறைவு.

க்ஷாரங்கள் – யவக்ஷாரம் – (மர உப்பு, சாம்பல் உப்பு, யவசாரம்) தாவரங்கள், குறிப்பாக பார்லி செடியின் தாள்களை சுட்டெரித்து, சாம்பலை நீரில் கரைத்து, துணியில் வடிகட்டி, சூட்டில் உலர வைத்து எடுக்கப்படுகிறது. பொட்டாசியம் குளோரைட், பொட்டாசியம் சல்ஃபேட், பொட்டாசியம் கார்பனேட் மற்றும் பொட்டாசியம் பை கார்பனேட் முதலிய பொட்டாசிய உப்புக்களின் கலவை.

இதன் மருத்துவ உபயோகங்கள் பல. மூட்டு வாத நோய்கள். சிறுநீர் சுருக்கு, சிறுநீரக கற்கள், வயிற்று வலி, வயிறு உப்புசம் அதிக அமில சுரப்பு முதலிய பல நோய்களுக்கு மருந்தாக யவக்ஷாரம் பயனாகிறது. இதில் 10 துகள்கள் எடுத்து ஆடாதொடை இலை சாற்றுடன் (10 துளிகள்) கலந்து வெற்றிலையுடன் கொடுக்க பிராங்கைடீஸ் (சுவாச கோளாறு) குறையும். கப, வாத நோய்களுக்கு ஆயுர்வேதம் யவக்ஷாரத்தை பயன்படுத்துகிறது.

சர்ஜக்ஷாரம் – சோடியம் பிரிவை சேர்ந்த இந்த உப்பு மூன்று வகைப்படும். சஜ்ஜிதர்

வாஷிங்சோடா

சுத்தீகரிக்கப்படாத சோடா கார்பனேட்

சாம்பலிலிருந்து சர்ஜக்ஷாரம் கிடைக்கும். யவக்ஷராத்தைப் போலவே பயன்படும். ஆனால் தரத்தில் யவக்ஷாரத்தை விட சிறிது குறைந்தது.

சாதாரண சமையல் உப்பும், உயர்ரத்த அழுத்தமும்

உணவில் சேர்த்துக் கொள்ளும் உப்பு எவ்வாறு உயர் ரத்த அழுத்தத்தை உண்டாக்குகிறது என்பது சிக்கலான முழுமையாக தெரியாத விஷயம். ஆனால் அனுபவரீதியாக உப்பு இரத்த அழுத்தத்தை ஏற்றுகிறது என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

உப்பின் தேவை

உடலுக்கு 500 மி.கி. அளவில் (கால் தேக்கரண்டி) உப்பு போதுமானது. சில நிபுணர்கள் ஒரு ஆரோக்கியமான நபருக்கு 2500 மி.கி. தேவை என்கின்றனர். இந்தியா போன்ற வெப்ப நாடுகளில் சோடியம் உப்பு எவ்வளவு தேவை என்பது சரிவர உறுதியாக கணிக்ப்படவில்லை என்கிறது தேசீய ஊட்டச்சத்து நிறுவனம் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூட்ரிசன் இந்த நிறுவனம், தினசரி 8 லிருந்து 10 கிராம் வரை எடுத்துக் கொள்ளலாம் என்று பரிந்துரைக்கிறது. வெப்பம் அதிகமானாலும், அதிக வியர்வை உடலிலிருந்து வெளியேறினாலும் சிறிதளவு அதிக உப்பு தேவைப்படும். ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் சாப்பிடும் உப்பு சோடியத்தை தருகிறது. இந்த அளவுகள்.

ஒரு தேக்கரண்டி உப்பு – 2000 மி.கி. சோடியம்

முக்கால் தேக்கரண்டி உப்பு – 1500 மி.கி. சோடியம்

அரை தேக்கரண்டி உப்பு – 1000 மி.கி. சோடியம்

கால் தேக்கரண்டி உப்பு – 500 மி.கி.

நூறு கிராம் சாதாரண உப்பில் 40 கிராம் சோடியம் இருக்கும்.

உப்புள்ள பண்டங்கள்

எல்லாவகை, டின்னில் அடைக்கப்பட்ட, பதனிடப்பட்ட உணவுகள், ஊறுகாய்கள், பதனிடப்பட்ட மாமிச உணவுகள், மீன் உணவுகள் முதலியன.

எல்லாவகை சீஸ்கள், காலை உணவுகள் (குறிப்பாக தானிய உணவுகள், பிஸ்கட்கள், ரெடிமேட் சூப், சாஸ் உணவுகளை கெடாமல் வைக்கும் மானோசோடியம் க்ளூடமேட் உப்பு சேர்த்த வேர்க்கடலை, இரத கொட்டைகள், ரெடிமேட் உருளைக்கிழங்கு வறுவல்கள், சாக்லேட் முதலியன.

உப்பின் சரித்திரம்

உணவை பாதுகாக்க குளிர்சாதனப்பெட்டி  நூறு வருடங்களாகத்தான் உபயோகப்படுகிறது. அதற்கு முன்பு, ஆயிரக்கணக்கான வருடங்களாக உப்பு தான் உணவுப்பண்டங்களை பதனிட, கெடாமல் பாதுகாக்க உதவி வருகிறது. ரூமேனியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால உப்பாலை கி.மீ. 6050 ல் அமைக்கப்பட்டதாக தெரிகிறது. சீனாவிலும் கண்டுபிடிக்கப்பட்ட பழைய உப்பாலைகள் 6000 வருடங்கள் தொன்மையானவை.

அதிக உப்பின் அபாயங்கள்

உயர் இரத்த அழுத்தம்

இதய பாதிப்பு

நீர்க்கோர்வை

குடற்புண்கள் (அல்சர்)

நெஞ்செரிச்சல்

ஆஸ்டியோபொராசிஸ் எலும்பு பலவீனம்

உப்பை உணவில் குறைக்க முடியாமல் போவது, உப்பை எடுத்துவிட்டால் உணவில் ருசி இல்லை. உப்பு இல்லாமல் குறைத்து சாப்பிடுவதை பழக்கமாக்கி கொள்ள வேண்டும். இது மிக அவசியம். குறைந்த உப்பிட்டே சமைக்கலாம், ருசி கெடாமல் இதற்காக சில யோசனைகள்.

முன் தயாரிக்கப்பட்ட ரெடிமேட் உணவுகளை வாங்காதீர்கள். அப்பளம், வடாம், வத்தல், இலை வடாம் இவற்றை தொடாதீர்கள். அதுவும் ஊறுகாய்களில் 750 மி.கி. சோடியம் உப்பு உள்ளது. ஊறுகாயை வேண்டவே வேண்டாம்.

உப்பு சேர்க்காமல் தயாரிக்கப்படும் சலாட், போன்றவைகளை அதிகமாக தயாரிக்கவும்.

நூடுல்ஸ், பிட்சா இவைகளையும் ஒதுக்குங்கள்.

இலவங்கப்பட்டை, கிராம்பு போன்றவற்றை உணவில் சேர்த்தால், உப்புக்கு மாற்றான சுவை கிடைக்கும்.

பனீர், சீஸ் இவற்றை உபயோகிக்க நேர்ந்தால் இவற்றை தண்ணீரில், நன்கு அலசவும் உப்பு குறையும்.

வேக வைத்த காய்கறிகளுடன், துருவிய எலுமிச்சம் ஆரஞ்ச்பழத்தோல்கள் சேர்க்கலாம்.

பழங்கள், காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொண்டால் உப்பின் தேவை குறையும்.

மாமிச உணவு சமைக்கும் போது சுவை கூட்ட எலுமிச்சம்பழ சாறு, வினிகர், நசுக்கிய பூண்டு, கடுகுப்பொடி, வெட்டிய வெங்காயம் இவற்றையெல்லாம் உபயோகிக்கலாம். கடையில் வாங்கும் மசாலா பொடிகளை தவிர்த்து வீட்டிலேயே தயார் செய்த மசாலாக்களை (வீட்டில் தயாரித்தவை) உபயோகிப்பதால் உப்பை குறைத்து போடுங்கள்.

உப்பை குறைத்து மூலிகைகள், வாசனை சரக்குகளை அதிகம் உபயோகியுங்கள்.

நாம் சாப்பிடும் உணவிலேயே உப்புச்சத்து இருப்பதால், தனியாக உப்பை சேர்க்க வேண்டியது அவசியமில்லை.

பலருடைய சந்தேகம் சோடியம் உப்புக்கு பதில் மாற்று உண்டா என்பது. இல்லை சோடியம் கெடுதி என்றால் பொட்டாசியம் சேர்த்துக் கொள்ளலாமா பொட்டாசியம் உப்பின் ருசியை தராது. தவிர கசக்கும். பொட்டாசியம் உடலுக்கு நல்லது தான். ஆனால் சிறிதளவு கூட அதிகமாக உடலில் சேரக்கூடாது. அதுவும் நீரிழிவு நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படும்.

To Buy Food Products>>


Spread the love