முக்கனியில் முதல் கனி “’மா”

Spread the love

தெய்வீக சுவையுடன் கூடிய மாம்பழத்தை தரும் மாமரம், இந்தியாவின் தனி ஒரு சொத்து என்று நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது. உஷ்ண மண்டல பிரதேசங்களில் விளையும் மாம்பழம் உலகில் புகழ் பெற்ற பழம். தற்போது இந்தியாவில் பரவலாக, பல வகைகளில், இரகங்களில், பயிரிடப்படும் மாம்பழம் தான் இந்தியர்களுக்கு பிடித்த பழங்களில் முதன்மையானது. 600 வகைகள் இருக்கும் மாம்பழத்தில், முக்கியமான 40 ரகங்கள் இந்தியாவில் விளைகின்றன. “மேங்னிஃபெரா”  (Mangi fera) இனத்தை சேர்ந்த மாம்பழம் “அனா கார்டியாசே” (Anacardiaceae) குடும்பத்துடன் சேர்ந்தது.

இந்தியாவின் தேசிய பழமான மாங்கனி, கடவுளின் கனி என்று குறிப்பிடப்படுகிறது. மாமரத்தின் விஞ்ஞான பெயர் – Mangi fera Indica. தாவர விவரங்கள்:

மாமரம் சாதாரணமாக 35 – 40 மீட்டர் உயரம் வளரும். அடர்த்தியான பசும் பச்சைநிற இலைகளுடன் மாமரம் 10 மீட்டர் (தலையை சுற்றிய விட்டம்) விஸ்தீரணத்தை ஆக்ரமித்துக் கொள்ளும். நல்ல நிழல் தரும் மாமரம் கொசுக்களுக்கும் புகலிடம் தருகிறது! மாம்பூக்கள் சிறியதாக, வெண்ணிறமாக, குறைந்த நறுமணத்துடன் இருக்கும். பூக்கள் போன பின், காய்கள் கனிய 3-6 மாதங்கள் ஆகலாம். பழுத்த கனி மஞ்சள், ஆரஞ்சு அல்லது சிகப்பு நிறங்களுடன் மிளிரும். பறித்த மாங்காய்/ கனி காம்பிலிருந்தும், கனியின் மேல் சிந்தியிருக்கும் மாம்பால் வாசனை தூக்கலாக இருக்கும். பழத்தின் நடுவில் புதைந்து இருக்கும் மாங்கொட்டை பல ” சைசில்” (Size)  இருக்கும். மாங்கொட்டைக்கும் கதுப்புக்கும் இடையே மெல்லிய தோல் கொட்டையை மூடியிருக்கும். மரம் நட்டவுடன், பழ விளைச்சல் 6 வருடங்களில் தொடங்கலாம். 40 வருடங்களுக்கு பின் விளைச்சல் குறையும்.

வேளாண்மை:

சில மாமர ரகங்கள் கொட்டையை பயன்படுத்தி பயிரிடப்படுகின்றன. ‘ஒட்டு’ முறையில் பயிரிடப்படும் மரங்களே சிறந்த பழங்களை தருகின்றன. புகழ் பெற்ற ரகங்கள் “அல்ஃபான்ஸோ” மற்றும் “மல்கோவா”.

மருத்துவ பயன்கள்:

மாம்பழம் சத்துக்கள் செறிந்த பழம். பல வைட்டமின்கள், தாதுப் பொருட்கள், என்ஸைம்கள்  (Magneferin, Lactase) அடங்கியவை. இவை சீரணத்துக்கு உதவும். மாம்பழம் ஆண்மையை பெருக்கும்.

100 கிராம் மாங்காயில் உள்ள சத்துக்கள்

சத்தி 70 கி. கலோரிகள்

கார்போ ஹைட்ரேட்                                           – 17 . 00 கி. ( சர்க்கரை 14 . 8கி., நார்ச்சத்து – 1 . 8 A)

கொழுப்பு                                                          –  0 . 27 கிராம்.

புரதம்                                                                –  0 . 51 கி.

வைட்டமின் ஏ                                                    –     4%

H. கரோடீன்                                                      –     4%

தியாமின் ( வைட்டமின் H 1)                                 –     4%

ரிபோஃப்ளேவின்                                               –     4%

நியாசின் ( விட்டமின் H3)                                    –     4%

பான்டோதெனிக் அமிலம் (வைட்டமின் பி5)          –     3%

வைட்டமின் ‘H’ 6                                                –    10%

வைட்டமின் H 9                                                 –     4%

வைட்டமின் ‘C’                                                   –    46%

கால்சியம்                                                          –     1%

இரும்பு                                                              –     1%

பாஸ்பரஸ்                                                         –     2%

பொட்டாசியம்                                                    –     3%

ஜின்ங் (Zinc)                                                      –     0%

மாங்காயில் “Urushiol ” என்ற வேதிப்பொருள் உள்ளது. இதனால் மாங்காய் தோலினால் சிலருக்கு ‘அலர்ஜி’ உண்டாகலாம். தோலை சாப்பிடுவது அவ்வளவு பழக்கத்தில் இல்லை. அதை உண்ணுவது சில உபத்திரங்களை உண்டாக்கும். உடலில் கொப்புளங்கள், எரிச்சல், நமைச்சல் உண்டாகலாம். மாமரத்தை எரித்தால் வரும் புகையும் நுகர்வதற்கு உகந்ததல்ல. இந்த புகை அபாயகரமானது.

மாங்காய் தோலில் பல ஆன்டி – ஆக்ஸிடாண்ட் பொருட்கள் இருப்பதாக சமீபத்தில் தெரிய வந்துள்ளதால், தோலை “பதனிட்டு” Anti – Oxidant உணவுகளுடன் சேர்த்து தயாரிக்கலாம்.

மாங்காயின் உபயோகம்

மாங்காயில் மாவுச்சத்து அதிகம். தவிர, சிட்ரிக், ஆக்ஸாலிக் போன்ற இன்னும் சில அமிலங்களும் உள்ளன. இதனால் பித்த நீர் சுரக்கவும் வயிற்றை கிருமிகளிலிருந்து பாதுகாக்கவும் பயன்படும். மிருதுவான முற்றாத மாங்காய் பேதியை குறைக்கும். காரணம் அதில் உள்ள ‘பெக்டின்’.

வெயில் காலத்தில் Sun – Stroke ஏற்பட்டால், அபாயகரமானது. இதை தவிர்க்க மாங்காய் பெரிதும் உதவுகிறது. மாங்காயை நெருப்பில் வாட்டி, அதன் உள்சதையை எடுத்து, சர்க்கரை, தண்ணீருடன் சேர்க்கவும். Sun – Stroke பாதிப்பை குறைக்கும். மாங்காயில் உள்ள வைட்டமின் ‘C’ 5 அல்லது 6 எலுமிச்சம் பழத்தில் உள்ள வைட்டமின் C அளவுக்கு நிகரானது. மாங்காய் பல தொற்று நோய் வராமல் உடல் தடுப்பு சக்தியை அதிகரிக்கும். ஆனால் ஆயுர்வேதம், மாங்காயை அளவுக்கு மீறி உபயோகிக்கலாகாது என்று எச்சரிக்கிறது.

மாங்காய் அளவுக்கு மீறினால் தொண்டை எரிச்சல், அரிப்பு, வயிற்றுவலி, அஜீரணம், பேதி இவற்றை உண்டாக்கலாம். மாங்காய் சாப்பிட்ட உடன் குளிர்ந்த தண்ணீர் குடிக்க வேண்டாம் என்கிறது ஆயுர்வேதம்.

வெயில் தாக்கத்திற்கு, மாங்காய்களை, ப்ரஷர் குக்கரில் (Pressure Cooker) வேக வைக்கவும். தோல், கொட்டைகளை நீக்கி, கதுப்பை எடுத்து, புதினா இலைகள், சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து கொள்ளவும். இதை பருக சூடு குறையும். கதுப்புடன் வெந்தயம், மிளகு, வெல்லம், சிறிது உப்பு, இவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.

தோல், தலைமுடி பாதுகாப்பு

மாம்பழம் ஆரோக்கியமான சருமத்தை உண்டாக்கும் குணம் உடையது. இதில் உள்ள வைட்டமின் ‘ஏ’ அபரிமிதமானது. முகப்பரு, தோல் சுருக்கங்கள் போன்றவற்றுக்கு தினம் மாம்பழம் சாப்பிடுவது நல்லது.

நோய் எதிர்ப்பு சக்தி

மாம்பழ சீசனில், மாம்பழம் சாப்பிட்டு வந்தால், உடலின் நோய் தடுப்பு ஊக்கமடையும்.

கிருமிகளின் தாக்குதலை எதிர்க்க இயலும்.

பொது ‘டானிக்’

தேன், பால் கலந்த மாம்பழ ஜுஸ் அமிர்தம் போல் சுவையில் மட்டுமல்ல, உடலை வளர்ப்பதிலும் உதவும். எல்லா வயதினருக்கும் ஏற்றது.

இதர மருத்துவ பயன்கள்

மாம்பருப்பு:– Astringent (துவர்ப்பு, சுருங்கச் செய்யும் தன்மை) குணத்தால், பெண்களின் உடல் குறைபாடுகளுக்கு கொடுக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளான புஷ்யாநுக சூரணம், போன்றவற்றில் மாம்பருப்பு பயன்படுகிறது.

இலைகள்:- மங்கல நிகழ்ச்சிகளில், விசேஷ நாட்களில், வாயிலில் தோரணம் கட்ட இலைகள் பயன்படுத்தப்படுகின்றன.

பூக்கள்:- ஆண்களில் தானாகவே விந்து வெளியேறும் கோளாறுகளுக்கு, மாம் பூக்களுடன், தேன் ( ஒவ்வொன்றும் ஒரு மேஜைக் கரண்டி அளவில்) கலந்து உட்கொள்ளலாம். கொசுத்தொல்லைகளிலிருந்து விடுபட, பூக்களை ‘கரி’யில் இட்டு சூடாக்கி வரும் புகையை உபயோகிக்கலாம்.

பட்டை:- மாதவிடாய், வெள்ளைப்போக்கு போன்ற பெண்கள் பிரச்சனைகளுக்கு தரப்படும் ஆயுர்வேத மருந்துகளில் மாம்பட்டை சேர்க்கப்படுகிறது.

மாமர பிசின்:- இந்த பிசினை எடுத்து, எலுமிச்சம் சாறு, மஞ்சள் பொடி கலந்து சுடவைக்கவும். இந்த களிம்பை மூட்டுவலி, சுளுக்கு இவற்றுக்கு சிகிச்சையாக பயன்படுத்தலாம்.

உணவாக:-

கனிந்த மாம்பழங்களின் சுவை ஒரு தனியான, இனிமையான, தேவாமிருத சுவை. பழங்களுக்கு பழம் மாறுபடும். சாறு அபரிமிதமாக இருப்பதால் பருக, பருக புத்துணர்ச்சி உண்டாகும்.

மாங்காய் இல்லாத ஊறுகாய்கள் இருந்தாலும், மாங்காய் உள்ள ஊறுகாய்காய் எவ்வளவு? அதுவும் ‘ஆந்திர ஆவக்காய்’ சுவையை ஒரு தடவையாவது உணராதவர்கள் இல்லை. மாங்காய் கதுப்பில் சட்னி செய்யலாம்.

மாம்பழ துண்டுகளிலிருந்து “அரிவா” செய்யலாம். “காட்பரீஸ்” சாக்கலேட் போல் “பார்கள்” (Bars) செய்யலாம்.

சாறு அதிகம் இருக்க வேண்டும் என்றே விளைவிக்கப்படும் “ரசாது” என்ற மாம்பழத்தை அப்படியே சிறு துளையிட்டு, உறிஞ்சி குடிக்கலாம்.

கேரளாவில், மாம்பழத்தால் செய்யப்படும் “மாம்பழ காலான்” சுவை மிக்கது. பல வகை தானிய தயாரிப்புகளில் (Mueseli, Oat granola) மாம்பழம் பயன்படுத்தப்படுகிறது.

பாட்டில், டெட்ரபேக், மாம்பழ சாறுகள் வருடம் முழுவதும் கிடைக்கின்றன. மில்க்ஷேக், ஐஸ்கிரீம் இவற்றில் மாம்பழ சுவை விரும்பப்படுகிறது.

தாய்லாந்து, இதர தென்கிழக்கு ஆசிய தேசங்களில், இனிப்பு அரிசி சாதத்துடன், தேங்காய், மாம்பழ துண்டுகள் பரிமாறப்படுகின்றன. உலர வைத்த மாங்காயிலிருந்து “ஆம்சூர்” என்ற மாங்காய் பொடி தயாரிக்கப்படுகிறது. இது ஒரு “மசாலா பொருள்”.

மா ரகங்கள்:-

பல நூறு ரகங்கள் இருப்பதால், “ஒட்டு” (hybrid) செய்யப்பட்ட மரங்கள் பரவலாக உபயோகிக்கப்படுகின்றன. மஹாராஷ்டிராவில் “அல்ஃபான்ஸோ” பயிரிடப்படுகிறது. உலக அளவில் விரும்பப்படும் இரகத்தில் இது ஒன்று. பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மஹாராஷ்டிராவின் ரத்னகிரி, தேவகாட் பகுதிகளிலிருந்து வரும் “அல்ஃபான்ஸோ” பழங்கள் சிறந்தவை, பெயர் பெற்றவை. அதே போல் லக்னோவின் சேரி, அதன் வாசனைக்கு புகழ் பெற்றது. சுவைக்கும், நறுமணத்துக்கும் பெயர் பெற்றது லங்ரா”. இது கிழக்கு உ.பி.யிலிருந்து வருவது. ஆனால் இது விரைவில் கெட்டு விடுவதால், ஏற்றுமதிக்கு ஏற்றவை அல்ல. இவை அதிக அளவில் நியாயமான விலையில், அனைவரும் வாங்கும் படியாக, அதே சமயம் சுவை குன்றாத “பங்கான பள்ளி” (ஆந்திரா)-க்கு ஈடு இணை இல்லை. மேற்கு வங்காளத்தில் பிரசித்தி பெற்றது “மால்தா”. “சேலத்து மல்கோவா” பாடல்களில் புகழ் பெற்றது. சுவையிலும் அபாரமானது. கனிந்த பழமும், பச்சை நிற தோலுடன் காணப்படும் வித்தியாசமான கனி.

மாம்பழ உற்பத்தி

அதிகமாக மாம்பழம் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா. 16000 சதுர கிலோமீட்டரில் மாமரங்கள் பயிரிடப்பட்டு, 10.8 மில்லியன் டன் மாங்கனிகள் உற்பத்தியாகிறது. இந்தியாவில், ஆந்திராவில் தான் அதிகமாக மாம்பழங்கள் உற்பத்தியாகின்றன. (3500 சதுர கி.மீ). வட இந்தியாவில் உத்திர பிரதேசத்தில் அதிக விளைச்சல்.

மாம்பழ உற்பத்தியில் முதல் 12 தேசங்கள் – 2005

தேசம்                           ஏரியா (ச.கி.மீ)

            இந்தியா                            16, 000

            சீனா                                  4, 336

            தாய்லாந்து                         2, 850

            இந்தோனேசியா                 2, 734

            மெக்ஸிக்கோ                     1, 738

            பிலிப்பைன்ஸ்                     1, 600

            பாகிஸ்தான்                        1, 515

            நைஜெரியா                        1, 250

            ஜெனிவா                              820

            பிரேசில்                              650

            வியட்நாம்                             530

            பங்களாதேஷ்                       510             மொத்தம்                          38, 702.

மதிய உணவிற்கு பிறகு மாம்பழ லஸ்ஸி

தேவையான பொருட்கள்

தயிர்                          2 கப்

மாம்பழம் (நறுக்கியது)           2 கப்

சர்க்கரை                       தேவையான அளவு

ரோஸ் எசன்ஸ்                 சில துளிகள்

பிஸ்தா (நறுக்கியது)            2 டீஸ்பூன்

செய்முறை

முதலில் மிக்சியில் நறுக்கி வைத்துள்ள மாம்பழ துண்டுகள் மற்றும் சர்க்கரையை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். பின் பு, அதனுடன் தயிர் மற்றும் ரோஸ் எசன்ஸ் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.

பின்னர் அதனை தம்ளரில் ஊற்றி அதன் மேல் நறுக்கிய பிஸ்தாவை தூவி பரிமாறினால் சுவையான மற்றும் சத்தான மாம்பழ லஸ்ஸி தயார்.

மாம்பழ அல்வா

தேவையான பொருட்கள்

பழுத்த மாம்பழம் (துண்டுகள்)            3 கப்

சர்க்கரை                              1 கப்

பால்                                  2 லு கப்

ஏலக்காய் தூள்                         ஒரு சிட்டிகை

நெய்                                  தேவையான அளவு

செய்முறை

முதலில்  மாம்பழத்தை நன்கு மசித்து கொள்ளவும் பின்பு வாணலியை அடுப்பில் வைத்து அதில் சிறிது நெய் விட்டு அதில் மசித்து வைத்துள்ள மாம்பழத்தை போட்டு அதனுடன் சர்க்கரையை சேர்த்து மிதமான சூட்டில் கிளறவும்.

சிறிது நேரம் கழித்து கெட்டியான பதத்தில் வந்தவுடன் இறக்கி, அதனை  ஆற வைத்து சிறு துண்டுகளாக வெட்டி பரிமாறினால் சுவையான மாம்பழ அல்வா தயார். 


Spread the love