சர்க்கரையை விட 50 மடங்கு இனிப்பான பொருளை தெரியுமா? அது தான் அதிமதுரம்! உலகின் சில பகுதிகளில் குழந்தைகள், மிட்டாய் போல் அதிமதுர வேரை சுவைக்கின்றனர். இனிப்பது மட்டுமல்ல, அதிமதுரம் ஆயுர்வேதத்தில் முக்கியமான மருந்து. சக்தி வாய்ந்த ‘டானிக்‘. இது தவிர, அதிமதுரத்தில் பல மருத்துவ குணங்கள் உள்ளன.
மருத்துவக் குணங்களை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
அதிமதுரத்தை ஒரு ‘நிதானமான‘ மலமிளக்கி என்று சொல்லலாம். வழவழப்பானதால் எரிச்சலை தணிக்கும். சுவாச குழாய்களில் கபம் முதலியவற்றை விலக்கும். தொண்டை கரகரப்பு, உலர்ந்த தொண்டை, உலர் இருமல்களை போக்கி, நுரையீரலை ஈரப்படுத்தும். ஜலதோஷம், ப்ளூ, ஆஸ்துமா இவற்றுக்கு சிறந்த மருந்தாக உள்ளது.
தொண்டை, வாய்ப்புண்களுக்கு அதிமதுரம் தொன்று தொட்டு பயன்படுத்தப்படுகிறது. ஒரு துண்டு, அதிமதுரத்தை அப்படியே வாயில் வைத்து மென்றாலே தொண்டைக்கு இதமாகும்.
வயிற்றுப்புண்களுக்கு – அதிமதுரத்துண்டுகளின் பொடியை நீரில் போட்டு கலக்கி இரவு வைக்கவும் – காலையில் அரிசி கஞ்சியுடன் சேர்த்து நீரை குடித்து வந்தால் வயிற்றுப்புண் குணமாகும். வயிற்றுக்கோளாறுகளுக்கு, அதிமதுரத்தை பொடியாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதிமதுர வேரின் சிறு துண்டுகளை பாலில் அரைத்து. துளி குங்குமப்பூ போட்டு கலந்து, இந்த கலவையை தலையில் வழுக்கை இருக்கும் இடத்தில் தடவி வரவும். சில வாரங்களில் முடிகள் தோன்றும்.
அதிமதுரம் ஆயுர்வேத சிகிச்சை முறைகளில் முக்கிய அங்கம் வகிக்கிறது. ஆசாரியர் சுஸ்ருதர் அதிமதுரத்தை அதிமுக்கியமான மூலிகையாக குறிப்பிடுகிறார். அலோபதி வைத்தியத்திலும் அதிமதுரப் பொடி பிரபலம்.
உணவு தயாரிப்பில் சுவையும் மணத்தையும் அதிகரிக்க அதிமதுரம் பயன்படுகிறது. ஐஸ்கிரீம், மிட்டாய்கள், சிரப்புகள் மற்றும் கேக் போன்ற ‘பேக்‘ செய்தவை முதலியவற்றில் அதிமதுரம் பயனாகிறது.
ஒரு தேக்கரண்டி அதிமதுரம் வேர்ப்பொடி கலந்த பாலை வெறும் வயிற்றில் காலையில் அருந்தவும்.