கோவைக் கொடி

Spread the love

கோவைக் கொடி எங்கும் வளரக் கூடியது. கோவைப் பழத்தை குழந்தைகளும் சரி, கிளிகளும் சரி விரும்பி உண்பர். கோவைப் பழம் சாப்பிட்டு வர வாய்ப்புண் குணமாகும். இரத்த விருத்தி ஏற்படும்.

கண்ணுள் குளிர்ச்சி. பெருங்காசமொடு வாயுவறும்

புண்ணுஞ் சிரங்கும் புரண்டோடும் – நண்ணுடலும்

மீதிலார் வெப்பகலும் வீழாநீர்க் கட்டேகுந்

கோதிலாக் கோவை இலைக்கு.

இதன் பொருளாவது என்ன? கோவையின் குணாதிசயங்கள் என்ன? கண் குளிர்ச்சியை உண்டாக்கும். பெரும் புண், சிறு சிரங்கு, உடல் வெக்கை. நீரடைப்பு நீங்கும். இதன் இரசத்தை வேர்வை உண்டு பண்ணுவதற்கு உடலில் பூசலாம். இதன் காய், வற்றல் மூலம் கபம், சுரம், ருசியின்மை போகும். நாக்குப் புண் ஆற இளங்காயை வாயில் இட்டு, மென்று வெளியே துப்பி விட வேண்டும்.

கோவைக் கீரையை மற்ற கீரைகள் போல பருப்பு சேர்த்துக் கடைந்து சாப்பிடலாம். இதனால் உடலின் உள்சூடு குறையும். கண் எரிச்சல் குறையும். இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவி குறைக்கும் திறன் கோவைக் காய்க்கு உண்டு. தினமும் காலை நேரத்தில் கோவைக் காயைத் தின்று வர சிறுநீரில் உள்ள சர்க்கரையைக் கட்டுப்படுத்தி சிறுநீரகங்களுக்கு வலிமையைத் தரும். சிறுநீர் போகும் பாதையில் எரிச்சலை நீரடைப்பு என்பர்.

இதனைக் கட்டுப்படுத்த கோவைக் காயினை அரைத்து சாறு எடுத்து தினந்தோறும் காலையிலும், மாலையிலும் இரண்டு ஸ்பூன் சாப்பிட்டு வர வேண்டும். கோவைக் காய்களை நீரிலிட்டு, உப்பு சேர்த்து, வெயிலில் காய வைத்து வற்றலாக பயன்படுத்தலாம். பித்த தோஷத்தை நீக்கும். கோவைக் காயில் புரதம், வைட்டமின் ஏ, C அதிகம் உள்ளன.

கோவைக் காயினைப் பயன்படுத்தி சமைக்கும் உணவுக் குறிப்புகள்

கோவைக் காய் ஊறுகாய்

பறித்த கோவைக் காய்களை நீர்விட்டு நன்கு அலசி சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய கோவைக் காய்த் துண்டுகளை வெயிலில் உலர வைக்க வேண்டும். நன்றாக உலர்ந்த பின்பு தேவையான அளவு உப்பு மற்றும் மிளகாய்ப் பொடி கலந்து எண்ணெய் விட்டு நன்றாக வறுத்து ஊறுகாய் செய்து கொள்ளலாம்.

கோவைக் காய் பச்சடி

மேற்கூறிய முறைகளில் கூறியது போல, நன்கு சுத்தம் செய்யப்பட்ட கோவைக் காய்களை சிறு துண்டுகளாக நறுக்கி மோரில் போட்டு பச்சடி தயாரித்து பச்சடி உணவு வகைகளாக சாப்பிடலாம். கோவைக் காய்ப் பச்சடிகளை தினம் தோறும் பயன்படுத்தி வரலாம். உடலுக்கு அதிக வலுவைத் தரும்.

கோவைக் காய் பொறியல்

கோவைக் காயைச் சிறு சிறு துண்டுகளாக் நறுக்கி, அதில் கடலைப் பருப்பினை சேர்த்து வேக வைத்து பொறியல் செய்து சாப்பிடுவார்கள். கோவைக் காய் பொறியலை மற்றொரு முறையிலும் செய்து சாப்பிடலாம்.

கோவைக் காயினை சிறுசிறு துண்டுகளாக  நறுக்கிக் கொள்ளவும். அதனுடன் பாசிப் பருப்பு, வெந்தயம், சீரகம், பூண்டு இவைகளைச் சேர்த்துக் கொண்டு, நல்லெண்ணெயில் நன்றாக வறுத்து, பொறியல் செய்து உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

கோவைக் காய் அல்வா

கோவைக் காயினை சிறு சிறு துண்டுகளாக அல்லது உருண்டை வடிவத்தில் நறுக்கிக் கொள்ள வேண்டும். அதனுடன் வெல்லம் சேர்த்து நன்றாகக் கிளறி, நல்ல பதம் வந்தவுடன் இறக்கி வைக்க வேண்டும். நன்றாக ஆறிய பின்னர், மேற்கூறிய காற்றுப் புகாத கண்ணாடி அல்லது சில்வர் பாத்திரத்தில் நீங்கள் எடுத்து வைத்து சாப்பிட நன்கு இனிப்பாக இருக்கும்.

வெள்ளைபடுதலைக் குணப்படுத்தும் கோவை

கோவைக் காயின் தண்டுப் பகுதியினை நன்றாக நீர்விட்டு அலசிய பின் சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வெயிலில் உலர்த்த வேண்டும். உலர்ந்த பிறகு அதனைப் பொடி செய்து கொள்ளவும். அந்த பொடியில் ஒரு ஸ்பூன் எடுத்து 100மி.லி. பசுவின் பாலில் கலந்து தினந்தோறும் ஒரு வாரம் குடித்து வர வெள்ளைப்படுதல் கண்டிப்பாகக் குறையும்.

இந்தியாவிலேயே மிக அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளது எந்த வியாதியினால் என்றால் அது சர்க்கரை வியாதி தான். அது மட்டுமின்றி உலகிலேயே அதிக அளவு சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இந்திய மக்கள் தான். நீரிழிவு நோய்க்கு ஆயுள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டும். உணவுக் கட்டுப்பாட்டிலும் இருப்பது அவசியம் என்று ஆங்கில மருத்துவர்கள் கூறுவது மக்களுக்கு சற்றே பயமுறுத்துவதாகவும் உள்ளது.

இருந்தும் சர்க்கரை நோய் குணப்படுத்துவதற்கு இயலவில்லையே என்பதால் மாற்று மருத்துவத்தை மக்கள் தேடி வர சித்த, ஆயுர்வேத வைத்தியம் பால்வித மூலிகைகளை எளிதாக கிடைக்கக் கூடிய மூலிகைககளை காண்பிக்கின்றன. பாகற்காய், வெங்காயம் நீரிழிவு நோயைக் குணப்படுத்த உதவும் என்று அறிந்து கொண்டனர். இது போல கோவைக் காயும் பழங்காலத்திலிருந்தே நீரிழிவு நோய்க்கு மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வெள்ளரிக்காய் குடும்பத்தைச் சேர்த்த கோவைக் காய் எளிதில் எங்கும் கிடைக்கக் கூடியதாக் உள்ளது. வாரம் ஓரிரு முறை கோவைக் காயை உணவில் சேர்த்துக் கொள்ள தொடர்ந்து சாப்பிட்டு வர, கோவைக் காய் சேர்த்து சமைக்கும் உணவுக் குறிப்புகள் கீழே வழங்கியுள்ளோம்.


Spread the love