முடக்கற்றான்
இதன் இலையை வதக்கி, உப்பும் மிளகும் சேர்த்து அரைத்து உண்ணலாம். முடக்கற்றான் இலைகளை மிளகு, சீர்கத்துடன் சேர்த்து இரசம் வைத்துச் சாப்பிட்டு வர வாத சம்பந்தமான நோய்கள், சிலந்தி, கரப்பான், மலச்சிக்கல் குணமாகும்.
தூதுவளை
இதன் இலைகளை ஆய்ந்து, சுத்தம் செய்த பின்னர் சிறிய வெங்காயம் மற்றும் நல்லெண்ணெய் விட்டு, உப்புச் சேர்த்து வதக்கி, இளஞ்சூடாக உட்கொள்ள இருமல், இளைப்பு நீங்கும். தூதுவளை இலையை அரிசி மாவுடன் சேர்த்து ஆட்டி அடை செய்து உண்டால் சளி குணமாகும். தூதுவளை இலையுடன் சிறிதளவு துவரம் பருப்பு, மிளகுத் தூள், சேர்த்து உப்பு இட்டு, மண்பாத்திரத்தில் இட்டு நீர் சேர்த்து அவித்து அக்கீரையைச் சாப்பிடலாம்.
கீழாநெல்லி
இதன் இலையுடன் சிறிது உப்பு சேர்த்து அரைத்து சருமத்தில் பூசி வர சொறி, சிரங்கு, நமைச்சல் குணமாகும்.
இதன் இலையை இரண்டு கைப்பிடி அளவு, உப்பு இரண்டு கைப்பிடி அளவு, மஞ்சள் ஒரு துண்டு, மூன்றையும் ஒவ்வொன்றாக அரைத்து உடல் முழுவதும் பூசி அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் குளிக்கச் செய்தால் பூரான், செய்யான் கடியால் உடலில் ஏற்பட்ட தடிப்புகள் குணமாகும். இவ்வாறு தொடர்ந்து மூன்று நாட்கள் செய்ய வேண்டும். அப்போது உணவில் உப்பை குறைத்து பயன்படுத்த வேண்டும். குப்பை மேனி இலைச் சாறுடன் சிறிது சுண்ணாம்பு சேர்த்து குழப்பி வண்டுக்கடி, குளவிக் கொட்டு கொட்டிய இடத்தில் தடவ விஷம் நீங்கும்.
மிளகு – காரச் சுவைக்குக் காரணம் என்ன?
வாசனை பொருட்களின் அரசன் என்று கூறப்படும் மிளகு சமையலுக்கும், பலவித நோய்களுக்கும் கை மருந்தாகப் பயன்படுகிறது. மிளகு சேர்த்த உணவில், மிளகின் காரச் சுவைக்கு, அதில் உள்ள பைப்பரின் என்னும் ஆல்கலாய்டு தான் காரணமாகும். இந்த பைப்பரின் தண்ணீரில் கரையாது. இதில் உள்ள பிசின் போன்ற சாவிசின் காரசுவை உண்டாக்கும் வேதிப் பொருளாகும். ஆயுர்வேத நூலில் கூறியுள்ளபடி மிளகில் உள்ள கார்ப்புச் சுவை கபம், வாதத்தைப் போக்குகிறது.
செரிமானம் அதிகரிக்கிறது. இருமல் குணமாகிறது. வெயிலில் உலரவைக்கப்பட்ட பச்சை நிற மிளகுப் பழங்கள், ஈரம் போன பின்பு பச்சை நிறத்திலிருந்து கருப்பு நிறமாகின்றன. மிளகு கருப்பு மிளகு, வெள்ளை மிளகு என்று இரண்டு இரகங்கள் உள்ளன. முழு மிளகுப் பழத்தை அரைத்து கரு மிளகு தயாரிக்கப்படுகிறது. பழத்தின் சதையை விலக்கி, காய்ந்த விதைகளை அரைத்து, புளிக்க வைத்து, தண்ணீரில் கழுவி வெள்ளை மிளகு தயாரிக்கப்படும் மிளகு உடலின் உஷ்ணத்தை அதிகரிக்கும். அதிகமாக உட்கொண்டால் கரு கலையும்.
பிரண்டை தோசை
இளம் தாய்மார்களுக்கு ஆரோக்கியம் தரும் உணவு. தென்னிந்தியாவில் இருபது, முப்பது வருடங்களுக்கு முன்பு முதன்முதலாக குழந்தை பெற்ற இளம் தாய்மார்களுக்கு சத்தும், ருசியும் தரும் ஒரு தோசையாக பிரண்டை தோசை காணப்பட்டது. பிரண்டைத் துவையல், பிரண்டை வற்றல் மற்றும் பிரண்டை வடை போன்றவையும் பிரபலமாக இருந்தது.
பிரண்டை தோசையில் அதிகளவு இரும்புச் சத்து, கால்சியம், மெக்னீசியம் காணப்படுகிறது. குழந்தை பெற்ற பின்பு, இளம் தாய்மார்களின் ஆரோக்கியத்தை விரைவுபடுத்த உதவும் இது மருந்தே உணவாகிறது. பிரண்டையானது உடல் பருமன், நீரிழிவு, இதய நோய், புற்று நோய் போன்ற நோய்களிலிருந்து குணம் பெறவும் பயன்படுத்தப்படுகிறது.
கர்ப்பகால இரத்த சோகையைத் தடுக்கலாமே!
அதிக அளவு உலர்பழங்கள், திராட்சை, பேரிச்சை, மாதுளம் பழம், ஆப்பிள், எள், கரும்பு, வெல்லம், அத்திப் பழம் மற்றும் பீட்ரூட் அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளவும். அதிக இரும்புச் சத்து அடங்கிய பசுமையான இலை கீரை, காய்கறிகள், டர்னிப், முழுத் தானியங்கள், முளைவிட்ட பருப்புகள் சாப்பிட வேண்டும்.
வைட்டமின் சத்துக்கள் அதிகம் உள்ள ஆரஞ்சு, தக்காளி, நெல்லி, எலுமிச்சையானது அதிக அளவு இரும்புச் சத்தைக் கிரகிக்கும் தன்மை கொண்டது. அசைவ உணவு உண்பவர் எனில் முட்டை சாப்பிடுவது நல்லது. போதுமான அளவு பால் அருந்தவும். ஆனால், இரும்புச் சத்துக்காக மாத்திரை, டானிக் உட்கொள்ளும் பொழுது பால் அருந்தக் கூடாது. ஏனெனில் பாலில் உள்ள கால்சியம், இரும்புச் சத்தை உடலில் உட்கிரகிப்பதைத் தடுக்கும்.
வெள்ளைபடுதல் நிற்க
ஆனை வணங்கி என்ற பெரு நெருஞ்சில் இலைச் சாறு எடுத்து, அதனுடன் ஏலம், சீரகம் பொடித்து கலந்து கொடுத்து வர வெள்ளைப்படுதல் நிற்கும்.
உஷ்ணத்தால் ஏற்படும் வெள்ளை நீங்க
இலுப்பைச் சாறு 200 மி.லி., எருமை மோர் 200மி.லி., நற்சீரகம், ஏலம் ஒவ்வொன்றும் தலா 50 கிராம், ஈர வெங்காயம் அனைத்தையும் சேர்த்துக் கலந்து அரைத்து தினசரி ஒரு வேளை உட்கொண்டு வர வேண்டும்.
f நீங்க
பெண்களுக்கு மாதவிடாய்க் கால மிதமிஞ்சிப் போகும் இரத்தப் போக்கு, மாதவிடாய் காலத்தில் அன்றி மற்ற நேரமும் காணப்படும் பெரும்பாடு நீங்க செம்பருத்திப் பூவை பசுவின் பாலில் அரைத்து வெல்லம் சேர்த்து உட்கொள்ளச் செய்ய வேண்டும்.
மிளகு 10 கிராம் அளவு எடுத்து, உத்தாமணி இலைச் சாறு 100மி.லி.யில் அரைத்துக் கொள்ளவும். இதனுடன் 100 மி.லி. நல்லெண்ணெய் சேர்த்து வாணலியில் இட்டுக் காய்ச்சி பதமாய் இறக்கவும். மாத விலக்கு உள்ள நாட்களில் மூன்று நாள் அல்லது ஐந்து நாள், காலை மாலை என தினசரி இருவேளை 2 தேக்கரண்டி அளவு உள்ளுக்குள் சாப்பிட்டு வரவும்.
காரம் குறைத்துக் கொள்ளவும். சைவ உணவு, தயிர், மோர் சேர்த்துக் கொள்ளவும். மாதவிலக்கு நாட்களில் மட்டும் இவ்வாறு மூன்று மாதங்கள் வரை சிகிச்சை செய்து வர பெரும்பாடு குணமாகும்.
வாதம் சம்பந்தமான நோய்கள் நீங்கவும், பித்தம், கபம் அதிகமாகாமல் தடுக்க உதவும் சம்பாரத் தோசை
பெருங்காயம், மிளகு, இஞ்சி, கருவேப்பிலை இவை ஒவ்வொன்றையும் தேவையான அளவு எடுத்து நன்றாக அரைத்துத் தோசை மாவுடன் கலந்து சுடப்படும் தோசை சம்பாரத் தோசை என்று கூறுவார்கள். இதனை அடிக்கடி சாப்பிடுவதால் விந்து சுரப்பும் கூடுதலாகும்.
முடிச்சிக் கஞ்சி கேள்விப்பட்டிருக்கீர்களா?
அரிசியுடன் நீர் சேர்த்து கொதிக்க வைத்து தயாரிக்கப்படும் கஞ்சியில் சுக்கைப் போட்டுக் காய்ச்சி வடித்து தயாரிக்கப்படும். இதனை உணவாக சேர்க்க செரிமானக் கோளாறுகள், மந்தம், சுரம் நீங்கும். கொள்ளு மற்றும் அரிசி சேர்த்து தயாரிக்கப்படும் கஞ்சியை குடித்தால் உடலுக்குச் சக்தியும், நாற்பது வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு ஆண்மைச் சக்தியை அதிகரித்து வழங்கும்.
உணவு ஒவ்வாமையும், தீர்க்கும் உணவுகளும்
நீங்கள் உண்ணும் உணவுகள் ஒன்றுக்கு மேற்பட்டு இருக்கும் பொழுது, ஒரு உணவின் குணம், தன்மைகள் மற்றொன்றிற்கு எதிரான ஒன்றாக அமைந்து விடுவதால் ஒவ்வாமை ஏற்படுகிறது.
தயிரைச் சூடாக்குதல் கூடாது. இரவில் அதிக சத்துள்ள உணவினை உட்கொள்ளக் கூடாது. உணவின் போது இடையிடையே நீர் அருந்தக் கூடாது. பாலுடன் மீன் சேர்த்து உண்ணுதல் கூடாது. இரண்டின் வீரியமும் முரணானது என்பதால், சரியான முறையில் செரிமானம் ஆவதைத் தடுக்கும்.
பாலுடன் பழம் சாப்பிடுதல் கூடாது. பாலும், பழமும் தனித்தனியாக சாப்பிடுவதற்குரியதாகும். புளிப்புச் சுவையுடைய பழங்கள், உணவுகளைச் சாப்பிடுவதற்கு முன்னரோ, பின்னரோ பால் அருந்தக் கூடாது. கொள்ளு, உளுந்து, வரகு, அவரை போன்ற தானியங்கள் பாலுக்கு எதிரியாகும். கீரைகளை உணவாக சாப்பிடும் காலத்தில் பால் அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
வாழைப் பழத்தை தயிர், மோர் உடன் சேர்த்து சாப்பிடக் கூடாது. மீன் வறுத்த எண்ணெயில் வேறு உணவு வகைகலை வறுத்தல் கூடாது.
ஓட்ஸ் தானிய இரகசியங்கள்
உலகிலேயே அதிகமாக ஓட்ஸ் சாப்பிடும் நாடு சுவிட்சர்லாந்து ஆகும். இங்குள்ள் ஆல்ப்ஸ் மலைத் தொடரில் வசிக்கும் மக்களின் பிரதான உணவே ஓட்ஸ் தான். ஓட்ஸில் உள்ள அவினின் என்னும் இரசாயனப் பொருளானது உடல் ரீதியாக, மன ரீதியாக சோர்வுடன் இருப்பவர்கலை உற்சாக உணர்வை தூண்டுகிறது. ஓட்ஸில் 24 விதமான ஃபீனாலிக் கூட்டு பொருள்கள் வயது மூப்பைத் தடுக்கக் கூடியதாகவும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகம் தரக் கூடியதாகவும் உள்ளது.
நினைவுத் திறன் – ஆயுர்வேதம் கூறும் விளக்கம்
மனிதன் முதுமையின் வாசலைத் தொடும் பொழுது, அதிகம் பாதிக்கப்படுவது ஞாபக மறதியே முதலிடத்தில் உள்ளது. ஆயுர்வேதத்தின்படி, முதுமையில் ஏற்படும் வாத, பித்த, கப தோஷங்களின் சீர்குலைவால் ஞாபக சக்தி குறைபாடுகள் ஏற்படுகின்றன. பித்த தோஷம் மூளை ஒரு விஷயத்தை கிரகிக்க உதவுகிறது. கப தோஷம் அதை சேர்த்து வைக்க உதவுகிறது. அதிமதுரம் கப தோஷத்தை சீராக்குகிறது. சீந்தில் கொடி மற்றும் சங்கு புஷ்பி பித்த தோஷத்தை சீராக்குகிறது.
பித்த வெடிப்பிற்கு உதவும் குப்பை மேனி
ஒரு பாத்திரத்தில் சிறிது விளக்கெண்ணெய் எடுத்துக் கொள்ளவும். இதனுடன் மஞ்சள் பொடி, குப்பை மேனி இலை பசையை சேர்த்து தைலப் பதத்தில் காய்ச்சி தனியாக ஒரு கண்ணாடிப் பாட்டிலில் சேகரித்து வைத்துக் கொள்ளவும். தினசரி இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு, பாத வெடிப்பு உள்ள பகுதியில் பூசி வர வேண்டும். ஓரிரு வாரத்தில் பித்த வெடிப்பு குணமாகி விடும். குப்பை மேனி இலையானது, சருமத்தினை மிளிரச் செய்வதுடன் நுண் கிருமிகள், பூஞ்சை காளான்களை அழிக்கக் கூடியது.
கறிக் கோழி சாப்பிடுகிறீர்களா? ஆபத்துகள் உள்ளன?
கறிக்கோழிக்கு அதிகம் ஆன்டிபயாடிக் செலுத்தப்படுகிறது. கால்நடை வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டவர்கள் கோழி உற்பத்தி பெருக்குவதற்கும் கோழிகள் எடை கூடுவதற்கும், வேகமாக வளர்வதற்கும் ஆண்டிபயாடிக் மருந்துகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். இக்கோழியை உணவாக உட்கொள்ளும் மனிதர்களுக்கு ஆன்டிபயாடிக் உடலில் கலந்து விடுகிறது. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து சாதாரண காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்கு மருத்துவர்களால் அளிக்கப்படும் சாதாரண ஆன்டிபயாடிக் மருந்துகள் வேலை செய்வதில்லை.
இதனால் டாக்டர்கள் மருந்தின் வீரியத்தை அதிகப்படுத்துவார்கள். மருந்தின் வீரியம் அதிகரித்தால் உடல் சோர்வுறும். பல பக்க விளைவுகள் ஏற்படும். கோழி வளர்ப்பில் பொதுவாக அளிக்கப்படும் 6 ஆன்டிபயாடிக மருந்தில் சிப்ரோ ப்ளாக்சசின் என்று மருந்தும் உண்டு. மேற்கூறிய மருந்து மூக்கு முதல் பாதம் வரை அனைத்து நோய்களையும் எதிர்க்கும் மருந்தாகும். இதன் பலனை மனித உடல் இழக்கும் பொழுது, டைபாயிடு உள்ளிட்ட பிற கிருமித் தொற்று நோய்களுக்கு சிகிச்சை அளிப்பது மிகப்பெரிய சவாலாக அமையும்.
நடந்தால் பல வியாதிகள் ஓடி விடும்
நீங்கள் 8 மணி நேரம், 10 மணி நேரம் என்று நீண்ட நேரங்கள் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து அல்லது பஸ், லாரி இயக்குதல் அல்லது தொழிற்சாலையில் அமர்ந்தோ, நின்று கொண்டோ பணி புரிகிறீர்கள் எனில் உங்களை அறியாமலேயே, உங்கள் உடலில் பல மாற்றங்கள் ஏற்பட்டு நோயின் தொழிற்சாலையாக மாறி விடும்.
உட்கார்ந்த இடத்திலேயே, நீண்ட நேரம் வேலை செய்வதானால், உடல் பருமன், சர்க்கரை நோய், இதயம் சார்ந்த பலவித நோய்களுக்கு மூல காரணமாக அமைகிறது. உடல் அமைப்பு இல்லாதவர்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பெற்றுக் கொள்ள பணி செய்யும் நிறுவனங்கள் இதனைக் கருத்தில் கொண்டு, பணி நேரத்தில் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை எழுந்து நடப்பது, தானியங்கி மாடிப்படி எக்ஸலேட்டர் மற்றும் மின்தூக்கி போன்றவற்றைப் பயன்படுத்தாமல் மாடிப்படி ஏறுவது என்று பணிபுரியும் இடத்திலேயே செய்யக்கூடிய எளிதான உடற்பயிற்சிகளாக அமைந்துள்ளன.
உடல் உழைப்பின்மை உள்ளவர்களால் ஏற்படும் சுகாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பும் ஆண்டு தோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பணி புரியும் இடங்களில் ஏற்படும் டென்சன் மற்றும் பணிச் சுமையே அதிகமாக இருக்கும் பொழுது, உடற்பயிற்சி செய்வதற்கு எங்கே நேரமுள்ளது என்பவர்கள் ஒரு ரகம். ஓரளவு வசதி இருக்கு, ஓரளவு கடுமையான உடற்பயிற்சி செய்யுமளவுக்கு வயதும் உடல் ஒத்துழைப்பும் உள்ளது. இதற்கு என்று ஷூ, ஷார்ட்ஸ், சாக்ஸ் எல்லாம் வாங்கியாச்சு, ஒரு வாரம் இரண்டு வாரம் ஜிம்முக்கு போய் வந்தாச்சுஞ் அவ்வளவு தூரம் தள்ளி ஜிம்முக்கு போக போகணுமே என்ற் சோம்பல் வந்து உடற்பயிற்சியை நிறுத்தி விடுபவர்கள் ஒரு ரகம். இதெல்லாம் வேண்டாம், இப்படியே இருந்துட்டே போறேன் என்று வேலை முடிந்து வீட்டிற்கு வந்தவுடன், சோபாவில் அமர்ந்து டி.வி. பார்த்துக் கொண்டு ஸ்னாக்ஸ் கொறித்துக் கொண்டிருப்பவர்கள் ஒரு ரகம்.
மனிதர்களின் பலவித மன ஓட்டங்கள் புரிந்து கொண்ட, உலக சுகாதார நிறுவனம், ஒவ்வொரு மனிதனும் தினசரி சராசரியாக அரைமணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை எளிதான உடற்பயிற்சி செய்தாலே போதும் என்று தெரிவிக்கிறது. ஆனால், தற்போதைய மருத்துவ உலகில், மாறிவரும் உணவுப் பழக்கம், வாழ்க்கைச் சூழலில் ஏற்பட்டுள்ள பாதிப்பு அதிகரிப்பின் காரணமாக, உடல் உழைப்பில்லாதவர்கள்,
இல்லத்தரசிகள் தினசரி ஒவ்வொரு எட்டு மணி நேரத்திற்கு ஈடாக, குறைந்தது ஒன்று முதல் இரண்டு மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கபப்டுகிறது. எனவே, இனி வரும் காலமாவது, நோய் நொடியில்லாமல், மருத்துவ செலவு அதிகரிக்க விடாமல், மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ் வேண்டும் என்று விரும்புபவர்கள் தினசரி எளிய உடற்பயிற்சிகளை, போதுமான அளவு, போதுமான நேரம் கடைபிடிக்க ஆரம்பித்து விடுங்கள்.
உடல் பருமனைக் குறைக்கு நார்ச்சத்து
நார்ச்சத்து உணவுகள் அதிக அளவு நீரினை தக்க வைக்கும் திறன் உள்ளதால், உணவை செரிமான செய்வது எளிதாகி, மலச்சிக்கல் இன்றியும், நார்ச்சத்து காரணமாக குடலில் கொழுப்பு அதிகரிப்பதும் தடுக்கப்படுகிறது. இதனால், இரத்த அழுத்தமும் வராமல் தடுக்க உதவுகிறது. நார்ச் சத்தில் அதிக கலோரிகள் இல்லை என்றாலும், வயிறு நிரம்பிய உணர்வை மனிதனுக்குத் தருகிறது.
அதிக அளவு மென்று, மெதுவாக சாப்பிடுவதால், அதிக அளவு உமிழ் நீர் சுரக்கப்பட்டு, உணவுடன் செல்வதாலும், மாவுப் பொருள், கொழுப்புகளை ஏற்றுக் கொள்வதை நார்ச்சத்து தாமதப்படுத்துவதாலும் வயிறு நிரம்பிய உணர்வை ஏற்படுத்துகிறது. இதனால் நார்ச்சத்து உணவு குறைந்த அளவு சாப்பிடுவதால், உடல் எடையைக் குறைக்க மறைமுகமாக உதவுகிறது.
அகத்திக் கீரைத் தைலம்
சுத்தம் செய்யப்பட்ட ஆய்ந்த அகத்தி இலைகளை இடித்துப் பிழிந்து சாறு 400மி.லி அதாவது 2 தம்ளர் அளவு, நல்லெண்ணெய் 400 மி.லி. இரண்டையும் கலந்து பாத்திரத்தில் இட்டு சிறு தீயில் சூடுபடுத்த வேண்டும். சாறு சுண்டி மெழுகு பதம் வந்த உடன் சாம்பிராணி 200 கிராம் அளவு தூள் செய்து எண்ணெயில் சேர்த்துக் கலந்த பின்பு, அடுப்பிலிருந்து இறக்கி ஆற வைத்து வடிகட்டவும். வடிகட்டிய எண்ணெயை ஒரு காற்றுப் புகாத கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் பாட்டிலில் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பயன்படுத்தும் முறை வாரம் ஒருமுறை, 30 மி.லி. தைலத்தை எடுத்து உச்சந்தலையில் நன்றாக தேய்த்து, ஒரு மணி நேரம் கழித்து வெந்நீரில் முழுகி வர வேண்டும். வாரம் இருமுறை அகத்திக் கீரையை உண்டு வர பசித் தலைவலி, பித்தத் தலைவலி நீங்கும். தலைச் சுற்றல், பித்தம் குறைந்து, கண்கள் குளிர்ச்சி பெறும்