அத்தி பழத்தில் பெரிய காய்களைக் கொண்ட பைகஸ் காரிகா என்னும் வகை நம் நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் காணப்படும்.நாட்டு அத்தி என்னும் வகையும் மிகவும் சிறப்பானவை. பைகஸ் காரிகா என்னும் பெரிய அத்திக்கு மத்திய ஆசியா தாயகமாகும். பழங்களில் சிறந்தது அத்தி என்கிறார் திருமூலர்.
திருவொற்றியூர், திருக்கானாட்டு முள்ளூர் ஊர்களில் அமைந்துள்ள திருக் கோயில்களில் இரண்டாவது தல மரமாக அத்தி மரம் விளங்குகிறது.பழங்கால ஐரோப்பியக் கல்வெட்டுகளிலும் நினைவுச் சின்னங்களிலும் இதை பற்றிய குறிப்புகள் உள்ளன. திராட்சையுடன் வைத்து சமாதானத்திற்கும், செழிப்பிற்கும் உள்ள வடிவமாக எண்ணப்பட்டது. கிரேக்கர்கள் அத்திப் பழத்தை முக்கிய உணவாகக் கருதினார்கள்.
அத்திப் பழத்தில் 17 சதவீதம் முதல் 28 சதவீதம் வரை சர்க்கரை உள்ளது.குறைவான அமிலமும் காணப்படுகிறது.வைட்டமின் ஏ, கால்சியம் அதிகம் காணப்படுகின்றன.சற்று நீளமான இலைகளையும், பால் போன்ற சாறுகளையும் உடைய பெரிய வகை மரம் அத்தியாகும். பூங்கொத்து எளிதாக வெளிப்படையாக தெரியாது.அடிமரத்தில் கொத்து கொத்தாக காய் காய்க்கும்.
அத்தி பழம் காமப் பெருக்கிக் குணம் கொண்டதும் கூட.அத்திப் பழத்தில் புரட்டியோஸ், அமியோ அமிலம், டைரோசின் என்னும் வேதிப் பொருட்கள் அடங்கியுள்ளன. அத்திப் பழத்தை அடிக்கடி சாப்பிட, மலச்சிக்கல் குணமாகும்.இரத்தம் உடலில் ஊறும்.நாட்டு மருத்துவத்தில் அத்திப் பழம் ஆண், பெண் இருவருக்கும் ஏற்படும் வெள்ளை நோய்க்குச் சிறந்த மருந்து ஆகும்.
அத்திப் பழத்தை நீர் விட்டு அரைத்து, வடிகட்டி அரைக் கால் லிட்டர் எடுத்துக் கொண்டு அதனுடன் 15 கிராம் சுண்ணாம்பு தெளித்த நீர் சேர்த்து 8 மணி நேரத்திற்கு குறையாமல் வைத்திருக்கும் போது மேற்சொன்ன கலவை கோதுமை கூழ் போன்று கெட்டியாகி விடும்.
இதை தினசரி 3 வேளை சர்க்கரைச் சேர்த்து சாப்பிட்டு வர வெள்ளை, நீர் எரிச்சல் விலகும்.பெரும்பாடு என்னும் அதிக உதிரப் போக்கு நிற்கும்.கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து அதிகளவு அத்திப் பழத்தில் உள்ளன.
அத்திப் பழத்தின் விதைகளைத் தனியாக எடுத்து உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொண்டு வேளைக்கு 5 கிராம் அளவு தேன் சேர்த்துக் காலை மாலை உண்டு வர சிறுநீரில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்கிறது.
உலர் அத்திப்பழத்தில் தயாரிக்கப்படும் கஷாயம் தொண்டையில் ஏற்படும் நோய்த் தொற்றினைத் தடுப்பதுடன், வாய் புத்துணர்ச்சிக்கும் உதவுகிறது. அத்திப் பழத்தில் அதிக அளவு ஆண்டி ஆக்ஸிடெண்ட் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க உதவுவதால், நூற்றாண்டு காலமாக அரபு மக்கள் இதனை சிறந்த பழமாக தினசரி உட்கொண்டு வருகின்றனர்.இதயம் சார்ந்த நோய்கள், புற்று நோய்கள், இளமையில் முதுமைத் தோற்றம் உருவாவதை ஆண்டி ஆக்ஸிடெண்ட் தடுக்கிறது.
அத்திப் பழங்களை தண்ணீருடன் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி தினசரி இருவேளை வெறும் வயிற்றில் அருந்தி வர, வயிற்றில் அமிலத் தன்மை அதிகரிப்பதால் ஏற்படும் வயிற்றுப் புண், வயிற்றெரிச்சல், நெஞ்செரிச்சல் போன்றவற்றை குணப்படுத்தும்.
முற்றின அத்திக் காய் கல்லீரலில் வேலை செய்யக் கூடியது.கல்லீரலின் இயக்கத்தை ஒழுங்குபடுத்துவதன் மூலம் செரிமானமின்மை, பசியின்மை, நாவில் சுவையறியாத நிலை முதலியனவற்றை போக்கி உடல் நலம் பெருக்கலாம். அத்தியின் இளந்தளிருக்கும் இதே பண்புண்டு.காய்கள் கிடைக்காத காலங்களில் இளந்தளிர்களைப் பயன்படுத்தாலாம்.
முற்றிய அத்திக் காய்களையோ, இளந்தளிர்களையோ கொண்டு வந்து உலர்த்தி, இடித்துத் தூள் செய்து வைத்துக் கொண்டு, வேளைக்கு ஆறு கிராம் வீதம் தேன் கலந்து காலை மாலை உட்கொள்ள வேண்டும்.
அத்தியில் காணப்படும் சத்துக்கள்
ஈரம் -& 80.8%
புரதம் &- 1.3%
கொழுப்பு &- 0.2%
தாது உப்புகள் &- 0.6%
சர்க்கரைப் பொருள்கள் &- 17.1%
கால்சியம் -& 0.06%
இரும்பு -& 1.2%
கலோரி மதிப்பு &- 75
கெரோட்டின் -& 270 மி.கி./100 கிராம்
நிகோட்டினிக் அமிலம் &- 0.6 மி.கி./100 கிராம்
வைட்டமின் சி -& 2 மி.கி./100 கிராம்
பா. முருகன்