முருங்கையின் முழுப்பயன்கள்

Spread the love

சென்ற இதழில் முருங்கைக் கீரையின் முழுப்பயன்களைப் பற்றி பார்த்தோம். இப்போது முருங்கக்காயின் பலன்களைப் பார்ப்போம்.

நம் நாட்டில் தாராளமாக கிடைக்கும் காய்கறிகளில் ஒன்று முருங்கைக்காய். மிகச் சுவையான காய். மருத்துவ பயன்கள் உடையது.

சமஸ்க்ருதம் – சிக்ரு, ஸ்வேதா, மரீச்சா, சோபஞ்சனா

இந்தி – சோயஞ்சனா

தமிழில் இதர பெயர்கள் – சிக்குரு, கிரஞ்சனம், கிழவீ, சோபாஞ்சனமி, ஊசடன், ஊருடை, கோமல் மூலசும், திரிபலாசம், மூலக பல்லவம், வெகுமூலம்.

100 கிராம் முருங்கைக்காயில் உள்ள சத்துக்கள்

ஈரம் – 86.9, புரதம் – 2.5 கி, கொழுப்பு – 0.1 கி, நார்ச்சத்து – 4.8 கி, கார்போஹைட்ரேட்ஸ் – 3.7 கி, விட்டமின் ஏ (கரோடின்) – 110 மி.கி, தியாமின் (விட்டமின் H 1) – 0.05 மி.கி, ரிபோஃப்ளேவின் (பி2) – 0.07 மி.கி, நியாசின் (H 3) – 0.2 மி.கி, விட்டமின் சி‘ – 120 மி.கி. தாதுப்பொருட்கள் – 2.0 கி, (மக்னீசியம் – 28 மி.கி, பொட்டாசியம் – 259 மி.கி, செம்பு – 0.01 மி.கி, மங்கனீஸ் – 0.05 மி.கி, துத்தநாகம் – 0.16, குரோமியம் – 0.003 மி.கி, சல்ஃபர் – 137 மி.கி, குளோரின் – 423 மி.கி, கால்சியம் – 30 மி.கி, பாஸ்பரஸ் – 110 மி.கி, அயச்சத்து – 0.18 மி.கி) கலோரிகள் – 26 கிலோகலோரிகள்.

தன்மைகள்

முருங்கைக்காய் குடலுக்கு பலத்தைத் தரும். வயிற்றிலிருந்து வாயுவை நீக்கும். விந்துவை கட்டும். கபத்தை நீக்கும்.

பயன்கள்

வாரம் ஒரு நாள் முருங்கைக்காய் சாப்பிட்டால் வயிற்றப்பூச்சிகள் நீங்கும்.

சாம்பார், குழம்பு, காய்கறி வகைகள் – இவற்றில் முருங்கைக்காய் சேர்த்து சமைக்கும் போது உடலுக்கு வலிமை சேர்வது மட்டுமன்றி உடல் குளிர்ச்சி அடையும். சிறுநீர் சுலபமாக பிரியும். விந்து இழப்பை தவிர்க்கும். புதிய ரத்தம் உண்டாகும். தாது விருத்தியை தரும்.

நரம்புத்தளர்ச்சிக்கு முருங்கை நல்ல மருந்து.

முருங்கைக்காயை சூப்பாகசெய்து குடித்து வந்தால், நரம்பு பலவீனம், கல்லீரல், மண்ணீரல் வீக்கங்கள் குறையும்.

பெண்களின் உதிரப்போக்கை கட்டுப்படுத்தும்.

பல சூரணங்கள், லேகியங்கள் செய்ய பயன்படுகிறது.

முருங்கைக்காய் பிஞ்சு பத்தியத்திற்கு ஏற்றது.

முருங்கைக்காயின் விதைகள்

முருங்கைக்காயின் விதைகள் நச்சுக்கிருமிகளை கொல்லும் ஆற்றல் படைத்தவை. குடிநீரை சுத்தம் செய்ய விதைகள் (பொடி) பயன்படுத்தப்படுகின்றன.

விதைகளை மென்று சாப்பிட்டால் வயிற்றில் கீரைப்பூச்சிகள் சேராமல் தடுக்கும்.

விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் வாத நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது. Gomme de Benoide எனப்படும் இந்த ஆயில் ஒவியங்கள் வரைய தேவைப்படும் எண்ணெய்யாகவும் பயன்படுகிறது.

முருங்கை பூக்கள்

இவற்றை பற்றிய சித்தர்களின் பாடல்

விழிகுளிரும் பித்தம்போம் வீறருசி யேகு

மழிவித்து வும்புஷ்டி யாகு – மெழிலா

கொங்கை யகலாக் கற்புடை வாணகையே

முருங்கையின் பூவை மொழி.

முருங்கைப்பூவினால் பித்தம், பசியின்மை நீங்கும். கண்களுக்குக் குளிர்ச்சியும், விந்து உற்பத்தியும் உண்டாக்கும்.

முருங்கைப் பூவை வெய்யிலில் உலர்த்தி எடுத்து பொடி செய்து தினமும் 1 தேக்கரண்டி எடுத்து காய்ச்சிய பசும்பாலுடன் கலந்து, பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வர விந்தணுக்கள் பெருகும்.

முருங்கை மரப்பட்டை

முருங்கை வேரிலுள்ள பட்டையைத் தண்ணீர் விட்டு வேக வைத்து எடுத்த குடிநீரில் புளி, மிளகாய், உப்பு முதலியவைகளைத் திட்டமாகப் போட்டு பாகப்படி பக்குவப்படுத்தி ரசமாக வைத்து சாப்பாட்டிலேனும், தனியாகவேனும் சாப்பிடப் பாரிசவாயு, குளிர்சுரம், காக்கை வலி, சூதகச்சன்னி இவைகள் போகும்.

இந்தப் பட்டையுடன் கடுகு சேர்த்தரைத்துக் கீழ் வாதங்களுக்கு பற்றுப்போடக் குணமாகும். பற்றிட்ட சிறிது நேரத்தில் எரிச்சலுண்டாகும். முடிந்த அளவு எரிச்சலைத் தாங்கிக் கொள்ள வேண்டும். எரிச்சல் அதிகமாக இருந்தால் பற்றிட்ட இடத்தைக் கழுவி விட்டு சிறிது தேங்காய் எண்ணெய்யைத் தடவி விட எரிச்சல் நின்று விடும்.

முருங்கை பிசின்

பிசின் தாது விருத்தி லேகியங்களில் சேர்க்கப்படுகிறது.

முந்து நீரைத்தடுக்கு மோரைப் போலேயொழுகும்

விந்துவைத் தடிப்பித்து மேனிதருந் – தொந்தக்

கரியநிற வாயுதனைக் காதிவிடு நாளும்

பெரியமுருங்கைப் பிசின்” – சித்தர் பாடல்

முருங்கைப் பிசின் அதிமூத்திரம், குஷ்டம், வாதம் ஆகியவைகளைக் குணப்படுத்தி சுக்கிலத்தை இருகச் செய்து அழகை உண்டாக்கும்.

முருங்கை ஈர்க்கு

பெண்களின் மாதவிடாய் வலியை குறைக்க, முருங்கை ஈர்க்கை ஒரு பிடி எடுத்து இடித்து, 2 கப் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி கஷாயம் தயாரிக்கவும். இத்துடன் நெய், சீரகம், வெங்காயம் சேர்த்து தாளித்து சூப்பாக பருகி வர மாதவிடாய் வயிற்று வலி குறையும்.

முருங்கைக்காய் சூப்

தேவையான பொருட்கள்

முருங்கைக்காய்     – 3

பெரிய வெங்காயம்   – 2

எலுமிச்சம்பழச்சாறு  – 1 டீஸ்பூன்

புதினா இலை        -தேவையான அளவு

எண்ணெய்           –2 டேபிள்ஸ்பூன்

தண்ணீர்             –1 லிட்டர்

உப்பு, மிளகுத்தூள்    -தேவையான அளவு

(சோளமாவு) கார்ன் ப்ளார் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை

வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். முருங்கைக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். எண்ணெயைச் சூடாக்கி அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். அதனுடன் நீரைச் சேர்த்து முருங்கைக்காய், புதினா இலை ஆகியவற்றை சேர்த்து வேக விடவும். காய் நன்றாக வெந்ததும், உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சைசாறு ஆகியவற்றைச் சேர்த்து பத்து நிமிடம் கொதிக்க விட்டு எடுத்து வடிகட்டவும். கடைசியாக கார்ன் ப்ளாரை கரைத்து ஊற்றி சூப் கெட்டியானதும் இறக்கி பரிமாறவும்.


Spread the love