பருப்பின் பயன்கள்

Spread the love

அரிசி, கோதுமை போன்ற அடிப்படை ஆதார உணவுகளுக்கு அடுத்தபடியாக உடலுக்கு தேவைப்படுவது பருப்புகள். சைவ உணவில் மிக முக்கியமான பருப்புகள், புரதம் செறிந்தவை. அசைவ உணவு உண்பவர்களுக்கு புரதம் சுலபமாக இறைச்சிகளிலிருந்து கிடைத்து விடும். சைவ உணவினர்களுக்கு பாலும் பருப்பும் தான் புரதம்.

புரதம் இல்லாவிட்டால் உடல் வளர்ச்சி இல்லை. ஒரு கிராம் புரதம் 4.2 கலோரி சக்தியை தரும். புரதங்கள் அமினோ அமிலங்களால் ஆனவை. உணவு புரதங்களில் 23 அமினோ அமிலங்கள் உள்ளன. இவற்றில் 10 அமினோ அமிலங்களை உடல் உருவாக்கிக் கொள்ள இயலாது. எனவே இவற்றை உடல் உணவிலிருந்து தான் பெற வேண்டும். உணவு நிபுணர்கள் அசைவ உணவு புரதங்கள் தாவிர புரதங்களை விட சிறந்தவை என்கின்றனர். அதனால் சைவ உணவுக்காரர்கள் பருப்புகள், பால், கொட்டைகள், சோயாபீன் என்று பலவித புரத சைவ உணவுகளை, உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பருப்புகளில், மெத்தினோனின் மற்றும் ட்ரைப்டோபேன் எனும் தரமான புரத அமிலங்கள்

குறைவு. ஆனால் லைசின் பருப்புகளில் அதிகமாக உள்ளது. இதனால் தானியங்களையும், பருப்புகளையும் சேர்த்து உண்பதால் சிறந்த, தரமான புரதம் நமக்கு கிடைக்கும். எட்டு பாக தானியங்களுடன் ஒரு பாகம் பருப்புகள் சேர்ப்பது சரியான உணவுக்கலவை.

நாம் அன்றாடம் உபயோகிக்கும் பருப்புகள்

பருப்புகள் (100 கி)

துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, பொட்டுக்கடலை, உளுத்தம் பருப்பு, பயத்தம் பருப்பு, சோயாபீன்ஸ்,

புரத அளவு

22.3 கி, 20.8 கி, 22.5 கி, 24.0 கி, 24.5 கி, 43.2 கி,

பருப்புகளை “சமிதானியங்கள்” என்கிறது ஆயுர்வேதம். தனியாக (அரிசி, கோதுமை போல்) உணவாக ஏற்பதில்லை. வாய்வுவை அதிகரித்து விடும். உணவின் துணைப்பொருளாக பருப்புகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.

பருப்பு தோசை

தேவையான பொருட்கள்

துவரம் பருப்பு  – 1/4 கப்

கடலைப்பருப்பு  – 1/4 கப்

உளுத்தம்பருப்பு  – 1/4 கப்

பாசிப்பருப்பு      – 1/4 கப்

பச்சரிசி           – 1/2 கப்

சின்ன வெங்காயம் – 12

கறிவேப்பிலை     – சிறிது

காய்ந்த மிளகாய்   – 6

தேங்காய் துருவல்  – 2 டேபிள் ஸ்பூன்

சோம்பு             – 1 டீஸ்பூன்

உப்பு, எண்ணெய்     – தேவையான அளவு

செய்முறை

அரிசி, பருப்புகளை ஒன்றாக ஊறவையுங்கள்.

ஒரு மணி நேரம் ஊறியதும், மற்ற பொருட்களுடன் (எண்ணெய் நீங்கலாக) ஒன்றாகச் சேர்த்து அரைத்து, தோசைகளாக வார்த்தெடுங்கள்.

எண்ணெய் ஊற்றிச் சிவக்க வேகவிட்டெடுத்துப் பரிமாறுங்கள்.

வெங்காயத்தையும் சேர்த்து அரைப்பதால் வித்தியாசமான சுவை தரும் இந்த தோசை.

பருப்பு உருண்டை

தேவையான பொருட்கள்

துவரம் பருப்பு   – 1/4 கப்

கடலைப்பருப்பு  – 3/4 கப்

பாசிப்பருப்பு     – 1/4 கப்

பச்சரிசி         – 1/4 கப்

சின்ன வெங்காயம் (பொடியாக நறுக்கியது) – 1/2 கப்

பச்சை மிளகாய்  – 3

இஞ்சி             – 1 துண்டு

தேங்காய் துருவல் – 1/2 கப்

மல்லித்தழை      – ஒரு கைப்பிடி

கறிவேப்பிலை     – சிறிதளவு

எலுமிச்சம்பழச்சாறு – 1/2 முதல் 2 டேபிள்ஸ்பூன்

சோம்பு             – 1 டீஸ்பூன்

உப்பு               -தேவையான அளவு

செய்முறை

அரிசி, பருப்புகளை ஒன்றாக ஊறவையுங்கள். அவற்றுடன் உப்பு சேர்த்து கரகரப்பாக, கெட்டியாக அரைத்தெடுங்கள். அரைத்த விழுதுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், தேங்காய் துருவல், சோம்பு, பச்சை மிளகாய், இஞ்சி, மல்லித்தழை, கறிவேப்பிலை, எலுமிச்சம்பழச்சாறு எல்லாவற்றையும் கலந்து பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டி, ஆவியில் வேக வைத்து எடுங்கள். காரச் சட்னியுடன் பரிமாறுங்கள்.

குறிப்பு

ஐந்து காய்ந்த மிளகாய், சிறிது உப்பு, இரண்டு பல் பூண்டு இவற்றை அம்மியில் வைத்துக் கரகரப்பாக அரைத்த சட்னி, இந்தப் பருப்பு உருண்டைக்கு பிரமாதமான காம்பினேஷன்.

வேர்க்கடலை பர்ஃபி

தேவையான பொருட்கள்

வறுத்த வேர்க்கடலைப்பருப்பு (தோல் நீக்கியது) – 1 கப்

பொடித்த வெல்லம் – 1/2 கப்

செய்முறை

வெல்லத்தூளில் ஒரு டேபிள்ஸ்பூன் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து, அது கரைந்ததும் வடிகட்டி மீண்டும் கொதிக்க விடுங்கள். பாகு நல்ல பதம் வரும் வரை கொதிக்க வேண்டும். (சிறிதளவு பாகை எடுத்து தண்ணீரில் விட்டு, அதை எடுத்து உருட்டி ஒரு தட்டில் போட்டால் சத்தம் வர வேண்டும். இது தான் பர்ஃபிக்கான பாகுப்பதம்). அந்த சமயத்தில் பாகை இறக்கி, வேர்க்கடலையைச் சேர்த்து நன்கு கிளறி, கிளறிய வேகத்தில் நெய் தடவிய தட்டில் கொட்டி, சமமாகப் பரப்பி, வில்லைகள் போடுங்கள்.

காரக் கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்

(மேல் மாவுக்கு) பச்சரிசி – 1 கப்

உப்பு                    – தேவையான அளவு

பூரணத்துக்கு

உளுத்தம்பருப்பு – 1/4 கப்

துவரம்பருப்பு    – 1/4 கப்

பச்சை மிளகாய்  – 3

இஞ்சி            – 1 துண்டு

சீரகம்             – 1/4 டீஸ்பூன்

தேங்காய் துருவல் – 1 டேபிள்ஸ்பூன்

உப்பு               – தேவையான அளவு

எலுமிச்சம்பழச்சாறு – 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை

அரிசியை ஊற வைத்து 1 மணி நேரம் கழித்து, வீட்டுக்குள்ளேயே நிழல் உலர்த்தலாக உலர்த்தி, சற்று ஈரம் இருக்கும் போது மிக்ஸியில் அரைத்து, சலித்து வைத்துக் கொள்ளுங்கள். உளுத்தம் பருப்பையும், துவரம்பருப்பையும் ஒன்றாக ஊற வையுங்கள். ஒரு மணி நேரம் ஊறியதும், உப்பு, பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம், தேங்காய் துருவலோடு சேர்த்து கரகரப்பாக அரைத்தெடுங்கள். இதை இட்லிப்பாத்திரத்தில் வைத்து வேக விடுங்கள். வெந்ததும் எடுத்து ஆற விடுங்கள். எண்ணெய்யில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, வெந்ததை உதிர்த்து சேர்த்து கிளறுங்கள். அத்துடன் எலுமிச்சம்பழச்சாறு சேர்த்து கலந்து இறக்குங்கள்.

பச்சரிசி மாவை அளந்து கொண்டு சம அளவு தண்ணீர் எடுத்து (ஒரு கப் மாவு – ஒரு கப் தண்ணீர்) கொதிக்க விடுங்கள். சிறிது உப்பு சேருங்கள். தண்ணீர் கொதிக்கும் பொழுது மாவைச் சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள். சிறிது மாவெடுத்து கிண்ணம் போல் செய்து, பருப்பு பூரணத்தை உள்ளே வைத்து மூடி ஆவியில் வேக வைத்து எடுத்து, சுடச்சுடப் பரிமாறுங்கள்.

துவரம்பருப்பு போளி

தேவையான பொருட்கள்

மைதா              – 1 கப்

உப்பு                – தேவையான அளவு

நெய் (அ) எண்ணெய் – சுட்டெடுக்கத் தேவையான அளவு

பூரணத்துக்கு

துவரம்பருப்பு  – 1/2 கப்

சர்க்கரை      – 1/2 கப்

ஏலக்காய்தூள் – 1/2 டீஸ்பூன்

தேங்காய் துருவல் – 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை

மைதா மாவை, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி சற்று இளக்கமாகப் பிசைந்து கொள்ளுங்கள். அதன் மேலே சிறிது எண்ணெய் தடவி, மூடி வைத்து 2 மணி நேரம் ஊறவிடுங்கள். இது தான் போளிக்கான மேல் மாவு.

துவரம்பருப்பை நெத்துப் பருப்பாக குழையாமல் வேக வைத்து, தண்ணீரை வடியுங்கள். சர்க்கரை, தேங்காய் துருவல், வேக வைத்த பருப்பு மூன்றையும் சேர்த்து அடுப்பில் வைத்து கிளறுங்கள். சர்க்கரை இளகி, மீண்டும் இறுகும் வரை கிளறி, ஏலக்காய்தூள் சேர்த்து இறக்குங்கள். ஆறியதும் சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளுங்கள். இப்போது பூரணம் ரெடி.

அடுத்து, மைதாவை சிறிய அளவு எடுத்து உருட்டி, கிண்ணம் போல செய்து, உள்ளே பருப்பு பூரணத்தை வைத்து மூடி, மெல்லிய போளியாக திரட்டுங்கள். தோசைக்கல்லில் போட்டு, நெய் அல்லது எண்ணெய் சேர்த்து சுட்டெடுங்கள்.

பருப்பு போண்டா

தேவையான பொருட்கள்

உளுத்தம்பருப்பு    – 1 கப்

துவரம்பருப்பு      – 1/2 கப்

சின்ன வெங்காயம் – 1 கப்

பச்சை மிளகாய்    – 5

இஞ்சி             – 1 துண்டு

கறிவேப்பிலை     – சிறிதளவு

உப்பு               – தேவையான அளவி

எண்ணெய்         – தேவையான அளவு

தேங்காய்          – (பல்லு பல்லாகக் கீறியது) – 1/4 கப்

தாளிக்க

மிளகு      – 1 டீஸ்பூன்

சீரகம்      – 1 டீஸ்பூன்

எண்ணெய்  – 2 டேபிள் ஸ்பூன்

முந்திரி     – 10

செய்முறை

உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பை தனித்தனியே ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். துவரம்பருப்பை கரகரப்பாக அரைத்தெடுங்கள். உளுத்தம்பருப்பை பொங்க பொங்க அரையுங்கள். இரண்டையும் ஒன்றாக கலந்து கொள்ளுங்கள். சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை பொடியாக நறுக்கி, மாவில் சேருங்கள். அத்துடன் தேங்காய், உப்பு சேர்த்துக் கலக்குங்கள். எண்ணெயில் மிளகு, சீரகம், முந்திரி சேர்த்து வறுத்து மாவில் சேருங்கள். நன்கு கலந்து, சிறு போண்டாக்களாக உருட்டி, காயும் எண்ணெயில் பொரித்தெடுங்கள்.

பாசிப்பருப்பு இனிப்பு முறுக்கு

தேவையான பொருட்கள்

பச்சரிசி மாவு (பதப்படுத்தும் முறை கீழே தரப்பட்டுள்ளது) – 2 கப்

பொட்டுக்கடலைப் பொடி  – 1/2 கப்

பாசிப்பருப்பு மாவு (வறுத்து, அரைத்தது) – 1/4 கப்

சர்க்கரை தூள்            – 1 கப்

வெண்ணெய்              – 1 டேபிள்ஸ்பூன்

உப்பு                      – 1 சிட்டிகை

எண்ணெய்                 – தேவையான அளவு

செய்முறை

அரிசி, பருப்பு, பொட்டுக்கடலை மாவுகளுடன் வெண்ணெய், உப்பு, சர்க்கரை சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளுங்கள். முறுக்கு அச்சுகளில் வைத்து, எண்ணெயைக் காய வைத்து, பிழிந்து வேகவைத்தெடுங்கள். விருப்பப்பட்டால் கை முறுக்காகவும் சுற்றலாம். தீயை ஒரே சீராக எரிய விட வேண்டும். இல்லையெனில் (சர்க்கரை சேர்ந்திருப்பதால்) முறுக்கு கருகி விடும்.

குறிப்பு

பச்சரிசியை கழுவி, நிழலில் உலர்த்தி, லேசான ஈரம் இருக்கும் போது மிஷினில் அரைத்து, பிறகு சலித்து, ஒரு தட்டில் நிழலில் உலர்த்தி வைத்துக் கொள்ளுங்கள்.

உளுந்து துவையல்

தேவையான பொருட்கள்

முழு உளுத்தம் பருப்பு – 1/2 கப்

காய்ந்த மிளகாய்       – 12

தேங்காய் துருவல்     – 2 டேபிள் ஸ்பூன்

புளி                    – பெரிய நெல்லிக்காய் அளவு

பெருங்காயம்           – 1 டீஸ்பூன்

உப்பு                   – தேவையான அளவு

எண்ணெய்              – 11/2 டேபிள்ஸ்பூன்

செய்முறை

எண்ணெயைக் காய வைத்து மிளகாய், பெருங்காயம், உளுத்தம்பருப்பு சேர்த்து நன்கு சிவக்க வாசனை வரும் வரை வறுத்து, தேங்காய், புளி சேர்த்து மேலும் சிறிது வறுத்து இறக்குங்கள். ஆறியதும் கரகரப்பாக அரைத்தெடுங்கள். கெட்டியாக இருந்தால் சாதத்துக்கு, சிறிது தண்ணீர் சேர்த்துக் கரைத்தால் இட்லிக்கு சட்னியாகவும் சுவை கொடுக்கும், இந்த உளுந்து துவையல்.

வாழைப்பூ பருப்பு உசிலி

தேவையான பொருட்கள்

துவரம்பருப்பு   – 1/2 கப்

கடலைப்பருப்பு  – 1/2 கப்

வாழைப்பூ      – பாதி

உப்பு            – தேவையான அளவு

அரைக்க

சின்ன வெங்காயம் – 8

காய்ந்த மிளகாய்   – 6

சோம்பு            – 1 டீஸ்பூன்

தேங்காய் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்

தாளிக்க

கடுகு          – 1 டீஸ்பூன்

எண்ணெய்     – தேவையான அளவு

செய்முறை

கடலைப்பருப்பு, துவரம்பருப்பு இரண்டையும் ஒன்றாக ஊறவையுங்கள். வாழைப்பூவை தட்டி பிழிந்தெடுங்கள் (அல்லது மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றியும் பிழியலாம்). அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக அரைத்து, அத்துடன் பருப்புகளையும் சேர்த்து கரகரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காய வைத்து கடுகு தாளித்து, அரைத்த விழுது, வாழைப்பூ, உப்பு சேர்த்து, உதிராக வரும்வரை நன்கு சுருள கிளறி இறக்குங்கள்.

துவரம்பருப்பு வெஜ் சாலட்

தேவையான பொருட்கள்

துவரம்பருப்பு   – 1/2 கப்

கேரட்          – 1

வெள்ளரிக்காய் – 1

மாங்காய்       – 1

தக்காளி        – 1

பெரிய வெங்காயம் – 1

பொடியாக நறுக்கிய மல்லித்தழை – 2 டேபிள்ஸ்பூன்

எலுமிச்சம்பழச் சாறு – 1 டேபிள்ஸ்பூன்

மிளகுத்தூள்   – 1/2 டீஸ்பூன் (அ) பச்சைமிளகாய் – 2

உப்பு          – தேவையான அளவு

செய்முறை

துவரம்பருப்பை உப்பு சேர்த்து (குழைந்து விடாமல், நெத்துப்பருப்பாக) வேக வைத்து, தண்ணீரை வடித்துக் கொள்ளுங்கள். காய்களை மிகவும் பொடியாக நறுக்குங்கள். பச்சை மிளகாய் போடுவதாக இருந்தால் அதையும் பொடியாக நறுக்குங்கள். எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, எலுமிச்சம்பழச்சாறு சேர்த்து பரிமாறுங்கள். புதுமையான ஆனால், சுவையான சாலட் இது.

உணவு நலம் செப்டம்பர் 2011

பருப்பின் பயன்கள், பருப்பு தோசை, பருப்பு தோசை செய்முறை, பருப்பு உருண்டை, பருப்பு உருண்டை செய்முறை, வேர்க்கடலை பர்ஃபி, வேர்க்கடலை பர்ஃபி செய்முறை, காரக் கொழுக்கட்டை, காரக் கொழுக்கட்டை செய்முறை,


Spread the love