கிழங்கு என்பது மண்ணுக்கு அடியில் விளையும் பயிர்களின் சேமிக்கும் பாகமாகும். வறண்ட நிலங்கள் மற்றும் வறண்ட வான்நிலையிலும் கிழங்கு வகைகளை வெற்றிகரமாக பயிர் செய்யலாம்.
நம்நாட்டில் பொதுவாக உருளைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, கருணைக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு, சேப்பங்கிழங்கு போன்றவைகளைமக்கள் உட்கொள்கிறார்கள். கிழங்கு வகையில் உள்ள மாவுச் சத்து நம் உணவில் எரிசக்திக்கு முக்கியமான மூலதனமாக உள்ளது.
சேப்பங்கிழங்கை எடுத்துக் கொண்டால் இது சிறந்த மருத்துவத் தன்மை கொண்டது. சேப்பங்கிழங்கின் வேர்கள் தொழுநோய் மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகளுக்குச் சிறந்த நிவாரணியாக அமைகிறது. யானைக்கால் மற்றும் நுரையீரல் சார்ந்த நோய்களுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது. மலேரியா காய்ச்சலின் போது கிழங்கின் வேர்களிலிருந்து எடுக்கப்படும் சாற்றை அருந்தக் கொடுக்கின்றனர். சேப்பங்கிழங்கின் இலையையும் வேரையும் சேர்த்து அரைத்து தேள்கடிக்கு மருந்தாகப் பயன்படுத்தலாம். இந்தியாவில் ஒரு வருடத்திற்கு 8 மெட்ரிக் டன் அளவில் இக் கிழங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்வகையான கிழங்குகள் மலிவான விலையில் கிடைப்பதால் குறைந்த வருவாய் உள்ளவர்கள் இக் கிழங்கினை அன்றாட உணவில் உட்கொண்டு அவர்களுக்குத் தேவையான எரிசக்தியைப் பெற்றுக் கொள்ளலாம். இக் கிழங்கு மேற்கு வங்காளம், பீகார், உத்திரப் பிரதேசம், அசாம், ஒடிசா (ஒரிசா), கேரளம், தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.
மற்ற வகையான கிழங்குகளுடன் ஒப்பிடும்போது சேப்பங்கிழங்கில் நார்ச்சத்து, புரதச் சத்து, இரும்புச் சத்து, தாது பொருட்கள் ஆகியவை அதிக அளவில் உள்ளது.
100 கிராம் கிழங்கிலுள்ள சத்துக்கள்
எரிசக்தி 97 கிலோ கலோரி
மாவுச் சத்து 21.1 கிராம்
புரதம் 3.0 கிராம்
நார்ச்சத்து 1.0 கிராம்
இரும்புச் சத்து 0.42 மைக்ரோகிராம்
தாதுபொருட்கள் 1.7 கிராம்
வைட்டமின் ஏ 24 மைக்ரோகிராம்
வைட்டமின் சி 15.1 மில்லி.
பொதுவாகவே நாம் சேப்பங்கிழங்கினை கொண்டு பொரியல், மோர்க் குழம்பு மற்றும் வியல் தயாரிப்பிலும் தான் அதிகம் பயன்படுத்தி வருகிறோம். சேப்பங்கிழங்கை அறுவடைக்குப் பின் அதிக காலம் உபயோகப்படுத்தாமல் வைத்து இருந்தால் அதில் நச்சுத் தன்மை உருவாக வாய்ப்பு உண்டு. அதனால் அறுவடைக்குப் பின் இக் கிழங்குகளை மாதக் கணக்கில் வாட விடாமல், விரைவில் பயன்படுத்த வேண்டும். இக் கிழங்கு பதப்படுத்தி நீண்ட நாட்கள் உபயோகப்படுத்தலாம்.
இதற்கான ஆய்வு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், மனையியல் கல்லூரி மற்றும் ஆராயச்சி நிலையத்தில் நடந்தது. சேப்பங்கிழங்கில் இருந்து மாவு தயாரித்து பல மதிப்பூட்டப்பட்ட உணவு பொருட்களைத் தயாரிக்கலாம்.
அவை, சேப்பங்கிழங்கு நூடுல்ஸ், சேப்பங்கிழங்கு கேசரி, சேப்பங்கிழங்கு உப்புமா, சேப்பங்கிழங்கு அப்பளம் ஆகியனவாகும்.