பிரமாதமான ப்ரோக்கோலி

Spread the love

ப்ரோக்கோலி பார்ப்பதற்கு ஒரு சிறிய மரம் போன்று காணப்படும். பச்சை பூக்கோஸ் என்று அழைக்கப்படும் ப்ரோக்கோலி முட்டைக்கோஸ் வகையைச்சார்ந்தது. இது உலகிலேயே மிகவும் சத்துள்ள பொருட்களில், ஆரோக்கியமான ஒன்றாகும். ப்ரோக்கோலியில் அதிகளவு விட்டமின்ஸ், மினரல்ஸ், நார்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது.

ப்ரோக்கோலி பொதுவாக வேக வைக்கப்பட்டு அல்லது சூடாக்கப்படுகிறது. இந்த ப்ரோக்கோலியை நாம் சமைக்காமல் அப்படியே கூட சாப்பிடலாம். நாம் சமைக்கும் விதத்தை பொறுத்துதான்,  இதில் உள்ள நியூட்ரியேஷன் நமக்கு மருந்தாக கிடைக்கிறது. இந்த ப்ரோக்கோலி சாப்பிடுவதால் நமது உடலிற்கு என்ன பயன் என்பதை பற்றி பார்க்கலாம்.

ப்ரோக்கோலியின் பயன்கள்:

ப்ரோக்கோலி சாப்பிடுவதனால் புற்றுநோயை தடுக்கலாம். இதை வேகவைத்து அல்லது வறுத்து சாப்பிட்டால் புற்றுநோய்க்கு எதிரான சேர்மத்தின் நிலைகள் குறைந்துவிடும்.

நீரழிவு நோயாளிக்கு இந்த ப்ரோக்கோலி மிகவும் நல்லது. இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த இந்த ப்ரோக்கோலி உதவுகிறது.

இதயத்தில் ஏற்படும் அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் இந்த ப்ரோக்கோலி நல்ல பயனளிக்கின்றது என்று ஒரு ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.

ப்ரோக்கோலியில் உயிரியக்க சேர்மங்கள் அதிகமாக நிறைந்துள்ளது. இது நமது  மூளைக்கு மிகவும் நல்லது. அலர்ஜியால் ஏற்படும் பிரச்சனைகளை குறைப்பதற்கும் இது உதவுகிறது.

ப்ரோக்கோலி செரிமான பாதைகளை நன்கு சுத்தப்படுத்தி, செரிமான சக்தியை கொடுக்கிறது. இது வயது முதிர்ச்சியடைவதை தாமதப்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

ப்ரோக்கோலியில் எளிதில் கரையும் நார்சத்துப்பொருட்கள் உள்ளது. இது நம் உடலில் உள்ள கொழுப்புகளை குறைக்க உதவுகிறது. இதில் உள்ள விட்டமின் சி, கே மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.

ப்ரோக்கோலி சாப்பிடுவதால் மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்கலாம். இவற்றில் உள்ள கால்சியம், வைட்டமின் கே ஆகியவை எலும்புகளை உறுதியாக்குகிறது.

ப்ரோக்கோலி பொரியல்:

ப்ரோக்கோலி பொரியல் வழக்கமாக நாம் சாப்பிடும் பொரியல் வகையைவிட சற்று மாறுபட்ட ஒரு பொரியல் வகையாகும். இதனை நாம் வீட்டில் எப்படி சுலபமாக செய்வது என்பது பற்றி பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

ப்ரோக்கோலி               –          1

மிளகாய்த்தூள்             –     1/2 டீஸ்பூன்

மல்லித்தூள்                     –     1/2 டீஸ்பூன் 

மஞ்சள்தூள்                     –     1/4 டீஸ்பூன்

வெங்காயம்                     –     1/4 கப்

பச்சைமிளகாய்             –     2

கடுகு                      –     1 டீஸ்பூன்

துருவிய தேங்காய்               –     1 டீஸ்பூன்

எண்ணெய்                 –     1 டேபிள் ஸ்பூன்

சிறிதளவு கறிவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை எடுத்து கொள்ளவும்.

செய்முறை:

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சிறிதளவு கடுகு, பச்சைமிளகாய் மற்றும் வெங்காயம் போட்டு நன்கு சிவக்கும் வரை வதக்கவும். பின் அதனுடன் கறிவேப்பிலை, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள் ஆகியவற்றை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு கிளறவும். பின், ப்ரோக்கோலியை வெதுவெதுப்பான நீரில் கழுவி, கடாயில் போட்டு 5 நிமிடங்கள் வரை மூடிவைக்க வேண்டும்.

ப்ரோக்கோலி பொரியல் தயாரானதும், துருவிய தேங்காய் சேர்த்து 2 நிமிடம் நன்கு கிளறி பின் இறக்கவும். சுவையான ப்ரோக்கோலி பொரியல் தயார்.

குறிப்பு:

ப்ரோக்கோலியை நீண்ட நேரம் வேகவைக்க வேண்டாம். இதனால் அவற்றிலுள்ள சத்துக்கள் வெளியேறிவிடும். இதன் முழுமையான பலனை பெற வேண்டுமென்றால், மிகவும் குறைந்த நேரம் வேகவைத்து சாப்பிடவும்.

ஜோ.கி


Spread the love