மிளகு

Spread the love

வாசனைப் பொருட்களின் அரசர் மிளகு. தொன்மையான காலத்திலிருந்தே உபயோகிக்கப்பட்டு வரும் மிளகு இல்லாத இந்திய வீடுகளே கிடையாது. சமையலுக்கு மட்டுமன்றி, பல வித நோய்களுக்கு கை மருந்தாக பயன்படுவது மிளகு தான்.

பழைய காலத்தில் கிரேக்கர்களும், ரோமானியர்களும் மிளகைப்பற்றி நன்கு அறிந்திருந்தார்கள். தியோப்ராஸ்டஸ் கி.மு. 372 – 287 ஆண்டுகளில் மிளகைப்பற்றி எழுதியிருக்கிறார். 15, 16 நூற்றாண்டுகுளில், மிளகுக்கெனவே வாணிக வியாபாரம் ஆசிய தேசங்களில் மும்முரமாக நடந்ததிற்கு, மிளகு ஒரு முக்கிய காரணம்.

மிளகு தரையில் படரும் தாவரம். அருகில் மரம், வேலி போன்றவற்றை பற்றிக் கொண்டு வளரும். கொடியில் சிறு கிளைகள், முடிச்சுகள் போன்ற கணுக்கள் இருக்கும். இந்தப் கணுக்களிலிருந்து மெல்லிய கம்பிகளை போன்ற நார்கள். மரக்கிளை முதலியவற்றை பற்றிக் கொள்ளும். மிளகுச் செடியின் இலைகள் வெற்றிலை இலைகளை போல் பெரிதாக இருக்கும். இலையில் ஐந்து நரம்புகள் தெளிவாக தெரியும். பச்சை நிறமுள்ள இலைகள், அடிப்பகுதியில் சிறிது வெளிறிய பச்சை நிறமாக இருக்கும். இந்தியாவில் கேரளம் மிளகு உற்பத்திக்கு பிரசித்த பெற்றது. மேற்கு மலைத் தொடர்ச்சி மலைகளில் பள்ளத்தாக்குகள் மிளகு உற்பத்திக்கு ஏற்றவை. உலகிற்கு தேவையான மிளகு, ஜாவா, சுமத்ரா தீவுகளில் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. செடி துண்டுகளை நட்டு பயிரிடப்படும் மிளகு, அது தொற்றிக் கொண்ட மரநிழலிலேயே வளரும்.

மிளகுச்செடியின் பச்சை நிறப்பழங்கள் பறிக்கப்பட்டு, வெய்யிலில் உலர வைக்கப்படுகின்றன. சில சமயங்களில் பழங்கள் தீயினால் சுட வைக்கப்படுகின்றன. ஈரம் போன மிளகுகள் பச்சை நிறத்திலிருந்து, கறுப்பு நிறமாகின்றன. மிளகு வகைகளில் கறுப்பு மிளகு, வெள்ளை மிளகு என்று இரண்டு ரகங்கள். முழு மிளகுப்பழத்தை அரைத்து கறுமிளகு தயாரிக்கப்படுகிறது. பழத்தின் சதையை விலக்கி, காய்ந்த விதைகளை அரைத்து, புளிக்க வைத்து, தண்ணீரில் கழுவி, வெள்ளை மிளகு தயாரிக்கப்படும். 100 கிராம் மிளகில் 13.2%, ஈரப்பசை, புரதம் 11.5%, கொழுப்பு 6.8%, தாதுப்பொருட்கள் 4.4%, நார்ச்சத்து 14.9%, கார்போ-ஹைடிரேட்ஸ் 49.2% தவிர கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், காரடோன், தியாமின், ரிபோஃபிளேவின் மற்றும் நியாசின் உள்ளன. 100 கிராம் மிளகில் உள்ள கலோரிகள் – 304.

மிளகின் சுருக்எனும் காரசுவைக்கு காரணம் அதிலுள்ள அல்கலாய்டு ஆன பைப்பரின் இந்த பைப்பரின் தண்ணீரில் கரையாது. இது கார சுவையை உண்டாக்கும் வேதிப்பொருள்.

மிளகின் பொதுக்குணங்கள்

மிளகு நறுமணத்துக்கும், சுவைக்கும் மட்டும் இல்லை, சிறந்த மருந்தும் ஆகும். நரம்புகளுக்கும், ஜீரணத்திற்கும் ஏற்ற டானிக்காகும்.

சரகஸம்ஹிதை படி மிளகு

தன்மை – கார்ப்புச் சுவை உள்ளது. கபத்தையும், வாதத்தையும் போக்கும். ஜீரண சக்தி அதிகரிக்கும். இருமல் கிருமி நோய்களை போக்கும். தக்க படி பயன்படுத்தினால் இராசயனமாகும்.

தீர்க்கும் நோய்கள் – இழுப்பு, வயிற்று வலி, கிருமிநோய், தவிர நச்சுகளால் தோன்றும் துன்பம், கண்நோய் இவற்றை போக்கும்.

பயன் – இருமல் நிற்க மிளகுத்தூள், சர்க்கரை, நெய், தேன் இவற்றை கலந்து உண்டால் இருமல் நீங்கும். மிளகு கலந்த மருந்துகளான மரீச்யாதி தைலம். தேக ராஜமரீசம் இவைகளால், வாத கிரஹணி, தோல் அரிப்பு, சொறி இவற்றை போக்கும்.

மிளகின் மருத்துவ குணங்கள்

ஜீரணத்திற்கு – கருமிளகு வாய்வுத்தொல்லை, அஜீரணம் இவற்றை போக்கும். மோருடன் அரை தேக்கரண்டி மிளகு சேர்த்து குடிக்கலாம். இதனுடன் ஜீரகம் சேர்த்தால் இன்னும் நல்லது. மிளகு பசியை தூண்டும்.

திரிகடுகம் – சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றையும் சம அளவில் கலந்த சூரணம் திரிகடுகம். இதை 2 கிராம் எடுத்து தேனுடன் சாப்பிட வாயுக்கோளாறை போக்கும். திரிகடுகம் மிக பழமையான, உபயோகமான சூரணம்.

நஞ்சுகளை போக்க – மிளகு எல்லா வித நஞ்சுகளையும் முறிக்கும் ஆற்றல் உள்ளது. தினசரி 5 – 6 மிளகை தூள் செய்து வெற்றிலையில் வைத்து, தேன் கலந்து, அப்படியே மென்று விழுங்கினால் எந்த நஞ்சும் பாதிக்காது.

இருமல் நிற்க – இருமலுக்கு கைகண்ட மருந்து மிளகு கஷாயம். இருமல் ஆரம்பித்தவுடனே வீட்டிலிருப்பவர்கள் செய்து கொடுக்கும் கஷாயம் இது. தொண்டை நோய்களுக்கும் மிளகு நல்லது. மிளகை அடிக்கடி உபயோகித்தால் குரல் வளம் பெருகும்.

கொலஸ்ட்ரால், கொழுப்பு நீங்க – மிளகில் உள்ள காப்சைன்கொலஸ்ட்ராலை குறைப்பதற்காக தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தினமும் 5 லிருந்து 10 மிளகை தூள் செய்து தண்ணீருடன் அருந்தவும். கொலஸ்ட்ராலை குறைப்பதால், மாரடைப்பு வராமல் காப்பதற்கு மிளகு நல்ல மருந்து என்ற தற்போதைய ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

மறதிக்கு – சிறிதளவு மிளகுப் பொடியை தேனுடன் சேர்த்து உண்ண மறதி குறையும். ஞாபக சக்தி பெருகும்.

ஆண்மை குறைவுக்கு – தினமும் 6 மிளகுகளுடன் 4 பாதாம் பருப்பு சேர்த்து பாலுடன் உட்கொள்ள, ஆண்மை பெருகும். வயது முதிர்வை குறைக்கும்.

ஜலதோஷம், ஜுரம், தலைவலிக்கு – மிளகு கஷாயம் ஜலதோஷத்தை குறைக்கும். மிளகையும், தும்பைப் பூவையும் சம அளவில் சேர்த்து அரைத்து, மிளகளவு மாத்திரைகளாக செய்து கொள்ளவும். இதில் 2 – 3 சாப்பிட்டு வெந்நீர் குடிக்க, காய்ச்சல் குணமாகும்.

மிளகை சுட்டு அதன் புகையை சுவாசித்தால் தலைவலி, சளி குறையும். மிளகை அரைத்து நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும். ஜுரம் தணிந்த பின் வரும் பலவீனத்தை மிளகு போக்கும். சளி, தும்மல், ஆஸ்துமா இவற்றுக்கும் மிளகு கஷாயம் பயன்படுகிறது. மலேரியாவை மிளகு கட்டுப்படுத்தும்.

தசை, மூட்டு வலிகளுக்கு – எள் எண்ணெய்யில், மிளகுப்பொடியை வறுத்து இதை வலிக்கும் இடங்களில் தடவலாம், வலி குறையும்.

பல், ஈறுவியாதிகளுக்கு – மிளகுப் பொடியை உப்புடன் சேர்த்து பல் துலக்குவது வாய் துர்நாற்றம், பல்சொத்தை, ஈறு வீக்கம், பல்வலி போன்றவற்றை குறைக்கும். பயோரியாவுக்கும் இந்த பற்பசைநல்லது.

மிளகிலிருந்து எடுக்கப்படும் மிளகு தைலம் உணவுக்கு மணம் கூட்டவும் வாசனை திரவியங்கள் தயாரிப்பிலும் பயன்படும். தவிர இந்த தைலம் ஜுரம் குறைய உதவுகிறது. பச்சை மிளகு மூலநோய், வாதநோய்களை கட்டுப்படுத்தும்.

எச்சரிக்கை

மிளகு உடலின் உஷ்ணத்தை அதிகரிக்கும். அதிகமாக உட்கொண்டால் கரு கலையும்.

நரம்பு மண்டலத்தை பாதிக்கும். தேவையற்ற சுழற்சி, மந்த நிலை தூக்கமின்மை இவற்றை மிளகு சீராக்கும். கல்லீரலை பாதுகாக்கும்.

மிளகு கலந்த உணவுகள் பசியை தூண்டும்.

ஆப்ரிக்கா மிளகை உண்டால் அது உடலில் ஒரு வித திரவத்தை / ஒரு வித வாசனையை உண்டாக்குகிறது. இதனால் கொசுக்கள் கடிப்பதில்லை என்றும் நம்புகிறார்கள்.

சீன மருத்துவத்தில் மிளகு, வாந்தி வருவதை தடுக்கவும், தலைசுற்றலை தவிர்ப்பதற்கும், வலி நிவாரணியாகவும் பயன்படுகிறது.

மிளகில் உள்ள பைப்பரின் பைப்பரின் எனும் அல்கலாய்டு  மிளகில் உள்ள ஒரு கெட்டியான வேதிப்பொருள். இது தண்ணீரில் கரையாது. ஆயுர்வேதத்தில் மிகவும் பயன்படும் பொருட்களில் மிளகும் உண்டு. சீன வைத்தியத்தில், இந்த பைப்பரினலிருந்து தயாரிக்கப்படும் ஆன்டிஎபிலெப்ஸிரின் என்ற பொருளை வலிப்பு நோய்களுக்கு மருந்தாக உபயோகிக்கப்படுகிறது. பீடா கரோடின்‘, வைட்டமின் பி, மற்றும் சத்துக்களை உடல் கிரகிக்க பைப்பரின் உதவுகிறது. ஆனால் அதிக அளவு பைப்பரின் (ஒரு நாளுக்கு 15 மி.கி. க்கு மேல்) உட்கொள்வது தவறு.

மிளகு, சுக்கு, திப்பிலி, ஏலக்காய், லவங்கப்பட்டை, லவங்கபத்திரி, சிறுநாகப்பூ, சர்க்கரை இவை சேர்த்து செய்யப்படும் மிளகாதி சூரணம், இருதய நோய், தொண்டை நோய் மற்றும் அஜீரண கோளாறுகளை போக்கும்.

உணவு நலம் டிசம்பர் 2010

மிளகு, சமையல், தியோப்ராஸ்டஸ், கறுப்பு மிளகு, வெள்ளை மிளகு, கறுமிளகு, புரதம், கொழுப்பு, தாதுப்பொருட்கள், நார்ச்சத்து, கார்போஹைடிரேட்ஸ், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், காரடோன், தியாமின், ரிபோஃபிளேவின், நியாசின், அல்கலாய்டு, மருந்து, நரம்புகள், ஜீரணம், ஜீரண சக்தி, இருமல், தீர்க்கும், நோய்கள், இழுப்பு, வயிற்று வலி, கிருமிநோய், கண்நோய், மரீச்யாதி தைலம், வாத கிரஹணி, தோல் அரிப்பு, சொறி, மிளகின், மருத்துவ, குணங்கள், வாய்வுத்தொல்லை, அஜீரணம், கொலஸ்ட்ரால், கொழுப்பு நீங்க, மாரடைப்பு, ஆண்மை, குறைவு, தலைவலி, சளி, ஆஸ்துமா, மலேரியா, வாய் துர்நாற்றம், பல்சொத்தை, ஈறு வீக்கம், பல்வலி, மூலநோய், எச்சரிக்கை, கரு கலையும்,

நரம்பு மண்டலம், சுழற்சி, கல்லீரல்,


Spread the love