ஆயுளை உயர்த்தும் அசல் கீரைகள்

Spread the love

சென்ற நூற்றாண்டு காலம் வரை மனிதர்கள் பெரும்பாலும் அதிகம் சாப்பிடுவது சிறுதானியங்களும், காய்கறிகளும் தான். இயற்கை முறை விவசாயம் நஞ்சில்லா உணவைத் தர, உடல் ஆரோக்கியமும் பெற்றனர். சாதாரணமாக அவர்களுடைய உணவுகளில் வாரம் இரண்டு, மூன்று நாட்கள் தவறாமல் பசுமையான கீரைகளை சேர்த்துக் கொள்வார்கள்.

அப்படி அவர்கள் சேர்த்துக் கொண்ட பல கீரைகள் உணவாகவும், மருந்தாகவும் அமைந்ததால், வருமுன் காத்தல் என்ற முறையில் பல நோய்கள் தாக்காத வண்ணம் தங்கள் உடலை காத்துக் கொண்டனர். கீழே குறிப்பிடும் ஒரு சில கீரைகள் அன்றாடம் சமையலில் பயன்படுத்தப்படுவது எனினும் அனைத்து வகை கீரைகளும் நமக்கு எளிதாக சந்தையில் கிடைக்கிறது என்பதால், பல நோய்கள் வராமல் மற்றும் உடல் ஆரோக்கியம் பேணவும் இயலுகிறது. எந்த நோய்களுக்கு எவ்வகை கீரை பயன்படுகிறது என்பதையும் நீங்கள் இங்கு அறிந்து கொள்ளலாம்.

புளியாரைக் கீரை

காடுகள், மலைகளில் வளரக் கூடியது. நீர்ப்பிடிப்புள்ள பகுதிகளில் நன்கு வளரும். இதன் இலைகளை வெறும் வாயில் இட்டு மெல்ல, மலை ஏறுபவர்களுக்கு ஏற்படும் களைப்பு நீங்கும். இதனைத் துவையல் செய்து சாப்பிட பித்த மயக்கம் குணமாகும். இதன் இலைகளை உலர்த்தி, இடித்துப் பொடி செய்து, தனியாக பாட்டிலில் அல்லது டப்பாவில் சேகரித்து வைத்துக் கொண்டு, தேன் கலந்து தினசரி காலை, இரவு சாப்பிட்டு வர இருமல் நீங்கும். சுவாசம் சார்ந்த பிரச்சனைகள் தீரும்.

இதனை நெய் சேர்த்து சாப்பிட, மூல வியாதிகள் நீங்கும். உடல் வலிமை பெறும். இதன் இலை சாதாரண அரை இலை போல ஊதா வண்ணமாக இருக்கும். புளியாரைக் கீரையில் வைட்டமின் சி, கால்சியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து உள்ளன. வயிற்றுப்போக்கு, இரத்தம் கலந்த வயிற்றுப்போக்கு குணமாகின்றன. தோலில் உண்டாகும் மருக்கள் நீங்கும்.

கோவைக் கீரை

கோவைக் கீரை வேலிகள் மீதும் தோட்டக் கால்களிலும் தன்னிச்சையாக வளரும் கொடி இனத்தைச் சேர்ந்தவை. கோவைக் கீரையில் இனிப்பு கசப்பு என்று இருவகை உண்டு. கோவை இலையை மூவிரல் கோவை, ஐவிரல் கோவை, நாமக் கோவை என்று மூன்று இனங்கள் உண்டு. கோவைக் கீரை ஆழ்ந்த பச்சை நிறம் கொண்டது. மிகுந்த கசப்புத் திறன் கொண்டது. கசப்புத் தன்மை கொண்ட உணவுகளில் உணவுகள் செரிப்பதற்கு உதவுகிறது. கோவைக் கீரையானது சாதாரணமாக தோன்றும் புண்கள், அம்மை காரணமாக உண்டாகும் புண்களை அகற்றுகிறது.

இதற்கு இதன் இலையை நெய் விட்டு அரைத்து புண்களின் மேல் பூச வேண்டும். உடல் சூடு, சொறி, சிரங்கு, நீர் அடைப்பு, இருமல் காரணமாக அவதிப்படுபவர்கள் கோவை இலையைக் கொதிக்கின்ற வென்னீரில் இட்டு 15 நிமிடங்கள் கழித்த பின்பு வடிகட்டிக் கொண்டு 50 மி.லி அளவு வேளைக்கு என்று தினசரி இரண்டு வேளை அருந்தி வர வேண்டும். கோவைக் கீரை மிகுந்த கசப்புத் தன்மை கொண்டதால் தனியாக கடைந்தோ, மசியல் செய்தோ, பொரியல் செய்தோ உண்பதில்லை. பதிலாக மற்றக் கீரைகளுடன் சேர்த்துக் கொண்டு சாப்பிடுவார்கள்.

நமது முன்னோர்கள் எந்தக் கீரையை மசியல் செய்தாலும் கோவைக் கீரையை அதனுடன் சேர்த்து சமைத்து வந்துள்ளனர். இதற்கு முக்கியக் காரணம் கோவைக் கீரையானது மற்றக் கீரைகளில் உள்ள உணவுச் சத்துக்களை சிதற விடாது காத்து, கசப்புத் தன்மை இல்லாத கீரைகளுக்கும் கசப்புத் தன்மை ஊட்டும். இதன் மூலம் மற்ற கீரைகளுக்கு சுவை கூடுகிறது.

படர் தாமரை குணமாக கோவை இலைச் சாறுடன் நல்லெண்ணெயை சேர்த்துக் காய்ச்சி வடித்து படர் தாமரை படர்ந்துள்ள இடத்தில் பூசி வர வேண்டும். ஆசன துவாரத்தில் காணும் எரிச்சல், புண்களுக்கு மேலே தடவி வர குணம் பெறலாம். இக்கீரையை எண்ணெய் சேர்த்துக் காய்ச்சிக் கொடுப்பதுண்டு. இந்த எண்ணெய் மேக சஞ்சீவி எண்ணெய் என்பர். இலையுடன் நெய் சேர்த்து வாட்டி கட்டிகளில் இட, கட்டிகள் பழுத்து உடையும். இலை மென்று சுவைத்து வர வாய்ப்புண்கள் ஆறும்.

முடக்கத்தான் கீரை

மலச்சிக்கல் பல காரணங்களினால் ஏற்படுகின்றது. மலம் கெட்டுப் போகும் பொழுது, மலம் சரியாக கழிக்க இயலாது என்பதுடன் இதனால் ஏற்படும் வாயுவின் காரணமாக வாத நோய் ஏற்படுகிறது. வாயு சம்பந்தப்பட்ட வாத நோய் 80 வகை உள்ளது. இந்த 80 வகை வாத நோயிற்கும் குணம் பெற மிகச் சரியான ஒரே மூலிகை முடக்கத்தான் கீரை தான். மலம் கெட்டுப் போவதால் ஏற்படும் வாயுவானது உடலில் பல இடங்களில் தங்கி துன்பம் தருகிறது.

எலும்புகளின் மூட்டுகளில் உட்கார்ந்தும் அங்கே மூட்டின் அசைவுகளுக்காக உருவாகும் எண்ணெய்ப் போன்ற பசையை உருவாக்காமல் தடுக்கும். இதனால் மூட்டு எலும்புகளின் முனையில் உள்ள குருத்தெலும்புகள் தேய்ந்து விடும். அப்பொழுது அழுத்தமான எலும்புகள் அசைவின் போது, இடையில் இருக்கும் நரம்புகளை அழுத்த ஆரம்பிக்கும். அழுத்தம் தாங்க இயலாமல் தோன்றுவதே வலி எனப்படும். அந்த நரம்புகள் கன்றிப் போய் தோன்றும் அறிகுறி தான் வீக்கமாகும். முடக்கத்தான் இலையை சாப்பிட, மூட்டுகளில் இருக்கும் வாயுவை நீக்கி விடும்.

இதனால் அங்கே மூட்டுகளின் அசைவிற்குத் தேவையான எண்ணெய் போன்ற பசை உருவாகும். பசை இருப்பதால் தேய்ந்தது போல குருத்தெலும்புகள் வளர ஆரம்பிக்கும். நரம்புகள் அழுத்தப்படுவது குறைந்து வலி நீங்க ஆரம்பித்து விடும். இந்த வாயு கழுத்தின் எலும்பில் அமர்ந்தால் கழுத்து எழும்பு தேய்ந்து போகும். இதற்கு ஆங்கில மருத்துவர்கள் கழுத்துப் பட்டை போடச் சொல்வர்.

இதே வாயு இதயத்தில் தங்கினால், இதய வால்வு சுருங்கி விடும். மூளையில் அமர, மூளையை செயல் இழக்கச் செய்து விடும். இதனால், செயல் இழந்த மூளையின் கட்டுப்பாட்டில் உள்ள கை, கால் இயக்கம் நின்று பக்கவாதம் ஏற்படும். இவ்வளவு பிரச்சனைகளையும் தீர்க்க முடக்கத்தான் மூலிகையை தோசையாக, அடையாகச் சுட்டு பயன்படுத்தலாம்.

தூதுவளை

வேலி ஓரங்களில், புதர்களில், காடுகளில் எளிதாக காணப்படக் கூடிய தூதுவளையானது காச நோய், ஆஸ்துமா, தைராயிடு கட்டி, காது வலி, தொண்டைக் கழலை நோய் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது. தூதுவளையின் இலைச் சாறினை காதில் விட காதுவலி நீங்குகிறது. சிறு குழந்தைக்கு ஏற்படும் ‘பிரைமரி காம்ப்ளெக்ஸ்’ மற்றும் ஆரம்ப காச நோயினை, தூதுவளையை சில மாதங்கள் உட்கொண்டு குணப்படுத்த இயலும். தூதுவளை இலையுடன் அரிசி சேர்த்து அரைத்து தூதுவளை ரொட்டியாக செய்து, சுமார் ஆறு வாரம் வரை காலை ஒரு வேலை காலை உணவாக மட்டும் உட்கொண்டு வர தொண்டை வலி, கழுத்து வலி, இருமல், தைராயிடுப் பிரச்சனை போன்றவை உறுதியாக குணமாகும். வாய்ப் புற்று இருப்பின் குணமாகும். சளி, ஜலதோஷம் நீங்கும்.

ஒரு பிடி அளவு தூதுவளை இலை எடுத்து கழுவி, சுத்தம் செய்து அரை லிட்டர் நீர் விட்டு, சுண்டக் காய்ச்சி 200 மி.லி. அளவு வந்தவுடன் வடிகட்டி சேகரித்துக் கொண்டு, 30 முதல் 40 மி.லி. அளவு எடுத்துக் கொண்டு தினசரி இருவேளை சர்க்கரை அல்லது தேன் கலந்து அருந்தி வர, இருமல், இளைப்பு, சளி, சளியுடன் கூடிய காய்ச்சல், காச நோய் காய்ச்சல் கட்டுப்பட்டு குணமாகும்.

தூதுவளை இலை 10 கிராம், தூதுவளைப் பூ 15 கிராம் எடுத்து சுத்தம் செய்து கால் லிட்டர் நீரில் பாதி அளவாக சுண்டக் காய்ச்சி, வடிகட்டிக் கொண்டு தேன்/சர்க்கரை கலந்து தினசரி காலை, மாலை இருவேளை தொடர்ச்சியாக ஒரு மாதம் அருந்தி வர கப வாதத்தினால் ஏற்படும் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.

துத்தி

வைட்டமின் ஏ, பாஸ்பரஸ், பொட்டாசியம் அதிகம் உள்ள கீரை இது. இதன் இலை, வேர், பட்டை, விதை, பூ என அனைத்துக்கும் மருத்துவக் குணங்கள் உண்டு. உடலில் உள்ள உஷ்ணம் காரணமாக ஏற்படும் பல நோய்கள் நீங்கும். மூலம், உடலில் ஏற்படும் கட்டி, புண்கள் குணமாகும். துத்தி இலைச் சாற்றை தொடர்ந்து சீரான இடைவெளியினை விட்டு விட்டு, சிறிதளவு அருந்தி வர சிறுநீர்ப்பை கற்கள் கரையும்.

துத்தி இலைச்சாறு 200 மி.லி. அளவு எடுத்துக் கொண்டு, ரு லிட்டர் பசுவின் பாலில் பனங்கற்கண்டு 100 கிராம், சீனி 50 கிராம் அனைத்தும் கலந்து மிதமான தீயில் மெழுகு பதத்திற்கு காய்ச்சி லேகியம் போல கிண்டி தனியாக வாயகன்ற பாட்டிலில் சேகரித்துக் கொள்ளவும். இந்த லேகியத்தினை கழற்சிக்காய் அளவு தினசரி காலை, மாலை என இருவேளை தவறாமல் சாப்பிட்டு வர, தாது புஷ்டி உண்டாகும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

வல்லாரை

கால்சியம், இரும்புச் சத்து, வைட்டமின் ஏ மற்றும் சி உள்ளது. ஆட்டிசம் நோயால் அவதிப்படும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. கவனச் சிதறல்களைக் குறைத்து, மனதை ஒரு நிலைப்படுத்தும். நரம்புத் தளர்ச்சி, பார்வை மங்குதலை குணப்படுத்தும். ரத்தத்தை சுத்திகரிக்கும். உடலில் நல்ல கொழுப்பு அதிகமாகும். நினைவுத் திறனை அதிகரிக்கும்.

மூளையில் உள்ள நியூரோ டிராஸ்மிட்டர்களைத் தூண்டி சிறப்பாக செயல்பட வைக்கும். சிறுநீரகம் சார்ந்த பெரும்பாலான பிரச்சனைகளை தீர்த்து வைக்கிறது. சிறிதளவு வல்லாரை இலையினை எடுத்து நன்கு கழுவி சுத்தம் செய்த பின்பு, இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து மறு நாள் காலையில் மை போல அரைத்து அதனுடன் சிறிதளவு பாதாம்பருப்பு பனங்கற்கண்டு, பால் கலந்து அருந்தி வர உடல் வலுப்பெறும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். குடல் பகுதிகளை வலுவாக்கும்.

குடலில் உள்ள புழுக்கள் மலம் வழியாக வெளியேறி விடும். தொடர்ந்து அருந்தி வர நரம்புக் கோளாறுகள், மூளை சுறுசுறுப்பின்மையைக் குணப்படுத்தும். வல்லாரைப் பொடி 25 கிராம் அளவு எடுத்துக் கொண்டு அதனுடன் மஞ்சள், கடுக்காய்த் தூள், நெல்லிக்காய்த் தூள் ஒவ்வொன்றும் 25 கிராம் எடுத்து நெய் சேர்த்துக் குழப்பி தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வர அனைத்து வித மூல நோய்களூம் குணமாகும். வல்லாரை சாப்பிட்ட பின்பு, அது செரிக்கும் வரை, வேறு எந்த உணவும் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் வல்லாரை உடலில் செரிப்பதற்கு ஒரு மணி முதல் நான்கு மணி நேரம் வரை எடுத்துக் கொள்கிறது.

மணத்தக்காளிக் கீரை

வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், பாஸ்பரஸ் மற்றும் மற்ற தாதுப் பொருட்கள் அதிகம் மணத்தக்காளிக் கீரையில் உள்ளது. குடல் புண், வாய்ப்புண்ணுக்கு மிகச் சிறந்த மருந்து. மூளையின் செயல்பாட்டைத் தூண்டுகிறது. உடல் உஷ்ணத்தைக் குறைக்கிறது. பக்கவாதம், மூட்டுவலி பலன் தரக் கூடியது. மலச்சிக்கலைப் போக்குகிறது. கத்திரி இனத்தைச் சேர்ந்த செடி வகை இது. 60 செ.மீ. வரை உயரம் வளரும். தண்டு மெலியதாக இருக்கும். மணத்தக்காளி கீரைச் செடியில் வேர்க்கஷாயம் கர்ப்பிணிப் பெண்களுக்குத் தரக் கூடாது. கருவைக் கலைக்கும் தன்மை கொண்டது.

மணத்தாளி இலைச் சாறு 50 மி.லி. அளவு உள்ளுக்குள் அருந்தி வர கல்லீரல் பலப்படுகிறது. கல்லீரல் வீக்கம் குணமாகிறது. இலைச் சாறை தோல் நோய், தேமல் இடத்தில் பூசி வர குணம் கிடைக்கும். மணத்தக்காளிக் கீரையை பச்சையாக அல்லது பயத்தம் பருப்பு, வெங்காயம் சேர்த்து கடைந்து அல்லது கூட்டுச் செய்து சாப்பிட்டு வர வாய்ப்புண், குடல் புண் குணமாகும். இதன் காய்கள் வற்றல் குழம்பு செய்து இரவு உணவாக சாப்பிட்டு வர, உடல் வலி நீங்கும். நல்ல உறக்கம் தரும். மணத்தக்காளி பழத்தில் தேன் சேர்த்துச் சாப்பிட நுரையீரல் காச நோய் குணமாகும்.

அகத்திக் கீரை

கீரை வகைகளில் அதிக அளவு புரதம் உள்ளது அகத்திக் கீரையில் தான். 3 கிலோ அகத்திக் கீரையில் ஒரு கிலோ பயறில் உள்ள புரதம் கிடைக்கின்றன. இதில் இரும்புச் சத்து, வைட்டமின் ஏ,சி, கால்சியம், தயாமின், ரிபோஃபிளேவின் ஆகிய சத்துகள் உள்ளன. உடலில் உள்ள அதிகமான பித்தத்தைத் தணிக்கும். மூலச்சூட்டைக் குறைக்கும். வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்றும். மலச்சிக்கலைக் குணப்படுத்தும். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது.

விஷத்தை முறிக்கும் தன்மை கொண்டது. வாய்ப்புண்களை ஆற்றுகிறது. பிற மருந்துகளை சாப்பிடும் பொழுது அதன் செய்கைகளை அகத்தி முறித்து விடும் என்பதால் பத்திய உணவிற்கு ஏற்றதில்லை. நோயாளிகள் உண்ணக் கூடாது. கீரைச்சாறை உடலில் பூசி வர வெப்பம் தணியும். இலையை அரைத்து காயங்களுக்கு கட்டலாம். ஒரு பங்கு சாறுடன் 8 பங்கு தேன் கலந்து குழந்தையின் உச்சந்தலையில் தடவிட நீர்க் கோவை நீங்கும்.

சாறை மூக்கில் இட்டாலும் தலைவலியும் நீர்க் கோவையும் நீங்கும். கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் வயிற்றுப் புழு வெளியேறும். ஆனால், அடிக்கடி அகத்தியை உணவில் சேர்க்கக் கூடாது. காரணம் சொறி,சிரங்குகளை உருவாக்கி விடும். இரத்தம் குறைந்து உடல் மெலிந்து விடும். உடல் வீக்கம், வயிற்றுக் கடுப்பு, கழிச்சல் ஆகியவற்றையும் உண்டாக்கி விடும்.

அரைக்கீரை

அரைக் கீரையில் வைட்டமின் ஏ, பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம் தேவையான அளவு உள்ளன. இந்தக் கீரைகளைச் சாப்பிட நுரையீரல் சார்ந்த நோய்கள் மற்றும் கபத்திற்கு விரைவில் குணம் பெற இயலுகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கிறது.

அரைக் கீரைச் சாறுடன் மிளகு, சீரகம் சேர்த்துக் கஷாயம் செய்து அருந்தி வர சளி, இருமல் நீங்கும். நரம்புச் தளர்ச்சியை போக்குகிறது. நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டைச் சீராக்குகிறது. சோர்வைப் போக்குவதுடன் உடலுக்கு சுறுசுறுப்பைத் தருகிறது.

முருங்கைக் கீரை

முருங்கை கீரை கால்சியம், பாஸ்பரஸ்,. இரும்புச் சத்து உள்ளிட்ட தாது உப்புகள், வைட்டமின் ஏ, சி, பி காம்ப்ளக்ஸ் அதிகம் உள்ளன. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. எலும்புகள், பற்கள் வலுப்பெறும். இரத்தச் சோகையைக் கட்டுப்படுத்தும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைத்து நீரிழிவு, கொலஸ்ட்ரால் வராமல் தடுக்க உதவுகிறது. வாரம் ஒரு நாள் முருங்கைக் கீரைச் சாப்பிட மலச்சிக்கல் வராமல் வாழலாம். குழந்தையின்மை, ஆண்மைக் குறைபாடுகளை குணப்படுத்துவதற்கு முருங்கைக் கீரை தவறாமல் சமைத்துச் சாப்பிடலாம். பார்வைத் திறனை மேம்படுத்தும்.

முருங்கைப் பூக்களை பாலில் வேக வைத்து தினசரி இரவு அருந்தி வரலாம். அதுபோல முருங்கைக் காய் இளம் பிஞ்சுகளை பாலில் வேக வைத்து சாப்பிட மலட்டுத் தன்மை நீங்கும். ஆண்மை அதிகரிக்கும். கை, கால், மூட்டு வலிகளைக்குணமாக்கும். உடல் சூடு காரணமாக ஏற்படும் தலைவலியைத் தடுக்கும்.

பா. முருகன்

சீசன் சமையல்

கிராமத்து மிளகு குழம்பு

தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம் – 50 கிராம்                                                              

பூண்டு             –   15                                                               

 புளி –             – 1 எலுமிச்சை அளவு                                                  

  உப்பு              – தேவையான அளவு

வறுத்து அரைப்பதற்கு…

மல்லி (தனியா)      – 3 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு    – 1 டீஸ்பூன்

கடலைப் பருப்பு     – 1 டீஸ்பூன்

மிளகு –             – 2 டீஸ்பூன்

பச்சரிசி –            – 1 டீஸ்பூன்

தாளிப்பதற்கு…

நல்லெண்ணெய் –    – -6 டீஸ்பூன்

கடுகு –             – 1 டீஸ்பூன்

சீரகம் –             – 1 டீஸ்பூன்

வெந்தயம்          – 1/4 டீஸ்பூன்

கறிவேப்பிலை –      – சிறிது

செய்முறை :

புளி தேவையான ஆளவு கரைத்து கொள்ளவும். சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அனைத்து பொருட்களை சேர்த்து குறைவான தீயில் பொன்னறிமாக வறுத்து எடுக்கவும், பின் மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதே வாணலியில் 3 டேபிள் டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கிய பின்,  அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறி, புளிச்சாற்றினை ஊற்றி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து 20 நிமிடம் குறைவான தீயில் நன்கு கொதிக்க விட வேண்டும். பின் மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, கொதித்துக் கொண்டிருக்கும் குழம்புடன் சேர்த்து கிளறி இறக்கினால், மிளகு குழம்பு ரெடி!!!


Spread the love