நலம் தரும் சமையல் வாசனைப் பொருட்கள்

Spread the love

வாசனைப் பொருட்கள் இந்திய உணவு கலாச்சாரத்தில் நீக்கமற நிறைந்துவிட்ட ஒரு விஷயமாகும். இவை சாதாரண உணவையும், சிறப்பான உணவாக மாற்றிவிடுகிறது. உணவில் சுவை, மனம் மற்றும் வாழ்வை கூட்டி, அது அசைவ உணவாக இருந்தாலும், சைவ உணவாக இருந்தாலும், அதன் சிறப்பை கூட்டிவிடுகிறது. இந்த வாசனைப் பொருட்களிலும் ஆரோக்கியம் இருப்பது உங்களுக்கு தெரியுமா?

பழங்காலத்தில் இருந்தே, ஸ்பைசஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் வாசனைப் பொருட்களைப் பற்றி இந்தியர்கள் அறிந்து வைத்திருந்தனர். வாசனப் பொருட்கள் செடிகளில் இருந்து பெறப்படுபவையாகும்.

கோடைக்காலங்களில் சில குறிப்பிட்ட வாசனப் பொருட்கள் உடற்சூட்டை குறைக்கின்றன. ஆனால், அதேசமயம், வாசனைப் பொருட்களை குறைந்த அளவிலேயே பயன்படுத்த வேண்டும். அதிகளவில் பயன்படுத்தினால், வாந்தி, வயிற்றுப்போக்கு, அசிடிடி எனப்படும் நெஞ்செரிச்சல் ஆகியவற்றை ஏற்படுத்தும்.

செரிமானத்தை அதிகரிக்கச் செய்வதன் மூலமும், உடலில் சேர்ந்துள்ள ‘அமா’வை வெளியேற்றுவதன் மூலமும் வாசனைப் பொருட்கள், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ஏனெனில், ஆயுர்வேதத்தில், போதுமான செரிமானமின்மைதான் நோய்களுக்கு காரணமாகிறது. இனி ஒவ்வொரு வாசனைப் பொருட்களுக்குமான விசேஷ தன்மையை காணலாம்.

ஓமம்

வாதம், கபம் ஆகியவற்றை சமப்படுத்துவதுடன், பித்தத்தை அதிகரிக்கச் செய்கிறது. இது மிகச்சிறந்த ஊக்குவிப்பு திறன் கொண்ட ஒரு பொருளாகும். அதாவது சிறந்த உடற்கட்டை பெற உதவும் இது, ஜீரணத்தை அதிகரிக்கச் செய்கிறது. சாப்பாட்டிற்கு பின்பு ஒரு ஸ்பூன் அளவு இதை சாப்பிட்டால் போதும். சிறுநீரகம், சுவாச உறுப்புகள் சிறப்பாக செயல்பட இது உதவுகிறது. கபத்தை நீர்த்துப்போகச் செய்ய இது உதவுகிறது.

கறுப்பு மிளகு

திரிகடுவை தயாரிக்க பயன்படும் முக்கியமான பொருட்களில் ஒன்று கறுப்பு மிளகு. தொண்டை வறட்சி, ஜலதோஷம் உள்ளிட்ட பிற சுவாச பிரச்சனைகளுக்கு கறுப்பு மிளகு கசாயம் மிகச்சிறந்த வீட்டு வைத்தியம். அதேபோல், இதற்கு காலங்காலமாக நம் வீடுகளில் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு வைத்தியம் மிளகு ரசம். சிறிதளவு தேனுடன், மிளகுப்பொடியை கலந்து சாப்பிட்டால் ஜலதோஷம் கட்டுப்படும்.

இலவங்கப்பட்டை

இந்தியாவின் உயர்தர கார உணவு வகைளில் முக்கியமான பொருள் இது. குறிப்பாக புலாவ் மற்றும் பிரியாணியில் இது அவசியம் இடம்பெறும். சிறிதளவு இலவங்கப்பட்டையை எடுத்து வாயில் மெல்வதால், பெருமளவில் எச்சில் ஊரும். இது கபத்தை கட்டுப்படுத்துவதுடன், வாதத்தை கட்டுப்பாட்டுக்குள் வைக்கும். வாய் துர்நாற்றமும் காணாமல்போகும்.

ஏலக்காய்

ஏலக்காய் வாய் மனத்திற்கான உடனடி பொருளாகும். ஏலக்காய் இல்லாமல், இந்திய வகைகள் சிறப்பு பெறாது என்றால் அது மிகையாகாது. கீர் வகைகள், பாயாசம், ஹல்வா, சர்க்கரை பொங்கல் என்று எல்லா வகை இனிப்பிலும், முந்திரிக்கொட்டையுடன், கலந்து கிடப்பது ஏலக்காய். இது வாதம், பித்தம், கபம் எனும் 3 தோசங்களையும் சமச்சீராக வைத்து கொள்ள உதவுகிறது. ஜீரணத்தை மேம்படுத்தவும், வாயுவை வெளியேற்றவும் இது பயன்படுகிறது.

கொத்தமல்லி

இந்திய குடும்பங்களில் சட்னி முதல் சாம்பார் வரையில் அனைத்து, அன்றாட உணவுகளிலும் கொத்தமல்லி அவசியம் இடம்பெறும். இது இல்லாமல் உணவு ருசி, மனத்துடன் அமையாது என்பதுடன், ஜீரணத்தையும் அதிகரிக்காது. கொத்தமல்லி விதைகள், ஜீரணத்துக்கு மிகச் சிறப்பானது. வயிற்று கோளாறுகள் அனைத்தையும் தீர்க்கும் வல்லமை கொண்டவை.

சீரகம்

சீரகம் என்ற பெயர் வந்ததற்கு காரணமே, இது அகத்தை சீர்படுத்துவதால்தான். அந்த அளவுக்கு ஜீரணத்தை மேம்படுத்தும் திறன் கொண்ட இது, உணவுக்கு மனத்தையும் அளிக்கிறது. இது வயிற்றுப்போக்கு ஏற்படாமல் தடுக்கிறது.

இஞ்சி

அஜீரணத்தில் இருந்து விடுபட இஞ்சி பயன்படுகிறது. வயிற்று பொருமல், சிறந்த உடற்கட்டுக்கும் இது உதவுகிறது. உணவுகளில் மனத்தை கூட்டுவதற்கு மட்டும் இல்லாமல், ஜீரணத்தை மேம்படுத்துவதற்காகவும் இது பயன்படுத்தப்படுகிறது. உடற்சூட்டை மேம்படுத்தவும் இஞ்சி உபயோகிக்கப்படுகிறது.

வெந்தயம்

வெந்தயம், இரைப்பை குடல் வலி நீக்கியாகவும், பாலுறவு தூண்டும் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. பெரியம்மை தாக்கிய நோயாளிகளின் உடல் நலனை மேம்படுத்துவதற்காக, குளிர்பானத்துடன் இதை கலந்து கொடுப்பது வழக்கம். இது முடி வளர்ச்சிக்கும், தோல் பளபளப்புக்கும், இயற்கை தந்த சிறந்த வாசனைப் பொருள். வெந்தயத்தை இரவு முழுவதும் ஊறவைத்து, அந்த தண்ணீரை குடித்தால், உடல் குளிர்ச்சி அடையும்.

புதினா

புதினா குளிர்ச்சித்தரும் மூலிகை. இது சிறந்த நோய் எதிர்ப்பு பொருளாகவும், பாலுறவு உணர்ச்சியை தூண்டும் பொருளாகவும், வயிற்று வலியை நீக்கும் தன்மை கொண்டதாகவும், வயிற்றுப்போக்கு தன்மையை குறைப்பதாகவும் உள்ளது. வயிற்று வலி ஏற்படும் நேரத்தில், புதினாவை வெறும் வாயிலோ அல்லது ஜூஸ் ஆகவோ செய்து சாப்பிட்டால் உடனடி நிவாரணம் தெரியும்.

ஜாதிக்காய்

ஜாதிக்காய் மிக வலிமையான வாசனைப் பொருள். இதை எப்போதாவது தான் பயன்படுத்த வேண்டும். இது வாதம் மற்றும் கபத்தை கட்டுப்படுத்துகிறது. அதேசமயம், பித்தத்தை அதிகரிக்கச் செய்கிறது. தலைச்சுற்றல், வாந்தி, குமட்டல் போன்றவற்றுக்கு பலன் தருகிறது.

குங்குமப்பூ

இது பணக்காரர்களின் பொருளாக உள்ளது. விலை அதிகமானது என்பதால், பல இடங்களில் இதன் போலிகள் விற்கப்படுகிறது. இது, ஊட்டச்சத்தை உடல் கிரகித்துக் கொள்ளவும், விஷத்தை வெளியேற்றவும் பயன்படுகிறது.

மஞ்சள்

இந்திய சமையலறைகளில் நீக்கமற நிறைந்திருக்கும் ஒரு பொருள் மஞ்சள். இதை அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே, இதை ஆன்மீகத்துடனும் முன்னோர்கள் இணைத்துள்ளனர். இது மிகச்சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.. கல்லீரலில் விஷத்தன்மை கொண்ட நீரை வெளியேற்ற உதவுகிறது. காயம்பட்ட இடங்களில் எரிச்சலை நீக்குகிறது. கொழுப்புச்சத்து அளவை சமநிலைப்படுத்த இது உதவுகிறது.

அதேசமயம், ஒவ்வாமையை எதிர்க்கவும், தோல் பளபளப்புக்கும் இது உதவுகிறது. இது நூற்றுக்கணக்கான வழிகளில் சிகிச்சை அளிக்க பயன்படும் ஒரு மிகச்சிறந்த வாசனைப் பொருளாகும்.

சத்யா


Spread the love