தற்போது பெண்கள் எல்லோரும் படித்து ஒரு நல்ல வேலையில் இருக்கின்றனர். அவர்கள் தாங்கள் செல்லும் இடங்களில் தங்களின் தோற்றத்தை மெச்சும்படியாக உடலமைப்பை பெற விரும்புவர். ‘ஆள் பாதி ஆடை பாதி’ என்று ஒரு பழமொழி உண்டு.
இன்று ஒரு ஜவுளிக் கடையில் போய் பார்த்தால், உலகின் முன்னணி ப்ராண்ட் துணிமணிகள் சொற்ப விலைக்கே கிடைக்கின்றன. எனவே, ‘ஆடை பாதி’ என்ற ஒரு விஷயம் முடிந்து போனது. அந்த பிராண்டட் துணிகளில் ஏதேனும் ஒன்றை, தங்கள் ‘சைஸிற்கு’ ஏற்ற மாதிரி வாங்கிக் கொண்டாலே போதும்.
“ஆனால், உடல்வாகு என்று ஒன்று உள்ளதே? அதை என்ன செய்ய?” என்று கேட்கிறீர்கள். சொல்கிறோம். உங்களில் சிலர், “நான் அழகாக இல்லை… நான் குண்டாக இருக்கிறேன்…. இதனால் நான் விரும்பும் சில வகை உடைகளை என்னால் உடுத்த முடியாது’’ என்று நினைப்பீர்கள். அது சரி தான். ஆனால், ஒன்றை மட்டும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். அந்த பழமொழியில் ‘ஆள் பாதி’ என்ற ஒரு சொல், உங்களின் ஒல்லியான அல்லது குண்டான உடல்வாகைச் சொல்லவில்லை. அதை நீங்கள் கண்டிப்பாக புரிந்து கொள்ள வேண்டும்.
உங்கள் உடலில் சில இடங்களில் சதை போட்டிருக்கலாம். சில இடங்களில் தங்களுக்குப் பிடிக்காத தோல் நோய்கள் ஏற்பட்ட தழும்புகள் இருக்கலாம். இன்னும் இது மாதிரி பல விஷயங்கள் உங்களுக்கு பல வித குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டு, உங்களையும் உங்கள் தோற்றத்தையும் மட்டுப்படுத்தி கொண்டிருக்கலாம். ஆனால், இதையெல்லாம் நீங்கள் நினைத்தால் சரி செய்யக் கூடிய ஒன்றே..!
தங்கள் உடலில் எங்கு, என்ன மாதிரியான உடல்வாகு இருக்க வேண்டுமென்று நீங்கள் நினைக்கிறீர்களோ அங்கு சில மசாஜ், உடற்பயிற்சி கொண்டும், மிதமான மற்றும் நாகரீகமான ஒப்பனைகளின் மூலமும் சரி செய்ய இயலும்.
உடற்பயிற்சி செய்யுங்கள்
உடற்பயிற்சி உங்களுக்கு ஒரு தன்னம்பிக்கையை கொடுக்கிறது. இது அலைபாயும் மனதை கட்டுப்படுத்துகிறது. புத்துணர்வைக் கொடுக்கிறது. உடல் கட்டுக் கோப்பாகி, மகிழ்ச்சி வெள்ளத்தில் உங்களை மூழ்க வைக்கிறது. உடல் மூலம் மகிழ்ச்சி உண்டாகி விட்டாலே, ஒரு பெண்ணுக்கு தன்னம்பிக்கை மிகப் பெரிய அளவில் துளிர்விட ஆரம்பிக்கும். உடற்பயிற்சி செய்யும் போது, வியர்வை வெளி வரும் வண்ணம் செய்ய வேண்டும். இதனால், உங்கள் முக அழகு மிளிரும்.
வேலைக்குப் போகும் பெண்கள் சிலர் தொடர்ச்சியாக பல நாட்கள் உடற்பயிற்சி செய்து வருவார்கள். திடீரென்று 2 நாட்கள் பயிற்சியை விட்டு விடுவார்கள். உடனே, அவர்களுக்கு ஒரு ஃபீல் வரும்… “அய்யய்யோ… நான் குண்டாகி விட்டேனா?” என்று..! ஆனால், கவலைப்பட வேண்டாம். அதிகமாக மீண்டும் உங்கள் உடம்பு சதை போட்டால், 2 கிலோ தான் அதிகரிக்கும். ஆனால், நீங்கள் மறுபடியும் உடற்பயிற்சியை தொடர்ந்தால் போதும். மீண்டும் ஃபிட்டான தோற்றத்தைப் பெறலாம்.
ஒரு நடிகை போல ஒப்பனை செய்யுங்கள்
பெண்கள் தங்கள் உடல்வாகு மற்றும் முக அமைப்பைக் கருத்தில் கொண்டு தங்களில் தலை அலங்காரம், ஒப்பனை செய்தாலே போதும். அழகு அள்ளிக் கொண்டு வரும். இதில் லிப்ஸ்டிக், முகப் பவுடர் கலர், டியோடினண்ட் போன்ற்வை அடங்கும். இதைத் தேர்ந்தெடுப்பதில் மிக அதிக கவனம் தேவை.
சில பெண்கள் மட்டும் எந்த உடை அணிந்தாலும் வெகு கவர்ச்சியாகவும், அழகாகவும் இருக்கும். நூறு பெண்கள் நடுவில் அந்த பெண் இருந்தாலும், அவள் மட்டும் தனித்துத் தெரிவாள். இந்த வகைப் பெண்களிடம் இருப்பது எல்லாம் சாதாரண ட்ரெஸ்ஸிங் சென்ஸ் மட்டுமே..! தங்களின் நிறத்திற்குத் தகுந்தவாறு உடையை தேர்ந்தெடுத்து அணிகிறார்கள். அழகு தேவதையாக வலம் வருகிறார்கள்.
சில பெண்கள் தங்கள் மார்பகத்தையும், பின்னழகையும் எடுப்பாகக் காட்டிக் கொள்ள மிக மெனக்கெடுகிறார்கள். இவர்களுக்கு மேற்சொன்ன சாதாரண ட்ரெஸ்ஸிங் சென்ஸும், அதோடு சேர்ந்து கொஞ்சம் க்ரியேட்டிவ் சென்ஸூம் இருக்கும். அவர்கள் மாதிரி ட்ரெஸ், ஒப்பனைகள், மிடுக்குகள், அலங்காரங்கள் என அப்படியே பார்த்துக் கொண்டு மற்ற பெண்களும் அழகு ராணியாக வலம் வரலாம்.
இவர்கள் உயரமாக இருந்தால் கட்டம் போட்டது போலவும், பூக்கள் டிசைன் வைத்தது போலவும் உடையாக தேர்ந்தெடுத்து வைத்திருப்பர். மேலும், நடுத்தர உயரம் உடைய பெண்கள் கவர்ச்சியாகத் தோன்றுவதற்கு நீளவாக்கில் கோடு போட்ட அல்லது டிசைனர் சாரிஸ்களை தேர்ந்தெடுத்து அணிந்திருப்பார்கள்.
இதனால், இவர்கள் மிகவும் ஒல்லியான மற்றும் உயரமான உடலமைப்பைக் கொண்டவர்களாக தன்னை மிகைப்படுத்திக் காட்டிக் கொள்வர். குள்ளமாக உள்ளவர்கள் சின்ன பூக்கள் வைத்த உடைகளையே மிகவும் விரும்புவர். இன்னும் சிலர் தன் நிறத்திற்கு ஏற்றவாறு நீள வாக்கில் கோடு போட்ட, ஒரே நிற உடையை தேர்ந்தெடுப்பார்கள்.
இவர்கள் வெள்ளரிப் பழ கலரில் இருந்தால் போதும். இவர்களுக்கு எந்த வகையான கலரிலும் உடைகள் எடுப்பாக அமைந்து விடும். அது லைட்டாக இருந்தாலும் சரி… டார்க்காக இருந்தாலும் சரி. இவர்களால் எந்த ஒரு உடையையும் அணிந்து அசத்த முடியும்.
மாநிறமாகவும், கருப்பாகவும் உள்ள பெண்கள் கொஞ்சம் கவனமாக உடைகளைத் தேர்ந்தெடுத்தால் தங்கள் உடலை நன்றாக கவர்ச்சிகரமாக வெளிப்படுத்தலாம். இவர்கள் மிகவும் லைட்டான கலரையோ அல்லது மிகவும் டார்க்கான கலரையோ தேர்ந்தெடுக்கக் கூடாது. இவர்கள் கண்டிப்பாக மிதமான கலராக பார்த்து எடுத்தால் அவர்களும் ஜொலிக்கலாம்.
மேலும், உயரமானவர்கள் மெலிதான ஸ்லிப்பரை உபயோகிக்க வேண்டும். அதே சமயம், கால்களை தூக்கி வைத்து நடக்கும் போது, சரியாக தங்களின் பின்புறத்தை கவர்ச்சியாக காட்டும்படி வைத்துக் கொடுக்கும் ஸ்லிப்பர்ஸை தேர்ந்தெடுக்க வேண்டும். குள்ளமானவர்கள் ஓரளவு ஹீல்ஸை அணியலாம். மேலும், அதிக அளவிலுள்ள ஹீல்ஸ்களை உபயோகிக்கும் போது முதுகு வலியும் இடுப்பு வலியும் ஏற்படும் அபாயம் இருப்பதால், அதைக் கருத்தில் கொண்டும் ஹீல்ஸை தேர்ந்தெடுக்கவும்.
உடல் அமைப்பை மாற்றக் கூடிய சிலவகை எளிய உடற்பயிற்சி முறைகள்
எளிய மூச்சுப் பயிற்சி
இரு கால்களையும் நன்றாக, உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரித்து நிறுத்தி வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் இரு கைகளும், உங்கள் தொங்கும் மார்பை ஒட்டி மேற்புறமாக வைத்துக் கொள்ளுங்கள். இந்த நிலையில் மூச்சை நன்றாக உள்ளிழுத்துக் கொண்டு, மெதுவாக வெளியிட வேண்டும். மூச்சை உள்ளிழுக்கும் போதும், வெளியிடும் போதும் உங்கள் மார்பும், வயிறும் உள்ளேயும், வெளியேயும் போய் வருதல் வேண்டும். மூச்சு விடுதலும், உள்ளிழுத்தலும் 40 முறை இருக்க வேண்டும்.
பலன்கள்
மார்பு தசைகள் நன்றாக விரிந்து கொடுக்கும். மார்பு கொழுப்புச் செல்களில் ஏதேனும் இறுக்கம் இருப்பின் அவை தளர்ந்து ஒரு கம்பீரமான தோற்றத்தைக் கொடுக்கும்.
வயிறு இயல்பாகவே கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே இழுக்கப்படும். சிறு தொப்பை உள்ளவர்கள் இதை தொடர்ச்சியாக செய்து வந்தால் ஸ்லிம் ஆகலாம்.
இப்பயிற்சியை தினமும், ஆளுயர கண்ணாடியின் முன், பக்கவாட்டில் இருந்து கொண்டு செய்தால் மார்பழகு அதிகரிப்பதை காணலாம். இதனால் தன்னம்பிக்கை துளிரும்.
பின்புற தசை பயிற்சி
இப்பயிற்சியை எளிய மூச்சிப் பயிற்சியை செய்து விட்டு தான் செய்ய வேண்டும். எளிய மூச்சுப் பயிற்சியை போல நிற்கும் நிலையில் இருந்தே இதைச் செய்ய வேண்டும். பின், வலது காலை உயர்த்தி முன் பாதங்களில் நிற்க வேண்டும். சிறிது நேரம் அப்படியே இருந்து விட்டு, பழைய நிலைக்கு வந்து எளிய மூச்சுப் பயிற்சியை செய்ய வேண்டும். இவ்வாறு 20 முறை செய்ய வேண்டும்.
பலன்கள்
சில பெண்களுக்கு பின்புறத் தசைகள் அதிகமாக இருக்கும். இப்பயிற்சியை ஒரு நாளில் 3 முறை செய்து வந்தாலே சிறிது சிறிதாக அத்தசைகளைக் குறைக்கலாம்.
மூச்சு நிலைகளில் எவ்வித மாற்றமும் செய்யாமல், சிரமப் படாமல் முக்காமல், முணகாமல் உடலை நன்றாக தளர்வாக வைத்துக் கொண்டு இப்பயிற்சியைச் செய்தால் பலன்கள் அதிகம் கிடைக்கும்.
இடுப்பு பயிற்சி
இரண்டு கால்களையும் நன்றாக விரித்து வைத்துக் கொள்ளவும். கைகளை பக்கவாட்டில் தொங்கப் போட்டுக் கொள்ளவும். கைகளை பக்கவாட்டில் தோளுக்கு உயரே உயர்த்தி, உங்கள் கைகள் காதுகளோடு ஒட்டி இருக்குமாறு செய்ய வேண்டும். இந்த நிலையில், அப்படியே வலது புறமாக 45 டிகிரி திரும்பவும். திரும்புகையில் மூச்சை உள்ளிழுக்கவும்.
45 டிகிரிக்குத் திரும்பியவுடன் மூச்சை வெளிவிடவும். பின்னர், அந்த நிலையில் மூச்சை உள்ளிழுத்துக் கொண்டு இயல்பு நிலைக்கு வந்து மூச்சை வெளியிடவும். இவ்வாறு இடது புறமாகவும் செய்ய வேண்டும். மொத்தமாக ஒரு நாளுக்கு 3 வேளைகளில் 20 முறை செய்தால், ஸ்லிம் ஃபிட்டாக ஒரு வாரத்தில் நீங்கள் ஜொலிக்கலாம்.
பலன்கள்
ஒவ்வொரு பயிற்சிகளைச் செய்யும் போதும், மூச்சை உள்ளிழுக்கும் போது அதனை மெதுவாக வெளியிட வேண்டும்.
முறையான மூச்சு மார்பை விசாலமாக்கும். இடுப்பு ஒட்டி, கவர்ச்சிகரமாக மாறும்.
இடுப்பு தசைகள் அழகிய நிறம் பெறும். உப்பிய வயிறு அழகாகும்.
இடுப்புப் பகுதிக்கு அதிக இரத்த ஓட்டம் பாய்ந்து, சக்தி கிடைக்கும்.