பூசணி அல்வா
தேவையான பொருட்கள்
துருவிய வெள்ளைப் பூசணி-2கப்
சர்க்கரை –1கப்
நெய் –1/4கப்
முந்திரி -சிறிதளவு
செய்முறை
துருவிய பூசணியை பிரஷர் குக்கரில் போட்டு, 2 விசில் சத்தம் வரும் வரை காத்திருந்து, அதில் சர்க்கரையைப் போட்டுக் கிளறவும். சர்க்கரை முழுவதும் கரைந்ததும் நெய் விட்டு நன்கு கிளறவும். பின் அதில் முந்திரியைத் தூவி அலங்கரிக்கவும்.
கோதுமை அல்வா
தேவையான பொருட்கள்
கோதுமை –1/2கி
பாதாம் பருப்பு –100கிராம்
சர்க்கரை –11/2கி
நெய் –1/2கி
முந்திரி –50கிராம்
கேசரிப் பவுடர் –1/2ஸ்பூன்
ஏலப்பொடி –1ஸ்பூன்
தண்ணீர் –3/4டம்ளர்
செய்முறை
கோதுமையை பன்னிரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய கோதுமையை நன்றாக அரைத்துப் பாலை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
வடிகட்டி நின்ற சக்கையை மீண்டும் தண்ணீர் சேர்த்து, அரைத்து, வடிகட்டி பால் எடுத்துக் கொள்ளவும். மொத்தம் மூன்று தரம் இவ்வாறு பால் எடுத்துக் கொள்ளவும்.
பாதாம் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, தோலை உரித்துக் கொள்ளவும். கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். தண்ணீரை அடுப்பில் வைத்து, சர்க்கரையைப் போட்டு, கொதிக்க வைக்கவும். கம்பிப் பாகு பக்குவம் வந்தவுடன், அரைத்த பாதாம் விழுதை, அரைத்த கோதுமைப் பாலில் கலந்து (கோதுமைப் பாலில் தெளிந்து இருக்கும் தண்ணீர் போன்ற திரவத்தை நீக்கி விடவும்) பாலில் கொட்டிக் கிளறி கொண்டே இருக்கவும்.
நெய்யைச் சுட வைத்து, ஒடித்த முந்திரியைப் போட்டு வறுத்து எடுத்துக் கொண்டு, உருகிய நெய்யைக் கொஞ்சம் கொஞ்சமாக அல்வாவில் ஊற்றிக் கிளறவும். அதில் கேசரிப் பவுடர், ஏலப்பொடியைச் சேர்க்கவும். வறுத்த முந்திரியையும் போடவும்.
அல்வா பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும் பக்குவத்தில், நெய் தடவிய தாம்பாளத்தில் கொட்டவும். தேவைப்பட்டால் ஆறிய பிறகு வில்லைகளாப் போடலாம்.
கேரட் அல்வா
தேவையான பொருட்கள்
துருவிய கேரட் –2கப்
சர்க்கரை –1கப்
நெய் –1/2கப்
பால் -தேவையான அளவு
செய்முறை
பால், கேரட் இரண்டையும் ப்ரஷர் குக்கரில் போட்டு, 2 விசில் வரும் வரை காத்திருக்கவும். பிறகு, வெந்த கேரட் கலவையில் சர்க்கரை சேர்த்துக் கிளறவும். சர்க்கரை முழுவதும் கரைந்த பின், நெய் ஊற்றி நன்கு கிளறவும். பின் அடுப்பிலிருந்து இறக்கி வைத்து, நறுக்கிய பாதாம், முந்திரி சேர்த்து அலங்கரிக்கவும்.
பிரெட் அல்வா
தேவையான பொருட்கள்
பிரெட் ஸ்லைஸ் –7 (ஓரங்களை நீக்க நடுவிலுள்ளதை நான்காக கட் செய்து கொள்ளவும்)
காய்ச்சிய பால் –2கப்
சர்க்கரை –1கப்
உருக்கிய நெய் –1/2கப்
முந்திரி, திராட்சை-தேவையான அளவு
செய்முறை
வாயகன்ற வாணலியில் நெய்யை ஊற்றி அடுப்பில் வைத்து நெய் சூடானவுடன், பிரெட் துண்டுகளை அதில் நான்கைந்தாகப் போட்டு, ஓரளவு சிவந்ததும் எடுத்து விடவும். பொரித்த பிரெட் துண்டுகளைப் பாலில் 2 நிமிடம் ஊற வைத்து மசித்துக் கொள்ளவும். மசித்த பிரெட் அளவுக்கு சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து, அளவான தீயில் நன்றாகக் கிளறுங்கள். இப்போது பிரெட் துண்டுகளையும் வறுத்தெடுத்த நெய்யையும் அதில் ஊற்றி, கேசரி கலர், ஏலப்பொடி சேர்த்துக் கிளறி, அல்வாப் பதம் வந்தவுடன் இறக்கி விடுங்கள். இதை நெய் தடவிய டிரேயில் ஊற்றி நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து கட் செய்து சூடாகப் பரிமாறவும்.
கசகசா அல்வா
தேவையான பொருட்கள்
கசகசா –1கப் (4 மணிநேரம் ஊறவைத்து நீரை வடித்துக் கொள்ளவும்)
சர்க்கரை –21/2கப்
உருக்கிய நெய் –3/4கப்
ஏலப்பொடி –1/4ஸ்பூன்
முந்திரிப்பருப்பு –6
காய்ச்சிய பால் –1/4கப்
செய்முறை
கசகசாவை மிக்ஸியில் போட்டு அரைத்து அத்துடன் பால் சேர்த்து அரைத்து விழுதாக்கவும். வாணலியில் உருக்கிய நெய்யில் பாதியை ஊற்றிச் சூடானவுடன், அரைத்த கசகசா விழுதைச் சேர்த்து, லேசான பிரவுன் நிறம் வரும் வரை வறுத்து, சர்க்கரை சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு மீதி நெய்யையும் கலவையில் சிறிது சிறிதாக ஊற்றி அல்வா பதம் வந்தவுடன் இறக்கி வைத்து, ஏலப்பொடி, நெய்யில் வறுத்த முந்திரித் துண்டுகள் சேர்த்துக் கிளறி பாத்திரத்தில் பரத்தி சூடாகப் பரிமாறவும். சூப்பர் டேஸ்டாக இருக்கும் இந்த கசகசா அல்வா!
கோகனெட் அல்வா
தேவையான பொருட்கள்
முந்திரி –10 (2 மணி நேரம் ஊறவைக்கவும்)
பாதாம் –10 (வெந்நீரில் ஊற வைத்துத் தோலுரிக்கவும்)
தேங்காய்த் துருவல் –1/4கப் (விழுதாக அரைக்கவும்)
சர்க்கரை –11/2கப்
நெய் –1/2கப்
திராட்சை –6
செய்முறை
தண்ணீரில் ஊறிய பாதாம் மற்றும் முந்திரியை மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த முந்திரி, பாதாம் கலவையை ஒரு பாத்திரத்தில் போட்டு, தேங்காய் விழுதையும் சேர்த்து, சர்க்கரை சேர்த்து கிளறிக் கொண்டிருங்கள். கலவை கெட்டியாகி இறுகி வரும் போது உருக்கிய நெய்யை அதில் ஊற்றிக் கிளறுங்கள் பிறகு கிஸ்மிஸ் பழங்கள் சேர்த்து அல்வா பதம் வந்தவுடன் இறக்கி, பாத்திரத்தில் எடுத்து வைத்துப் பரிமாறவும்.
அசத்தலான மணத்துடன் இருக்கும் இந்த அல்வா நல்ல டேஸ்ட்டாகவும் இருக்கும்.
பாதாம் அல்வா
தேவையான பொருட்கள்
பாதாம் பருப்பு –1டம்ளர்
சர்க்கரை –11/2டம்ளர்
நெய் –11/2டம்ளர்
முந்திரிப் பருப்பு –1டே.ஸ்பூன்
கேசரிப் பவுடர் –2சிட்டிகை
பால் –1/4டம்ளர்
தண்ணீர் –1/4டம்ளர்
ஏலப்பொடி –1/4ஸ்பூன்
செய்முறை
பாதாம் பருப்பை, ஒரு மணி நேரம் ஊறவைத்து, தோலை உரித்து எடுத்துவிடவும். ஊறிய பருப்பை, மிக்ஸியில் நன்றாக மைய அரைக்கவும். அரைக்கும் பொழுது தண்ணீருக்குப் பதிலாக பாலை சேர்த்து அரைக்கவும்.
அரைத்த விழுதை மீதம் பால் இருந்தால் சேர்த்தோ அல்லது தண்ணீரை விட்டோ கூழ்போல் கரைத்துக் கொள்ளவும். சிறிதளவு நெய்யை வைத்து, முந்திரிப் பருப்பை ஒடித்து, வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
தண்ணீரில் சர்க்கரையைப் போட்டு நல்ல கம்பிப் பாகு நிலை வரும் வரைக்கும் கொதிக்க விடவும். கம்பிப் பதம் வந்தவுடன் அடுப்பைச் சிறியதாக வைத்து, அரைத்த கூழைக் கொட்டிக் கிளறிக் கொண்டேயிருக்கவும்.
அடுப்பில் கிளறிக் கொண்டிருக்கும் பொழுதே, மீதமுள்ள நெய்யை, கொஞ்சம் கொஞ்சமாக உருக்கி ஊற்றவும். கேசரிப் பவுடரைச் சேர்க்கவும். சிறிது நேரத்தில் உள்வாங்கிய நெய்யை அல்வா வெளியேற்றும் அல்லது கக்கும்.
அப்பொழுது ஏலப்பொடியையும் தூவிக் கிளறி, நெய் தடவிய தாம்பாளத்தில் கொட்டவும்.
வீட் அல்வா
தேவையான பொருட்கள்
கோதுமை, சர்க்கரை, நெய் -தலா 2கப்
பொடியாக நறுக்கிய பாதாம், பிஸ்தா -சிறிதளவு
செய்முறை
கோதுமையை நன்றாக ஊற வைத்து, பின் அதை அரைத்து ஒரு பாத்திரத்தில் அப்படியே வைத்து விட்டால், பால் மேலாக வந்து விடும். அதை வடிகட்டி மண்டியை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
மண்டி போல 2 மடங்கு அளவுக்கு சர்க்கரையை எடுத்துக் கொண்டு, ஒரு மடங்கு தண்ணீரில் கரைத்து சர்க்கரை பாகு செய்து கொள்ள வேண்டும். கம்பிப் பதம் வந்தவுடன் மண்டியை அதில் போட்டு, நன்கு கிளறவும். அடி பிடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
சர்க்கரைக்கு சமமான அளவில் நெய் எடுத்துக் கொண்டு அதில் ஊற்றி, நன்கு கிளறவும். நெய் பிரிந்து வரும் போது, தட்டி கொட்டி, நறுக்கிய பாதாம், பிஸ்தா தூவி, விரும்பிய வடிவில் வெட்டிக் கொள்ள வேண்டும்.
பீட்ரூட் அல்வா
தேவையான பொருட்கள்
பீட்ரூட் –500கி
சர்க்கரை –250கி
பால் –1/2லிட்டர்
முந்திரி –25கி
ஏலக்காய் –5பொடித்தது
நெய் –50கி
செய்முறை
பீட்ரூட்டை தோல் சீவி நன்றாக பூ போல் துருவிக் கொள்ளவும். (பீட்ரூட்டை இரண்டாக நறுக்கி, தேங்காய் துருவியில் வைத்து தேங்காயைப் போல துருவிக் கொண்டு தோலை எடுத்து விடலாம்).
பாலை நன்றாகக் காய்ச்சவும். பீட்ரூட்டை பாலில் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வேக விடவும். வேக வைத்த பீட்ரூட்டில் சர்க்கரையைச் சேர்த்துக் கிளறவும். சர்க்கரை நன்றாகக் கரைந்து வெந்தவுடன் முந்திரியை நெய்யில் வறுத்து சேர்த்து, மீதி நெய்யையும் ஊற்றவும். இந்த அல்வாவிற்கும் நெய் அதிகம் தேவையில்லை. கலர் தேவையில்லை.
அசோகா அல்வா
தேவையான பொருட்கள்
பயத்தம்பருப்பு –1/4கிலோ
சர்க்கரை, நெய் -தலா 150கி
பால் –1/4டம்ளர்
பாதாம் பருப்பு –25கி
முந்திரிப் பருப்பு –25கி (ஓடித்தது)
ஏலப்பொடி –1/4ஸ்பூன்
செய்முறை
பயத்தம் பருப்பை, வெறும் வாணலியில் லேசாக வாசனை வரும் வரை வறுத்துக் கொண்டு தண்ணீரில் ஊறப்போடவும். ஊறிய பருப்பில் பாலைத் தெளித்து நைசாக அரைக்கவும்.
நெய்யைக் கொஞ்சமாகக் காய வைத்து பாதாம் பருப்பு, முந்திரிப் பருப்பை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
மீதமுள்ள நெய்யை லேசாகச் சுட வைத்து, அரைத்த விழுதைப் போட்டு நன்கு வதக்கவும். அல்வா பதம் வந்தவுடன் வறுத்த பருப்புகளைப் போட்டுக் கலக்கவும். இது அல்வா பதத்தில் இருக்கும்.
உணவு நலம் அக்டோபர் 2011
அல்வா வகைகள், பூசணி அல்வா, பூசணி அல்வா செய்முறை, கோதுமை அல்வா, கோதுமை அல்வா செய்முறை, கேரட் அல்வா, கேரட் அல்வா செய்முறை, பிரெட் அல்வா, பிரெட் அல்வா செய்முறை, கசகசா அல்வா, கசகசா அல்வா செய்முறை,