கேசக் கோளாறுகள் அபாயமானவை அல்ல. உயிருக்கு ஆபத்துமில்லை. இருந்தாலும் அழகிய தோற்றம் தன்னம்பிக்கையை உண்டாக்கும். அழகிய தோற்றத்திற்கு தேவையான ஒன்று, பெண்களுக்கு அடர்த்தியான கூந்தல், ஆண்களுக்கு வழுக்கையில்லாத முடி. பெண்களைப் போலவே ஆண்களுக்கும், வயதானாலும், இளமை தோற்றத்துடன் நரை, திரை இல்லாமல் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது. தலைவாரி, சீப்பை பார்த்தால், அதில் கொத்தாக உதிர்ந்த முடி தெரிந்தால் பெண்களுக்கு மனப்பதட்டம் ஏற்படும்.
முடிப்பிரச்சனைகள்
1. முடி உதிர்தல், முடி மெலிவு, முடிநுனி உடைதல்.
2. வழுக்கை
3. புழுவெட்டு
4. இளநரை
5. பொடுகு
6. பேன் தொல்லை
7. அதீத முடி, முடி தேவையில்லா இடங்களில் அதிகம் வளர்வது. உதாரணம் பெண்களின் முகத்தில்.
இந்த பாதிப்புகளை ஒவ்வொன்றாக, விரிவாக பார்ப்போம்.
முடி உதிர்தல், முடி மெலிவு, வழுக்கை மற்றும் புழுவெட்டு
முடி கொட்டுவது என்பது நாம் எண்ணுவதை விட மிகச் சாதாரணமானது. பல நேரங்களில் அது தற்காலிகமானதாகவும், சில நேரங்களில் நிரந்தமானதாகவும் இருக்கலாம்.
தலை வாரும் போது முடி கொத்தாகக் கையோடு வருகிறதா? வாஷ்பேஸின் முழுக்க முடியாக இருக்கிறதா? நேற்று வரை உங்கள் தோற்றப் பொலிவிற்கு உதவிய உங்கள் கேசம் இன்று கலகலத்துத் தட்டையாக தோற்றமளிக்கிறதா? பதட்டப்படாதீர்கள்.
முடி கொட்டுவது பெண்களிடையே இயல்பாக ஏற்படக் கூடிய ஒன்று தான். முடி கொட்டுவதும் மறுபடி முளைப்பதும் நடைமுறைச் செயல்கள். நாம் ஒவ்வொருவரும் தினமும் 50 முதல் 200 முடிவரை இழக்கிறோம். இதில் வேதனைப்பட எதுவுமில்லை.
வேதனைப்படுவதைத் தடுக்க முடியவில்லை என்றால் இதோ ஒரு ஆறுதல். கொட்டுகின்ற முடிகளில் ஒன்றிரண்டை எடுத்து முடியின் வேர்ப்பகுதியை உற்று நோக்குங்கள். மிக மெலிதான நுண்ணிய வெள்ளை உருண்டை ஒன்று இருக்கிறதா என்று பாருங்கள். அவ்வாறு ஒரு சிறிய வெள்ளை உருண்டை இருந்தால் உங்கள் முடி இயல்பாகவே இருக்கிறது. அது பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். அவ்வாறு இல்லாமல் போனாலோ அல்லது முடி இழப்பு கட்டுக்கு மீறி இருப்பதுடன் அது தொடர்ந்தாலோ நீங்கள் சரும நோயியலார் (Dermatologist) அல்லது முடியியலார் (Trichologist) ஒருவரைக் கண்டு ஆலோசனை பெறுவது நல்லது.
முடி உதிர்தல் படிப்படியாக நிகழலாம். இல்லை, திடீரென்று ஏற்படலாம். முடி கத்திரிக்கப்பட்டது போல், உதிர்ந்தால், அது ஓய்வுப் பருவத்திலிருந்து உதிர்ந்திருக்கும். இல்லை, புழுவெட்டு காரணமாகலாம். பழுப்பு நிறத்தில் மெழுகு போன்ற முடிச்சு காணப்பட்டால், முடி வளர் பருவம் பாதிக்கப்பட்டு முடி உதிர்ந்திருக்கின்றன என்று தெரிந்து கொள்ளலாம். முடி உதிர்வதற்கு ஏராளமான காரணங்களை கூறலாம். கிட்டத்தட்ட 50 காரணங்கள் சொல்லாம். அவற்றில் சில முக்கியமானவற்றை பார்ப்போம்.
1. பரம்பரை – முக்கியமாக ஆண்களின் வழுக்கைக்கு பரம்பரை காரணமாகிறது. தந்தைக்கு வழுக்கை இருந்தால் மகனுக்கும் ஏற்படும்.
2. ஊட்டச்சத்து குறைபாடு – சமச்சீர் உணவு இல்லாவிட்டால், தலைமுடிக்கு தேவையான புரதம் போன்றவை கிடைக்காது. உணவில், புரதம், கார்போஹைடிரேட், கொழுப்பு தவிர வைட்டமின்களும், இரும்பு செலீனியம், கால்சியம், துத்தநாகம் போன்ற தாதுப்பொருட்களும் தேவை. இவை இல்லாவிட்டால் முடி வளர்ச்சியின்றி போகும், உதிர்ந்துவிடும். வைட்டமின் பி6, ஃபோலிக் அமிலம் (வைட்டமின் பி12) இவை குறைந்தால் முறையே முடி உதிர்தல், முடிவழுக்கை ஏற்படும். வேளை தவறி சாப்பிடுவதும் ஒரு முக்கிய காரணம்.
3. ஸைகோசிஸ் (Sycosis), ஃபோலிக்யூலைட்டிஸ் (Folliculitis) போன்ற தொற்று நோய்கள், முடி உதிர்வை உண்டாக்குகின்றன. பொடுகு, பேன், ஃபங்கஸ், பாக்டீரியாக்களும் முடியை பாதிக்கின்றன.
4. சருமத்தின் விளையும் பயிரான முடி, சருமத்தில் ஏற்படும் நோய்களாலும் பாதிக்கப்படும். சோரியாசிஸ், தேமல், கரப்பான் போன்ற தோல் வியாதிகள் முடியையும் பாதிக்கும். கூந்தலை பாதுகாப்பது மட்டும் போதாது; தோலையும் பராமரிக்க வேண்டும்.
5. டைபாய்ட், மலேரியா, காமாலை இவற்றால் முடி உதிரும். பாலியல் நோயான சிபிலிஸ்ஸாலும் முடி உதிரும். பெண்களுக்கு கருப்பை நீர்கட்டிகள், (Cyst), ஃபைப்ராய்ட் (Fibroid) இவைகளாலும் முடி உதிரும்.
6. ஹார்மோன் சீர்கேடுகளும் முடி இழப்புக்கு காரணமாகும். ஹார்மோன் குறைபாடுகள் பிறவியிலேயே தோன்றியிருக்கலாம்.
7. கவலை, டென்ஷன், ஸ்ட்ரெஸ் இவையும் காரணமாகும்.
8. உடல் உஷ்ணம் அதிகமானாலும் முடி கொட்டும். உள்ளங்கால்களின் சூடு, கேச மூலங்களின் அழற்சியை உண்டாக்கும்.
9. புற்றுநோய்க்காக கொடுக்கப்படும் மருந்துகளால் தலைமுடி முற்றிலும் கொட்டி விடும். கதிர்வீச்சு (Radiation) சிகிச்சையாலும் முடி கொட்டும்.
10. சோகை முடி உதிர காரணமாகலாம்.
11. குளிக்கும் தண்ணீர் மாறுபடுதல், குளோரின் அதிகமுள்ள தண்ணீர், உப்புத்தண்ணீர் (Hard water) இவைகளும் காரணமாகலாம்.
12. முடி ஈரமாக இருக்கும் போது பலவீனமாக இருக்கும். அப்போது தலைவாரிக் கொண்டால் முடி சுலபமாக உடைந்து விடும்.
13. கூந்தலை சரிவர பராமரிக்காதது. தலையில் வியர்வை, அழுக்கு சேர்தல். முடியில் சிக்கெடுக்காமல் விட்டுவிடுவது. தலையணை உறைகளை மாற்றாமல், அப்படியே அழுக்குடன் பயன்படுத்துவது. இறுக்கமான ரப்பர் பேண்ட் அணிதல், கொண்டை போடுவதற்காக முடியை இறுக்கமாக கட்டுதல் இவைகளும் முடி வளர்ச்சியை நிறுத்தி, முடி உதிர காரணமாகலாம். அதிகமாக Hair dryer உபயோகிப்பதும் தவறு. முடியை கருமையாக்க பூசும் சாயமும் (Hair dye) காரணமாகலாம்.
14. பெண்களுக்கு, அவர்களின் மாதவிடாய் கோளாறு தலைமுடியையும் பாதிக்கும். அதிக உதிரப்போக்கு பலவீனத்தை உண்டாக்கும். பிரசவம், கருச்சிதைவு இவற்றின் போது, உதிர இழப்பு அதிகமானால், முடி உதிரும்.
15. அஜீரணம், மலச்சிக்கல், நரம்பு மண்டல நோய்கள் இவற்றாலும் முடி உதிரலாம். பாதத்திலிருந்து தலை வரை செல்லும் நரம்புகள் பாதிக்கப்பட்டாலும், முடி உதிரலாம். காலில் வெடிப்பு, கால்ஆணி, இவைகளாலும் முடி உதிரலாம். தலைக்கு இரத்த ஓட்டம் சீராக இருந்தால், முடிவேர்களுக்கு தேவையான ரத்தம் தடைபடாமல் செல்லும். உடலில் கொழுப்பு அதிகமானால், இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு முடிக்கு போஷாக்கு செல்லாமல் போகும்.
16. சிலர், குறிப்பாக சிறுவர், சிறுமிகள், அடிக்கடி முடியை இழுக்கும் பழக்கத்திற்கு ஆளாகின்றனர். இதை “ட்ரைகோடிலோமானியா” (Trichotillomania) என்பார்கள். இந்த பழக்கத்தால் விரைவாக முடி உதிரும்.
மண்டையை கவனியுங்கள்
· உங்கள் உணவு, தலை மண்டையை பாதிக்கலாம். தலை எண்ணெய் பசைஇன்றி உலர்ந்திருந்தால், அதிக அமிலம் உள்ள உணவை தவிர்க்கவும்.
· பெண்களானாலும், ஆண்களானாலும் சரி, வெளியில் செல்கையில் தலையை துணி அல்லது தொப்பி, குடை இவற்றால் பாதுகாத்துச் செல்லவும்.
· ஸ்ரெட்ஸ்ஸை தவிர்க்கவும்.
· தினமும் தலையை சில நிமிடங்கள் மசாஜ் செய்யவும்.
· பலமுடிப்பிரச்சனைகளுக்கு ஆரோக்கியமற்ற தலை சருமம் தான் காரணம்.
ஆயுர்வேதம் டாக்டர் எஸ். செந்தில் குமார் எழுதிய முடி கொட்டுவதை தடுக்க என்ற புத்தகத்திலிருந்து.