‘தலை’யாய பிரச்சனை தீர…

Spread the love

கூந்தலை வர்ணிக்காத கவிஞர்களே இருக்க முடியாது. கூந்தலை வர்ணிக்காதவர்கள் கவிஞர்களாகவும் இருக்க முடியாது. சங்க கால கவிதை முதல் சமகால கவிதை வரை கூந்தலை கூறு போட்டு மேய்ந்திருப்பார்கள். ‘பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலே மணம் உண்டா’ என்று திருவிளையாடல் படத்தில் சிவபெருமானும், நக்கீரரும் ‘முடி பிளக்கும்’ விவாதத்தில் ஈடுபட்டதை பார்த்தோம்.. பார்க்கிறோம்.. பார்த்துக் கொண்டே இருப்போம். கூந்தலை மேகத்துக்கு ஒப்பிட்டே நிறைய பேர் உவமை சொல்லி இருப்பார்கள். கொஞ்சம் வித்தியாசமாக கவியரசு கண்ணதாசன், ‘வளைந்து நெளிந்து செல்லும் பாதையை’ கூந்தலுக்கு ஒப்பிட்டு இருப்பார்.

ஆறடி கூந்தலில் பாய் விரி என்றதெல்லாம் அந்தக் காலம். இருக்கும் அரை அடி கூந்தலே ஒழுங்காக இருக்க வேண்டுமே என்பது இந்தக் காலம். தலை முடிதான் நிறைய பெண்களுக்கு தலை போகிற.. தலை வலி தருகிற ‘தலை’யாய பிரச்சனையாக உள்ளது. முடி உதிர்தல் அவர்களின் முக்கிய பிரச்சனையாகும். இதை வைத்து நிறைய வெளிநாட்டு கம்பெனிகள் நல்லா காசு பார்த்து வருகின்றன. நம் பாரம்பரிய முறைகளிலேயே இதற்கு அற்புதமான தீர்வு இருக்கிறது. இது நிறைய பேருக்கு தெரிவதில்லை.

ஆண், பெண் இருபாலாருக்கும் நாளன்றுக்கு 50 முதல் 100 வரை முடிகள் உதிர்வது சகஜம்தான். அதே அளவு முடியும் மீண்டும் வளரும். முடி கொட்டுகிறதே என்று யாராவது தலையை வாராமல் இருந்தால் அது சிக்கில் மட்டுமல்ல.. சிக்கலிலும் கொண்டு போய்விடும். தலை முடியை வாராமல் இருந்தால் முடி வளர்ச்சி முழுவதுமாக தடைபட்டு விடும்.

பிறந்த குழந்தையின் முடி மிகவும் மெல்லியதாக இருக்கும். குழந்தை வளர வளர அந்த முடியும் உதிர்ந்து அடர்த்தியாக வளரும். வயது அதிகரிப்பு மற்றும் உடல் ரீதியான மாற்றங்களால் முடி வளர்ச்சி குறைந்து விடும். இது ஆளாளுக்கு வித்தியாசப்படலாம். ஒரு சில நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண்டிப்பாக முடி கொட்டும். பேன், பொடுகு, செதில், புழுவெட்டு, மன அழுத்தம், பதற்றம், உடல் நலக்குறைவு, கீமோ தெரபி, ரேடியேஷன் மற்றும் மருந்து மாத்திரைகள் உட்கொள்வது போன்ற காரணங்களாலும் முடி கொட்டும்.

முடி வளர்ச்சி என்பது 15ல் இருந்து 25 வயதுக்குள் தான் இயல்பான வளர்ச்சி வேகத்தில் இருக்கும். அதற்குப் பிறகு, வேகம் குறைந்து விடும். டீன் ஏஜ் பருவத்தில் முடி உதிர்தல் அதிகமாக இருக்கும் என்பதால் அப்போது முடி பராமரிப்பில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.

முன்பெல்லாம் தலைக்கு எண்ணெய் தடவாத ஆண், பெண்களை விரல்விட்டு எண்ணி விடலாம். தற்போது தலைக்கு எண்ணெய் தடவும் பெண்களை விரல் விட்டு எண்ணி விடலாம். தலைக்கு எண்ணெய் வைக்காமல் முடியை விரித்துப் போட்டு கொள்வதே தற்போது நாகரீகமாகி விட்டது. அது தலை அலங்காரம் அல்ல. தலை அலங்கோலம். இது முடி வளர்ச்சிக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும்.

தினமும் தலையில் எண்ணெய் வைத்து நன்றாக வாரி, நுனி வரை பின்னல் போட்டு ரிப்பன் கட்டிக் கொள்வதால் முடி ஒரே சீராக வளர ஆரம்பிக்கும். முடி உதிர்ந்து விடுமோ என்று சரியாக வாராமல் விட்டால்.. முடி வலுவிழந்து வளர்ச்சி தடைபடும். தலைமுடியை எப்போதும் நுனி வரை வார வேண்டும். தலையில் வகிடு எடுக்காமல் இருந்தால் முன்புற வழுக்கை விழவும், முடி கொட்டவும் ஆரம்பிக்கும்.

தங்கள் நலன் கருதி,

ஆயுர்வேதம் எஸ். செந்தில் குமார்.


Spread the love