முடி உதிர்வதை முற்றிலும் தடுக்க

Spread the love

முடி உதிர்வதற்குப் பொதுவான காரணங்களில் முதன்மையானது, உணவில் ஊட்டச்சத்துக் குறைபாடுதான்! இப்போதுள்ள இளம் பெண்கள், டீன் ஏஜ் வந்ததும் உடல் எடை கூடிவிடக் கூடாது என்ற எச்சரிக்கையில் உணவில் பல சத்தான பொருட்களைத் தவிர்த்து விடுகிறார்கள்.  இதனால் புரதம், கால்சியம், ஹீமோகுளோபின் அளவைப் பராமரிக்கும், இரும்புச்சத்து எல்லாமே உடலில் குறைகிறது. கூந்தல் வளர்ச்சிக்கு இந்தச் சத்துக்கள் எல்லாம் முக்கியமாகத் தேவை. ”ஸ்லிம்” ஆகிறோம் என்ற பெயரில் சக்தியில்லாத ஆகாரம் சாப்பிடும் போது முடி வலுவிழந்து உதிர்கிறது.  முதலில் உங்கள் உணவைக் கவனியுங்கள், தினமும் பருப்பு அல்லது பயிறு வகைகள், இரும்புச் சத்துள்ள கீரை, காய்கறிகள் போன்றவை, கால்சியம் தரும் பால் பொருட்கள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். முடிவளர்ச்சிக்கு மட்டுமல்ல இளநரையைத் தடுக்க, அரிப்பு நீங்க என எல்லாவற்றுக்குமே ஊட்டச் சத்தான உணவு உதவும்.

அடுத்ததாக தவறாமல் எண்ணெய் தடவும் பழக்கம் வரவேண்டும்.  இந்தக் காலத்துப் பிள்ளைகள் “முடியில் எண்ணெய்ப் பிசுக்குத் தெரியும்” என்பதால் தலையில் எண்ணெயே வைப்பதில்லை. எண்ணெய்யும் தேய்த்துக் குளிப்பதில்லை இது இரண்டுமே முடி கொட்டுவதற்குக் காரணமாகும்.  தினமும் தடவ சங்கடமாக இருந்தால் ஒரு நாள் விட்டு ஒரு நாளாவது கண்டிப்பாக என்ணெய் தடவ வேண்டும்.  சாதாரண தேங்காய் எண்ணெய்யே போதும்.  ஆனால் அதை எப்படி தடவுவது என்பதில் தான் விஷயமே இருக்கிறது.  உள்ளங்கையில் எண்ணெய்யை ஊற்றி இரு கைகளையும் அப்படியே பர பர வென தேய்த்துவிடுவது சரியான முறையல்ல.

எண்ணெய்யை விரல்களால் தொட்டு, உங்கள் தலைப்பகுதியில், அதாவது கூந்தலின் வேர்ப்பகுதியில் படுவது போலத் தடவிவிட்டு சுத்தமான சீப்பினால் மேலிருந்து கீழ் நோக்கி தொடர்ந்து ஒரு பத்து நிமிடம் வாரி விடுங்கள்.  இதனால் தலையில் ஏற்படும் அதிர்வுகள் லேசான உஷ்ணத்தை உண்டாக்கும். இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம்,  இப்படி வாரும்போது நடுவில் வகிடு எடுத்து முடியை இரு பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு, மேலிருந்து கீழ் நோக்கி வார வேண்டும்.  வகிடே எடுக்காமல், முன்புறமிருந்து பின்னோக்கி வாருவதாலும் முடி உதிர வாய்ப்புண்டு.

மேலே சொன்னது போல் லேசான கதகதப்பு வரும் வரை வாரினால் தலையை “மாலிஷ்” செய்துவிட்டது போல் ஆகிறது.  வேர்க்கால்கள் தூண்டி விடப்படுகின்றன.  இதனால் பலவீனமான முடி உதிர்ந்துவிடுகிறது.  உயிருள்ள முடி தொடர்ந்து வளர ஆரம்பிக்கிறது.  இப்படி வார ஆரம்பித்த புதிதில் முடி உதிர்வது போலிருக்கும்.  ஆனால் அது பலவீனமான முடிதான் என்பதால் பயப்படத் தேவையில்லை.

தலையில் எண்ணெய் தடவினால் தூசி எல்லாம் ஒட்டிக்கொள்ளும் என்ற எண்ணம் பலரிடம் இருக்கிறது.  ஆனால், அவர்களுக்குத் தெரியாது எண்ணெய் தடவினால் அது ஒரு “லேயர்” போல உங்கள் “ஸ்கால்ப்” பகுதியைக் காக்கிறது என்பது.  இப்போதிருக்கும் மாசு படிந்த சூழலில் எண்ணெய் தடவிக்கொள்வது உங்கள் தலைக்குப் பாதுகாப்பு என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

அடுத்து, வாரம் இரு முறை கண்டிப்பாக எண்ணெய் தேய்த்துக்குளிக்கவேண்டும். ஒரு நாள் நீங்கள் தினமும் தடவும் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் தேய்த்து,  நான் முதலில் சொன்னது போல் சில நிமிடங்கள் வாரிவிட்டு, பத்து நிமிடம் கழித்து தலையை அலசிவிடுங்கள்.  இன்னொரு நாள் ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய், 1 டீஸ்பூன் நல்லெண்ணெய், 1 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் மற்றும் 1 டீஸ்பூன் விளக்கெண்ணெய்… என நான்கு எண்ணெய்களையும் எடுத்து முடிந்தால் லேசாகச் சூடுபடுத்தி முன்பு சொன்ன முறையில் மாலிஷ் செய்துவிட்டு பத்து நிமிடம் கழித்து நான் பெட்டிச் செய்தியில் கொடுத்திருக்கும் பொடியைத் தேய்த்து தலையை அலசிக் குளிக்கவேண்டும்.

பெட்டிச் செய்தி

இப்படிச் செய்து பாருங்கள்  உங்கள் முடி கருகருவென வளர்வதோடும், பளபளப்பாகவும் இருக்கும்.  மேலும் அழுக்கு, பொடுகு, பிசுக்கு எதுவுமே இருக்காது.

தலை அலசுவதற்கான பொடி

பயத்தம் பருப்பு                       :     கால் கிலோ

வெந்தயம்                                :     கால் கிலோ

பூலாங்கிழங்கு                         :     100 கிராம்

வெட்டிவேர்                            :     50 கிராம்

மரிக்கொழுந்து                      :     100 கிராம்

சீயக்காய்                                 :     100 கிராம்

பூந்திக்கொட்டை                    :     100கிராம்

இவை எல்லாவற்றையும் நாட்டு மருந்துக் கடையில் வாங்கி, சீயக்காய் அரைக்கும் மெஷினில் கொடுத்து நைசாக அரைத்து வாங்கி, சலித்து வைத்துக்கொள்ளுங்கள் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது இந்தப் பொடியில் மூன்று டீஸ்பூன் எடுத்து, சுடுதண்ணீர் கலந்து பேஸ்ட் போல் செய்து, தலையில் தடவி அலசுங்கள்  பிறகு பாருங்கள்  எண்ணெய் யாவது பிசுக்காவது ! நறுமணத்தோடு பட்டுக் கூந்தல் பறந்து பார்ப்பவரை அசத்தும்.

                                                                                                                 ஆயுர்வேதம்.காம்


Spread the love
error: Content is protected !!