முடியை உதிரவைப்பதில் முதன்மையானது முதுமை. அறுபது, எழுபது வயதை எட்டிவிட்டால், ஆணாகட்டும், பெண்ணாகட்டும், முடி உதிர்வது சகஜம். அறுபது வயதை தாண்டியவர்களில் 70% நபர்களுக்கு முடி கொட்டி விடுகிறது.
வயதைத் தவிர, முடி உதிர வேறு சில காரணங்களும் உள்ளன. அவற்றை நீங்கள் தவிர்க்கலாம் அல்லது குறைக்கலாம். சிலருக்கு வழுக்கை (Alopecia) ஏற்படும். இந்த குறிப்பிடத்தக்க குறைபாடுகளை தவிர, முடி உதிர்வது வயதாவதின் ஒரு அங்கம். முதுமையில் மற்ற உறுப்புகள் பலவீனம் அடைவது போல, முடி உதிர்ந்தால் அதை திரும்பவும் வளர்க்க முடியாமல் உடல் தளர்ந்து போய்விடுகிறது. இளமையில் வயலில் அபரிமிதமாக விளையும் “களை” போல் வளரும் முடி வயதானால் வளர்வதில்லை.
முடி உதிர்வதற்கு வயதைத் தவிர காரணங்கள்
மன அழுத்தம் (Stress) ஒரு முக்கிய காரணம். மன உளைச்சல் அதிகமானால் முடி உதிர்தல் அதிகமாகும். இதற்கு பல மூலிகைகள் உள்ளன. மன அழுத்தம் ஹார்மோன்களை தூண்டி விடுவதால் முடி உதிர்தல் வேகமாகும். எனவே மனஅழுத்தத்தை போக்கவும். உடற்பயிற்சி, யோகா, தியானம் முதலியவற்றில் ஈடுபட்டு Stress ஐ போக்கிக் கொள்ளுங்கள்.
உடல் ஹார்மோன்களில் ஏற்படும் மாறுதல்களும் முடி கொட்டுவதை அதிகப்படுத்தும். கர்ப்பிணிகளுக்கும் முடி கொத்து, கொத்தாக உதிரும். இது ஒரு நார்மல் நிகழ்வு.
திடீரென்று உடல் எடை குறைவதும் முடி கொட்டுவதை அதிகமாக்கும். திடீர் எடை குறைப்பு மன அழுத்தத்தை உண்டாக்கலாம். மன அழுத்தம் முடி உதிர்வதை அதிகப்படுத்தும்.
வைட்டமின், தாதுப்பொருட்களின் குறைபாடுகள் பெரிய அளவில் முடியை உதிர வைக்கும்.
சில மருந்துகளால் குறிப்பாக Steroid களால் முடி உதிரும் அல்லது முடி உதிர்வது துரிதமாகும். பக்க விளைவுகள் குறைந்த மருந்துகளை உபயோகிக்க வேண்டும். அல்லது மருந்துகளுடன் பக்க விளைவுகளை குறைக்கும் மருந்துகளையும் டாக்டரின் சிபாரிசின் படி எடுத்துக் கொள்ள வேண்டும்.
மாமிச உணவுகளாலும் தலைமுடி உதிரலாம். இந்த வகை உணவுகள் அதிக Testosterine ஹார்மோனை சுரக்க வைக்கும். இந்த ஹார்மோன் Dihydrotestosterone ஆக மாறும். இது தலைமுடி வளர்வதை நிறுத்தி விடும்.
குடிப்பழக்கம், புகைப்பிடித்தல், உடற்பயிற்சி செய்யாமை இவை தலைமுடி உதிர, காரணங்களாகும். தவறான வாழ்க்கை முறை, உடலை மட்டுமல்ல, தலைமுடியையும் பாதிக்கும்.
முடி வளர ஆயுர்வேத மூலிகைகள்
பிருங்கராஜ் (வெண் கரிசிலாங்கண்ணி)
முடி உதிர்வது, வழுக்கை மற்றும் இளநரையை தடுக்க, ஆயுர்வேதத்தில் சிறந்த மருந்தாக கருதப்படுவது கரிசிலாங்கண்ணி. முடி திரும்பவும் வளர மிகச் சிறந்த இயற்கை மூலிகை. இந்த தாவரத்தின் எல்லா பாகங்களும் மருத்துவ பயனுடையவை. உள்ளே கொடுக்கவும், உடலின் வெளிப்பூச்சுக்கும் பயன்படும் கரிசிலாங்கண்ணியிலிருந்து எடுக்கப்படும் ஒரு கருநிற நிறமி, தலைச்சாயத்திற்கும், உடலில் ‘பச்சை‘ குத்திக் கொள்ளவும் பயனாகிறது.
சாஸ்திரீய முறைப்படி, கரிசிலாங்கண்ணியின் இலைச்சாறு நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய்களில் ஊற்றப்பட்டு, தைலமாக காய்ச்சி தலையில் தடவிக் கொள்ளப்படுகிறது. இதனால் முடி கறுத்து செழிப்பாக வளரும். தற்போது தயாரிக்கப்படும் தலைமுடி தைலங்கள், ஷாம்புகளின் அடிப்படை பொருளாகும் கரிசிலாங்கண்ணி. முடி செழித்து வளர பிரசித்தமான கலவை கரிசிலாங்கண்ணி + நெல்லிக்காய் + நீர்பிரம்மி ஆகும்.
நெல்லிக்காய்
நிரூபிக்கப்பட்ட முடி ‘டானிக்‘. நெல்லிக்காயை வெய்யிலில் உலர வைத்து, தேங்காய் எண்ணெய்யில் நெல்லிக்காய் தீய்ந்து போகும் வரை காய்ச்சப்படுகிறது. குளிர வைத்து, தைலத்தை தலைக்கு மசாஜ் செய்ய பயன்படுத்தினால், முடி நன்கு வளரும். இளநரை தோன்றாது. நெல்லிக்காய் முடிப்பிரச்சனைகளை தீர்க்கும் ஆற்றலுடையது. நெல்லிக்காய் ஊற வைத்த தண்ணீரை தலைமுடிக்கு Conditioner ஆக பயன்படுத்தலாம். முடி பளபளக்கும்.
திரிபாலா
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் மூன்றும் கலந்த கலவையான திரிபாலா, ஆயுர்வேதத்தின் முக்கியமான மருந்துகளில் ஒன்று. இதை தினமும் உள்ளுக்கு சாப்பிட்டு வர முடி நன்கு வளரும். திரிபாலா சூரணத்தை சூடான எண்ணெய்யில் குழைத்து தலைக்கு தடவி வர, முடி உதிர்வது நிற்கும்.