தலையில் முடி கொட்டுவதைப் பற்றி அதிகம் கவலைப்படும் பெண்கள், தேவையற்ற இடங்களில் அளவுக்கு அதிகமான முடி வளர்ச்சி ஏற்படுவதாலும் அதிக கவலைப்படுகின்றனர். ஆண்களைப் போலவே சில பெண்களுக்கு முகத்தில் மீசை, தாடி முடிகள் அடர்த்தியாக வளர்ந்து விடுகின்றன. சில பெண்களுக்கு முகத்தில் முடி வளர்வதோடு கை கால்களிலும் அதிக முடிகள் காணப்படுவதுண்டு.
அவற்றை அகற்ற பியூட்டி பார்லருக்கு சென்று முயற்சிக்கிறார்கள். அல்லது ஸ்கின் டாக்டரிடம் செல்கின்றனர். இந்த இடங்களில் அவர்களுக்கு தீர்வு கிடைக்கிறதா என்றால் இல்லை. சில பெண்களுக்கு இம்மாதிரியான சிகிச்சைகள் சரும வியாதிகளை ஏற்படுத்திவிடக் கூடும்.
தேவையற்ற இடங்களில் பெண்களுக்கு முடி முளைப்பதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. மரபு ரீதியான காரணங்களால் இப்படி வளர வாய்ப்புள்ளது. பாட்டிக்கும், அம்மாவிற்கும் முகத்தில் முடிகள் வளர்ந்திருந்தால் மகளுக்கும் வரும். ஆணின் ஹார்மோன் பெண்ணுக்குள் அதிகரிக்கும்போது குரல், நடை, பழக்கம், முடி வளர்ச்சி, பாலியல் வளர்ச்சி போன்ற அனைத்திலும் இதன் பாதிப்பு இருக்கும். சிறிது ஆண்மைச் சாயல் ஏற்படக்கூடும்.
அதிகளவு மாதவிடாய் போக்கு ஏற்படும்போது அதனைத் தடுக்கவும் மார்பகங்களில் கட்டியோ, கழலையோ உருவாகி அறுவைச் சிகிச்சை செய்யும்போது வீரியம் பெருக்கவும், ஆண் ஹார்மோனை பெண்ணுடலில் செலுத்துதல் வழக்கம். இதனால் தேவைப்படாத இடங்களில் முடி வளர்ச்சி ஏற்படும். இதற்கு ஆணின் ஹார்மோன் பெண்களிடம் அதிகரிப்பதே காரணம் என்றாலும் எல்லாப் பெண்களுக்கும் இத்தகைய பாதிப்பு ஏற்படுவதில்லை.
ஒழுங்கற்ற மாதவிடாய் போக்கினால் பாதிக்கப்படும் பெரும்பாலான பெண்களுக்கு, மருத்துவர்கள் அதிக அளவு ஹார்மோன் மருந்து, மாத்திரைகளை அளிப்பதாலும், தோலில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய ஆன்டிபயாடிக் மருந்துகள் அடிக்கடியும் அதிக அளவிலும் உபயோகிப்பதாலும், பல்வேறு நோய்களுக்கு எதிரான தடுப்பூசிகளும், தடுப்பு மருந்துகளும், வளர்சிதை மாற்றத்தில் தொந்தரவுகளை ஏற்படுத்துவதன் காரணமாகவும் தேவையற்ற இடங்களில் முடி வளர்ச்சி ஏற்படுகிறது.
கருப்பையில் அல்லது அட்ரீனலில் ஏதேனும் கோளாறுகள் அல்லது மாற்றங்கள் ஏற்பட்டால் ஆன்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாக சுரக்கும். கருப்பையில் உருவாகும் நீர்மக் கட்டிகளால் ஓழுங்கற்ற மாதப்போக்கு, மலட்டுத் தன்மை, முடி வளர்ச்சி ஏற்படுகிறது. இத்தகைய நீர்மக் கட்டிகள் தோன்ற பரம்பரைத் தன்மை, தைராய்டு, பிட்யூட்டரி சுரப்பிகளின் கோளாறும், நீரிழிவும் காரணங்களாக உள்ளன. கருப்பையில் தோன்றக்கூடிய நீர்மக் கட்டிகள் தான் அதிகளவு ஆண் ஹார்மோன் சுரப்பதற்கான பிரதான காரணமாகக் கூறப்படுகிறது. அதிக ஆன்ட்ரோஜன் தான் 70 முதல் 80 சதவீதப் பெண்களுக்குரிய ‘ஹிர்சுசிசம்’ என்ற அவசியமற்ற முடி வளர்ச்சிப் பிரச்சனைக்குக் காரணமாகும்.
பொதுவாக தேவையற்ற முடிகளை நீக்க ஷேவிங் செய்தல், ப்ளீச்சிங் செய்தல், எலக்ட்ரோலைசிஸ் செய்தல், லேசர் முறை ஆகிய வழிமுறைகளை கையாளுகின்றனர். எலக்ட்ரோலைசிஸ் முறையில் அதிக முறை சிகிச்சை செய்ய வேண்டும். இது மிகவும் செலவு பிடிக்கும். லேசர் முறையிலும் பல முறை சிகிச்சைக்கு செல்ல வேண்டும். இதற்கும் பணச் செலவு அதிகமாகும்.
இந்தியாவில் ‘ஹிர்சுசிசம்’ பாதிப்பு 10 சதவிகிதம் பெண்களுக்கு உள்ளது. எலக்ட்ரோலைசிஸ் மற்றும் லேசர் சிகிச்சை முறைகளை இந்தியப் பெண்களில் பெரும்பாலானோர் மேற்கொள்வதில்லை. வசதி படைத்தவர்கள் மட்டும் இந்த சிகிச்சையை மேற்கொள்கின்றனர். ஆனால், எல்லா பெண்களுக்குமே, தேவையற்ற இடங்களில் முடி வளர்வது பெரும் பிரச்னையாகவும், கவலை அளிப்பதாகவும் உள்ளது.