முடி கொட்டுதல்

Spread the love


இன்றைய காலக்கட்டத்தில் பெண்களுக்கு இருக்கும் அதிகப்படியான கவலை முடி கொட்டுதலை பற்றித்தான்.
சீவினால் இவ்வளவு முடி கொட்டுகிறதோ, குளித்துவிட்டு வந்தால், பாத்ரூம் முழுவதும் முடியாக இருக்கிறதே என்று எண்ணி, எண்ணி கவலைப்படுவர்கள் அதிகமாக உள்ளனர்.
உண்மையிலேயே முடி கொட்டுதல் என்பது பெரிய பிரச்சனை அல்ல. உடலில் ஊட்டசத்து குறைதல், ஹார்மோன் சுரப்பி குறைவாக சுரத்தல் போன்ற காரணங்களால் தான் முடி கொட்டுகிறது.


தினமும் ஒருவர் 50 முதல் 300 முடிகள் வரை இழந்தால் அதில் ஒன்றும் கவலைப்பட தேவையில்லை. இதற்கு அதிகப்படியாக முடி கொட்டினால்தான் கவலைப்பட வேண்டும். மேலும், முடி கொட்டுதல் பற்றி கவலைப்படுபவர்கள் தங்களுக்கு சாதாரணமாகத்தான் முடிகொட்டுகிறதா அல்லது அசாதாரணமாக முடி கொட்டுகிறதா என்பதை பற்றி அறிந்து கொள்ள எளிய முறை இருக்கிறது.
அதாவது உதிரும் முடியின் வேர்ப்பகுதியை ஆராய்ந்து பாருங்கள். அதில், வெள்ளையாக சிறிய துகள் காணப்படுகிறதா? அப்படி என்றால், உங்களுக்கு சாதாரணமாகத்தான் முடி உதிர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் கவலைப்பட தேவையில்லை. ஆனால், இது இல்லாமல் இருந்தால் மட்டுமே டாக்டரிடம் ஆலோசிக்கலாம். இப்போதைய முடி உதிர்தலை தடுக்கக்கூடிய வெளிநாட்டு மருந்து ரோகைன் (ROGAINE) மட்டுமே. ஆனால், இது விலை அதிகமானது. அதாவது ஒரு மாதத்துக்கு இந்த மருந்தை வாங்கி சாப்பிட மட்டுமே ரூ.2,000 வரையில் தேவைப்படலாம். சாதாரணமாகவே முடி உதிர்தல் கீழ்கண்ட காரணங்களால் நடைபெறலாம்.

இறுக்கமான கட்டு


தலைமுடியை சிலர் இறுக்கமாக கட்டிக் கொள்வார்கள். இதேபோல் ரப்பர்பேண்டினை போட்டுக் கொண்டு முறுக்கிக் கொள்வார்கள. இதனால் முடி அதிகம் உதிர வாய்ப்புள்ளது. இதனால் , இறுக்கி பின்னல் போடுபவர்கள் உஷாராக இருக்க வேண்டும்.

ஹார்மோன்பாதிப்பு

குழந்தை பிறந்த தாய்மார்களுக்கு அதிகளவில் முடி உதிரும். குழந்தை சிரிக்க ஆரம்பித்துவிட்டது. அதனால் என் முடி எல்லாம் போய்விட்டது என்று சொல்வார்கள். ஆனால், உண்மையான காரணம் அதுவல்ல. கர்ப்ப காலத்தில் அதிகமாக சுரக்கும் ஹார்மோன் சுரப்பிகள், குழந்தை பேறுக்கு பின்னர் குறைந்துவிடும். இதனால்தான் சோர்வு, முடி உதிர்தல் அதிகமாக நடக்கிறது.
ஆனால், ஹார்மோன் சுரப்பில் 6 முதல் 9 மாத காலத்துக்குள் தன்னுடைய இயல்பு நிலைக்கு திரும்பிவிடும். அதனால் இளம் தாய்மார்கள் முடி உதிர்தலை பற்றி அதிகம் கவலைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டியதில்லை.
இதேபோல் நடுத்தர வயதுப் பெண்ணின் உடலில் எஸ்ட்ரோஜன் சுரப்பி குறைந்துவிடும். இதனால் அவர்களுக்கு முடி உதிர்தல் அதிகரிக்கும். இது இயற்கையாக நடக்கக்கூடியதுதான். இதை ஏற்றுக் கொண்டுத்தான் ஆக வேண்டும். யாரும் என்றும், 16 ஆக இருந்துவிட முடியாது.

மருந்துகள்


கருத்தடை மருந்து வகைகள் அதிகளவில் முடி உதிர்தலுக்கு காரணமாக இருக்கின்றன. இதனால் கருத்தடை மாத்திரைகளை உட்கொள்பவர்கள் டாக்டர்களிடம் நன்கு ஆலோசித்த பின்னரே அதை சாப்பிட வேண்டும்.
இதேபோல் டைபாய்டு, நிமோனியா, மலேரியா போன்ற நோய்களில் இருந்து பாதிக்கப்பட்டு வந்தவர்களுக்கும் முடி உதிர்தல் அதிகமாக இருக்கும். ரத்த சோகை உள்ளவர்களுக்கு முடி உதிரும்.


உணவு


சிலர் சத்தான உணவு வகைகளை எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அதேபோல், உடலுக்கு தேவையான அளவும் சாப்பிட மாட்டார்கள். இதுவும் ஊட்டச்சத்து குறைவுக்கு காரணமாக அமையும். வைட்டமின் சி, விட்டமின் பி காம்ப்ளக்ஸ் ஆகியவை உடலுக்கு நல்ல போஷாக்கு தரக்கூடியவை. எலுமிச்சம் பழம், ஆரஞ்சு பழம், பேரீச்சம் பழம், சப்போட்டா போன்றவற்றை அதிகம் உட்கொள்ளலாம்.

ஆயுர்வேதம்.காம்


Spread the love