முடி பிரச்சனைக்கு முடிவு

Spread the love

தலை முடி பிரச்னை தலையாய பிரச்னைதான். குறிப்பாக பெண்களுக்கு இது பெரும் பிரச்னை. தலை முடி பிரச்னைகளைப் போக்கவும், அதை தவிர்க்கவும் வழியுண்டு.

சனி நீராடு என்னும் அவ்வையின் வாக்கை எண்ணிப் பாருங்கள். உடலில் தங்கியிருக்கும் உஷ்ணத்தையும், அன்றாடம் நாம் காணும் உணர்ச்சிக் கொந்தளிப்பு, நெருக்கடி காரணமாக உடலில் ஒரு சில பகுதிகளில் ஏற்படும் தாக்குதல்களைச் சமாளித்து, அவற்றிற்குத் தேவையான ஓய்வை அளிக்கவும் நாம் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இளம் வயது நரை ஏற்படக் காரணம், மயிர்க் கால்களுக்கு ஆதாரமாக உள்ள தோலின் பாதுகாப்புக் குறைவதால் தான். இரத்தக் குறைவால் இரத்த சோகை ஏற்பட்டு தோல் வெளுத்துக் காணப்படுவது போல, தலை முடிகளும் வெளுக்கிறது. தோலின் வெளுப்பையும், உடல் உஷ்ணத்தையும் நாம் நன்கு பராமரித்து வர வேண்டும். தோலின் அருகே வெப்பம் அதிகமாவதால், மயிர் கால்களில் அழற்சி ஏற்பட்டு மயிர் நரைக்கிறது. தோலின் அருகே வெப்பம் அதிகமாக காணப்பட பல காரணங்கள் உண்டு. நமது அன்றாட வாழ்வில் நாம் கொள்ளும் கோபம், சோகம், பயம், தாபம், கவலை போன்றவைகளுடன் மற்ற மன உணர்ச்சிகளும் உடல் சூட்டை அதிகரிக்கச் செய்யும். மேற்படி காணப்படும் சூடு முடிக்கற்றைகளில் அழற்சியை அதிகரிக்கச் செய்து தலைமுடி நரைக்கச் செய்கிறது.

உடல் சூடு அதிகமாக காணப்படும் மற்றுமொரு காரணம் குடலின் உள்ளே தங்கும் மலப்பொருள். இது குடலில் தங்கத் தங்க அழற்சியும், சூடும் அதிகரிக்கும். அடிக்கடி நீராகப் பேதியாகும்படி மருந்துகளைச் சாப்பிட உடல் சூடு குறையும். திராட்சை, கடுக்காய் இவற்றின் கஷாயத்தை அல்லது சூரத்தாவரை இலை, சுக்கு, ரோஜா மொட்டு இவற்றின் கஷாயத்தையோ, சூரத்தாவரை விதையை ஊற வைத்த நீரினையோ அல்லது திராட்சையை மட்டும் காய்ச்சிய கஷாயத்தையோ மாதம் ஓரிரு முறை சாப்பிட்டு வரலாம். இதன் மூலம் தினசரி எளிதில் மலம் வெளியேறி விடும்.

உள்ளங்கால்களில் ஏற்படும் சூடு கூட கண்களையும் தலை முடியினையும் பாதிக்கக் கூடியது தான். மண் தரை என்று எங்கும் இப்போது பார்க்க இயலாது. சாலையில் தார் மற்றும் சிமெண்ட் மூலம் அமைக்கப்படுவதால் காலில் செருப்பு இல்லாமல் நடக்கக் கூடாது. இரவு உறங்கச் செல்லும் முன்பு இரண்டு கால்களையும் நன்றாகக் கழுவித் துடைத்து விட்ட பின்பு, சிறிது நல்லெண்ணெயை எடுத்து உள்ளங்கால்களில் தடவித் தேய்த்துப் பிடித்து விட்டு படுத்தால் நல்ல தூக்கம் வரும். கால்களில் அயர்வு நீங்கும். கண்களில் எரிச்சலும் காங்கையும் குறையும். தலை முடியானது வறண்டு சிக்கு பிடிக்காமலும், அழுக்கடையாமலும், பழுப்பு நிறமோ, செம்பட்டை நிறமோ மாறாமலிருக்க தலைமுடிக்கு எண்ணெய் தேய்த்து வாரி விடுகிறோம். தலைக்கு எண்ணெய் தேய்க்கும் முன்பு கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம், ஈரமுள்ள தலையில் எண்ணெய் தேய்க்கக் கூடாது. ஈரம் உலர்ந்த பின்பு தான் எண்ணெய் தேய்க்க வேண்டும். தலையில் எண்ணெய் தடவாமல் குளித்தால் நீர்க் கோர்த்துத் தலைக்கனம், மண்டைக் குத்தல், சளி முதலியவை ஏற்படும். குளித்து முடித்தவுடன் தலையைச் சரியாக உலர வைக்காமல் ஈரத்துடன் எண்ணெயைத் தடவித் தலை மயிரை வாரிக் கொள்வதாலும் நீர்க் கோர்வை, வற்றாத மூக்குச் சளி, தலை முடி நரைத்தல், தலைவாரிக் கொள்ளும் போது, மயிர்க் காலகள் படலம், படலமாக வந்து வடிவது போல இசிவு வலி, வறட்சி முதலியவை ஏற்படும்.

தலை முடியிலும், தோளிலும் எப்போதும் எண்ணெய்ப் பசை இருக்கும்படி பார்த்துக் கொள்வதும் மிக அவசியம். ஷாம்பு முதலிய எண்ணெய்ப் பசை நீக்கும் பொருட்களை அடிக்கடி பயன்படுத்தக் கூடாது. சீகைக்காய் பொடி, நெல்லி வற்றல், வெந்தயம், காய்ந்த எலுமிச்சம் பழத் தோல் முதலியவற்றை சேர்த்து அரைத்து வைத்துக் கொண்டு ஒரு சிலர் பயன்படுத்துவார்கள். பலர் பெரும்பாலும் சிகைக்காய்த் தூளை, பயற்ற மாவு, அரிசி மாவு, கடலை மாவு முதலியவற்றுடன் சேர்த்தே உபயோகிப்பார்கள். சாதம் வடித்த கஞ்சியில் இவற்றைக் குழப்பித் தேய்த்துக் கொள்வதுமுண்டு. இவற்றால் தோல், மயிர்க்கால் வறண்டு வெடிப்பு ஏற்பட்டாலும் வறண்டு மேல் தோல் காய்ந்து படலம் படலமாக உதிர ஆரம்பித்தாலும், அரிப்பு ஏற்பட்டாலும் பொடுகு, மயிர் உதிர்தல் முதலிய நோய்கள் ஏற்படும். ஆகவே வறட்சி அதிகமாகாமல், எப்போதும் சிறிது நெய்ப்புடன் இருக்குமாறு பதமுடன் வைத்துக் கொள்வது அவசியம்.

ஆயுர்வேதம்.காம்


Spread the love