கூந்தலைப் பற்றிய சந்தேகங்கள்

Spread the love

1. கூந்தலை அலச, ஷாம்பூ உபயோகிக்கலாமா? அது பாதுகாப்பானதா?

இன்றைய அவசர உலகத்தில், அதுவும் கணவனும் மனைவியும் வேலைக்கு போகும் சூழ்நிலையில், இயற்கையான பொருட்களை உபயோகித்து ஷாம்பூ தயாரிப்பது கடினம். தரமான ஷாம்பூகள் தற்போது கிடைக்கின்றன. இவை கருமையான டிடெர்ஜன்ட்டுகள் (லாரில் சல்ஃபட்-         Lauryl sulphates) இல்லாதவையாக இருந்தால் அல்லது குறைவாக இருந்தால் நல்லது.

2. ஷாம்பூவில் உள்ளவை என்ன? நல்ல ஷாம்பூவை தேர்ந்தெடுப்பது எப்படி?

பெரும்பான்மையான ஷாம்புகளில் “லாரில் ஸல்ஃபேட்” போன்ற டிடர்ஜெண்டுகள் (அழுக்கை நீக்கும் செயற்கை வேதிப்பொருள்) இருக்கும். இதனுடன் நீண்ட நாள் கெடாமல் இருக்கவும், ஸ்திர நிலைக்கு கொண்டு வரவும். சில ரசாயன பொருட்கள், தவிர வண்ணமூட்டும் பொருட்கள், வாசனை திரவியங்கள் சேர்க்கப்படுகின்றன.

·         ஷாம்பூவை தேர்ந்தெடுக்கும் போது சிறிது அமிலத்தன்மை அதிகம் உள்ளதை தேர்ந்தெடுக்கவும்.

·         உங்கள் கூந்தலின் தன்மைக்கு ஏற்ற ஷாம்பூக்களை உபயோகிக்கவும். உதாரணமாக எண்ணெய் பசை அதிகம் உள்ள கூந்தல், ‘நார்மல்’ கூந்தல் வறண்ட கூந்தல் – இவைகளுக்கென்று தனித்தனி ஷாம்பூக்கள் கிடைக்கின்றன. இவற்றின் வித்தியாசத்திற்கு காரணம், இவைகளில் சேர்க்கும் டிடர்ஜெண்ட் அளவுகள்.

·         உபயோகித்து பார்த்து, நன்றாக தலையை சுத்தம் செய்து, கூந்தலை மிருதுவாகவும், முடி படியுமாறும் செய்யும் ஷாம்பூக்களை தேர்ந்தெடுக்கவும்.

·         விளம்பரங்களை பார்த்து வாங்காதீர்கள்.

3.      தலைமுடியை எவ்வளவு தடவை அலசி கழுவ வேண்டும்?

இது உங்கள் கூந்தலின் தன்மை, நீங்கள் வசிக்கும் இடத்தின் சுற்றுப்புற சூழ்நிலை, சீதோஷ்ண நிலைமை இவற்றை பொருத்தது. சாதாரணமாக வாரத்தில் 3-4 முறை கூந்தலை அலசுவது போதுமானது. மாசு அதிகம் படியும் இடமாக இருந்தால் அதிக தடவை ஷாம்பு போட்டு அலச வேண்டும்.

4.      கண்டிஷனர்கள் தேவையா? அவை பாதுகாப்பானவையா?

கண்டிஷனர் கலந்திராத ஷாம்பூவை உபயோகித்தால், தலைமுடி படியாது. எவ்வளவு எண்ணெய் தடவினாலும் கூந்தல் ‘கூர்ச்சமாக’ நின்று, வாரினாலும் படியாது. மெலிந்த, நலிந்த கூந்தல் உள்ளவர்களுக்கு, கண்டிஷனர்கள் பாதுகாப்பானவை அல்ல.

5. ஹேர் கண்டீஷனரை எவ்வாறு தேர்ந்தெடுக்க வேண்டும்?

ஷாம்பூவுடன் சேர்ந்த கண்டீஷனர்கள் கிடைக்கின்றன. இவற்றை விட  தனியாக கிடைக்கும் கண்டீஷனர்களை உபயோகிப்பது நல்லது. ஷாம்பூ தனியாக போட்டு, அலசிய பின் கண்டீஷனர் போடுவது நல்ல பலனை அளிக்கும். நல்ல தரமுள்ள கண்டீஷனரில் எண்ணெய், புரதம் இருக்கும். கொலாஜென் (Collagen ஒரு வகை புரதம்) ஜெலடின் (Gelatin) போன்றவைகளும் கண்டீஷனரில் சேர்க்கப்படுகின்றன.

6. ஷாம்பூவையும், கண்டீஷனரையும், உபயோகிக்கும் முறை என்ன?

தலைக்கு எண்ணெய் வைத்தபின், ஷாம்பூ போடுவது நல்லது. ஷாம்பூவாகட்டும், கண்டீஷனராகட்டும், முதலில் கைகளில் கொட்டிக் கொண்டு, கைகளை சேர்த்து தேய்த்து பிறகு கூந்தலில் பரவலாக தடவிக் கொள்ளவும்.

7. வீட்டிலேயே கண்டீஷனர்கள் தயாரிக்கலாமா?

செம்பருத்தி பூ செடியின் பச்சை இலைகளை, ஒரு கப் எடுத்து, 1.5 லிட்டர் தண்ணீரிலிட்டு காய்ச்சவும். 10 நிமிடம் காய்ந்ததும், துணியால் வடிகட்டி, குளிர்ந்தவுடன், ஷாம்பூ போட்டபின், இதை உபயோகித்து 3-4 தடவை கூந்தலை அலசவும். இதே போல, இலைகளுக்கு பதில் சிவப்பு செம்பருத்தி பூக்களையும் பயன்படுத்தலாம்.


Spread the love