கூந்தல் பராமரிப்பு

Spread the love

பெண்களுக்கு ஏற்படும் “டென்ஷன்”களில் இரண்டு முக்கியமானது. ஒன்று அவர்களின் முகம் பற்றிய கவலை. பருக்கள், எண்ணை வடிதல் இவற்றை பற்றிய சிந்தனை. இரண்டாவது தலைமுடியை பற்றி – முடி உதிர்வது, பொடுகு அரிப்பு, பேன் இவற்றைப் பற்றிய கவலை. முட்டிக்கால் வரை தொங்கும் முடி, ஒரே வருடத்தில் ‘எலிவால்’ போல் ஆகிவிட்டதே என்று பெண்கள் அதிகமாக கவலைப்பட்டால் இன்னும் முடி உதிர்வது அதிகமாகும்.

நமது இலக்கியங்களிலும் கூந்தல் அழகின் வசீகரத்தை பற்றி வர்ணணைகளை காணலாம்.

இந்திய பெண்மணிகளுக்கு, குறிப்பாக தென்னிந்தியருக்கு, அதிலும் குறிப்பாக கேரள நங்கைகளுக்கு, கூந்தல் அழகு, அதன் பராமரிப்பு சிறந்து காணப்படுகிறது. இதனால் மேலைநாட்டவர்களை விட, நம் தேசத்துப் பெண்களின் கூந்தல் அழகு சிறப்பாக இருக்கிறது.

கூந்தல்பராமரிப்புக்குசில யோசனைகள்

* திடமான, அடர்த்தியான கூந்தலுக்கு முதல் தேவை சரியான, சத்துள்ள உணவு. கூந்தலுக்கு உகந்த உணவுகளைப் பற்றி, தனியாக சொல்லப்பட்டிருக்கிறது.

* ஆயுர்வேதத்தில் கூந்தல் பராமரிப்புக்கென பல மூலிகைகள் கண்டறியப்பட்டிருக்கின்றன. ஆயுர்வேத தைலங்கள், நல்ல பலன்களை தரும். சிலவற்றை வீட்டிலேயே தயாரிக்கலாம். இவற்றை பற்றிய விவரங்களும் தனியாக கொடுக்கப்பட்டிருகின்றன. இந்த தைலங்களில் கூந்தலுக்கேற்ற மூலிகைகள் மற்றுமன்றி, மன உளைச்சல், மனோரீதியான பாதிப்புகளுக்கும் மூலிகைகள் சேர்க்கப்படுகின்றன.

* ரசாயனங்கள் கலந்த கூந்தல் எண்ணை போன்றவற்றை தவிர்க்கவும். இயற்கை பொருட்களால் தயாரிக்கப்பட்ட தயாரிப்புகளே நல்லவை. வாரம் ஒருமுறையாவது எண்ணெய் தேய்த்துக் குளித்தல் நல்லது.

* கூந்தலுக்கு பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் – சீப்பு, துவாலை, முடிப்ரஸ்கள் (Hair brush) அனைத்தும் சுத்தமாக இருக்க வேண்டும். வாரம் இருமுறை சீப்பையெல்லாம் கழுவ வேண்டும்.

* தலையை கை விரல்களின் நுனிகளால் மசாஜ் செய்யவும் 15 நிமிடங்களுக்கு.

* முடியை ‘பிரஷ்’ செய்யும் முறை – காலை 5 நிமிடம், மாலை 5 நிமிடம் பிரஷ் செய்யவும்.

* குளித்த பின், கூந்தலை இயற்கையாக காய விடுங்கள். ஈரக்கூந்தலில் வார வேண்டாம். ஈரமான முடி பலவீனமாக இருக்கும். அப்போது வாரினால் முடி உடையும். ஹேர் டிரையர்கள் சூட்டை அதிகமாக்கும்.

* முடியில் ‘சிக்கு’ ஏற்படாமல், வாரி வரவும்.

* வாசனை தேங்காய் எண்ணெயில், ரசாயன பொருட்கள் (Preservatives) சேர்க்கப்படுவதால் வீட்டில் தயாரிக்கப்படும் தைலங்களே நல்லது.

* தலை, உடலில் எண்ணெய் தேய்த்து குளிப்பது இவற்றை விட்டுவிடாமல் செய்து வரவும். தைல எண்ணெயை உபயோகிக்கும்போது முடிவேர்க்கால்களில் படும்படி தேய்க்க வேண்டும்.

* ஆறு மாதத்திற்கொரு முறை வயிற்றுப்பூச்சிகளை ஒழிக்கும் மருந்தை சாப்பிட்டு வரவும். (டாக்டரைகேட்டு)

* உடலின் நோய்தடுப்பு சக்தியை அதிகரிக்க சிகிச்சை பெற்றுக் கொள்ளவும்.

தலை வாரும் முறைகள்

* பெண்கள் ஒருவருக்கொருவர் தலை வாரி விடுவது நமது இல்லங்களில் காணும் தினசரி நிகழ்ச்சி. இது இப்போது அதிகமாக நடப்பதில்லை.

* முதலில் நல்ல சீப்பை தேர்ந்தெடுக்க வேண்டும். இடைவெளி விட்டு அமைந்த சீப்புகள் பயன்படுத்தினால் முடிக்கு சேதம் ஏற்படாது. அகன்ற பற்கள் உடைய சீப்பு நல்லது.

* கூந்தல் ஈரமாக இருக்கும் போது தலைவாரக் கூடாது. ஈரமான கூந்தல் பலவீனமானது. வாரினால் உடைந்து போகும்.

* உலர்ந்த வரண்ட கூந்தல் உள்ளவர்கள் அடிக்கடி கூந்தலை சீவிக் கொள்ள வேண்டும். சீப்பை அழுத்தி, சுரண்டக்கூடாது.

* பொதுவாகவே அடிக்கடி கூந்தலை சீப்பினாலே/பிரஷினாலோ சீவினால் செபாஸியஸ் சுரப்பிகள் தூண்டப்பட்டு, முடி வேர்களுக்கு எண்ணெய் சேர்ந்து கூந்தல் எண்ணையால் பளபளக்கும்.

* சீப்பானாலும், பிரஷ் ஆனாலும், முடி படிந்துள்ள திசையிலே தான் வார வேண்டும்.எதிர் திசையாக சீவக் கூடாது.

* மற்றவர்கள் உபயோகித்த சீப்பை உபயோகிக்காதீர்கள்.

* கூந்தலை மேல் நோக்கி வாரிவிட்ட பின், கெட்டியாக இழுத்து கட்டினால் நெற்றி வழுக்கை ஏற்படலாம்.

* மென்மையான பிரஷ் உபயோகிப்பது, சீப்பால் கூந்தலை வாருவதை விட நல்லது. ஆனால் கடினமான பிரஷ், அதுவும் நைலான் கூர்ச்சங்கள் இருந்தால், சீப்பே நல்லது.

எண்ணெய்குளியல்

தமிழக பெண்கள் எண்ணெய் குளியலுக்கு நல்லெண்ணை தேய்த்துக் குளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். தலைக்கு தேய்க்கு முன் எண்ணெயை சிறிது சூடுபடுத்த வேண்டும். சூடான ஆயில் மயிர்க்கால்களுள் எளிதாக செல்லும். ஒரு மணி நேரமாவது எண்ணெய்  ஊற வேண்டும்.

நம் நாட்டவருக்கு, நல்லெண்ணையும், தேங்காய் எண்ணெயும்தான் தலைக்கு தேய்த்துக் குளிக்க உபயோகப்படுகின்றன. பாதாம் எண்ணை,  ஆலிவ் எண்ணெய் இவற்றையும் பயன்படுத்தலாம்.

லேசாக காய்ச்சிய  எண்ணெயுடன், மிளகு, ஓமம் சேர்க்ப்படுகிறது. இதனால், சளி பிடிக்காது. தவிர மிளகாய், இஞ்சி, வெந்தயம், கொம்பரக்கு, வெற்றிலை சேர்க்கலாம். கொம்பரக்கு உடல் காங்கையை குறைக்கும். ஓமமும், வெந்தயமும், மிளகும் உடல் வலியை போக்கும். இஞ்சியும், வெற்றிலையும் சளி கட்டாமால் காக்கும். இவற்றில் ஏதாவது ஒன்றைப் போட்டு காய்ச்சி கொள்ளலாம்.

தலைமுடி பாதிப்பு உள்ளவர்கள் (பொடுகு, அரிப்பு) தூர்பாதி தைலம், தினேசவல்லி தைலம் போன்றவற்றை தேய்த்துக் குளிக்கலாம்.


Spread the love
error: Content is protected !!