கூந்தலில் மேகம் வந்து குடி புக..

Spread the love

கூந்தல் அழகு பராமரித்தல்:

உங்களது கூந்தலும், அதை நீங்கள் வாருகின்ற விதமும் உங்கள் முழுத் தோற்றத்தையும் பொலிவுறச் செய்யும். பளபளக்கச் செய்யும். அழகிய கூந்தல் எவரையும் ஈர்க்க வல்லது. ஆனால், இதன் அழகைப் பராமரிக்க பெரும் முயற்சி எடுக்க வேண்டியது அவசியம். இதற்கு நீங்கள் முடி சார்ந்த சில பொதுவான சில விஷயங்களைத் தெரிந்து கொள்வது நல்லது.

1. ஒரு மாதத்திற்கு ஒரு செ.மீ. ( அரை அங்குலம் ) என்ற அளவில் முடி வளர்கிறது.

2. உங்களது முடியின் நிறம் உங்களது பரம்பரையைப் பொறுத்து உள்ளது.

3. முடியின் வளர்ச்சிக்குப் புரதத்திலிருந்து பெறப்படும் கெரட்டின் (Keratin) என்னும் சத்து மிகவும் அவசியமாகும்.

4. தலையிலுள்ள முடியின் எண்ணிக்கை சாதாரணமாக 90 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் வரை மாறுபடும்.

5. தலையை நன்கு அழுத்தித் தேய்த்துப் பிரஷ்செய்தால் முடி பளபளப்பாக இருக்கும்.

கூந்தலைப் பேணிப் பாதுகாக்கச் சிறந்த முறை அதை அழுக்கின்றிக் கழுவிச் சுத்தமாக வைத்துக் கொள்வது தான். எண்ணெய்ப் பிசுக்கும், அழுக்கும் கொண்ட முடி, பளபளப்பின்றி போவதுடன் கத்தைக் கத்தையாகவும் தோற்றம் தரக்கூடும். கேரளம் போன்ற பகுதிகளில் வாழும் பெண்கள் தினமும் தலைக்குக் குளிக்கிறார்கள் என்றாலும் அது அவசியமில்லை. உங்களது முடி எப்பொழுது அழுக்காகவும், தூசியடைந்தும் தென்படுகிறதோ அப்போதெல்லாம் குளிப்பது அவசியம். குளிக்கின்ற போது நல்ல மென்மையான ஷாம்பு ஒன்றினைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது.

ஷாம்பு குளியல்:

1. முதலில் தலைமுடியை நன்கு ப்ரஷ்செய்து, முடியில் தூசு, துப்பட்டை, அழுக்கு முதலியவை இல்லாமல் சுத்தம் செய்யவும். கட்டிப் பிடித்தோ, சடை பிடித்தோ இருக்கும் முடிக்கற்றைகளை பிரஷினால் மெதுவாக நீவித் தனித்தனியாக்குங்கள்.

2. ஒரு குழாயின் அடியிலோ அல்லது அகன்ற பேசின் குழாயிலோ தலையை நீட்டி, உடல் முழுவதும் ஈரமாகும்படி செய்யுங்கள். வசதியிருந்தால் ஷவர் இணைப்பு ஒன்றின் உதவியால் தலை முடியை ஈரமாக்கலாம்.

3. சிறிதளவு ஷாம்புவை உள்ளங்கையில் ஊற்றிக் கொண்டு, தலை உச்சியில் வைத்து நன்கு தேய்த்துத் தடவி, பின்னர் காது, பின்னந்தலைப் பகுதிகளிலும் தேயுங்கள்.

4. தண்ணீரைத் திறந்து விட்டு தலை முடியைச் சுத்தம் செய்யுங்கள். ஷாம்பு முற்றிலுமாக போகும் வரை கழுவ வேண்டும்.

5. முடியைக் கைகளால் வழித்து தண்ணீரைப் போக்க வேண்டும்.

6. ஈரமில்லாத துவாலை ஒன்றினால், முடியிலுள்ள தண்ணீரை ஒற்றி எடுங்கள். அழுந்தத் தேய்த்து துவட்டாதீர்கள். ஈரமான முடி இளக்கமாக இருக்கும். எளிதாக உதிர்ந்து விடும்.

7. பூத்துண்டினால் ( டர்க்கி டவல் ) தலை முடியைச் சுற்றி தலைப்பாகை போலக் கட்டுங்கள். முடியில் ஈரம் குறைந்து பதமாக இருக்கும் போது பிரஷ்செய்து பின்னர் வழக்கம் போல் உலர்த்துங்கள்.

நான்கு வகையான முடிகள்:

சருமத்தில் பல வகைகள் இருப்பது போல முடியிலும் பல வகைகள் உண்டு. அவை,

1. பிசுக்கான முடி

2. வறண்ட முடி

3. இயல்பான முடி, மற்றும்

4. வறட்சியும், பிசுக்கும் இணைந்த முடி.

ஓவ்வொரு வகையான முடிக்கும் அவற்றிற்கேற்ற விதத்தில் தான் கழுவ வேண்டும்.

1. பிசுக்கான முடி:

இயன்ற அளவு அடிக்கடி கழுவுதல் நல்லது. மெலிதான (Mild) ஷாம்பு பயன்படுத்துவதுடன், வெதுவெதுப்பான நீரில் குளிப்பதும் நல்லது. குளித்து முடித்ததும் கடைசியாக ஒரு சிறிய வாளி நல்ல தண்ணீருடன் 4 தேக்கரண்டி வினிகர் அல்லது எலுமிச்சம் பழச் சாற்றைச் சேர்த்து முடியைக் கழுவினால் முடியின் அமில/கார விகிதம் நிலைநிறுத்தப்படும்.

2. வறண்ட முடி:

அடிக்கடி தலைக்கு குளிக்க வேண்டுமென்பது அவசியமில்லை. வாரம் ஒரு முறை தலைக்குக் குளித்தால் போதும். Dry Hair Shampoo  பயன்படுத்துவது நல்ல பலனைத் தரும்.

3. இயல்பான முடி:

தலை முடி அழுக்கடையும் போது மட்டும் தலைக்கு குளித்தால் போதும். மீடியம் ஷாம்பு ஏற்றது. ஸ்பெஷல் ஷாம்பு எதுவும் தேவை இல்லை.

4. கலப்பு முடி:

வறட்சியும், பிசுக்கும் இணைந்த கலப்பு முடி உள்ளவர்கள் ஒரே ஒருமுறை ஷாம்பு தடவி நன்கு கழுவினால் போதும். முடி நுனியில் கன்டிஷனர் தடவிப் பின்னர் கழுவுவது நல்லது.

5. முடி மேக்அப் ( செட்டிங் – பெர்மிங் ):

இம்முறைகளின் மூலம் மெல்லிய முடியைத் தடித்தாற் போல் தோன்றச் செய்வதும், சீவிய படியே நிற்கச் செய்வதும், முடியில் சுருள் உண்டாக்குவதும், சுருள் நீக்குவதும் போன்றவைகள் செய்யப்படுகின்றன. குட்டையாகவும் மற்றும் பாப், கிராப் போன்ற முடி அலங்காரம் செய்து கொள்ளும் மேலை நாட்டுப் பெண்களே இம்முறைகளைப் பின்பற்றுகின்றனர். நீண்ட கூந்தலே அழகு என்று இந்திய பெண்களுக்கு ஒரு கர்வம் இருப்பதால் தற்சமயம் இம்முறைகள் தேவைப்படுவதில்லை.

முடிசார்ந்த பிரச்சனைகள்:

பெரும்பாலான பெண்கள் சந்திக்கும் சில முடிப் பிரச்சனைகள் என்ன என்று பார்ப்போம்.

எண்ணெய்ப் பிசுக்கு:

எண்ணெய்ப் பிசுக்கு உள்ள முடி எளிதாக இங்குமங்கும் ஆடி அழகு காண்பிக்காமல் இட்டது இட்டபடி நிற்கும். கற்றை போல் தோற்றம் தரும். தலை வாரும் போது, தேங்காய் எண்ணெய் போன்ற லேசான எண்ணெயை மெலிதாக தடவ வேண்டும். அடிக்கடி ஷாம்பு பயன்படுத்துவதுடன் குளிப்பதற்கு சூடு அதிகமில்லாத வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்தவும்.

முடி வறட்சி:

முடிக்கு பாதுகாப்புத் தரும் செபம் எனப்படும் கொழுப்புக் குறைவினால் முடி வறண்டு போவதுடன் எளிதில் முடி கலைந்தும் போகிறது. வறண்ட முடிக்கு என்று தயாரிக்கப்பட்ட ஷாம்புவை பயன்படுத்துவதுடன் மயிர்க்கால்களிலும், தலையிலும் நன்கு அழுந்த தேய்த்துப் பிடித்து விடுவதும் செபச் சுரப்பிகளின் சுரப்பை அதிகப்படுத்தும்.

ஒடியும் முடி:

அடிக்கடி காரமான ஷாம்புகளைப் பயன்படுத்துவதும், வெயிலில் அதிகம் நடமாடுவதும், ஹேர் டிரையரை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவதும், முடி ஒடிவதற்கும், கொட்டுவதற்கும் காரணமாகிறது. அகன்ற பற்களைக் உடைய சீப்புகளைப் பயன்படுத்துவது நல்லது. தலை அலங்காரம் செய்கிறேன் பேர்வழி என்று முடியை மிகவும் வளைத்து, ஒடித்து சிதைக்காமல் எளிய முறையில் முடி அலங்காரம் செய்து கொள்வது நல்லது.

நுனி பிளப்பு:

முடி மிக நீளமாகும் போது, முடியின் நுனியில் பிளவு ஏற்படலாம். ட்ரையர் மற்றும் ரோலர் போன்றவைகளை அதிகம் பயன்படுத்தும் போதும், முடியைப் பற்றி அதிக கவனம் எடுத்துக் கொள்ளாத போதும் இது போன்று ஏற்படலாம். உருண்ட முனையுள்ள நைலான் பிரஷ்களைப் பயன்படுத்துவதுடன் செய்வதைக் குறைத்துக் கொள்ளலாம். ஷாம்புக்குப் பின்னர் கண்டிஷனர் இட்டு முடியைக் கழுவுவதும் நல்லது. பிளந்திருக்கும் அளவிற்கு முடியை வெட்டி விட்டால் பிளவு மேல் நோக்கிச் செல்லாமல் தடுக்கப்படும்.

முடி கொட்டுதல்:

சாதாரணமாக ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 100 முடி முதிர்வது இயல்பானதாகும். இது கவனிக்கப்படாமலேயே போய்விடும். பலருக்கு முடி உதிர்வது அளவில் சற்று அதிகமாகி விடுவதால், பெரிய பிரச்சனையாகி விடுகிறது. வயது முதிர்வு, நோய் மற்றும் சத்துக் குறைந்த உணவு காரணமாகவும் முடி கொட்டலாம். இதைத் தடுத்து நிறுத்தவோ முடி வளர்ச்சியை அதிகரிக்கவோ நம்பகமான எந்த முறையும் இன்னும் வரவில்லை.

பொடுகு:

தலையில் பொடுகு இருப்பதன் காரணமாக தலையில் அரிப்பு ஏற்பட்டு சிராய் கொட்டுவதும், முடி கொட்டுவதும் பலருக்கு ஏற்படுகிறது. பொடுகினை நீக்க நல்ல மருந்துகள் சந்தையில் கிடைக்கின்றது. எனினும் மருத்துவர் உதவியுடன் இதைத் சரி செய்ய முயற்சிக்கவும்.

வேண்டாத முடியும், அகற்றும் முறையும்:

உடலில் வேண்டாத இடங்களில் முளைக்கின்ற முடியானது பல நேரங்களில் தொல்லைகளைத் தரக்கூடும். முடிகளை அகற்றுவதற்கு தற்காலத்தில் பலமுறைகள் உள்ளன. முடி தோன்றும் இடத்திற்கு தகுந்தவாறு முடி நீக்கும் ஏற்ற முறைகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும். அவைகள்,

1. வாக்ஸிங்

2. கிரீமிங்

3. பிளீச்சிங்

4. ட்வீஸிங்

5. ஷேவிங்

6. எலெக்ட்ரோலிசிஸ்

1. வாக்ஸிங் (Waxing):

கை, கால்களில் உள்ள முடிகளை அகற்ற இது ஒரு சிறந்த முறையாகும். ஆனால் சிறிது வேதனை தரக் கூடியது. எனினும் இம்முறையில் முடி நீக்கும் போது, 5 அல்லது 6 வாரத்திற்கு முடித் தொல்லை இல்லாது இருக்கலாம். இம்முறையை பின்பற்றும் போது வாக்ஸ் மிகவும் சூடாக இருக்கும் போது தடவி விடக் கூடாது. பிய்த்தெடுக்கும் போது மெல்ல, மெல்ல எடுக்காமல் பட்டென்று ஒரே முறையில் எடுத்து விட வேண்டும். முகத்தில் ஏற்படும் முடிகளை நீக்க இது ஏற்ற முறை அல்ல.

2. கிரீமிங் (Creaming):

Depitator  என்று சொல்லப்படுகின்ற கிரிம்கள் தங்கள் கெமிக்கல் சக்தியால் முடிகளைக் கரைத்து விடுகின்றன. இம்முறையிலும் முடிகள் நாட்கழித்தே திரும்பவும் தோன்றுகின்றன.

3. ப்ளீச்சிங்:

கெமிக்கல் ( இரசாயன ) முறையில் முடியின் நிறத்தை மங்கச் செய்வது. இது முகத்தில் தோன்றும் மிக மெல்லிய முடிகளுக்கு மட்டுமே ஏற்றது. கீழ் நோக்கி வளரும் மென்மையான முடிகளைப் ப்ளீச் செய்வதற்கு மட்டுமே இது பயன்படுத்தப்பட வேண்டும். ஹைட்ரஜன் பெராக்ஸைடு (Hydrogen Per Oxide) ஒரு மேஜைக் கரண்டி அளவும், அம்மோனியா (Liquid Ammonia) 8 சொட்டு அளவும் எடுத்துக் கொண்டு, இவை இரண்டையும் நன்கு கலந்து ஒரு பஞ்சின் உதவியினால் தேவையான இடங்களில் தடவவும். 15 நிமிடங்கள் பொறுத்து பின்னர் தண்ணீரில் கழுவவும்.

4. ட்வீஸிங் (Tweezing):

ஓவ்வொரு முடியாக எடுக்க வேண்டியிருப்பதால், இது ஒரு மிகவும் தாமதமான முறையாகும். முகத்தில் உள்ள முடிகளுக்கும், புருவ முடிகளுக்கும் மட்டுமே பொருத்தமானது. சுத்தமான ட்வெய்னைப் பயன்படுத்த வேண்டும். இதற்கென கையடக்கமான சிறிய மெஷின்கள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளன.

5. ஷேவிங் (Shaving):

கால்கள், அக்குள் போன்ற இடங்களில் உள்ள சற்று அடர்த்தியான முடிகளை அகற்ற ஷேவிங்தான் நல்ல பாதுகாப்பான முறை. ஷேவிங்செய்தால் மீண்டும் அதிகமாக முடி முளைக்கும் என்று சொல்லப்படுவதில் உண்மை இல்லை. குளித்து முடித்தவுடனே ஷேவிங்செய்தால் முடி நீக்குவது மிக எளிதாக இருக்கும். ஷேவ் செய்வதற்கு முன்னர் ஒரு மாய்ஸ்சரைசர் லோஷன் தடவவும். அதைத் தொடர்ந்து நல்ல நுரையெழக் கூடிய ஷேவிங்சோப் இடவும். இரண்டு, மூன்று நிமிடங்கள் பொறுத்திருந்து பின்னர் ஷேவ் செய்யவும். மீண்டும் மீண்டும் ரேஸரைப் போட்டு இழுக்காமல் நீளமாக ஓரிரு முறை இழுத்து முடி நீக்குவது நல்லது. ஒவ்வொரு முறை இழுத்ததும், ரேஸரைக் கழுவிக் கொள்ளவும். முகம், மார்பு போன்ற இடங்களில் தோன்றும் முடியை நீக்க ரேஸரை உபயோகிக்காமல் இருப்பது நல்லது. இதற்கும் தற்போது சிறிய கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

6. எலக்ட்ரோலிசிஸ் (Electrolysis):

சிக்கலான இடங்களில் தோன்றும் வேண்டாத முடிகளை நீக்க இம்முறை தான் சிறந்தது. இந்த முறையினால் முடியின் வேர்கள் எரிக்கப்பட்டு (Cauterized) விடுகின்றன. இம்முறையில் நன்கு தேர்ந்தவர்கள் மூலம் இதைச் செய்து கொள்ள வேண்டும். இது சற்று செலவு கூடுதலான முறையாகும்.

ஷாம்புவும், கண்டிஷனரும்:

முடியைப் பராமரிப்பதில் கவனமுடன் ஷாம்பு செய்தால் முடி பொலிவுடன் தோற்றம் தரும். என்றாலும் அடிக்கடி ஷாம்பு உபயோகப்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.

ஷாம்பின் மூலம் முடி பராமரிப்பு:

முன்னர் கூறியுள்ள ஷாம்பு குளியல் முறைகளைக் கடைபிடியுங்கள்.


Spread the love
error: Content is protected !!