உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவு, முடிக்கும் ஆரோக்கியம் தரும். இரும்புச்சத்து, கால்சியம் குறைபாடுகள் முடிவளர்ச்சியை பாதிக்கின்றன. இவை நிறைந்த உணவுகளான பச்சை காய்கறிகள், கீரைகள், ஆப்பிள், பால், பால் சார்ந்த உணவுகள், அசைவ உணவுகள், முடிவளர்ச்சிக்கு உதவும்.
புரதம், முடிவளர தேவையான சத்தாகும். சோயாபீன், புரதம் நிறைந்தது. முடி வளர்ச்சிக்கு நல்லது. கூடவே வைட்டமின் “பி” மற்றும் தாதுப் பொருட்களும் முடிக்கு தேவை. அயோடின் குறைபாடு இல்லாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
தலைமுடிக்கு உகந்த எண்ணெய்களில் முக்கியமானவை இரண்டு – தேங்காய் எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய். தேங்காயிலிருந்து எடுக்கப்படும் தேங்காய் எண்ணெய் பரவலாக கூந்தல் எண்ணெயாக உபயோகிக்கப்படுகிறது. நல்லெண்ணெய் எள்ளுச்செடியிலிருந்து ((Sesamum Indicum) எடுக்கப்படுகிறது. இந்த செடி 1 லிருந்து 3 அடிவளரும். மூன்றுவகை எள் – வெள்ளை, சிவப்பு மற்றும் கறுப்பு நிறங்களில் உள்ளன. கறுப்பு எள்ளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் கூந்தலுக்கு ஏற்றது. தலைமுடி நன்றாக செழித்து கருமையாக வளர கீழ்க்கண்ட சூப் உணவுகள் பயன்படும்.
பொன்னாங்கண்ணிக் கீரை சூப்
தேவையான பொருட்கள்
பொன்னாங்கண்ணி இலை – 1 கப்
தண்ணீர் – 250 மி.லி
வெங்காயம் – 1
தக்காளி – 1
பூண்டு – 2 பல்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
பச்சை மிளகாய் – 1
மிளகு – 1/4 டீஸ்பூன்
சீரகம் – 1/4 டீஸ்பூன்
செய்முறை
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும். ஒரு குக்கரில் எண்ணெய் சூடாக்கி, அதில் மிளகு, சீரகம் போட்டு தாளித்து, பின் வெங்காயம், பூண்டு, தக்காளி, பச்சை மிளகாய், பொன்னாங்கண்ணிக் கீரை முதலியவற்றை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு வதக்கவும். பின்னர் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு ஒரு சத்தம் விடவும். வெந்தவுடன் திறந்து சூடாகப் பரிமாறவும்.
பயன்
பெண்களுக்கேற்ற கீரை இது தான். பெண்களின் தலை முடி நன்கு கறுத்து, நீண்டு அடர்ந்து வளரும்.
கறிவேப்பிலை சூப்
தேவையான பொருட்கள்
கறிவேப்பிலை – 1 கப்
தக்காளி – 1
பயத்தம் பருப்பு – 1/2 கப்
தண்ணீர் – 500 மி.லி
சீரகப்பொடி – 1/2 டீஸ்பூன்
வெண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்
பூண்டு – 2 பற்கள்
பெரிய வெங்காயம் – 1
எலுமிச்சம்பழச்சாறு – 2 டீஸ்பூன்
உப்பு, மிளகுத்தூள் – தேவையான அளவு
செய்முறை
தக்காளி, வெங்காயம், கறிவேப்பிலை முதலியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பருப்பில் தண்ணீர் ஊற்றி நன்கு குழையும்படி வேகவைக்க வேண்டும். வாணலியை அடுப்பிலேற்றி வெண்ணெயை விட்டு உருகியதும் வெங்காயத்தையும் பூண்டையும் போட்டு வதக்கவும். அதில் பருப்பு நீரை மட்டும் ஊற்றி, கறிவேப்பிலையையும் சேர்த்து வேகவைக்கவும், பிறகு சீரகப்பொடி, பொடியாக நறுக்கிய தக்காளிப் பழம் ஆகியவற்றைச் சேர்க்கவும். பருப்பு, உப்பு, மிளகுப்பொடி ஆகியவற்றைச் சேர்க்கவும். பத்து நிமிடம் மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு எலுமிச்சம் பழச்சாற்றை சேர்த்துக் கலக்கிப் பரிமாறவும்.
பயன்
கறிவேப்பிலை இளநரைக்கு நல்லது. நரை வராமல் முடி கரு கருவென்று நன்கு வளரும்.