பொதுவாக குழந்தைகள் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. என்று முதன் முதலாக பள்ளிக் கூடத்திற்கு அனுப்பும் காலத்திலிருந்தே அவர்களின் கல்வியின் மேல் அக்கறை செலுத்துவது போல உடல் வலுவாக அமையவும் அக்கறை எடுத்துக் கொண்டால், அவர்கள் கல்வியிலும் உடல் நலத்திலும் தேறிவிடுவார்கள். இயந்திரமயமான இக்காலத்தில் குழந்தைகளுக்கும், வீட்டில் ஆபிஸ், கல்லூரி போகும் பெரியவர்களுக்கும் சமைத்து டிபன் பாக்ஸிலும் அடைத்து அனுப்பி வைத்து விடுவதற்குத் தான் நேரம் இருக்கிறது…. உண்மைதான்… குழந்தைகளுக்கு படிப்பதற்கு தரமான நோட்டு, புத்தகங்கள், எழுது பொருட்கள், உடைகள், சிறந்த பள்ளியில் சேர்க்க டொனேஷன் அதிகமாக தரக்கூடிய மனநிலையில் இருக்கும் நீங்கள், அவர்களின் உடலுக்குச் சத்தும், ஆரோக்கியமும் கிடைக்க நம்மைச் சுற்றி கிடைக்கும் இயற்கைப் பொருட்களான காய்கறிகள், பழங்களை பயன்படுத்துவதில்லை.
எங்கும் எளிதில் கிடைக்கும் கொய்யாப்பழம், கிவிப்பழம், தர்ப்பூசணி, நெல்லிக்காய், காரட் போன்றவைகளை பயன்படுத்துவது டாக்டரிடம் செல்லும் நேர விரயத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தும். எளிதில் எங்கும் கிடைக்கும் கொய்யாப் பழத்தினை குழந்தைகள் மட்டுமல்ல…. பெரியோர்களும் அடிக்கடிச் சாப்பிட்டு வரலாம்.
கொய்யாப் பழத்தில் வைட்டமின் சி சத்து அதிகம் காணப்படுகின்றன. ஏழைகளின் ஆப்பிள் என்று கூறப்படும் கொய்யாப்பழத்தில், வேறு எந்தப் பழவகைகளிலும் காணப்படாத அளவு வைட்டமின் சி சத்தானது நெல்லிக்காய்க்கு அடுத்ததாக 2-வது இடத்தில் உள்ளது. இதனால் தான் வளர் பருவத்திலுள்ள குழந்தைகளுக்கு, கொய்யப்பழம் தருவதால் அவர்களின் உடல் வளர்ச்சியும் எலும்புகள் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியமும் அடைகிறது. ஆரஞ்சுப் பழத்தில் உள்ள வைட்டமின் சி சத்தினை விட கொய்யாப்பழத்தில் 5 மடங்கு அதிகம் சி சத்துள்ளது.
வைட்டமின் சி சத்தானது கொல்லேஜன் உற்பத்தி திசு மற்றும் ஆரோக்கியமான தோல் அமைவதற்கு முக்கியமான ஒன்றாகும். வைட்டமின் சி நோய் எதிர்ப்புத் திறன் அதிகம் கிடைக்கிறது. இதயம் மற்றும் புற்றுநோய் வராமல் நம்மை பாதுகாக்கிறது. வெண்மை நிற கொய்யாப்பழத்தில் அதிகளவு வைட்டமின் சி சத்துள்ளது.
கொய்யாவினை பழமாக பழுக்க வைத்துச் சாப்பிடுவதை விட கொய்யாக் காய்களாக குறிப்பிட்ட காலங்கள் வரை சாப்பிட்டு வர இரத்தத்திலுள்ள கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கிறது. கொய்யாக்காய்கள் இருமல், சளியினை வெளியேற்றுகிறது. அதிக அளவில் பொட்டாசியம், நையாசின் மற்றும் நார்ச்சத்துக்கள் கொய்யாவில் காணப்படுவதால் கொலஸ்டிரால், இதயத்துடிப்பு, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.
கொய்யாப்பழத்தின் மேல் பகுதி (தோலில்)யில் அதிக அளவு சத்துக்கள் இருப்பதால் பழத்தின் தோலைச் சீவாமல் சாப்பிடுவது தான் நல்லது. கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம், புண் இவற்றின் மேல் தடவினால் அவைகள் விரைவில் ஆறிவிடும். கொய்யா இலையிலுள்ள துவர்ப்பு சுவையை தரும் வேதிப் பொருட்கள் இருப்பதன் காரணமாகத்தான் பல்வலி, அல்சர் மற்றும் புண்கள் குணமாகின்றன.
கொய்யா இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் கஷாயம் இருமல், தொண்டை நோயினைக் குணப்படுத்துகிறது. கொய்யா இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் தேனீர் தூள் ஜப்பானில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இத்தேனீரானது, நாம் உணவு சாப்பிட்ட பின்பு பருகினால், நமது உடலில் சாப்பிட்ட பின்பு 30 நிமிடத்திற்கு பிறகு ஏற்படும் சர்க்கரை அளவைக் கட்டுப் படுத்துகிறது.