நரை முடி கருக்க சில சுலபமான வழிமுறைகளை நாம் கையாளலாம். தினசரி குளியலில் மருதோன்றி இலை, எள், அதிமதுரம், நெல்லிக்காய் அல்லது நெல்லிமுள்ளி இவற்றைப் பசும்பால் இட்டு அரைத்து (மைபோல) குழப்பி சிறிது சுட வைத்து எண்ணெய் தடவிய தலையில் சிறிது நேரம் அப்பி வைத்து விட்டு குளிக்கலாம். அல்லது கரிசலாங்கண்ணி இலையையும், நெல்லிமுள்ளி, அதிமதுரத்தையும் அரைத்துப் பூசிக் குளிக்கலாம்.
ஆனால், சளி பிடிக்காமல் பார்த்துக் கொள்வது அவசியம். இதன் காரணமாக இவ்வாறு பூச்சுப் பூசி குளித்த பின்பு வெயிலில் அலைவதை தவிர்க்க வேண்டும். குளிர் பானங்களை தவிர்க்க வேண்டும். மயிர்க் கால்களில் அரிப்பும், பொடுகும் உள்ளவர்கள் துர்வாதி தைலம், ஆரண்ய காதி தைலம், சதுஷீரி கேர தைலம், நீலிகரன காதி தைலம் போன்றவற்றில் ஏதாவது ஒன்றைத் தேய்த்துக் குளிக்க நன்மை ஏற்படும். இளநரை மறைந்து முடி கருகருவென வளர்வதற்கு மருந்துக் கடைகளில் வாசனைத் தைலங்கள் விற்கப்படுவதை வாங்க வேண்டாம். அதற்குப் பதிலாக பச்சிலை(மூலிகை)களால் தயாரிக்கப்பட்ட நீலிபிருங்காமலக தைலம், திரிபலா தைலம், சுபரி தைலம், பிருங்காமலக தைலம் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை தினம் தோறும் தலை முடிக்கு தடவி வரலாம்.
தலை முடி நரைப்பதற்கு நாம் உண்ணும் உணவில் போதுவான ஊட்டச் சத்துகள் குறைவாக காணப்பட்டாலோ, துவர்ப்பு, கசப்பு போன்ற சுவையுள்ள உணவுகளை உபயோகிக்காமல் தவிர்த்து விடுவதாலும் அமைகிறது. உடலில் ஊட்டச் சத்துக்கள் குறையக் குறைய உடலில் உள்ள பல்வேறு உறுப்புகள் பலவீனமாவதைப் போல மயிர்க் கால்களும் வலுவிழக்கின்றன. எனவே, உடல் பலம் அடையத் தக்க மருந்துகளையும் உட்கொள்ள வேண்டும். திரிபலா சூரணத்தை நெய் அல்லது தேனில் கலந்து தினசரி இரவு உட்கொண்டு வரலாம். சியவனபிராஷ், தாத்ரி ரசாயனம், அகஸ்திய ரசாயனம் போன்ற இரும்புச் சத்துள்ள மருந்துகளை மருத்துவரின் ஆலோசனைப் படி உட்கொள்ளலாம்.