மரம் வளர்ப்போம் மருந்துகள் பெறுவோம்

Spread the love

முன்பெல்லாம் வீட்டிற்கு முன்பக்கம் வேப்பமரம் பின்பக்கம் முருங்கை மரம், நெல்லிமரம், வாழைமரம், மாமரம் மற்றும் நாவல்மரம் என்று கண்டிப்பாக ஒரிரு மரங்களையாவது வளர்த்து வந்திருக்கிறோம். வருடங்கள் செல்ல இட வசதி, நேர வசதி இன்மையால் அடுக்கு மாடிக் குடியிருப்புக் கலாச்சாரம் காரணத்தினால் மரம், செடி, கொடிகளை வளர்ப்பதை தவிர்க்க வேண்டியதாகிவிட்டது. புதுப்புது வியாதிகள் மனிதனை ஒரு பக்கம் பாடாய்ப்படுத்துகிறது. மருத்துவச் செலவுகள் ஒரு பக்கம் அதிகரிப்பு, சுத்தமான உணவு, காய்கறிகள் கிடைப்பதில் சிரமம் என்று நீன்ட பட்டியலாக மனிதனை கவலை படச்செய்து வருகின்றது. இதற்கு தீர்வு என்ன? வீட்டைச் சுற்றி இடவசதி இருந்தால் காய்கறி, மூலிகை செடிகளை வளர்த்து பராமரித்து அது தரும் இலை, காய், பழம், பூக்கள் என நமது அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்கிறது. புத்தம் புதிதாக பறிக்கப்பட்ட காய்கறிகள் இயற்கை உரம் இட்டு வளர்க்கப்படும் பொழுது நச்சுத்தன்மை அதில் இருப்பதில்லை.

உண்ணும் உணவு மருந்தாகவும், உடலில் எற்கனவே நச்சுக்கள் நோய் எதிர்ப்புச் சக்தி காரணமாக, வலுவிழந்து காணப்பட்ட உடலை மீண்டும நோயின்றி பலமுள்ளதாக மாற்றலாம். மருத்துவச் செலவு ஒரு பக்கம் குறையும். மன மகிழ்ச்சியும் கிடைக்கும் என்பது தான் இதில் அடங்கியுள்ள முக்கியமான விஷயம். ஆகையால் உங்கள் வீட்டில் இடம் இருந்தால் அல்லது மாடித் தோட்டம் அமைக்க வழி இருந்தால் கீழே கூறப்பட்டுள்ள செடி, கொடி, மர வகைகள் வளர்த்து, பராமரித்து உணவுத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம்.

முருங்கை மரம்

இந்தியாவில் எங்கும் பொதுவாக பரவலாக முருங்கை மரத்தை நாம் காணலாம். வீட்டுத் தோட்டத்திலோ, வீட்டின் முன்பக்கம் அல்லது பின்பக்கத்திலோ நாம் வளர்க்கலாம். முருங்கை மரத்தின் இலையும், பூவும், காயும் தான் வீட்டுச் சமையலில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. முருங்கை மரத்தின் கிளைகள் கனமானவையாக பார்க்கத் தெரிந்தாலும் ஒரு ஆள் பளுவைத் தாங்க கூடியதாக இருக்காது. சடக் என்று உடைந்து விடும்.

அகத்திக் கீரையை விட முருங்கைக் கீரையில் அதிகமான வைட்டமின் ‘ஏ’ சத்து இருக்கிறது. முருங்கைக் கீரையை சமைத்துச் சாப்பிட்டு வர உடலுக்கு நல்ல பலம் கிடைக்கும். வைட்டமின் ‘ஏ’ சத்து இரத்தத்தில் குறைந்தால் கண் பார்வை மங்க ஆரம்பிக்கும். முருங்கக் கீரையில் அதிக அளவு வைட்டமின் ‘ஏ’ சத்து காணப்படுவதால், அடிக்கடி முருங்கைக் கீரையைச் சமைத்துச் சாப்பிட்டு வர கண் பார்வை தெளிவடையும்.

முருங்கைக் கீரையும், பருப்பும் சேர்த்துப் பொரியல் செய்து, அடுப்பிலிருந்து இறக்கும் முன்பு இரண்டு நாட்டுக் கோழி முட்டைகளை உடைத்து, இதில் விட்டு நன்றாக கிளறி இறக்கி சாதத்துடன் அல்லது தனியாகவோ சாப்பிட்டு வர, உடம்பில் புது ரத்தம் உற்பத்தியாகி உடல் வலிமை பெரும்.

முருங்கைப் பூவை தேவையான அளவு எடுத்து ஆய்ந்து கொண்ட பிறகு, கழுவி அதனுடன் துவரம் பருப்புச் சேர்த்துக் கூட்டு வைத்து தினசரி பகல் உணவில் (சாதம்) சேர்த்து சாப்பிட்டு வர புதிய இரத்தம் தோற்றுவிக்கும். தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வர வேண்டும்.

ஆண்களின் இல்லற சுகத்திற்கு அருமருந்து முருங்கைப் பூவும் பிஞ்சும். வாழ்க்கையில் இளம் வயதினருக்கு வெளியே சொல்ல முடியாத, இயலாத ஒரு சில பிரச்சனைகளில் செக்ஸும் ஒன்று. கணவன், மனைவி இருவரிடம் செக்ஸ் ஆர்வமின்மை, விந்து முந்தி விடுதல், நீண்ட நேர உடலுறவு கொள்ள இயலாமை, ஆண்குறி எழுச்சி அடையாது போதல் போன்றவை தம்பதியினரை கவலை கொள்ளச் செய்கின்றன.

ஆண்களுக்கு விந்து தண்ணீராக நீர்த்துக் காண்ப்படுவதை குணப்படுத்த முருங்கைப் பூ உதவுகிறது. முருங்கைப் பூவில் மிகச்சிறிய வெண்ணிறமான புழுக்கள் பதுங்கிக் காணப்படும். எனவே முருங்கைப் பூக்களைப் பயன்படுத்தும் முன்பு சுத்தமாகக் கவனமாக ஆய்ந்து எடுத்து கழுவி வைத்துக் கொள்வது நல்லது.

கைப்பிடி அளவு முருங்கைப் பூவை எடுத்து, நன்றாக ஆய்ந்து கழுவி எடுத்துக் கொள்ளவும். ஒரு டம்ளர் அளவு பசுவின் பாலை ஒரு பாத்திரத்தில் இட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். பால் கொதிக்கும் பொழுது பாலில் ஏற்கெனவே கழுவி வைத்திருக்கும் முருங்கைப் பூவை போட்டு மூடி தீயை குறைவாக வைத்து கால் மணி நேரம் சென்ற பின்பு இறக்கி வைக்கவும். இளஞ்சூடாக இருக்கும் பொழுதே பாலில் ஒரு தேக்கரண்டி அளவு கற்கண்டு தூளை போட்டுக் கலக்கி, படுக்கைக்குச் செல்வதற்கு கால் மணி நேரம் முன்பு இதை அருந்தி வர வேண்டும். இவ்வாறு தினசரி இரவு வேளை மட்டும் தொடர்ச்சியாக இருபத்தொரு நாட்கள் அருந்தி வர தாது விருத்தியாகும். தாது கெட்டிப்படும்.

முருங்கை மரத்தின் காணப்படும் குச்சி போன்ற இளங்காய்களைப் பறித்துக் கொள்ளுங்கள். அதனை நெருப்பின் மேல் காண்பித்து வதங்கச் செய்து கசக்கிப் பிழிய சாறு வரும். இச்சாற்றில் நான்கு தேக்கரண்டி அளவு எடுத்துக் கொண்டு, அரை டம்ளர் காய்ச்சிய பசுவின் பாலுடன் கலக்கிக் காலை ஒரு வேளை மட்டும் என்று தொடர்ச்சியாக இருபத்தொரு நாட்கள் அருந்தி வர தாது விருத்தியாகும். முருங்கைக் காய்களை சமையலில் சமைத்துச் சாப்பிலலாம். தாது கெட்டிப்படும். புது இரத்தம் உற்பத்தியாகும்.

அகத்தி மரம்

அகத்தி மரத்தில் சாதா அகத்தி, செவ்வகத்தி என்று இரு வகையுண்டு. வெற்றிலைப் பயிரிடும் தோட்டத்திற்கு அகத்தி மரம் தான் ஆதாரம். அகத்திக் கீரையை வாரம் ஒரு முறை மட்டும் சமைத்துச் சாப்பிடலாம். அகத்திக் கீரையில் வைட்டமின் ‘ஏ’ சத்து அதிகம் காணப்படுகிறது. மாலைக்கண் குணமாகும். கண் சார்ந்த எல்லாக் கோளாறுகளும் குணமாகும். எந்த ஒரு உணவுப் பொருளிலும் இல்லாத அளவு சுண்ணாம்புச் சத்து இந்த அகத்திக் கீரை ஒன்றில் தான் அதிகம் உள்ளது.

ஆயுர்வேதம்.காம்


Spread the love