தேவையான பொருட்கள்
முளைக் கீரை –1கட்டு
தேங்காய் –1/4மூடி
பச்சை மிளகாய்-3
சீரகம் –1டீஸ்பூன்
முந்திரி –10
சின்ன வெங்காயம்-10
இஞ்சி –1சிறு துண்டு
பூண்டு –2பல்
எண்ணெய் –3டீஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
செய்முறை
முளைக்கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை தோலுரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் சூடாக்கி அதில் சீரகம், இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், முந்திரிப்பருப்பு, தேங்காய் போட்டு வதக்கி ஆறியதும் மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மீதியுள்ள 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், கீரையைப் போட்டு வதக்கி சிறிது தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு வேக விடவும். பாதி வெந்தவுடன் அரைத்த தேங்காய்க் கலவையை ஊற்றி முழுவதும் வெந்தவுடன் இறக்கி சாதம், சப்பாத்தி, தோசை இவற்றுடன் பரிமாறவும்.
மஷ்ரூம் பெப்பர் ஃப்ரை
தேவையான பொருட்கள்
மஷ்ரூம் –200கிராம்
சின்ன வெங்காயம்-20
மிளகுத்தூள் –1டீஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
கறிவேப்பிலை -சிறிது
எண்ணெய் –3டீஸ்பூன்
சீரகம் –1/2டீஸ்பூன்
செய்முறை
சின்ன வெங்காயத்தை தோலுரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மஷ்ரூமை கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் சீரகம் போட்டு தாளித்து பின் கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் போட்டு வதக்கி, மஷ்ரூமையும் போட்டு வதக்கவும். சிறிது வதங்கியதும் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்கு வெந்ததும் கொத்தமல்லி தூவி பரிமாறவும். சப்பாத்தி, தோசையுடன் பரிமாறவும்.
பரங்கிக்காய் போண்டா
தேவையான பொருட்கள்
பரங்கிக்காய் –1கப்துருவியது
கடலைமாவு –2கப்
வெங்காயம் –1
பச்சை மிளகாய்-1
கொத்தமல்லி -சிறிது
கறிவேப்பிலை -சிறிது
உப்பு -தேவையான அளவு
தயிர் –1டே.ஸ்பூன்
எண்ணெய் -பொரிக்க
செய்முறை
பரங்கிக்காயை தோலை சீவி, நடுவில் உள்ளதை எடுத்து விட்டு துருவி 1 கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடலைமாவுடன் பரங்கிக்காய், வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு, தயிர் தண்ணீர் சேர்த்து சிறிது தளர்த்தியாகப் பிசைந்து, ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் போண்டாக்களைப் போட்டு பொரித்தெடுக்கவும். தக்காளி சாஸுடன் பரிமாறவும்.
வாழைப் பூ வடை
தேவையான பொருட்கள்
வாழைப் பூ –1
துவரம் பருப்பு –2கப்
பெரிய வெங்காயம்-1
மிளகாய் வற்றல்-4
சோம்பு –1டீஸ்பூன்
பூண்டு –2பல்
உப்பு -தேவையான அளவு
எண்ணெய் -பொரிக்க
செய்முறை
வாழைப் பூவை உரித்து நடுவில், உள்ள நரம்பை நீக்கவும். துவரம் பருப்பை 1/2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். ஒரு மிக்ஸியில் மிளகாய், சோம்பு, பூண்டு, உப்பு, துவரம் பருப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். கடைசியாக வாழைப் பூவையும் சேர்த்து ஒரு அடி அடிக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி இந்த மாவுடன் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். பின்னர் இதனை வடைகளாக தட்டி எண்ணெய்யில் போட்டு பொரித்தெடுக்கவும். (வாழைப்பூவை பொடிப் பொடியாக நறுக்கியும் சேர்க்கலாம்). சாதத்துடன் சேர்த்து பரிமாறவும்.
பீட்ரூட் வடை
தேவையான பொருட்கள்
பீட்ரூட் –1
துவரம் பருப்பு –1/4கப்
கடலைப் பருப்பு-1/2கப்
மிளகாய் வற்றல்-5
சோம்பு –1டீஸ்பூன்
சீரகம் –1/2டீஸ்பூன்
இஞ்சி –1இன்ச்
பூண்டு –4பல்
உப்பு -தேவையான அளவு
வெங்காயம் –1
கொத்தமல்லி -சிறிது
எண்ணெய் -பொரிக்க
செய்முறை
பீட்ரூட்டை தோல் சீவி துருவிக் கொள்ளவும். வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். துவரம் பருப்பு, கடலைப் பருப்பை 1 மணி நேரம் ஊற வைத்து, மிளகாய், சோம்பு, சீரகம், இஞ்சி, பூண்டு, உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். அரைத்த விழுதுடன் பீட்ரூட், வெங்காயம், கொத்தமல்லி சேர்த்துப் பிசைந்து வடைகளாக தட்டி எண்ணெய்யில் போட்டு பொரித்தெடுக்கவும். (மீடியம் தீயில் வைத்து பொரித்தெடுக்கவும்). சாதத்துடன் சேர்த்து பரிமாறவும்.
புடலங்காய் வடை
தேவையான பொருட்கள்
புடலங்காய் –1/4கிலோ
வெங்காயம் –1
கறிவேப்பிலை, கொத்தமல்லி-சிறிது
துவரம் பருப்பு –2கப்
மிளகாய் வற்றல்-5
சோம்பு –1டீஸ்பூன்
சீரகம் –1டீஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
மஞ்சள் பொடி –1டீஸ்பூன்
எண்ணெய் -பொரிக்க
செய்முறை
புடலங்காய், வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி முதலியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். புடலங்காயுடன் உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து பிசறி 10 நிமிடம் ஊற வைக்கவும். துவரம் பருப்பை 1/2 மணி நேரம் ஊற வைத்து மிளகாய், சோம்பு, சீரகம், உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதுடன் புடலங்காயை பிழிந்து சேர்த்துக் கொள்ளவும். பின்னர் அதனுடன் வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்துப் பிசைந்து வடைகளாக தட்டி எண்ணெயில் பொரித்தெடுத்து பரிமாறவும். சாதத்துடன் சேர்த்து பரிமாறவும்.
வாழைக்காய் கோளா உருண்டை
தேவையான பொருட்கள்
வாழைக்காய் –2
பொட்டுக்கடலை –1கப்
இஞ்சி –1/2இன்ச்
பூண்டு –2பல்
சோம்பு –1டீஸ்பூன்
மிளகு –1/4டீஸ்பூன்
மிளகாய் வற்றல்-4
தேங்காய் –2துண்டு
பட்டை –1/2இன்ச்
உப்பு -தேவையான அளவு
எண்ணெய் -பொரிக்க
செய்முறை
வாழைக்காயை தோல் சீவி ஆவியில் வைத்து (இட்லி பாத்திரத்தில்) வேக வைத்துக் கொள்ளவும். பின்னர் வாழைக்காயை கையால் மசிக்கவும். மிக்ஸியில் மிளகாய், தேங்காய், பட்டை, சோம்பு, மிளகு, இஞ்சி, பூண்டு, பொட்டுக்கடலை, உப்பு போட்டு நைசாக அரைத்துக் கொண்டு கடைசியாக மசித்த வாழைக்காயையும் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். இந்த மாவை உருண்டைகளாக உருட்டி எண்ணெய்யில் போட்டு பொரித்தெடுக்கவும். சாதத்துடன் சேர்த்து பரிமாறவும்.
கேரட் ரைஸ்
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி-1கப்
வெங்காயம் –2
கேரட் –2
பச்சை மிளகாய்-2
எலுமிச்சம் ஜுஸ்-2டீஸ்பூன்
எண்ணெய் -தேவையான அளவு
கடுகு -சிறிது
உளுத்தம் பருப்பு-சிறிது
கொத்தமல்லி -சிறிது
மிளகுத்தூள் –1/2டீஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
செய்முறை
பாஸ்மதி அரிசியை கழுவி 1/2 மணி நேரம் ஊற வைத்து உதிரியாக வேக வைத்துக் கொள்ளவும். கேரட்டை துருவிக் கொள்ளவும். வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பெரிய வாணலியில் எண்ணெய் சூடாக்கி, கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து பின் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு பொன்னிறமாக வதக்கி, கேரட்டைச் சேர்த்து உப்பு சேர்த்து வேக விடவும். கேரட் வெந்தவுடன் வேக வைத்த சாதத்தை சேர்த்து, சாதத்திற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து, மிளகுத்தூள் சேர்த்து நன்கு கிளறி கொத்தமல்லி தூவி வெங்காய தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.
பட்டாணி ரைஸ்
தேவையான பொருட்கள்
பொன்னி பச்சரிசி –1ஆழாக்கு
பச்சை பட்டாணி –250கிராம்
பச்சை மிளகாய் –5
கொத்தமல்லி –1/2கட்டு
சோம்பு –1டீஸ்பூன்
மிளகு –1/2டீஸ்பூன்
இஞ்சி -சிறிது
பூண்டு –5பல்
வெங்காயம் –1
தக்காளி –1
முந்திரி –10
பட்டை –1இன்ச்
கிராம்பு –1
பிரிஞ்சி இலை –1
நெய் –1டே.ஸ்பூன்
எண்ணெய் –1டே.ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
தண்ணீர் –21/4டம்ளர்
செய்முறை
அரிசியைக் கழுவி அரைமணி நேரம் ஊற வைக்கவும். பச்சை மிளகாய், கொத்தமல்லி, சோம்பு, மிளகு, இஞ்சி, பூண்டு முதலியவற்றை அரைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு குக்கரில் எண்ணெய், நெய் இரண்டையும் ஊற்றிக் காய வைத்து அதில் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை போட்டு தாளித்து பின் வெங்காயம், அரைத்த மசாலா போட்டு நன்கு வதக்கி கடைசியாக தக்காளி, அரிசி போட்டு வதக்கவும். பின்னர் தண்ணீர் ஊற்றி உப்பு, பட்டாணி போட்டு குக்கரை மூடி ஒரு சத்தம் விடவும். குக்கரைத் திறந்து சாதத்தை நன்கு கிளறி, முந்திரியை நெய்யில் வறுத்து சாதத்தின் மீது தூவி அலங்கரித்து வெங்காயப் பச்சடியுடன் பரிமாறவும்.
வெஜிடபிள் பிரியாணி
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி –1ஆழாக்கு
பீன்ஸ் –10
கேரட் –1
பட்டாணி –1/2கப்
பெரிய வெங்காயம்-1
பச்சை மிளகாய் –5
பட்டை –2இன்ச்
கிராம்பு –1
ஏலக்காய் –1
அன்னாசிப்பூ –1
சோம்பு –1டீஸ்பூன்
தேங்காய் –2கீற்று
புதினா –2டே.ஸ்பூன்
மிளகு –10
இஞ்சி –1இன்ச்
பூண்டு –5பல்
நெய் –2டே.ஸ்பூன்
எண்ணெய் –1டே.ஸ்பூன்
பிரிஞ்சி இலை –1
முந்திரி –10
செய்முறை
பச்சை மிளகாயிலிருந்து பூண்டு வரை உள்ள எல்லாப் பொருள்களையும் சிறிது எண்ணெயில் வதக்கி அரைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நீளமாக நறுக்கிக் கொள்ளவும். பீன்ஸ், கேரட்டை பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய், நெய் ஊற்றி சூடாக்கி அதில் முந்திரிப் பருப்பை வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின் பிரிஞ்சி இலை போட்டு தாளித்து, வெங்காயம், அரைத்த மசாலா போட்டு வதக்கி, பின் எல்லாக்காய்கறிகளையும் போட்டு வதக்கி, பின் அரிசியையும் போட்டு வதக்கி 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரில் ஒரு சத்தம் வைக்கவும். நெய்யில் வறுத்த முந்திரியை தூவி வெள்ளரிக்காய் தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.
வெந்தயக் கீரை புலவ்
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி –2கப்
வெண்ணெய் –1டே.ஸ்பூன்
தாளிக்க சோம்பு –1டீஸ்பூன்
சீரகம் –1/4டீஸ்பூன்
பிரிஞ்சி இலை –1
வெங்காயம் –1/2கப்
மஞ்சள் பொடி –1/2டீஸ்பூன்
தனியா பொடி –2டீஸ்பூன்
மிளகாய் பொடி –2டீஸ்பூன்
கரம் மசாலா –1டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட்-1டீஸ்பூன்
தக்காளி –1கப்
வெந்தயக்கீரை –2கப்
கொத்தமல்லி –1/2கப்
தண்ணீர் ரைஸ் குக்கர்1:3 குக்கர் 1:2
செய்முறை
ஒரு குக்கரில் எண்ணெய் சூடாக்கி அதில் சோம்பு, சீரகம், பிரிஞ்சி இலை போட்டு தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும். பின் மஞ்சள் பொடி, தனியா பொடி, மிளகாய் பொடி, கரம் மசாலா போட்டு வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும். பின் தக்காளி போட்டு வதக்கவும். பின் வெந்தயக் கீரை, கொத்தமல்லி போட்டு லேசாக வதக்கவும். ஒரு வாணலியில் வெண்ணெய் போட்டு உருக்கி அதில் சோம்பு, பிரிஞ்சி இலை போட்டு தாளித்து அரிசியைப் போட்டு வதக்கி குக்கரில் உள்ள மசாலாவுடன் கொட்டி தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு வேக விட வேண்டும். சுவையான வெந்தயக்கீரை புலவ் தயார். இறக்கி வெங்காய தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.