பசுமையான வாழ்வுக்கு பச்சைக் காய்கறிகள்.

Spread the love

உண்ணும் உணவில் காய்கறிகள் அதிகம் இருக்க வேண்டும் என்பதுதான் முன்னோர்கள் முதல் இப்போதைய டாக்டர்கள் வரை சொல்லும் அறிவுரை. காய்கறிகளிலிருந்து மனிதனுக்கு வந்து சேருகிற ஊட்டச் சத்துக்கள் அதிகம்.ஆரோக்கியம் காக்கவும் காய்கறிகள் தவறுவதில்லை.

அதிக நிறம் உள்ள காரட், பீட்ரூட் போன்றவற்றிலும், பச்சை நிற காய்கறிகள் மற்றும் கீரைகளிலும் அதிகளவு ஆன்டி ஆக்சிடென்ட் உள்ளது. இந்த ஆன்டி ஆக்சிடென்ட் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. இது புற்று நோயிலிருந்து நம்மை பாதுகாக்கின்றது. சிறுவயது முதல் யார் நிறைய காய்கறிகளை சாப்பிடுகிறார்களோ அவர்களுக்கு எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருக்கும்.  இதனால் எந்தவித நோய்களிலிருந்தும் இவர்கள் தப்பித்து விடுகிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். நோயை தடுக்கும் சக்தி காய்கறிகளில் அதிகம் இருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

எனவே, நீரிழிவு உள்ளவர்கள் மட்டுமல்லாமல் நாம் அனைவரும் ஒரு நாளுக்கு குறைந்தது அரை கிலோ அளவு எல்லாவிதமான காய்கறிகளையும் கண்டிப்பாக எடுக்க வேண்டும்.

காய்கறிகளில் நார்ச்சத்து அதிகளவில் இருப்பதால் அவை செரிப்பதற்கு சிறிது நேரம் ஆகும்.எனவே, இரத்தச் சர்க்கரை அளவு விரைவில் அதிகரிப்பதில்லை. இந்த நார்ச்சத்து வயிற்றை நிரப்பக் கூடியது. ஆகையால் அதிகளவு காய்கறிகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆனால், நம்மில் பலபேர் சாதம் சாப்பிடும் அளவிற்கு காய்கறிகள் சாப்பிடுவது இல்லை. முக்கியம் அசைவம் சாப்பிடுபவர்கள் காய்கறிகளை உணவில் சேர்ப்பது அரிதாக உள்ளது.

மாமிசம் சாப்பிடும் போது காய்கறிகளை சேர்த்து சாப்பிட்டால் கண்டிப்பாக கொழுப்பு (கொலஸ்ட்ரால் ) அளவு ஏறுவதைக் கட்டுப்படுத்த முடியும். மாமிச வகை உணவு சாப்பிடும்போது சாதம் அளவு கூடிப்போக அதிக வாய்ப்பு உள்ளது. காய்கறிகளை அதிக அளவில் சேர்க்கும்போது சாதம் அளவு குறையவும் அதிக வாய்ப்பு இருக்கிறது.

காய்கறி இல்லாத உணவை நாம் சாப்பிடுவது நல்லதல்ல என்பதை இங்கு தெளிவாக எழுதி இருக்கிறோம். நாம் சாப்பிடும்போது நம் தட்டில் அரைத்தட்டு காய்கறிகள்,  கால் தட்டு பருப்பு, கால் தட்டு சாதம், இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு சாப்பிடும்போது உடல் எடையை குறைக்கவும். சீராக வைக்கவும் முடிகிறது. இரத்தச் சர்க்கரை அளவையும், கொழுப்பின் (கொலஸ்ட்ரால்) அளவையும் சீராக வைக்க முடியும் இன்னும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

முடிந்தவரை காய்கறிகளை அதிகம் வேக வைக்காமல் சமைத்து சாப்பிட வேண்டும். காய்கறிகளின் நிறம் மாறக் கூடாது. காய்கறிகளை வெட்டுவதற்கு முன்னே கழுவ வேண்டும். வெட்டியபின் கழுவக் கூடாது. அதிக அளவு தண்ணீர் ஊற்றி வேக வைத்து பின்னர் அந்த தண்ணீரை கீழே ஊற்றக் கூடாது. இரண்டு அல்லது மூன்று காய் கலந்து சமைக்க வேண்டும்.

அதேபோல் ஒன்றிரண்டு காய்கறிகளை மட்டும் சமைத்து சாப்பிடக் கூடாது. அனைத்து வகையான காய்கறிகளையும் சாப்பிட வேண்டும். பச்சையாக சாப்பிடக் கூடிய காய்கறிகளை சாலட் போல செய்து சாப்பிடலாம். அதனுடன் கொஞ்சம் முளை கட்டிய சுண்டல், பழம், எலுமிச்சைப் பழம், தயிர் போன்று சேர்த்து சாப்பிடும்போது சக்தி அதிகம் கூடி ருசியாக இருக்கும்.

ஆரோக்கியான உணவை உட்கொள்வதென்றால் குறைவாக உண்பது என்று பொருளில்லை வெவ்வேறு வகையான காய்கறிகளை தயார் செய்து உணவின் சத்தினை அதிகரிக்கவும்,ஆரோக்கியமாக இ,ருக்கவும் நாம் எல்லோரும் முடிந்த அளவு தினமும் காய்கறி, பழங்களை அன்றாட உணவில் ஒரு பங்காக கண்டிப்பாக சேர்த்தால் ஆரோக்கியமாக வாழ முடியும்.


Spread the love