பச்சைப் பட்டாணி சமையல்

Spread the love

பச்சைப் பட்டாணி சூப்

தேவையானவை

பச்சைப் பட்டாணி             – 250 கிராம்

கார்ன் ப்ளார்                             – 2 டேபிள்ஸ்பூன்

வெண்ணெய்                       – 2 டேபிள்ஸ்பூன்

கொத்தமல்லி                    – சிறிது

உப்பு, மிளகுத்தூள்         – தேவையான அளவு

செய்முறை     

முதலில் பச்சைப் பட்டாணியை உப்பு சேர்த்து வேகவைத்து கொள்ள வேண்டும். வேக வைத்த பச்சைப் பட்டாணியை சிறிது தனியே எடுத்து வைத்துக் கொண்டு மீதியை நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும். இதனை கார்ன் ப்ளாருடன் நன்றாக கலந்து அடுப்பில் வைத்துக் கொதிக்க விட வேண்டும். இறக்கும் போது தனியே வைத்துள்ள பட்டாணியைச் சேர்க்கவும். கொத்துமல்லியைச் சிறு துண்டுகளாக்கி மேலே தூவி வெண்ணெய் சேர்த்து பரிமாறவும். பரிமாறும் போது சூப்பின் மேல் மிளகுத்தூள் தூவவும்.

பச்சைப் பட்டாணி சாலட்

தேவையானவை

பச்சைபட்டாணி                 – 1/4 கிலோ

தக்காளி                                – 2

துளசி இலைகள்                – 3 டீஸ்பூன்

சீஸ்                                       – 50 கிராம்

ட்ரஸ்ஸிங்

வினிகர்                                – 1 டேபிள் ஸ்பூன்

பூண்டு                                   – 1 பல்

ஆலிவ் ஆயில்                – 2 டீஸ்பூன்

உப்பு                                 – தேவையான அளவு

மிளகுத்தூள்                                   – 1 டீஸ்பூன்

செய்முறை

தக்காளியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பட்டாணியின் தோலை உரித்து விதைகளை எடுத்து தண்ணீரில் போட்டு சிறிது உப்பு சேர்த்து வேக விடவும். பூண்டை நசுக்கிக் கொள்ளவும். ட்ரஸ்ஸிங்கிற்கு கொடுத்துள்ள பொருட்களையெல்லாம் ஒன்றாகக் கலந்து பட்டாணி சூடாக இருக்கும் பொழுதே அதனுடன் சேர்த்துக் கலக்கவும். பின்னர் நறுக்கிய தக்காளி, பேசில் இலைகளை சாலடுடன் சேர்த்துக் கிளறவும். கடைசியாக சீஸை துருவி மேலாகத் தூவி அலங்கரிக்கவும்.

பச்சைப் பட்டாணி ரைஸ்

தேவையானவை

பொன்னி பச்சரிசி          – 1 ஆழாக்கு

பச்சை பட்டாணி            – 250 கிராம்

பச்சை மிளகாய்           – 5

கொத்தமல்லி             – 1/2 கட்டு

சோம்பு                                  – 1 டீஸ்பூன்

மிளகு                                           – 1/2 டீஸ்பூன்

இஞ்சி                                             – சிறிது

பூண்டு                                   – 5 பல்

வெங்காயம்                                    – 1

தக்காளி                                – 1

முந்திரி                                 – 10

பட்டை                                – 1 இன்ச்

கிராம்பு                                 – 1

பிரிஞ்சி இலை                   – 1

நெய்                         – 1 டேபிள் ஸ்பூன்

எண்ணெய்              – 1 டேபிள் ஸ்பூன்

உப்பு                      – தேவையான அளவு

தண்ணீர்             – 21/4 டம்ளர்

செய்முறை

அரிசியைக் கழுவி அரைமணி நேரம் ஊற வைக்கவும். பச்சை மிளகாய், கொத்தமல்லி, சோம்பு, மிளகு, இஞ்சி, பூண்டு முதலியவற்றை அரைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு குக்கரில் எண்ணெய், நெய் இரண்டையும் ஊற்றிக் காய வைத்து அதில் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை போட்டு தாளித்து பின் வெங்காயம், அரைத்த மசாலா போட்டு நன்கு வதக்கி கடைசியாக தக்காளி, அரிசி போட்டு வதக்கவும். பின்னர் தண்ணீர் ஊற்றி உப்பு, பட்டாணி போட்டு குக்கரை மூடி ஒரு சத்தம் விடவும். குக்கரைத் திறந்து சாதத்தை நன்கு கிளறி, முந்திரியை நெய்யில் வறுத்து சாதத்தின் மீது தூவி அலங்கரித்து வெங்காயப் பச்சடியுடன் பரிமாறவும்.

பச்சைப் பட்டாணி குருமா

தேவையானவை

பச்சைப் பட்டாணி                             – 1/2 கப்

எலுமிச்சம் பழச்சாறு                  – 3 டீஸ்பூன்

தேங்காய் துருவியது                    – 1/2 கப்

முந்திரிப் பருப்பு                                 – 20

பெரிய வெங்காயம் நறுக்கியது      – 1/2 கப்

முந்திரி, கிஸ்மிஸ் சேர்ந்து         – 2 டே. ஸ்பூன்

எண்ணெய், உப்பு, நெய்              – தேவையானது

கொத்தமல்லி                                    – சிறிது

அரைக்க தேவையானவை

பட்டை, கிராம்பு, ஏலக்காய்     – 6 (தலா 2)

பச்சை மிளகாய்                        – 6

சீரகம்                                                – 1/2 டீஸ்பூன்

கசகசா                                          – 2 டீஸ்பூன்

பெருஞ்சீரகம்                             – 1/2 டீஸ்பூன்

மல்லி                                           – 2 டீஸ்பூன்

சிவப்பு மிளகாய்              – 2

இஞ்சி, பூண்டு நறுக்கியது      – 2 டீஸ்பூன்

செய்முறை

காய்கறிகள் அனைத்தையும் ஒரே அளவாக நறுக்கவும். தேங்காயையும் 20 முந்திரியையும் அரைத்துக் கொள்ளவும். அரைக்க கொடுத்துள்ள மசாலா பொருட்களையும் அரைக்கவும். சிறிது நெய்யில் முந்திரிப் பருப்பையும், கிஸ்மிஸ்ஸையும் வறுத்துக் கொள்ளவும். ஒரு குக்கரில் எண்ணெய், நெய் சூடாக்கி அதில் பெரிய வெங்காயம் போட்டு வதக்கி பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை போட்டு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். காய்கறிகளை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு வதக்கவும். பின்னர் காய்கள் வேகும் அளவுக்கு நீர் ஊற்றி உப்பு சேர்த்து வேக வைக்கவும். வெந்ததும் திறந்து அரைத்த தேங்காய் முந்திரி விழுது சேர்த்து கொதிக்க விடவும். எலுமிச்சை சாற்றையும் சேர்க்கவும். வறுத்து வைத்துள்ள முந்திரி, கிஸ்மிஸ் போட்டு கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

ஆயுர்வேதம்.காம்


Spread the love