ஆப்பிள் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பழங்களில் ஒன்றாகும். இது எளிதில் கிடைக்கக்கூடியது. இதில் சிகப்பு நிறம், பச்சை நிறம் என பல வகைகள் உள்ளது. நாம் அனைவருமே சிவப்பு நிற ஆப்பிளையே அதிகளவில் வாங்கி ருசித்திருப்போம். இவற்றைக் காட்டிலும் பச்சை நிற ஆப்பிள் அதிக இனிப்பும், சற்று புளிப்புச் சுவையும் கொண்டது.
இதில் அதிகளவு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. சுவைப்பதற்கு இனிமையான ஆப்பிள் இயற்கை நமக்களித்த பழங்களில் ஒன்றாகும். இதன் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.
ஊட்டச்சத்துக்கள் விபரம்
பச்சை நிற ஆப்பிளில் புரதங்கள், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்துகள் என அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன.
மருத்துவ பயன்கள்
சரும புற்றுநோய்க்கு
பச்சை ஆப்பிளில் உள்ள வைட்டமின் சி கட்டற்ற தீவிர மூலக்கூறுகளால் சரும செல்களுக்கு எதிராக ஏற்படும் சேதத்தை தடுக்க பெரிதும் துணைபுரிகிறது. இதனால் சரும புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் குறைக்கப்படுகின்றது. இது வைட்டமின் குறைவால் ஏற்படும் நோய்களையும் தடுக்க உதவுகிறது.
பச்சை ஆப்பிள் பழச்சாற்றை குடிப்பதால் நுண்ணிய உணர்வு நிலை ஒவ்வாமை நோயான ஆஸ்துமா உண்டாகும் அபாயம் தடுக்கப்படுகிறது.
சரும ஆரோக்கியம் மேம்பட
தினமும் பச்சை ஆப்பிள் உண்பதால் சருமத்தின் அனைத்து அமைப்புகளும் மேம்பட்டு சரும சுருக்கங்கள் தவிர்க்கப்படுகிறது. இது சருமத்தின் நிறத்தை அதிகரிக்கிறது.
இது முகப்பருவிற்கு எதிரான சிகிச்சையில் அதிக பயனுள்ளதாகிறது. பருக்கள் வெடிப்பதை கட்டுப்படுத்தவும், பருக்கள் வருவதைத் தடுக்கவும் உதவுகிறது.
கண்களின் கீழ் உள்ள கருவளையம், ஆரோக்கியமான கூந்தல் மற்றும் முடி உதிர்தலை தடுக்க என பல்வேறு அழகு மேம்பாட்டிற்கு பெரிதும் துணைபுரிகிறது.
கல்லீரல் பாதுகாக்க
பச்சை ஆப்பிள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கிருமிகள் தாக்குவதைத் தடுக்கிறது. இது கல்லீரலில் நச்சுக்கள் தங்காமல் முறையாக செயல்பட உதவுகிறது. மேலும் உடலின் செரிமான திறனை வளப்படுத்துகிறது. இதில் உள்ள நார்ச்சத்து குடலியக்கத்தை சீராக்க பெரிதும் துணைபுரிகிறது.
உடல் எடை குறைக்க
உடல் எடையை குறைப்பவர்களுக்கு இது சிறந்ததாகும். பச்சை ஆப்பிளில் குறைந்த அளவில் உள்ள நார்ச்சத்து, கொழுப்பு, சர்க்கரை மற்றும் சோடியம் பசியைக் கட்டுப்படுத்துகிறது. இதனை தினமும் உணவில் சேர்த்து வர உடல் எடையை எளிதில் குறைக்கலாம்.
இது இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பை சேகரித்து பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை தடுக்கிறது. இதயத்திற்கு இரத்த ஓட்டம் சீராக செல்ல உதவுகிறது.
பச்சை ஆப்பிளில் கேக், மஃபின், ஆப்பிள் பை, மில்க்க்ஷேக், சல்சா போன்ற பல உணவு வகைகள் சமைத்து உண்ணலாம்.
பச்சை ஆப்பிள் தொக்கு
தேவையான பொருட்கள்
பச்சை ஆப்பிள் – ஒன்று
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
கடுகு – கால் டீஸ்பூன்
பெருங்காயப் பொடி – 1/8 டீஸ்பூன்
வறுத்த வெந்தய பொடி – 2 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 1/8 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு ஈர்க்கு
உப்பு தேவையான அளவு
செய்முறை
ஆப்பிளின் தோல் மற்றும் விதைகளை நீக்கி துருவவும். பின் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும். இதனுடன் துருவிய ஆப்பிள், மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். எண்ணெய் பிரிந்து வரும் சமயத்தில் வெந்தயத்தூள் சேர்க்கவும். இவற்றை நன்கு கிளறி ஆறியதும் காற்றுப்புகாத டப்பாவில் வைத்து பயன்படுத்தலாம். சுவையான பச்சை ஆப்பிள் தொக்கு தயார்.
பச்சை ஆப்பிள் அல்வா
தேவையான பொருட்கள்
பச்சை ஆப்பிள் – 2
முந்திரி பருப்பு – 5
பாதாம் பருப்பு – 5
உலர் திராட்சை – 5
நெய் – 3 தேக்கரண்டி
பால் – அரை கப்
சர்க்கரை – அரை கப்
குங்குமப்பூ, ஏலக்காய் தூள் – கால் தேக்கரண்டி
செய்முறை
முந்திரி, பாதாம் பருப்புகளை சிறு துண்டுகளாக நறுக்கி வறுக்கவும். ஆப்பிளை தோல் நீக்கி துருவி வைத்துக் கொள்ளவும். குங்குமப்பூவை பாலில் ஊற வைக்கவும்.
கடாயில் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி துருவிய ஆப்பிளை சேர்த்து சிறிது நேரம் மிதமான தீயில் வதக்கவும். ஆப்பிளில் உள்ள தண்ணீர் வற்றியதும் முந்திரி, பாதாம் மற்றும் திராட்சையை சேர்த்து வதக்கவும். பின் ஊறிய குங்குமப்பூவை சேர்த்து நன்கு கிளறவும்.
சிறிது நிமிடம் வதக்கியதும் சர்க்கரை மற்றும் பால் சேர்த்து மேலும் வேக விடவும். இதனை பதினைந்து நிமிடங்கள் கலக்கிக் கொண்டே இருக்கவும். பின் மீதமுள்ள நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறி திரண்டு வரும் சமயத்தில் அடுப்பை அணைத்து இறக்கவும். சுவையான பச்சை ஆப்பிள் அல்வா தயார்.
குறிப்பு
பச்சை ஆப்பிளை காலை மற்றும் மதிய உணவிற்கு இடைவெளி சாப்பிடலாம். இரவில் சாப்பிடுவதால் உடல் இயக்க செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படலாம். மேலும் வாயு தொல்லை உண்டாகலாம்.
ஆயுர்வேதம்.காம்