‘அவனுக்கு ரொம்ப கொழுப்பு.. அதான் அவன் அப்படி நடந்துக்கிறான்..’, ‘இவ்ளோ கொழுப்பு இருக்க கூடாதுப்பா..’ நடைமுறை வாழ்க்கையில் நாமும் இப்படி பலரை வசைபாடி இருப்போம். நம்மையும் பலர் வசைபாடி இருப்பார்கள். மனிதனுக்கு கொழுப்பு சத்து அவசியம் தேவை. அது நல்ல கொழுப்பாக இருக்க வேண்டும். கெட்ட கொழுப்பாக இருக்க கூடாது.
நல்ல கொழுப்பை ஹை டென்சிட்டி லிபோபுரோட்டீன் & ஹெச்.டி.எல் (High Density Lipoprotein – HDL) என்கிறார்கள். கெட்ட கொழுப்பை லோ டென்சிட்டி லிபோபுரோட்டின் & எல்.டி.எல் (Low Density Lipoprotein – LDL) என்கிறார்கள். ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு 200 மில்லி கிராமுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இதில் 20 சதவீதத்திலிருந்து 25 சதவீதம்வரை நல்ல கொழுப்பாக (ஹெச்.டி.எல்.) அமைய வேண்டும். அதாவது 40ல் இருந்து -50 மில்லி கிராம் அளவுக்காவது நல்ல கொழுப்பு இருக்க வேண்டும். ஹெச்.டி.எல். கொழுப்பு 35 மில்லி கிராமுக்குக் கீழே இருப்பது உடலுக்கு நல்லதல்ல.
நல்ல கொழுப்பை அதிகரிக்க வேண்டுமென்றால் முடிந்தவரை மாமிச உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். முட்டையின் மஞ்சள் கரு, கோழிக்கறியின் தோல், மூளை, ஈரல் ஆகியவற்றுக்கு நோ சொல்ல வேண்டும். நல்ல கொழுப்பு ரத்தக் குழாய்களில் ஆங்காங்கே படிந்த கெட்ட கொழுப்பை (எல்.டி.எல்.) கல்லீரலுக்கு இழுத்து வந்து பித்த நீர் வழியாக வெளியேற்றி உடலுக்கு நன்மை செய்கிறது.
இயல்பாகவே பெண்களுக்கு மாதவிடாய் நிற்பதற்கு முன்பு அவர்களுடைய உடலில் இருக்கும் ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் காரணமாக, சரியான விகிதத்தில் ஹெச்.டி.எல். அமைவதால் பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நாம் ‘நல்ல’ கொழுப்பு பிடித்தவராக இருந்தால் தப்பில்லை. மற்றவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லிவிட்டு போகட்டும்.