இனிப்பின் துன்பங்கள் இனிப்பின் கசப்புகள்

Spread the love

அறுசுவையில் அநேகருக்கு பிடித்தது இனிப்புச்சுவை. நாம் பிறந்ததிலிருந்தே இனிப்பு உணவுகளுடனே வளர்கிறோம். குழந்தை பிறந்த உடனே அதற்கு, சர்க்கரை கலந்த நீரை கொடுப்பது வழக்கம். இந்த வழக்கம் தற்போது இல்லை. இனிப்பில்லாமல் பண்டிகை இல்லை. ஏன் எல்லாவித சுபகாரியங்களிலும் இனிப்பில்லாமல், வேறு இல்லை. குழந்தையை, மனைவியை நாம் இனிப்பு பெயர்களையே சொல்லி கொஞ்சுகிறோம் – உதாரணம் – லட்டு, சர்க்கரை கட்டி, போன்றவை. வட இந்தியர்கள், தென்னிந்தியர்களைவிட அதிகமாக இனிப்பு பட்சணங்களை உட்கொள்கிறார்கள். அவர்களின் காலை உணவே ‘ஜிலேபி’ தான். தென்னிந்தியர்கள் பெரும்பாலும் காலை உணவாக, இனிப்பை விட, இட்லியை விரும்புகின்றனர். ஆனால் மற்ற சமயங்களில் இனிப்பை தாராளமாக சாப்பிடுகிறார்கள். தென்னிந்திய இனிப்புகள் பெரும்பாலும் வெல்லத்தால் செய்யப்படுகின்றன. எல்லாவித நல்ல விஷயங்களும் – பரீட்சையில் வெற்றி, வேலையில் பிரமோஷன், புது வண்டி வாங்குவது – இனிப்பை விநியோகித்து கொண்டாடப்படுகின்றன.

உண்மையில் இனிப்புக்கு இன்றியமையாத சர்க்கரை, கொண்டாடப்பட வேண்டிய உணவில்லை. இதனால் வரும் கெடுதிகள் தான் அதிகம்.

அதிக சர்க்கரை, (அல்வா, ஜிலேபி, லட்டு – அதிமதுர பட்சணங்கள்) ஜீரண சக்தியை மந்தப்படுத்தும். சத்துக்கள் உடலால் கிரகிக்க முடியாமல் செய்து விடும்.

நமது வயிற்றில் எண்ணற்ற பாக்டீரியாக்கள் உள்ளன. இவற்றில் நல்ல பாக்டீரியாக்களும் உள்ளன. இவை உணவை சக்தியாக மாற்ற உதவுவது மட்டுமில்லாமல், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகின்றன. நல்ல பாக்டீரியாவுடன், தீய பாக்டீரியாக்களும் உள்ளன. இவை சர்க்கரை விரும்பிகள். சர்க்கரை இருந்தால் போதும் – இவை நன்கு வளர்ந்து, பரவி, கெடுதல்களை தோற்றுவிக்கும். “பூஞ்சனம்” (Yeast) சர்க்கரையால் உயிர் வளர்க்கும் நுண்ணுயிர். இந்த நுண்ணுயிர் பெண்களின் பிறப்புறுப்பில் “கான்டிடா அல்பிகான்ஸ்” என்ற தொற்று நோயை உண்டாக்கும். தவிர ‘த்ரஷ்’ என்றும் கூறப்படும் சரும வியாதி மற்ற ஈர பிரதேசங்களில் (வாய், தோல் மடிப்புகள் போன்றவை) உண்டாகும்.

மலச்சிக்கல், வயிறு உப்புசம், தோல் உயிரின்றி சொர சொரப்பாக காணுதல், நாக்கில் வெள்ளைப் படிவது – இவையெல்லாம் நாம் அதிகமாக உட்கொள்ளும் சர்க்கரையால் தான் உண்டாகின்றன.

ஒரு தடவை இனிப்புக்கு அடிமையாகிவிட்டால், போதை மருந்து போல், இனிப்புகளை விடாமல் உண்ணும் “வெறி” ஏற்பட்டு விடும். இது எப்படி ஏற்படும்? இரண்டு காரணங்களால். தீய பேக்டீரியாக்கள், பூஞ்சனங்கள் சர்க்கரையை உணவாக உட்கொண்டு விட்டு மேலும் “கொண்டு வா சர்க்கரை” எனும். சர்க்கரை அதிகமாக சாப்பிட்டால் அதை சமாளிக்க கணையம் அதிக இன்சுலினை அனுப்பும். கிரகிக்கப்படாத சர்க்கரையை, இன்சுலின், கொழுப்பாக மாற்றி உடலில் சேகரித்து வைக்கும் படி செய்யும். இதனால் ரத்த சர்க்கரை குறைந்து விடும். உடல் களைப்படைந்து பரிதவிக்கும். உடனே இனிப்பு வேண்டும் என்ற உணர்வு அதிகரிக்கும்.


Spread the love
error: Content is protected !!