“மருத்துவர்கள் இருவகைப்படுவர்:
சில மருத்துவர்கள் நோயாளியின் நோயைப் போக்கி அவரின் உயிரைக் காப்பார். சிலர் நோயாளிகளின் உயிரைக் கொன்று நோய்களை காப்பார்!” – சரக சம்ஹிதை
டாக்டர்களுக்கு சமூகத்தில் என்றுமே ஒரு தனி மதிப்பு உண்டு. உயிரைக் காப்பாற்றும் கௌரவமான, புண்ணியமான தொழில் என்பதால் உலகம் முழுவதும் டாக்டர்களுக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. அதே சமயம் இந்த சமூக மரியாதையை பயன்படுத்தி, போலி டாக்டர்களும் தலை எடுக்கின்றனர்.
சமீபத்தில் இந்திய மெடிகல் கவுன்சிலின் (Indian Medical Council) உயர் அதிகாரி ஒருவர் ஊழல் செய்வதற்காக கைது செய்யப்பட்டார். பல கோடி ரூபாய்களை அவர் ஊழலால் சம்பாதித்து கண்டுபிடிக்கப்பட்டது. மத்திய அரசு, மெடிகல் கவுன்சிலை கலைத்துவிட்டு, 6 பேர் குழுவை நியமித்ததாக பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றன. போலி டாக்டர்களைப் பற்றி அடிக்கடி கேள்விப்படுகிறோம். ஆனால் ‘அசல்’ டாக்டர்கள் இந்த அளவுக்கு ஊழல் செய்வது அபூர்வமாகத்தான் தோன்றுகிறது.
பலஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட சரகசம்ஹிதையில் இந்த போலி மருத்துவர் பிரச்சனை விவாதிக்கப்படுகிறது. அந்த காலத்திலேயே இந்த பிரச்சனை இருந்திருக்கிறது என்பது இதனால் தெரிய வருகிறது.
சரகசம்ஹிதையிலிருந்து ஆத்ரேயர் வினவுகிறார் –
அக்னிவேசா! சில மருத்துவர் நோயாளியின் நோய்களை அழித்து அவர் தம் உயிர்களைக் காப்பவர், சிலர் நோயாளிகளின் உயிர்களைக்கொன்று நோய்களைக் காப்பவர் என்று மருத்துவர் இரண்டு வகைப்படுவர்.
இவ்வாறு கூறும் ஆத்ரேயரைப் பார்த்து “அய்யா, அத்தகைய மருத்துவர்களை நாம் எவ்வாறு அறிய முடியும்?” என்று வினவினார் அக்னிவேசர். அக்னிவேசரின் வினாவிற்கு ஆத்ரேயர் பின்வருமாறு பதிலளித்தார்.
நோயை அழித்து உயிர் காப்பவர்
நல்ல பாரம்பரியம் உள்ளவர்
படிப்பறிவு, நூலறிவு, செயலறிவு உள்ளவர்
தூய்மையும் கைராசியும் உடையவர்
புலனடக்கம் உடையவர்
எல்லா மருத்துவ கருவிகளையும் உடையவர்
தக்க நேரத்தில் என்ன செய்ய வேண்டுமென்பதை நன்கு உணர்ந்தவர்
ஆயுர்வேதத்தை நன்கு அறிந்தவர்
மூன்று தோஷங்களைப் பற்றி நன்கு தெரிந்தவர்
எல்லாவித மூலிகைகள், மருந்துகள், வியாதிகள், அறிகுறிகள், சிகிச்சை முறைகள் முதலியனவற்றை நன்கு அறிந்தவர்.
முப்பத்து மூன்று வகையான வேர்கள், பழங்கள், நான்கு வகையான எண்ணெய்கள், ஐந்து வகையான உப்புகள், எட்டு வகை சிறுநீர்கள், எட்டு வகை பால், முக்கியமான மரங்கள், சிரோவிரேசனம், ஸ்நேஹம், ஸ்வேதம், வமனம், விரேசனம் ஆகிய ஐந்து வகையான செயல்கள், 28 வகையான கஞ்சிகள், 32 வகையான சூரணங்கள், களிம்புகள், 600 வகையான பேதி மருந்துகள், 500 வகையான கஷாயங்கள், உடல் ஆரோக்கியத்துக்கான உணவு, பானம், கட்டுப்பாடு, இருப்பிடம், சுற்றுதல், படுக்கை, இருக்கை, அளவு, பொருட்கள், மை வகைகள், புகைபிடித்தல், மூக்கு மருந்து இடுதல் (நஸ்யம்), எண்ணெய்க்குளி, உடல்பிடித்து விடுதல், வேகங்களை அடக்குதல், அடக்காமை, உடற்பயிற்சி, புலன் பொருள் பொருத்தம், பொருட்களின் ஆய்வு, நோய் சிகிச்சை முதலிய எல்லாவகைச் செயல்களிலும் பேராற்றல் பொருந்தியவர்.
மேலே கூறப்பட்ட பண்புகளுக்கு நேர்முரணான பண்புகள் கொண்டவர் உயிரை அழித்து நோயைக் காக்கும் மருத்துவர் ஆவார். அவர்கள் மருத்துவவேடம்பூண்டு திரிபவர். மக்களுக்கு முள் போன்றவர். சமுதாயத்திற்குத் தீமையையே செய்பவர். மன்னர்களின் கவனக்குறைவால் நாட்டில் நடமாடி வருபவர்கள். மிகக்கொடியவர்கள்.
உயிரை அழித்து நோய் காப்பவர்
இத்தகைய போலி மருத்துவர்களின் சிறப்பியல்களை இனிக் காண்போம். அவர்கள் தன் வாழ்க்கைக்கு வழியைத் தேடியவாறு மருத்துவ வேடம் பூண்டு தெருக்களில் சுற்றிவருவார்கள். எவரேனும் நோயுற்றுள்ளதாகக் கேட்டவுடன் அவர்கள் அவனிருப்பிடத்தைச் சூழ்ந்து தன்னைப்பற்றிய புகழுரைகளை அவன் காதில் விழுமாறு உரக்கப் பேசுவார்கள். நோயாளியை வேறு மருத்துவர் கவனித்து வந்தால் அவரைப்பற்றி குற்றங்குறைகளை அடிக்கடி கூறுவர்.
தன்னுடைய போலி நடத்தையால் போலிப்பேச்சால் நோயாளியின் நண்பர்களைக் கவர்வார். அவர்களை முகத்துக்கு முன்பு புகழ்ச்சியாகப் பேசி பின்பு கோளுரைப்பர் தாம் செய்த தொழிலுக்கு ஊதியத்தை விரும்பாதவர் போல் பெயரளவுக்கு ஏதாவது கொடுத்தால் போதும் என்றவாறு குறிப்பிடுவர். தம் முயற்சியில் வெற்றிகண்டு நோயாளிக்கு மருத்துவம் செய்யத் தொடங்கியவுடன் தம்மைத்தாமே பெருமையாக இறுமாப்புடன் பார்த்துக் கொள்வர். நோயாளியைக் கவனமாகப் பார்ப்பது போல் தன் அறியாமையை மறைக்க நடிப்பார்கள். நோயின் காரணத்தைக் காண முடியாமல் நோய் தீர்க்க முடியாதபோது நோயாளி மருந்தைச் சரியாக ஏற்கவில்லை நல்ல கவனிப்பு இல்லை தன்னைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவில்லை என்பது போன்ற நொண்டிச் சாக்குகளைக் கூறுவர். நோய்முற்றி நோயாளி இறந்துவிட்டால் அந்த இடத்தைவிட்டு எவர் கண்ணிலும் படாமல் வேறோர் இடத்திற்கு ஓடிவிடுவர். சாதாரண மக்கள் கூட்டத்தில் தம்மைப்பற்றி தம் திறமையைப் பற்றி ஆற்றலைப் பற்றி போலியாகப் பேசி வருவர். தைரியமுள்ளவனைப்பற்றி தைரியம் இழந்தவன் என்றும் கூறுவர். வழி நடப்பவர் காட்டு வழியைத் தவிர்ப்பது போன்று புலவர்களின் சேர்க்கையை விரும்பமாட்டார்கள். தொலைவிலேயே அதனைத் தவிர்த்து விடுவர். ஏதாவது தாம் அறிந்த அரிதான ஒரு சிகிச்சை முறையைத் தக்க நேரத்திலும் நேரமில்லாத நேரத்திலும் அடிக்கடி கூறியவாறு இருப்பர். சிறந்த மருத்துவருடன் உரையாட, நூலைப்பற்றிய ஆய்வுரைகள் நடத்த விரும்பமாட்டார்கள். எவரேனும் நூல்களைப் பற்றி உரையாட வந்த போதும் யமனைக் கண்டவர் போல் அஞ்சி ஒளிவர். இவர்களுக்கு ஆசிரியரோ, சீடர்களோ, உடன் பயின்றவர்களோ, ஒரு சாலை மாணாக்கரோ, உடன் விவாதம் செய்தவரோ உள்ளார் என எவருக்கும் தெரியாது.
வேட்டைக்காரன் பறவைகளை வலையில் வீழ்த்த காட்டில் மறைந்து வாழ்வது போல இவர்கள் மருத்துவ உருவத்தில் நோயாளியைத் தம் வலையில் வீழ்த்தச் சுற்றிவருகின்றனர். நூலறிவு, பட்டறிவு, நேரம், அளவு, இடம் ஆகியவைபற்றிய அறிவு ஏதுமின்றி உயிர் பரிக்கும் யமனின் தூதுவனாக மருத்துவ வேடம் பூண்டு வரும் இவர்களைக் கண்டவுடன் கைவிட்டுவிட வேண்டும்.
வயிற்றுப்பிழைப்புத் தேடி மருத்துவ வேடம் பூண்டு திரியும் இந்தத் துஷ்டர்களை அறிஞர்களாகிய நோயாளிகள் தொலைவிலேயே கைவிட்டுவிட வேண்டும். காற்றைப் புசிக்கும் ஸர்ப்பத்தைப் போன்றவர்கள் இவர்கள். பாம்பின் காற்று உடலில் பட்டால் நஞ்சு தோன்றி உயிரிழக்க நேரிடும். அது போல் அருகிலுள்ள இவர்களுடைய பார்வை பட்டவுடன் நோயாளிக்குத் தீமை ஏற்படும்.
நூலறிவு பெற்று ஆயுர்வேத சாத்திரத்தை முழுவதும் உணர்ந்து நன்மனம் படைத்து மருத்துவத்துறையில் வல்லமை பெற்று கைராசியுள்ள புலனடக்கம் வாய்ந்த நன் மருத்துவர்களுக்கு வணக்கம்.
முடிவுரை
இந்த அத்தியாயத்தில் ஸூத்ரஸ்தானத்தின் முழுச்சுருக்கம், இருவகை மருத்துவர்கள், உயிர்களுக்குப் பத்துவிதமான இருப்பிடங்கள் ஆகியவை விளக்கப்பட்டன.
அக்னிவேசரால் இயற்றப்பட்டு சரகமாமுனிவரால் பரிசோதிக்கப்பட்ட சரகஸம்ஹிதையின் ஸூத்ரஸ்தானத்தில் தசப்ராணாயதநீயம்.