பல சமயங்களில் தெருக்களில் செல்லும் பொழுது வேகமாகச் செல்வது போல காட்சியளிக்கும். ஆம்புலன்ஸ் வாகனங்கள் உண்மையிலேயே வேகமாகத் தான் செல்கின்றனவா? அவர்களால் உண்மையிலேயே பாதிக்கப்பட்ட உயிர்களை காப்பாற்ற முடிகிறதா? என்றால் சந்தேகம் தான் என்று தான் பதிலளிக்க வேண்டும்.
தாறுமாறான வாகனங்கள், அளவிற்கு அதிகமான போக்குவரத்து நெரிசல், ஒழுங்கற்ற வாகன ஓட்டுனர்கள், நெடு நேரம் காக்க வைக்கும் சிக்னல்கள், சிவப்பு விளக்கு எரிந்து கொண்டிருக்கும் போதே சட்டை செய்யாமல் விரைந்து செல்லும் அரசுப் பேருந்துகள், செய்வது அறியாது விழித்து நிற்கும் காவலர்கள் மத்தியில் இந்த ஆம்புலன்ஸ்கள் தங்கள் பணிகளை செய்யத்தான் வேண்டியுள்ளது.
சாதாரண அவசரத் தேவை தவிர விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்களின் நிலை மிகவும் அவசரமானது. இதனைத் தான் சென்னை மியாட் மருத்துவமனை தலைவர் மருத்துவர் பிவிஏ மோகன் தாஸ் சமீபத்தில் சிறப்பாக விளக்கினார். அவர் அந்த விபத்து நடந்து ஒரு மணி நேரத்திற்குள் பாதிக்கப்பட்ட உயிரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் செய்வது மிக முக்கியம் என்றும் விபத்து நடந்த ஒரு மணி நேரத்திற்குள் அவர்களை தக்க மருத்தவமனையில் அனுமதித்தால் எப்பேர்ப்பட்ட விபத்துகளானாலும் நம்மால் அந்த உயிரைக் காப்பாற்ற முடியும் என்று தெளிவுபடுத்தினார். விபத்து நடந்த ஒரு மணி நேரத்திற்குள் நாம் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக் கூடாது போன்றவற்றை மக்கள் நலனுக்காக நோய்தாலின் ஃபோர்டிஸ் மருத்துவமனை மருத்துவர்களும் விளக்கினர். இந்த ஒரு மணி நேரமே ‘பொன்னான நேரம்’ ஆகும்.
விபத்துக்கள் என்பன இப்பொழுதெல்லாம் எங்கும் நிறைந்துள்ளன உலகம் முன்னேற்றம் அடைய அடைய விபத்துக்களும் பல விதமாக இருப்பினும் விபத்துக்களின் போது அருகில் இருப்பவர்கள் பிடித்தவர்களாகவும் விபரம் தெரிந்தவர்களாகவும் விழிப்புணர்வுடன் செயல்படுபவர்களாக அமைந்தால் அது விபத்தில் சிக்கியவர்களின் அதிர்ஷ்டம்.
எத்தகைய விபத்தாக இருந்தாலும் முதல் ஒரு மணி நேரத்திற்குள் – பொன்னான நேரம், அவர்களை தக்க மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். காற்றோட்டமான இடங்களில் கிடத்தி அவர்கள் உடையைத் தளர்த்தி எளிதாக சுவாசிக்கும் படி செய்து தக்க வசதிகள் உள்ள மருத்துவமனையில் முதல் ஒரு மணி நேரத்திற்குள் சேர்த்திட வேண்டும். அப்படிச் செய்தோமானால் நம்மாலும் பல உயிர்களை காப்பாற்ற முடியும்.
என்ன செய்யலாம்?
பல சமயங்களில் விபத்து நடந்த இடங்களில் உள்ளவர்கள் விபத்து நடந்தவுடன் தப்பித்தோம், பிழைத்தோம் என்று இடத்தைக் காலி செய்து விடுவார்கள் ஏனெனில் விபத்து நடந்தவுடன் விபத்தில் மாட்டி கொள்பவர்களை காப்பாற்றப் போனால் மாட்டிக் கொள்வோம் என்ற உணர்வே காரணம். இது சில வருடங்களுக்கு முன்னர் இருந்த நிலை ஆனால் சமீப காலமாக இது உண்மை அல்ல. முன்னர் விபத்தில் சிக்கியவர்களை அரசு மருத்துவமனையில் மட்டுமே சேர்க்க முடியும். ஆனால் இப்பொழுது அப்படி அல்ல எல்லா மருத்துவமனைகளிலும் ஏற்றுக் கொள்கிறார்கள். மருத்துவமனையில் சேர்ப்பதால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை தைரியமாக கவலையில்லாமல் (சாட்சி சொல்ல வேண்டுமே) உதவிக் கரம் நீட்டலாம்.
- ஒரு மரக்கட்டையையோ அல்லது சமமான மர போர்டில் கிடத்தலாம். (தூக்குவதற்கு ஏதுவாக)
- உடைகளை தளர்த்தி எளிதாக சுவாசிக்க உதவலாம்.
- இரத்தம் வெளியேறுமானால் கட்டுப்போட்டு இரத்தம் வெளியேறாமல் தடுக்கலாம்.
- இரத்தப் போக்கை தடுக்க முடியாவிட்டால் ஒரு சுத்தமான துணியால் சுற்றலாம்.
- ஒரு மணி நேரத்திற்குள் தேவையான வசதிகள் நிறைந்த மருத்துவமனையில் சேர்க்கலாம்.
- இவ்வாறு நம்மால் முடிந்ததை செய்த பின் மருத்துவர்கள் அவர்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள்.