கேப்பையிலே நெய் வழியுதுன்னா…

Spread the love

அதை சாப்பிடாத.. இதை சாப்பிடாத என்று பெரிசுகள் அட்வைசாக அள்ளி விடுவார்கள். நம்மில் பலர் கேப்பையிலே (கேழ்வரகில்) நெய் வழிகிறதென்று அவர்கள் சொல்வதை கேட்டுக் கொண்டும் நம்பிக் கொண்டும்தான் இருக்கிறோம்.

தர்பூசணி சாப்பிடுறியா… அய்யய்யோ தடுமம் பிடிச்சுடும். அதைச் சாப்பிடாதே!

கர்ப்பிணி பெண்ணா இருந்துட்டு… பப்பாளி கேட்கிறியே!

தாய்ப்பால் நல்லா சுரக்க, பூண்டை அதிகமாக சாப்பாட்டில சேர்த்துக்கோ!

இப்படி உண்மையே இல்லாத பல விஷயங்கள், பல வீடுகளில், பல குடும்பங்களில் பேசக் கேட்டிருக்கலாம். உண்மையிலேயே இதுபோன்ற காது வழிச்செய்திகள், உணவு நிபுணர்களால் உண்மையில்லை என்றே நிரூபிக்கப்பட்டுள்ளன. பின்னர் எப்படி இதுபோன்ற செய்திகள் பரவுகின்றன என்பது அவர்களால் மட்டுமின்றி, தொடரும் பாரம்பரிய உறவுகளாலும் கூட கண்டுபிடிக்க முடியவில்லை என்பதுதான் நிஜம்.

இயற்கை நமக்கு அளித்த வரப்பிரசாத உணவுகள் பல உள்ளன. ஆனால், அவற்றை எல்லாம் சூடு, வாயு, பித்தம், சளி என்று பல்வேறு காரணங்களை கொண்டு நிராகரித்து வருகிறோம்.

பல வீடுகளில் குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் நாவல்பழ கொட்டைகளை சேகரித்து வெயிலில் காயவைத்து பொடி செய்து, பாலில் கலந்து குடிப்பார்கள். இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையுமாம். இப்படியும் ஒரு நம்பிக்கை நிலவுகிறது. ஆனால், உண்மையிலேயே இப்படி நாவல்பழ கொட்டையினால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையுமா என்றால், இல்லை என்றுதான் டாக்டர்களிடம் இருந்து பதில் வருகிறது.

இப்படி உண்மைகளை அறியாமல் மக்கள் இருப்பதால், அவர்களின் உடலுக்குதான் உரிய விட்டமின்கள், சத்துக்கள் கிடைக்காமல் போகின்றன என்கின்றனர் மருத்துவர்கள். இதேபோல் மக்களால் கூறப்படும் சில தவறான கருத்துக்களும், உண்மை நிலையையும் பற்றி இங்கு காணலாம்.

1.உடம்பு இளைக்க காலை உணவை தவிர்க்க வேண்டும்.

காலை உணவை தவிர்ப்பதால் உடலுக்கு பாதிப்புதான் ஏற்படும். இரவு உணவுக்கு பின்னர் காலை உணவை சாப்பிடுவதற்கு சுமார் 8 முதல் 10 மணி நேரம் வரை இடைவெளி உள்ளது. மேலும், இரவு உணவானது உடல் உறுப்புகளின் பழுது பார்க்கும் பணிக்கான சக்திக்கே சென்று விடுகின்றன. இதுபோன்ற நிலையில், காலை உணவு என்பது நமது அன்றாட சக்திக்கு மிக முக்கியமான ஒன்றாகும். அலுவலகத்துக்கு செல்பவர்கள், ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்க்க வேண்டிய நிலையில் இருப்பவர்கள் மந்தமாக இருக்கும் என்று கருதினால் சக்தி மிகுந்த பாலாடை, வெண்ணை, ஜாம் போன்றவற்றை தவிர்க்கலாம்.

2. சாதாரண பிரெட்டைவிட, அதை டோஸ்ட் செய்து சாப்பிட்டால், குறைவான கலோரியை பெறலாம்.

ரொட்டியானது வறுக்கப்படும்போது, அதில் உள்ள தண்ணீர் சத்து வற்றி, மொறுப்மொறுப்பாக மட்டுமே மாறுகிறது. கலோரியில் எந்தவித மாற்றமும் ஏற்படாது.

3. உடல் எடை குறைய காலையில் தேன் சாப்பிட வேண்டும்.

100 கிராம் எடைக் கொண்ட ஒரு வாழைப்பழம், 116 கலோரி வெப்பத்தை தருகிறது. ஆனால், 100 கிராம் தேனானது, 319 கலோரி வெப்பத்தை தருகிறது. பின்னர் எப்படி அது உடல் எடையை குறைக்க உதவும்?

4. குழந்தைகளுக்கு பாலை குடிக்க தரவேண்டியது மிக அவசியம்.

சரிவிகித உணவு உட்கொள்ளும் குழந்தைகளுக்கு பால் அவசியமானது இல்லை. ஏனெனில், பாலில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து மிகக்குறைவாகவே உள்ளது. இப்படிப்பட்ட நிலையில், அதை மட்டுமே குழந்தைகளுக்கு கொடுத்தால், அக்குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும். மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, தாதுக்கள் அடங்கிய உணவுகள் குழந்தைக்கு மிக அவசியம்.

5. அதிகமாக தண்ணீர் குடித்தால் உடல் பெருகும்.

குடிநீரில் கலோரியை அதிகரிக்கச் செய்யக்கூடிய எந்த ஒரு பொருளும் இல்லை. சோடியம் குளோரைடு உப்பை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளும்பட்சத்தில் அதிக தண்ணீர் குடிக்க வேண்டியிருக்கும். அதனால் உடல் எடை கூடும்.

6. காப்பியில் உள்ளதை விட டீயில் காஃபின் அளவு குறைவாக உள்ளது.

காபிக் கொட்டையில் உள்ள காஃபினின் அளவைக் காட்டிலும், தேயிலையில் உள்ள காஃபின் செறிவாக உள்ளது. அதிகமாக நீர் சேர்க்கப்பட்டு, டீயானது நீர்க்கப்பட்டு விடுவதால், அதன் விளைவு நம்மைப் பாதிக்காது. ஆனால் உண்மையிலேயே காப்பிக்கொட்டையில் உள்ளதைவிட டீயில் 60 சதவீதம் காஃபின் அதிகமாக உள்ளது.

7. நாள்தோறும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டால் மருத்துவரை அணுக வேண்டியிருக்காது.

உண்மையிலேயே பெரிய அளவுக்கு ஆப்பிளில் மருத்துவ குணங்களோ, சத்துக்களோ இல்லை. ஒரு நடுத்தர அளவு ஆப்பிள் சுமார் 10 மி.கி. அளவு வைட்டமின் சியை உடலுக்கு தருகிறது. ஆனால் ஒரு ஆரஞ்சு பழம் இதை விட 5 மடங்கு அளவு வைட்டமின் சி உள்ளது. ஆப்பிளில் சுமார் 13.5 கிராம் இனிப்பு, 2 கிராம் நார்ச்சத்து மற்றும் 55 கலோரி வெப்பம் ஆகியவை மட்டுமே உள்ளது.

8. ஜலதோஷம் நிற்க வைட்டமின் சியை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.

மருத்துவ ரீதியாக, ஜலதோஷம் பாதித்தவர்களுக்கு தொடர்ந்து வைட்டமின் சி கொடுத்து பரிசோதிக்கப்பட்டது. உண்மையிலேயே ஜலதோஷம் நிற்கவில்லை என்பதுதான் முடிவாக இருந்தது.

9. பழுப்பு நிறம் கொண்ட முட்டைகள் அதிக சக்தி மிகுந்தவை.

கோழிகளின் வகையைப் பொறுத்து அவற்றின் முட்டை நிறம் மாறுகிறது. நிறத்தை வைத்து சத்தை அளவிட முடியாது.

10. தேனில் உடலுக்கு நன்மை பயக்கும் குணங்கள் உள்ளன.

உண்மையிலேயே தேனில் நாம் நினைக்கும் அளவுக்கு நன்மை ஏற்படுத்தும் மருத்துவ குணங்கள் இல்லை. அதில் பழச்சர்க்கரை, பழ வெள்ளம் மற்றும் நீர், சில வைட்டமின்கள் உள்ளன. இப்படிப்பட்ட நிலையில், இது சத்துணவு வல்லுநர்களுக்கே சவாலாக உள்ளது.

அதனால் ‘எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு’ என்ற திருக்குறளை கவனத்தில் கொள்வோம்.


Spread the love