நம்மில் பெரும்பாலானோருக்கு துாங்கும்போதும் சரி, எழுந்திருக்கும் போதும் சரி, டர்ர் புர்ர் என்று சத்தத்துடன் வாயு பிரியும். பள்ளிக்கூடங்களில் படிக்கும் குழந்தைகளுக்கு வாயு பிரிந்தால்,சக மாணவர் பரிகாசம் செய்வதுண்டு. இதேபோல, பணியிடங்களிலும், பொது இடங்களிலும் ஒருசிலருக்கு வாயு பிரிந்து சத்தம் வந்தால், அதை கிண்டல் செய்து, ஏதோ குற்றம் செய்தவரைப் போல, கூனிக்குறுக வைத்து விடுவார்கள். இதன் காரணமாகத்தான், கூட்டத்தில் இருக்கும் போதோ, பேருந்தில் செல்லும் போதோ டர் புர் என்று வாயு பிரிந்தால் மானம் போய் விடும் என்று, கருதி, ஒருசிலர் வாயு பிரியும் போது சத்தம் வராமல் இருக்கையில் வலுக்கட்டாயமாக அமருகின்றனர். அப்படி செய்வது மிகவும் தவறான விஷயமாகும். இந்த வாயுப்பிரச்னையில் இருந்து தப்பிக்க வேண்டும், வாயுப்பிரச்னையால் அவதிப்படுவதை தவிர்க்க வேண்டும் என்று பலரும் நினைக்கின்றனர். வாயுப் பிரச்னையில் உள்ளவர்கள், டர்புர் சத்தம் கேட்காமலிருக்க வேண்டும் என்றால், அவர்கள் விரும்பி உண்ணும் பல்வேறு உணவுப் பொருட்களையும், நொறுக்குத்தீனிகளையும் தியாகம் செய்ய வேண்டும்.
வாயுத் தொல்லை…
நம்மில் ஒருசிலருக்கு அஜீரணம் ஏற்பட்டு உண்ட உணவு செரிக்காமல் பிரச்னை தரலாம். ஒரு சிலருக்கு அதிகளவில் ஏப்பம் வரலாம். ஒரு சிலருக்கு வாயு அதிகளவில் பிரியலாம். மற்றும் சிலருக்கு வயிற்றில் கடபுட, சர்புர் என்று வயிற்றில் இரைச்சல் ஏற்படலாம். வேறு பலருக்கு வயிற்றில் உப்புசம் ணமச்ஏற்படலாம். இத்தகைய பிரச்னைகளை யெல்லாம் அனுபவிப்பவர்களை, வாயுத்தொல்லையால் அவதிப்படுபவர்கள் என்கிறது மருத்துவ உலகம்.
வாயு வருவது எப்படி?
நமக்கு வேலைக்கு செல்வதற்கு தாமதமாகி விட்டாலோ அல்லது பள்ளி கல்லுாரிகளுக்கு செல்லும் அவசரத்திலோ,அவதி அவதியாய் சாப்பிட்டு விட்டு செல்கின்றோம். வேலையில் டென்ஷன், ஆபீஸில் அதிகாரி திட்டினால் தலைவலி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், ஒரு சின்ன ரிலிப்மெண்ட் வேண்டுமென்று காபி அல்லது டீ குடிப்பதுண்டு. இவ்வாறு அவசர கதியில் நாம் உணவு உட்கொள்ளும் போதும், காபி அல்லது டீ அருந்தும் போதும், அவற்றுடன் காற்றையும் உறிஞ்சிக் கொள்கின்றோம். இவ்வாறு, உறிஞ்சப்படும் காற்றில் பெரும்பகுதி, இரைப்பையிலிருந்து ஏப்பமாக வெளியேறி விடுகின்றது. மீதி காற்று குடலை அடைந்து, ஆசனவாய் வழியாக வாயுவாக வெளியேறுகின்றது.
நம்முடைய உடலில் இருந்து ஒரு நாளைக்கு ஏறத்தாழ இரண்டு லிட்டர் வரையில் வாயு உற்பத்தியாகின்றது. இந்த வாயுவானது அப்படியே, வெளியேறி விட்டால் சுற்றுச்சூழல் பாவமல்லவா. நம் உடலில் உற்பத்தியாகும் வாயுவானது, பெரும்பாலும் ரத்தத்தில் உறிஞ்சப்படுகின்றது. பின்னர், அவை சுத்திகரிக்கப்பட்டு, சுவாசப் பாதையின் வழியாக வெளியே வருகின்றது. சில நேரங்களில், வாயு பிரியும் போது கெட்ட வாடை அடிக்கும். வயிற்றில் எந்த கோளாறும் இல்லாத போது, வெளியே வருகின்ற வாயுவால் துர்நாற்றம் வீசாது. வயிற்றில் ஏதோவொரு வகையில், பிரச்னை இருந்தால், வெளியே வரும் வாயு துர்நாற்றம் வீசும்.
வாயு வரும் போது சத்தம் ஏன் வருகின்றது என்பது நிறைய பேருக்கு இருக்கின்ற கேள்வி. இந்த கேள்விக்கு மருத்துவரீதியான உண்மையை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். ஹைட்ரஜன் மற்றும் மீத்தேன் வாயுக்கள் சேர்ந்தாலே பட்டாசு சத்தத்திற்கு குறைவிருக்காது. இந்த இரண்டு வாயுக்களும் வயிற்றில் இருந்தால், சத்தம் வராமலா இருக்கும்.
ஒரு நாளைக்கு 15 முறை வாயு வெளியேறி வந்தால், பிரச்னையில்லை. அதற்கு மேலும், அதிகளவில் வாயு பிரிந்தால் கவனமாக இருக்க வேண்டும்.
மருந்து மாத்திரைகள்…
நம் உடலில் வாயு தோன்றுவதற்கு காரணம் என்பதை விட முக்கியம், வாயு இனிமேல் தோன்றாமல் தடுப்பது. வாயுத்தொல்லையானது அடிக்கடி வந்தால், உங்கள் வாழ்க்கையில் பல்வேறு சலசலப்புகள் ஏற்படக்கூடும். உங்கள் வாழ்க்கையில் சலசலப்பு இல்லாமலிருக்க உங்கள் வயிற்றில் கடபுட சத்தம் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். வாயுத் தொல்லையில் இருந்து விடுபடுவதற்கு தற்போது பல்வேறு வகைகளில் மருந்து மாத்திரைகள் கிடைக்கின்றன. சித்த மருத்துவமாக இருந்தாலும், ஆங்கில மருத்துவமாக இருந்தாலும் சரி. ஏதாவது ஒரு மருத்துவ முறையை மட்டுமே கடைபிடிப்பது நல்லது.
வாயுக்கு ஒவ்வாத உணவுகள்…
வாயுவை உற்பத்தி செய்யும், மொச்சை, பட்டாணி,உள்ளிட்ட பருப்பு வகைகளை உணவில் அடிக்கடி பயன்படுத்தாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.மேலும், எந்தெந்த உணவுகளை உட்கொண்டால், உங்களுக்கு வாயு பிரச்னை ஏற்படுகின்றதோ அந்த உணவுப் பொருட்களை அறவே தவிர்த்து விடுவது நல்லது.
வாயு வராமலிருக்க…
உங்கள் உணவில் எண்ணெய்யை அதிகம் பயன்படுத்துவதை தவிர்த்து விடுங்கள். அப்படி செய்தாலே நீங்கள் வாயு பிரச்னையில் இருந்து விடுபட முடியும்.அன்றாடமும் நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.எதை மறந்தாலும், ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை மட்டும் மறக்காதீர்கள்.இதை நீங்கள் முறையாக கடைபிடித்து வந்தால், வாயுத் தொல்லை உங்கள் பக்கமே அண்டாது.