பூமியின் பாதுகாப்பு அடுக்கான ஓசோன் படலம் பல்வேறு வாயுக்களால் பாதிப்படைந்து வருகிறது. இந்நிலையில் மனித செயல்பாடுகளின் விளைவால் உருவாகும் நான்கு புதிய வாயுக்கள் ஓசோனை பாதித்து வருவதாக கிழக்கு அங்கோலியா பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்களின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பூமியில் இருந்து 15 முதல் 30 கிலோ மீட்டருக்கு மேல் வளிமண்டலத்தில் இருக்கும் ஓசோன் படலம் புற ஊதாக் கதிர் பாதிப்பை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த புற ஊதாக் கதிர் மனிதர்களுக்கு புற்றுநோயை ஏற்படுத்தக் கூடியவை.
பிரிட்டிஷ் அண்டார்டிக் ஆய்வு குழுவினர் ஓசோன் படலத்தில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதை 1985 ஆம் ஆண்டில் முதல் முறையாக கண்டுபிடித்தனர். இந்த பாதிப்புக்கு காரணம் சி.எப்.சி. வாயுக்கள் என்பது கண்டறியப்பட்டது.
1920 களில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வாயுக்கள் குளிர்சாதனப் பெட்டி, வாசனைத் திரவியங்கள், உற்பத்திக்கு பரவலாக பயன்படுத்தப்படுகிறது. சி.எப்.சி. வாயுக்களை கட்டுப்படுத்த சர்வதேச அளவில் கருத்தொற்றுமை உருவானது. இதன் மூலம் 1987 ஆம் ஆண்டு முதல் இந்த வாயுக்களை வெளிப்படுத்துவது கட்டுப்படுத்தப்பட்டது. கடந்த 2010ல் அதற்கு தடையும் விதிக்கப்பட்டது.
இதில் மூன்று வாயுக்கள் சி.எப்.சி. வாயுக்கள், மற்றவை ஹைடரோ குளோரோ கார்பனாகும். இவை ஓசோன் படலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் திறன் கொண்டவையாகும். எனினும் இந்த வாயுக்கள் சிறிய அளவிலேயே வெளிப்படுத்தப்படுவதாகவும், இவை தற்போதைய நிலையில் அபாயம் இல்லை என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்