மூலிகை சமையல் புற்றுநோயை எதிர்க்கும் பூண்டு

Spread the love

வெள்ளை நிறத்தை கொண்டிருப்பதால் வெள்ளைப்பூண்டு என்றழைக்கப்படுகிறது. பூண்டு ஆண்டு முழுவதும் பயிரிடப்படுகிறது. பூண்டு 2 அடி உயரத்துக்கு மேல் வளரும். பெரிய மொட்டு போன்ற தலை பாகம் மெல்லிய சருகால் மூடப்பட்டிருக்கும். அதற்குள் 3 லிருந்து 20 ‘பற்கள்’ இருக்கும்.

பூண்டின் சத்துக்கள்:

கால்சியம், ஃபோலேட், இரும்பு, மக்னீசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், பொட்டாசியம், செலினீயம், ஜிங்க், வைட்டமின் பி, பி1, பி2, பி3, மற்றும் வைட்டமின் சி. பூண்டின் சிறப்பு அதன் வாசனையும், சுவையுமாகும். பூண்டைச் நசுக்குவதால் தான் அதன் சிறப்பான சுவை வெளிப்படும். பூண்டு உணவில் சுவையூட்டுவதோடு, அசைவ உணவுகளை எளிதில் ஜீரணமாக்க உதவுகிறது. பூண்டின் இலைகளும், தண்டும் கூட சமையலில் பயன்படுத்தப்படுகிறது. பூண்டிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. இது மருந்துகள் தயாரிப்பில் பயன்படுகிறது.

பூண்டின் மருத்துவ குணங்கள்:

பூண்டு இதய நோயை குறைக்கும் அருமருந்தாக பயன்படுகிறது. இரத்தக் குழாய்களில் கொலஸ்ட்ரால் படிவதைத் தடுத்து இதயத்தில் சீரான இரத்த ஓட்டத்தைக் கொடுக்கிறது. ஜலதோஷத்தை போக்கும் குணம் பூண்டிற்கு உள்ளது. பூண்டு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. குழந்தை பெற்ற தாய்மார்கள் தினமும் பத்து பல் பூண்டு வெறும் வாணலியில் வதக்கி சாப்பிட்டால் குழந்தைக்கு தாய்ப்பால் பெருகும். தினமும் உணவில் பூண்டு சேர்த்து வந்தால் வாயுத்தொல்லை விலகும்.

பூண்டு புற்று நோயை எதிர்க்கும் தன்மையுடையது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பூண்டை பச்சையாகவோ, சமைத்தோ தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களும் வயிறு, குடல் பகுதிகளில் புற்று நோய் வரும் வாய்ப்பு குறைவு என்று கூறுகின்றனர்.

சமையல் குறிப்புகள்:

பூண்டுத் துவையல்

தேவையான பொருட்கள்:

பூண்டு                         – 100 கிராம்

தக்காளி                       – 1

காய்ந்த மிளகாய்         – 4

உப்பு                           – தேவைக்கு

எண்ணெய்                  – 2 டீஸ்பூன்

செய்முறை:

            முதலில் பூண்டை தோலுரித்து வைத்துக் கொள்ளவும். ஒரு சட்டியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் சிவப்பு மிளகாய் போட்டு வறுத்து பின் பூண்டைப் போட்டு நன்கு வதக்கவும். பின் தக்காளியையும் போட்டு வதக்கவும். ஆறிய பின் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். அரைத்த பின் சிறிது கடுகு, பெருங்காயம், தாளித்து கொட்டவும்.

பச்சை பூண்டு ஊறுகாய்:

தேவையான பொருட்கள்:

பூண்டு பல் சிறியதாக                                                 – 100 கிராம்

பச்சை மிளகாய் (அல்லது) வெள்ளை மிளகாய்          – 10

எலுமிச்சம் பழம்                                                                      – 2

உப்பு                                                                                       – தேவையான அளவு

செய்முறை:

            பூண்டை தோலுரித்து நீளவாக்கில் இரண்டாக நறுக்கவும். பச்சைமிளகாய் என்றால் சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வெள்ளை மிளகாய் என்றால் சிறிது கீறிக் கொள்ளவும். ஏனென்றால் அது சிறியதாக இருக்கும். பின் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து அதில் உப்பு போட்டு, உரித்து நறுக்கிய வெள்ளைப்பூண்டு, மிளகாய் போட்டு இரண்டு நாட்கள் ஊற வைத்து சாப்பிடவும். ஊறிய பின் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துக் கொள்ளவும்.

பூண்டு ரசம்:

தேவையான பொருட்கள்:

பூண்டு பல்                   – 10 பல்

புளி                              – பாதி எலுமிச்சையளவு

தக்காளி                       – 1 சிறியது

கொத்துமல்லி – சிறிது

காய்ந்த மிளகாய்         – 2

மிளகுத்தூள்                – 2 டீஸ்பூன்

எண்ணெய்                  – 1 டீஸ்பூன்.

தாளிக்க: கடுகு, சீரகம், மிளகு, பெருங்காயம் சிறிது.

செய்முறை:

            ஒரு சட்டியில் எண்ணெய் காய வைத்து அதில் கடுகு, சீரகம், மிளகு, பெருங்காயம் முதலியவற்றை போட்டு வெடித்ததும் காய்ந்த மிளகாயை கிள்ளிப்போட்டு, பூண்டை தட்டிப் போட்டு வதக்கி, பின் தக்காளியை நறுக்கிப் போட்டு வதக்கி பின் புளிக்கரைசலை ஊற்றி மிளகுத்தூள், உப்பு போட்டு கொதிக்க விடவும். சுவையான பூண்டு ரசம் ரெடி.

பூண்டு ஊறுகாய்:

தேவையான பொருட்கள்:

வெள்ளைப் பூண்டு உரித்தது  – 1 டம்ளர்

எலுமிச்சம் பழம் மீடியம் சைஸ்          – 3

சம்பா மிளகாய்                                   – 12

வெந்தயம்                                            – 1/2 ஸ்பூன்

கடுகு                                                   – 1/2 ஸ்பூன்

பெருங்காயம்                                       – சிறிது

மல்லிவிதை                                         – 1 ஸ்பூன்

உப்பு                                                   – தேவையான அளவு

நல்லெண்ணெய்                                  – 3 டேபிள்ஸ்பூன்

தாளிக்க                                               – கடுகு, பெருங்காயம் சிறிது.

செய்முறை:

            முதலில் வெறும் வாணலியில் சிறிது மிளகாய், வெந்தயம், கடுகு, பெருங்காயம், மல்லி முதலியவற்றை வறுத்து அரைக்கவும். பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் தாளித்து வெள்ளைப்பூண்டு போட்டு வதக்கி பிறகு அரைத்த தூளையும் போட்டு, எலுமிச்சை ஜூஸ் ஊற்றி நன்கு கிளற வேண்டும். பூண்டு வெந்து எண்ணெய் சட்டியின் ஓரத்தில் வரும் பொழுது இறக்க வேண்டும்.


Spread the love