‘எதிர்காலம்’

Spread the love

சரியான தருணத்தில்!

இந்த உலகம் பல அற்புதங்கள் நிறைந்தது. அதைப் போலவே தான் மனித வாழ்வும். ஆரம்ப காலங்களில் இந்த உண்மையை உணர்ந்த நம் முன்னோர்கள் முறைப்படி வாழ்வை அமைத்தார்கள். அதன்படியே வாழ்ந்தும் காட்டினார்கள். அவர்கள் காலத்திலும் பிரச்சனைகள், பிணக்குகள், கஷ்டங்கள், ஏமாற்றங்கள் என எல்லாம் இருந்தும் அதைக் கடந்து ஒரு அற்புதமான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்கள் என்று பார்க்கும்போது பிரமிப்புதான் மிஞ்சுகிறது.

ஆனால், இப்போதிருக்கிற வாழ்க்கைமுறை அப்படியா? மானுடப் பண்பை இழந்து தான் ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் பணம், பதவி, பொருள் என யாவற்றையும் தேடி ஓடுகின்றான்.

சக மனிதனின் பசியை மறந்துவிட்டு, தான் உண்டு வாழ்ந்தால் போதுமென்ற மனநிலைக்கு வந்துவிட்டான் மனிதன். உலக தாராளமயமாக்கலின் விளைவால் ஒவ்வொரு மனிதனும், இங்கு தனித்தனி தீவு போல் ஆகிவிடுவது வருத்தத்திற்குரியது. ஆனால், இத்தகைய வாழ்வைத்தான் மனிதன் வலிந்து ஏற்றுக் கொண்டிருக்கிறான்.

இங்கிருந்து தான் பிரச்சனை தொடங்குகிறது. ஒவ்வொருவருக்கும், சுயபிரச்சனைகள், பெருகிக் கொண்டே வருகின்றன அல்லது சிறு விஷயங்களெல்லாம் பிரச்சனைகளாகி விடுகின்றன. முந்தைய தலைமுறை வாழ்ந்த வாழ்க்கை முறையும், நாகரீகமும், கலாச்சாரமும் இன்று அப்படியே இருப்பதாகச் சொல்ல முடியாது.

இன்றுள்ள பல்வேறு நடைமுறைகள் நாளையும் தொடரும் என்பது அறுதியிட்டு சொல்ல முடியாது. ஒன்றுமட்டும் உறுதி, இன்றைய இளைஞர்களின் நாளைக்கான வாழ்வை தீர்மானிப்பது அவசியம். இந்தக் கடமை தற்போதுள்ள தலைமுறைக்கு முன்பு இருக்கிறது.

மனஉறுதி, தன்னம்பிக்கை, வெற்றி தோல்வி, இவைகளைப் பற்றியெல்லாம் தெரிந்து கொள்ள அனுமதிக்கப்படாத ஒரு மாணவன், வெறுமனே மதிப்பெண்கள் வாங்கி வாழ்க்கையை வாழ்ந்துவிட முடியும் என்று நம்பி வருகிறான். சிறு தோல்வியைக் கூட சகித்துக் கொள்ளாத மாணவர்கள் இன்றைய சமூகத்தில் இருப்பது துரதிஷ்டவசமானது.

வன்முறையும், தற்கொலையும், இன்னபிற சமூகக் கேடுகளை விளைவிக்கின்றவர் களாகவும் இன்றைய தலைமுறையினர் இருந்தால் எதிர்காலம் என்னவாகும்?

இன்றைய தலைமுறையையும், நாளைய தலைமுறையையும் கருத்தில் கொண்டு, அவர்களின் எதிர்காலத்தில் பங்கெடுக்க அடியெடுத்து வைக்கிறது எதிர்காலம்இதழ்.

௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦

இளைஞர்களின் கனவு தேசம் இந்தியா

இன்றைய இளைஞர்கள் கனவுகளை நனவாக்குவதில் வல்லவர்கள். தற்போது அவர்களின் கனவு ஒளிமயமான இந்தியாஎன்பதாகத் தான் இருக்கிறது.

என்னிடம் நூறு இளைஞர்களைக் கொடுங்கள் இந்தியாவை மாற்றிக் காட்டுகிறேன் என்றாரல்லவா விவேகானந்தர். அத்தகைய முனைப்புடன் பல இலட்சம் இளைஞர்களைக் கொண்டுள்ளது இந்தியா.  இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள் என்பது நிஜம்.

இன்று ஆட்சியிலும், பல்வேறு துறைகளிலும் முடிசூடா மன்னர்களாக இருப்பவர்கள் எல்லாம் நேற்றைய இளைஞர்கள். எனவே இன்றைய இளைஞர்கள் நாளைய மன்னர்களாக மாறப் போவது சந்தேகத்திற்கு இடமில்லாதது. பின் ஏன் இந்த தலைப்புக் கேள்வி எழுந்தது என்றால்இன்று உப்புசப்பில்லாமல், ஊமைச் சனங்களாய், அடிமைகளாய் வாழ்ந்து கொண்டிருக்கும் கூட்டத்தினரும் நேற்றைய இளைஞர்களே. அதுபோல் இன்றைய இளைஞர்களில் எத்தனைபேர் மன்னர்களாவார்கள், எத்தனைபேர் அடிமைகளாக, ஆட்டுமந்தைகளாய் வாழ்ந்து மடிவார்கள் என்ற சந்தேகத்தின் பேரில்தான் இந்த தலைப்புக் கேள்வி எழுந்திருக்க வேண்டும். மேலும் மன்னர்களாக உயர்பவர்களும் சரித்திரம் படைக்கும் மன்னர்களாக இருப்பார்களா இல்லை & சரித்திரம் பழிக்கும் மன்னர்களாக இருப்பார்களா என்பதும் ஊகத்திற்குட்பட்ட விஷயமே. எனவே, இன்றைய இளைஞர்கள் நாளைய வரலாறு படைக்கும் மன்னர்களாவது சாத்தியமா என்பதுதான் நம்முன் நிற்கும் பெரிய கேள்வி.

இந்தக் கேள்விக்கு பதிலை ஒரு கதையின் மூலம் அறிந்து கொள்ளலாம். எல்லாம் அறிந்த ஒரு முனிவர் ஒரு ஊரிற்கு வந்தார். பலரும் அவரிடம் சென்று தங்கள் எதிர்காலங்களை அறிந்து வந்தனர். ஒரு குறும்புக்கார இளைஞன் அந்த முனிவரால் பதில் சொல்ல முடியாத ஒரு கேள்வியைக் கேட்கத் திட்டமிட்டான். தன் உள்ளங்கையில் நடுவே ஒரு பட்டாம்பூச்சியை வைத்து இரு கைகளாலும் மூடியபடி அந்த முனிவரிடம் சென்றான்.

முனிவரே, என் கையில் உள்ள பட்டாம்பூச்சி உயிருள்ளதா? உயிரற்றதா? என்று முனிவரிடம் அவன் கேட்டான். அவர் அது உயிருள்ளது என்றால் கைகளால் அழுத்தி நசுக்கி அந்தப் பட்டாம்பூச்சியைக் கொன்றுவிட்டு பாருங்கள், உயிரில்லையேஎன்று சொல்ல நினைத்தான். அவர் அது உயிரற்றது என்று சொன்னால் அந்தப் பட்டாம்பூச்சியை ஒன்றும் செய்யாமல் கைகளைத் திறந்து பறக்க விட்டு உயிருடன் இருக்கிறது பாருங்கள்என்று சொல்ல நினைத்தான். இந்தக் கேள்விக்கு சரியான பதிலை அந்த முனிவரால் சொல்ல முடியாத தர்மசங்கடத்தில் ஆழ்த்துவதுதான் அவன் குறிக்கோள்.

அவன் எண்ணத்தைப் புரிந்துகொண்ட அந்த முனிவர் புன்னகையுடன் சொன்னார். “அது உயிருடன் இருப்பதும், இறப்பதும் உன் விருப்பத்தைப் பொருத்தது”.

அதுபோல இன்றைய இளைஞர்கள் நாளைய மன்னர்களாவதும், மண்ணாங்கட்டிகளாவதும் அவர்களுடைய எண்ணங்களையும், பண்புகளையும், ஈடுபாடு காட்டும் விஷயங்களையும், வாழும் முறைகளையும், மன உறுதியையும் பொருத்தது.

பதினாறு வயதில் அரபு வியாபாரிகளிடம் வேலைக்குச் சென்ற திருபாய் அம்பானி என்ற இளைஞன் மனதில் பெரியதொரு கனவிருந்தது. அந்தக் கனவை நனவாக்கும் மன உறுதியும் இருந்தது. அதை நனவாக்க என்ன விலையும் தரவும் அந்த இளைஞன் தயாராக இருந்தான். அந்த இளைஞன் இந்திய வணிகத் துறையில் முடிசூடா மன்னனாக மாறியதை சரித்திரம் இன்று சொல்கிறது.

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்ற குஜராத்தி இளைஞன் மனதில் சத்தியத்திற்கு ஒரு பெரிய முக்கியத்துவம் இருந்தது. ஒடிசலான உடல் பலமற்ற அந்த இளைஞன் வக்கீல் படிப்பு படித்த போதும் பெரிய வக்கீல் ஆகும் திறமை ஒன்றும் அவனுக்கு இருக்கவில்லை. ஆனால், அந்த இளைஞன் மனதில் இருந்த அந்த அசைக்க முடியாத உறுதி இந்திய மண்ணில் வேரூன்றி இருந்த ஆங்கிலேய சாம்ராஜ்ஜியத்தை வேரோடு பிடுங்கி எறிந்து சரித்திரம் படைத்தது. எத்தனையோ இளைஞர்கள் காந்தியடிகளால் கவரப்பட்டு விடுதலை வேட்கையுடன் சுதந்திரத்திற்காகப் போராட்டத்தில் குதித்தார்கள். கத்தியின்றி, இரத்தமின்றிநடந்த ஒரே மிகப் பெரிய சுதந்திரப் போராட்டம் உலக சரித்திரத்தில் பதிவாகியது.

சிறுவனாக இருந்தபோது முதல்முறையாக திசைகாட்டும் கருவி (காம்பஸ்) ஒன்றைப் பார்த்து அதிசயித்தான் ஐன்ஸ்டீன் என்ற அந்த சிறுவன். எப்படி திசை மாற்றினாலும் அதிலிருந்த முள் வடக்கு நோக்கியே நகர்ந்ததைக் கண்டு, அப்படி அதை இயக்கும் கண்ணுக்குத் தெரியாத அந்த சக்தி¬ப் பற்றி ஐன்ஸ்டீன் அறியத் துடித்தான். அவனுடைய அந்த ஆவல் விஞ்ஞானத் துறை நோக்கி அவனைப் பயணம் செய்ய வைத்தது. இளமை முழுவதும் ஐன்ஸ்டீனுக்கு இருந்த அந்த அறிவியல் தாகம் சென்ற நூற்றாண்டின் இணையற்ற விஞ்ஞானியாக பின்னாளில் அவனை மாற்றியது. அதுவரை இருந்த பல விஞ்ஞானக் கோட்பாடுகளைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டு புதிய சரித்திரம் படைத்தார் ஐன்ஸ்டீன்.

இப்படி வியாபாரமாகட்டும், ஆட்சியாகட்டும், விஞ்ஞானமாகட்டும், வேறெந்த துறையுமாகட்டும் இளைஞர்கள் இளமைக் காலத்தில் தங்கள் மனதில் விதைத்த கனவுகள், சிந்தித்த சிந்தனைகள், உழைத்த உழைப்புகள் எல்லாம் சேர்ந்து தான் பெருத்த மாற்றங்களை உருவாக்கி இருக்கின்றன.

இளமைக் காலம் விதைக்கும் காலம். கவிஞர் கண்ணதாசன் இளமைக் காலத்தை “கற்பூரப் பருவம்” என்பார். அந்தப் பருவத்தில் எதுவும் சீக்கிரம் இளம் மனங்களில் பற்றிக் கொள்ளுமாம். அந்தக் காலத்தில் இளைஞர்கள் தங்கள் இதயங்களில் எதை விதைக்கிறார்கள், எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள், எதை அடையப் பாடுபடுகிறார்கள் என்பது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம். ஏனென்றால் அதைப் பொறுத்தே அவர்கள் எதிர்காலத்தில் மாறுகிறார்கள்.

இளைஞர் சக்தி உலகில் பிரம்மாண்டமான சக்தி. அந்த சக்தி ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தப்படுகிறதா, அழிவை நோக்கிப் பயன்படுத்தப்படுகின்றதா, பயன்படுத்தாமலேயே புதைந்து போகிறதா என்பதைத் தீர்மானிப்பதில் அவர்களுக்குக் கிடைக்கும் முன்மாதிரிகளுக்கும், அவர்கள் மனதில் பதியும் நிகழ்வுகளுக்கும் பெரும் பங்கு உண்டு.

ஆனால் இன்றைய இளைஞர்களைப் பண்படுத்தும் வேலையை அப்துல் கலாம் போன்றவர்களுக்கு ஒதுக்கிவிட்டு மற்றவர்கள் ஒதுங்கி விட முடியாது. நம் பங்கிற்கு நாமும் ஏதாவது செய்தாக வேண்டும் என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்வது முக்கியம். எத்தனையோ இளைஞர்கள் வேர்களை மறந்து அலைகிறார்கள். எந்திரம் போல வாழ்கிறார்கள். தீவிரவாதம் போன்ற அழிவுப் பாதையில் போகிறார்கள்.

அவர்களுக்கெல்லாம் நம்மால் முடிந்த வரை நல்ல முன்மாதிரிகளாக இருக்க முயற்சிக்க வேண்டும். வீட்டிலும், சமூகத்திலும் நாணயமான, பொறுப்புணர்வுள்ள மனிதர்களாக நாம் நடந்து கொண்டாலே போதும். நல்லதைச் சொல்லி, நல்லதைச் செய்து வாழ்ந்தால் அது நல்ல சிந்தனை அலைகளை நம்மை சுற்றி ஆரம்பித்து வைக்கும். அந்த அலைகளால் உங்கள் வீட்டிலோ, நீங்கள் இருக்கும் பகுதியிலோ ஒரு இளைஞர் ஈர்க்கப்பட்டு நல்ல விதத்தில் மாறினாலும் அது பெரும் வெற்றியே. நம்மில் ஒவ்வொரு மனிதராலும் இப்படி நல்ல அலைகளை அனுப்ப முடிந்தால், இளைய சமுதாயத்திடம் நல்ல விதைகளை விதைகக முடிந்தால் அதன் அறுவடையாக இன்றைய இளைஞர்களை நாளைய வரலாற்றை மேன்மையான முறையில் எழுதும் மன்னர்களாக நாம் காண முடிவது நூறு சதவீதம் சாத்தியமே!

இந்தியா இளைஞர்களின் கனவு தேசமாக மாறிவிட்டது.


Spread the love