செயல்பாட்டு உணவுகள் (Functional foods) ஆனது 1984-ம் ஆண்டு முதன் முதலில் ஜப்பானியர்களால் கண்டறியப்பட்டது. இவை மனித ஆரோக்கியத்திற்காக சிறப்பு வாய்ந்த சில வகையான முக்கிய மூலப் பொருட்களை கொண்டு உணவினை செயல்பாட்டு உணவாக மாற்றுவது ஆகும். பால் என்பது மனித உணவில் இன்றியமையாத இடத்தை வகிக்கின்றது. இந்த செயல்பாட்டு பால் உணவில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. அவை, புற்றுநோய், தீய கொழுப்புக்கு எதிராகவும், உடல் வளர்ச்சியிலும் மற்றும் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்கவும் பயன்படுகின்றன.
பால் சார்ந்த செயல்பாட்டு உணவுகள்:-
உயிர் செயல்பாட்டு தன்மையுடைய பொருட்கள் என்பது இயற்கையில் உணவில் இருப்பவை அல்லது உணவு பதப்படுத்தலின்போது உருவாக்குவது ஆகும். இதன் இயற்பியல் மற்றும் உயிர் வேதியியல் பண்புகள் மனிதனுக்கு பயனளிக்க கூடியதாகவும், ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும் உள்ளது. பல உணவு அறிவியலாளர்கள் பால் மற்றும் பால் பொருட்களில் உள்ள பலதரப்பட்ட உயிரூக்கு தன்மையுடைய பொருட்களின் பயன்களையும் அதன் மருத்துவ பண்புகளையும் கண்டறிந்து உள்ளனர். பால் பொருட்களில் கால்சியம், புரதம், புரத மூலக்கூறுகள், பெப்டைடுகள், ஸ்பிங்கோ லிப்பிட் போன்ற கொழுப்பு நிறைந்து காணப்படுவதால் பால் ஆனது செயல்பாட்டு உணவுகளை உருவாக்க சிறந்த அடித்தளமாக அமைகின்றது. இதன் செயல்பாடுகளை ஊக்குவிக்க புரோபயாடிக் பிரிபயாடிக், நார்சத்து, சோயாபுரதம், உயர்வழி இணைப்பு எதிர்ப்புத்தன்மை செடிகளில் இருந்து பெறப்படும் ஸ்டீரால், லூட்டின் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றது.
இதய நோய், மூட்டுவலி, நீரிழிவு நோய் உடற்பருமன் போன்றவற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள மக்கள் செயல்பாட்டு உணவுகளின் அவசியத்தை உணர்ந்துள்ளனர். பால் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் தருவதால் இதை செயல்பாட்டு உணவாகவும் கூறலாம்.
பால் புரதம்:-
பால் புரதத்தில் முக்கியமான மூலக்கூறுகள் இரு வகைப்படும். இவை கேசின் மற்றும் ஊநீர் புரதம். இதில் 80மூ பால் கேசினாலும் மற்ற 20மூ ஊநீராலும் அமைந்தவை. இவை தகுந்த உயீரூக்கு தன்மையுடையனவாய் விளங்குகிறது. இது உடலை பாதுகாத்து கொள்ள உதவுகின்றது.
இவற்றின் பயன்பாடுகள்:-
1. செரிமானம் மற்றும் வயிற்று உபாதைகளில் இருந்து விடுபட உதவுகின்றது.
2. இரத்த கொதிப்பை குறைக்கவல்லது.
3. புற்றுநோய் வராமல் பாதுகாக்கின்றது.
4. உடல் வளர்ச்சிக்கு வித்திடுகின்றது.
5. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றது.
பாலின் புரதத்தில் உள்ள அதிக அளவு உயிரூக்கிகள், அமினோ அமிலத்தில் இருந்து பெறப்பட்ட பெப்டைடு ஆகும்.
கிளைகோ மேக்ரோ பெப்டைடு:
1. வயிற்றில் அமிலம் சுரப்பதை அதிகரித்து பெப்டைடு செரிமானத்திற்கு உதவுகின்றது.
2. நன்மை பயக்கும் பைஃபிடோபாக்டீரியா வளர்ச்சியை ஊக்குவிக்கின்றது.
3. பல்சொத்தை வராமல் தடுக்கின்றது.
4. வைரஸ் மற்றும் பாக்டீரியா ஆகியவற்றிள்லிருந்து நம்மை பாதுகாக்கின்றது.
ஊநீர்
ஊநீர் என்பது பால் திரிந்த பிறகு வடிகட்டினால் கிடைக்கக்கூடிய, மஞ்சள் மற்றும் பச்சை நிற நீர் பகுதியாகும். இதில் அதிகளவு உயிரூக்கி மூலக்கூறுகள் உள்ளன. ஊநீரில் லாக்டோகுளோபுலின், லாக்டால்புமின், கிளைகோ- மேக்ரோபெப்டைடு, புரோடியோஸ் பெப்டோன், இம்முனோகுளோபுலின் மற்றும் சீரம் ஆல்புமின் ஆகியவை உள்ளது.
பீட்டா லாக்டோகுளோபுலின் ஆனது இரத்த கொதிப்பை குறைக்கின்றது. ஆல்பா லாக்டால்புமின் ஆனது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது. இதில் அதிக அளவு டிரிப்ஃடோஃபேன் இருப்பதால் நாம் துடிப்புடன் செயலாற்ற உதவுகிறது. இவை மனிதனிர்களில் இறப்பை உண்டாக்கும் அபோப்டோஸில் செல்களை குறைத்து மனித குலத்திற்கு நன்மை செய்கின்றது.
இம்னோ குளோபுலின்:-
பச்சிளம் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புதன்மை அதிகரிக்கின்றது.
லாக்டோபெர்ரின்:-
லாக்டோஃபெரின் என்பது பாலில் உள்ள இரும்பு இணைப்பான் புரதம். இவை அதிக உயிரூக்கு தன்மையை கொண்டுள்ளது.
1. புற்றுநோய் உண்டாக்கும் செல்களை குறைக்கின்றது.
2. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது.
பாலில் உள்ள மாவுச்சத்து:-
பால் சர்க்கரை அல்லது “லாக்டோஸ்” நாம் உட்கொள்ளும்போது அதிக ஆற்றலை அளிக்கின்றது. குடலின் கால்சியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவற்றை உறிஞ்சும் தன்மையை லாக்டோஸ் அதிகப்படுத்துகின்றது. நொதித்தல் தன்மைக்கு மிக முக்கியமாக அமைவது லாக்டோஸே. இது அனைத்து நொதித்த பால்பொருள் தயாரிப்பில் மிக முக்கியமானதாக அமைகின்றது.
புரோபயாடிக்ஸ்
புரோபயாடிக் என்பது உயிருள்ள நுண்னுயிரிகளை உட்கொள்வதன் மூலமாக தொற்றுகளை நீக்கி உடலுக்கு ஆரோக்கியத்தை தருபவை ஆகும். லாக்டிக் அமில பாக்டீரியா மற்றும் பைஃபிடோபாக்டீரியா ஆகியவை புரோபயாடிக் உணவு பொருள் தயாரிப்பில் மிகுதியாக பயன்படுகின்றது.
உலகில் தயாராகும் 56% செயல்பாட்டு உணவில் புரோபயாடிக் பால் பொருட்களே மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. புரோபயாடிக் பால் பொருட்கள் விற்பனையில் சாண்டிநேவியன், நெதர்லாந்து மற்றும் சுவிச்சர்லாந்து ஆகியவை முன்னிலை வகிக்கும் நாடுகளாகும்.
நன்மைகள்:-
1. லாக்டோஸ் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு உதவும்.
2. கொழுப்பை குறைக்கவல்லது.
3. குடல் உபாதைகளை சரிசெய்து, வயிற்று உபாதயை தடுக்கும்.
4. புற்றுநோய் வராமல் பாதுகாக்கும்.
5. வயிற்று புண் வராமல் தடுக்கும்.
நொதித்த பால் பொருட்கள் பல நோய் தீர்க்கும், மருத்துவ தன்மை உடையதாக கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் பைஃபிடோபாக்டீரியா பைபிடம், மற்றும் அஸிடோபிலஸ் நுண்ணுயிரி உள்ளது. இவை கொழுப்பை குறைக்கும் திறன் உடையது. பைஃபிடோபாக்டீரியா நோய் தொற்று வராமல் காத்து, வியிற்று போக்கு மற்றும் புற்றுநோயிலிருந்து பாதுகாப்பை தருகின்றது. இதனால் பைஃபிடோபாக்டீரியம் லாங்கம் நுண்ணுயிரியை பயன்படுத்தி புரோபயாடிக் தயிர் உற்பத்தி செய்யப்படுகின்றது.
மேலும் செயல்பாட்டு பாலாடைக்கட்டி, யோகர்ட், பால் மற்றும் தானியங்கிளிலிருந்து பெறப்படும் செயல்பாட்டு உணவு (உலர் தானியம் மற்றும் நொதித்த பால் கொண்டு தயாரிக்கப்படும்) கிஸ்க் செயல்பாட்டு ஐஸ்கிரீம், செயல்பாட்டு நெய், குறைந்த கொழுப்புச்சத்து உடைய ஒமேகா 3 மற்றும் பைட்டோஸ்டீரால் சேர்க்கப்பட்ட ஐஸ்கிரீம் போன்ற செயல்பாட்டு பால்பொருட்கள், நுகர்வோருக்கு நன்மை பயக்க தயாரித்து சந்தைப்படுத்தப்படுகின்றது.