பல வகை நோய் அறிமுகமாகி வரும் இந்த காலத்தில், நாம் அனைவரும் தவறாமல் உடல் பரிசோதனை செய்துகொள்வது மிக அவசியம். உயிர் மேல் அக்கறையும், குடும்பத்தின் மீது பாசமும், உடல் நலனை பாதுகாக்கவும் முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. முழு உடல் பரிசோதனையை உடல் நலன் காக்க செய்யப்படும், ஒரு நல்ல முதலீடாகக் கூடக் கருதலாம். முன்கூட்டியே கவனிக்கப்படாமல் விடுவதால், நோய் வந்த பிறகு ஏற்படும் பணகஷ்டம், மனக்கஷ்டம் வலி, வேதனை இதையெல்லாம் ஒப்பிடும்பொழுது, ஆரம்பத்திலேயே செய்து கொள்ளும் உடல் பரிசோதனைக்கு மிக குறைந்த செலவுதான்.
குழந்தைகளின் உடல்நலத்திற்கு வீட்டு முறையில் அக்கறை செலுத்தினால் மட்டும் போதாது. பரிசோதனை செய்வதால்,
பள்ளியில் சேர்ப்பதற்கு முன்னரே, குழந்தைக்கு தொற்று பிரச்னை இருக்கிறதா? தடுப்பூசியால் தடுக்கப்பட வேண்டிய நோய்கள் ஏதாவது தென்படுகிறதா? பற்களில் ஏற்படும் சொத்தை, அலர்ஜி, தேமல்,காது, மூக்கு, தொண்டை, டான்சில், அடினாய்டு நோய்கள், மூளை வளர்ச்சி, கண் பார்வைத் திறன், படிப்புத் திறன் குறைபாடுகள், இதயம், நுரையீரல், வயிறு, குடல் நோய்கள், சிறு நீரக நோய் தொற்றுகள் இவையெல்லாவற்றையும் முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம். மேலும் உடல் வளர்ச்சி சீராக உள்ளதா என்றும் அறியலாம்.
வயது விகிதத்தின் படி பரிசோதனை
30 வயதை கடந்தவர்கள் மூன்று வருடத்திற்கு ஒரு முறையும், நாற்பது வயதிற்கு மேல் உள்ளவர்கள் இரண்டு வருஷத்துக்கு ஒரு முறையும், ஐம்பது வருடம் கடந்தவர்கள் ஒரு வருஷத்துக்கு ஒரு முறையும் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
பரிசோதனை நாட்களில்
முழு உடல் பரிசோதனைக்கு தயாராகும் முன்பு உங்களின் மனநிலையை சீரான நிலையில் வைக்கவேண்டும்.
இரவு உணவிற்கு பின்னர், நிம்மதியாக தூங்கி எழ வேண்டும். பரிசோதனை அன்று காலையில், பற்களை சுத்தம் செய்ததும் இரண்டு டம்ளர் தண்ணீர் குடிக்கலாம். பரிசோதனை முடியும் வரை டீ, காபி, பால் உணவுகளை எதுவும் சாப்பிடக்கூடாது. வெறும் வயிற்றோடு தான் பரிசோதைக்கு செல்ல வேண்டும்.
பரிசோதனை நேரத்தில் உங்களிடம் சில கேள்விகள் கேட்கப்படும். அந்த கேள்விகளை நேரடியாகவும் அல்லது வினாத்தாள் மூலமாகவும் கேட்கப்படும். பெரும்பாலும் அந்த வினாத்தாளில் அடங்கியிருக்கும் பதில்கள், நீங்களே தேர்ந்தெடுக்கும் வகையில் இருக்கும். அதில், கண், காது, மூக்கு, தொண்டை, தோல், பசி, தூக்கம், பல், நாக்கு, மார்பு, இதயம், வயிறு, பிறப்பு உறுப்பு நோய்கள், உடலில் மதமதப்பு, மரத்துப்போதல், வலி, கூச்சம், பெரியதாகும் மச்சம், ஆறாத புண்கள் பற்றிய கேள்விகளாகவும் இருக்கும்.
அரசுப் பொது மருத்துவமனைகளில் மினி சோதனைக்கு 250 ருபாய் முதல் முழுப்பரிசோதனைக்கு 1,000 ரூபாய் வரை வாங்கப்படுகிறது. இந்தப் பரிசோதனைகள் பல தனியார் மருத்துவமனைகளில் 3,500ல் இருந்து, 50,000 ரூபாய் வரை மினி பரிசோதனை, மாஸ்டர் பரிசோதனை, இதயப் பரிசோதனை, இதயம் தொடர்பான பரிசோதனை, குடல், வயிறு, மூளை, நரம்பு, எலும்புப் பரிசோதனை மற்றும் சிறப்புப் பரிசோதனை, அதிசிறப்புப் பரிசோதனை, எனப் பல்வேறு தரத்தில் இருக்கும்.
லட்சக்கணக்கான நபர்கள் முழு உடல் பரிசோதனை செய்துகொண்டு அவர்களின் ஆரோக்கியத்தை தன்வசம் படுத்திக்கொள்கின்றனர். வாழ்க்கைமுறை மாற்றத்தின் மூலமாக, பலரின் குடும்பங்கள் உயிர்க்கொல்லி நோயிலிருந்து காப்பாற்றப்படுகிறது. உங்கள் உடலை நோய் வருமுன் காத்து, தேவையில்லாத செலவை குறைத்து, நிம்மதியாக வாழ வழி செய்யும் உடல் பரிசோதனையை செய்து கொள்வது நல்லது தானே..!
எம். திவாகரன்