உடல் வலுப்பெற தினை

Spread the love

தினை என்பது ஒரு வகை தானியம் ஆகும். ஆங்கிலத்தில் இது Millet எனும் வகையில் வகைப்படுத்தப்பட்டுள்ள தானியம். தினை, உலகிலேயே அதிகம் பயிரிடப்படும் இரண்டாவது தானிய வகையாகும். இதில் இந்தியா இரண்டாவது இடத்தையும் சீனா முதலிடத்தையும் வகிக்கின்றன. பழங்காலத்தில் மனிதனால் முதலாவதாக பயிரிடப்பட்டு உபயோகிக்கப் பட்ட தானிய வகை தினை தான். அதுவும் 6000 கி.மு.விலேயே சீனாவில் பயிரடப்பட்டு உபயோகிக்கப்பட்டு வந்துள்ளது.

தற்பொழுதும் சீனாவின் வட மாநிலங்களில் அதிகம் பயிரிடப்பட்டு உபயோகமாகி வரும் தானியம், தினை.

தினை என்றவுடன் தமிழ் கடவுள் முருகப் பெருமான் வயதான தோற்றத் துடன் சென்று வள்ளியிடம் சாப்பிட தினை மாவு கேட்டதாகவும், பின் வள்ளியை திருமணம் செய்ததாகவும் புராணத்தில் படித்த கதைகள் நம் நினைவுக்கு வரும். இதிலிருந்து, புராண காலம் தொட்டே தினையை பயன்படுத்தி வந்தது நமக்கு புரியும்.

தினை மாவு அதிக சத்து கொண்ட உணவுகளில் ஒன்று.       இதற்கு இறடி, ஏளல், கங்கு என்ற வேறு பெயர்களும் உண்டு.

-பொருள் – சன்னிசுரம், வளிநோய் போன்றவற்றை போக்கும். பசியுண்டாக்கும். தீக்குற்றத்தைப் போக்கும்.

உடல் வலுப்பெற நம் முன்னோர்களின் உணவுகளான அரிசி, கேழ்வரகு, கம்பு, வரகு, தினை முதலியனவாக இருந்தது. இதனால் அவர்களின் உடலானது தேக்கு மரம் போல் திடமாக இருந்தது. இன்று இவற்றின் உணவுப் பயன்பாடு குறைந்து கடைசியாக அரிசியையும் தவிடு நீக்கி, பாலீஷ் செய்து சாப்பிடும் நிலைக்கு வந்து விட்டோம்.

இதனால் இன்று உடல் வலுவிழந்து நோயின் பாதிப்புக்கு ஆளாகிறது.      இப்படி நாம் இழந்த பொருட்களுள் தினையும் ஒன்று.

மலைப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு தேனும், தினைமாவுமே உணவாக இருந்தது. தற்போது அவர்களும், தினை என்றால் என்ன என்று கேட்கின்றனர். தினையில் உடலுக்குத் தேவையான புரத சத்துக்களும், ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன.

நமது வாசகர்களுக்கு உதவும் விதமாக அக்காலத்தில் புகழ் பெற்ற தினையை இக்கால முறைப்படி எவ்வாறு எளிதாக தங்கள் அன்றாட உணவில் இடம்பிடிக்க வைக்கலாம் என இதோ சில யோசனைகள்.

தினை பக்கோடா

தேவையான பொருட்கள்

                தினை மாவு     –   100 கிராம்

                கடலை மாவு   –   50 கிராம்

                சின்ன வெங்காயம்-  200 கிராம்

                இஞ்சி              –   சிறிய துண்டு

                கொத்தமல்லி  –   சிறிதளவு

                கறிவேப்பிலை            –   சிறிதளவு

                எண்ணெய்      –   தேவைக்கேற்ப

                மஞ்சள் தூள்    –   1 சிட்டிகை

                உப்பு               –   தேவைக்கேற்ப

செய்முறை

தினை மாவு, கடலை மாவு மற்றும் அதனுடன் நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, நறுக்கிய இஞ்சி, மஞ்சள் தூள், உப்பு அனைத்தையும் ஒன்றாக கலந்து அதனுடன் 2 ஸ்பூன் சுட வைத்த எண்ணெய் விட்டு, தேவையான அளவு நீர் சேர்த்து பிசிறினார் போல பிசைந்து கொள்ளவும். பின்பு வாணலியில் எண்ணெய் விட்டு நன்கு காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள பக்கோடா மாவை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

தினை சப்பாத்தி

தேவையான பொருட்கள்

                தினை மாவு     – 1/2 கிலோ

                முருங்கை இலை- 1 கட்டு

                நெய்                – தேவையான அளவு

                மிளகுத்தூள்    – 1/2 ஸ்பூன்

                உப்பு               – தேவைக்கேற்ப

செய்முறை

தினை மாவு, உப்பு, மிளகுத்தூள், கீரை இவை அனைத்தையும் தேவையான அளவு நீர் விட்டு பிசைந்து கொள்ளவும். பின்பு அதை உருண்டையாக உருட்டி, சப்பாத்தி திரட்டவும். அடுப்பில் தவாவை வைத்து அதில் திரட்டிய சப்பாத்தியை போட்டு, அதை சுற்றி நெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

ஆயுர்வேதம்.காம்


Spread the love