காலில் தோன்றும் சேற்றுப் புண், பித்த வெடிப்பு
பித்த வெடிப்பு தோன்ற என்ன காரணம்?
கால்களை சுத்தமாக வைத்துக் கொள்ளாவிட்டால், சேற்றுப் புண், பித்த வெடிப்புகள் ஏற்படும். பித்த வெடிப்பு என்பது அநேகமாக பாதங்களில் அடிப்பாகத்தில் சருமம் வெடித்துப் போவது. இது முக்கியமாக குதிகால்களில் ஏற்படும். இருந்தாலும் பாதம் முழுவதும் பரவும். அபூர்வமாக சிலருக்கு உள்ளங்கையில் கூட வெடிப்புகள் ஏற்படும். பாதங்களின் தோல் தடிமனாக இருப்பதால் அதிகம் வியர்ப்பது இல்லை. இதனால் அழுக்கு சேர்ந்து பித்த வெடிப்புகள் உண்டாகும். எப்போதும் குழாயடி, கிணற்றடியில் தண்ணீரில் புழங்கிக் கொண்டு இருப்பவர்களுக்கு சேற்றுப் புண் ஏற்படும். கால் விரல்களிடையே புண்கள் தோன்றி, வேதனை தரும். பூஞ்சைத் தொற்றாலும் Tineapedis ( Athletis Foot) கால், விரல் இடுக்குகளில் புண்கள் உண்டாகும்.
சேற்றுப் புண், பித்த வெடிப்பு தவிர்க்கும் வழிகள்:
1. பாதங்களை வாரம் இருமுறை ஒரு வாளி வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் டெட்டால் கலந்து, அதில் 10 நிமிடம் அமிழ்த்தி வைக்க வேண்டும். அமிழ்த்தும் முன்பு, பாதங்களில், கால்களில் நல்லெண்ணெய் தடவலாம். சுடு தண்ணீரில், அரை லிட்டர் தண்ணீருக்கு ஒரு தேக்கரண்டி என்ற அளவில் கடுகுப் பொடியை சேர்க்கலாம். சுடு நீரில் உப்பு கூட சேர்க்கலாம்.
2. கால் வெடிப்புகளுக்கு, முந்திரிக் கொட்டை தோலிருந்து எடுக்கப்படும் எண்ணெய், வெளிப்பூச்சாக குணமளிக்கும்.
3. மாங்காயிலிருந்து எடுக்கப்படுற ஜூஸையோ, இல்லைனா மாவிலையிலிருந்து எடுக்கப்படுற ஜூஸையோ, பாதவெடிப்புக்கு மேல தடவினால் அதுவும் கூட பாத வெடிப்பை சரியாக்கும்.
4. தூங்குவதற்கு முன் பாதங்களில் வாசலின் அல்லது பெட்ரோலியம் ஜெல்லியைத் தடவலாம்.
5. இரண்டு ஸ்பூன் எலுமிச்சையின் தோலினை பொடி செய்தது எடுத்துக் கொண்டு 10 மி.லி. தேங்காயெண்ணெயில் கலந்து புண்களின் மீது பூசலாம்.
6. சிலருக்கு இரவில் கடுக்காயை அரைத்து கால் பாதத்திலுள்ள புண்களின் மேல் பூசிக் கொண்டு படுத்துக் கொள்வது, காலையில் கழுவி விடுவது என்று செய்து வந்தால் குணம் ஏற்படலாம்.
7. கடுக்காயை மஞ்சளுடன் அரைத்துப் பூசுவதுண்டு.
8. கத்தைக் காம்பு ( காசிக் கட்டியை ) நீர் விட்டு கரைந்த உடன் களிம்பை பூசிக் கொள்ளலாம்.
9. உலர வைத்த எலுமிச்சம் தோல் பொடியை இரண்டு ஸ்பூன் எடுத்து 10 மி.லி. தேங்காய் எண்ணெய்யில் கலந்து வெடிப்புகளின் மேல் பூசலாம்.
10. வெளியே சென்று விட்டு, வீட்டிற்குள் வரும் போது, பாதங்களை சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். ஈரம் போக பாதங்களை நன்கு துடைக்க வேண்டும். பலர் குளிக்கும் போது கால்களில் சோப்பு போடுவது இல்லை. சோப்பு போட்டுக் கழுவி, துடைத்து தேங்காய் எண்ணெய் அல்லது மாய்ஸ்சரைசர்களை தடவ வேண்டும்.
11. படுக்கப் போகும் முன்பு கால்களில், பாதங்களில் எலுமிச்சைச் சாறு கிளிசரின், பன்னீர் இவற்றில் தலா 2 ஸ்பூன்கள் எடுத்து கலந்து கலவையை தடவிக் கொள்ளவும்.
12. பாதங்களில் ஏதும் புண் ஏற்பட்டால், உடனே கவனிக்கவும். குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் கால்களை கண்டிப்பாக பராமரிக்க வேண்டும்.
13. கால் வெடிப்புகளுக்கு தரமான ஆயுர்வேத களிம்புகள் கடைகளில் விற்பனையாகின்றன. அவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம்.
கால்களையும் கொஞ்சம் கவனியுங்கள்:
இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையாவது கால்களை பிரத்யேகமாக பராமரிக்க வேண்டும். ஒரு தொட்டியில் (Tub) வெதுவெதுப்பான நீருடன், ஷாம்பூ அல்லது தாவர எண்ணெய் கலந்து அதில் உங்கள் கால்களை குறைந்தது 15 நிமிடங்கள் அமிழ்த்தி வைக்கவும். மூலிகைகள், மூலிகை எண்ணெய்களையும் கால்களை அமிழ்த்தும் நீருடன் சேர்க்கலாம். இல்லையெனில், 10 மி.லி. டெட்டால் உடன் 10 மி.லி. ஷாம்பூவையும் சேர்க்கலாம்.
கால்களில் இரத்த ஓட்டம் சரியாக வந்தடைய, ஒரு முறையாவது கால்களை மாறி, மாறி குளிர்ந்த நீரிலும், வெந்நீரிலும் அமிழ்த்தி வைக்கலாம். இதற்கு இரண்டு டப்கள் தேவை. ஒன்றில் வெந்நீர் உடன் 20 மி.லி. நல்லெண்ணெயினை கலந்து வைக்கவும். மற்றொன்றில் குளிர்ந்த நீர் இருக்கட்டும். கால்களை வெந்நீரில் 5 நிமிடம், குளிர்ந்த நீரில் 5 நிமிடம் என்று மாற்றி, மாற்றி அமிழ்த்தி வைக்கவும். இதை 5 அல்லது 6 முறை செய்யலாம்
கால்கள் “இறந்த” செல்களை நீக்குவதற்கு Pumice கல்லால் தேய்க்கவும். பாதங்களில் ஈரப்பசை தரும் லோஷன்களை தேய்க்கலாம். குளிப்பதற்கு முன் உள்ளங்கால்,கால் விரல் இடுக்குகள், நகங்கள், கணுக்கால், குதிகால் சதை இவற்றில் எண்ணெய் தேய்த்துக் கொள்வது அவசியம்.