பாத பராமரிப்பு

Spread the love

பாதங்கள் நம் உடலில் மிகவும் இன்றியமையாததாகும்.  இது உடலை தாங்கி உடல் சார்ந்த பிரச்சனைகளை வெளிப்படுத்துகிறது. நமது பாதங்கள் 26 எலும்புகள்  33 மூட்டுகள் 50-க்கும் மேற்பட்ட தசைநார்கள், இரண்டரை இலட்சத்திற்கும் மேற்பட்ட வியர்வை சுரப்பிகள் போன்றவற்றை உள்ளடக்கிய அமைப்பாகும். பாத அழகு மற்றும் பராமரிப்பு முறை பற்றி பார்க்கலாம்.

பாத பராமரிப்பு முறை

பாதங்களில் எண்ணெய் சுரப்பி  இல்லாததால் எளிதில் வறட்சி அடைகின்றது. எனவே தான் பாத பராமரிப்பு மிகவும் அவசியமாகும். பாதத்தில் வலி அல்லது அலர்ஜி ஏற்படுவதால் கணுக்காலில் உள்ள தசை நார்கள் பாதிக்கப்படுகின்றது. இது சமச்சீரற்ற கால் பதிப்பினால்  ஏற்படுகிறது. சர்க்கரை நோயாளிகள் ஆண்டு தோறும் கால்களை பரிசோதனை செய்வது அவசியமாகும்.

பாத வறட்சி நீங்க

தேங்காய் எண்ணெயை இரவு தூங்குவதற்கு முன் பாதங்களில் நன்கு தடவி வர பாத வறட்சி, குதிகால் வெடிப்பு நீங்கும்.

பாதம் அழகு பெற

ஒலிவ எண்ணெயில்  [Olive Oil] அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது. இதனை  தினமும் பாதங்களில் தடவி நன்கு மசாஜ் செய்து வர பாதங்கள் அழகு பெறும்.

பாதங்கள் மென்மையாக தினமும் குளிக்கும் நேரத்தில் இளஞ்சூடான நீரில் பாதத்தை  ஊற வைக்கலாம்.

குதிகால் வெடிப்பு நீங்க

நாம் உண்ணும்  பப்பாளிப் பழமும்  குதிகால் வெடிப்பிற்கு மிகச்சிறந்த  மருந்தாகும். இதனை தேவையான அளவு  எடுத்து பாதங்களில் உள்ள வெடிப்பு பகுதியில்  தடவி நன்கு  காய்ந்ததும் கழுவவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதால்  பாத வெடிப்பிலிருந்து எளிதில் விடுபடலாம்.

வீட்டில் உள்ள மருதாணி இலையை நன்கு அரைத்து வெடிப்பு உள்ள இடங்களில் வாரந்தோறும் தடவி வரலாம்.

கால் பாதத்தில் அதிக அளவு வெடிப்பு இருப்பின் மருத்துவ ஆலோசனையின்படி சிகிச்சை பெறுதல் நல்லது.

இரத்த ஓட்டம் அதிகரிக்க

நம் பாதத்தில் இரத்த ஓட்டம் அதிகரிக்க பாதத்தை அடிக்கடி உயர்த்துதல், நின்று கொண்டிருத்தல், கால்களை நீட்டி நடத்தல் போன்ற உடற்பயிற்சிகள் செய்யலாம். மேலும் மசாஜ் செய்வதும், இதமான சுடுநீரில் பாதத்தை கழுவுவதும் சிறந்த வழிமுறையாகும்.

பாத பராமரிப்பில்  கடைபிடிக்க வேண்டியவை

எலுமிச்சை பழத்தோலை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை என பாதங்களில் நன்கு தேய்த்து கழுவவும். இது பாதங்களில் உள்ள அழுக்கு மற்றும் கிருமிகளை  அழிக்க உதவுகின்றது.

பாதங்களின் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி சிறந்ததாகும்.  நமது சருமத்திற்கு ஏற்ற சோப்பை பயன்படுத்தி பாதங்களை நன்கு கழுவலாம்.

தவிர்க்க வேண்டியவை

பாதங்களில் வியர்வை சுரப்பிகள் காணப்படுவதால் வியர்க்கும் சமயத்தில் காலணி அணிவதை தவிர்க்கலாம். உடற்பயிற்சி செய்யும் போது பொருத்தமான தடகள காலணிகளை அணியலாம்.

அழுத்தமான, பெரிய அளவிலான அல்லது சரிவர பொருந்தாத காலணிகள் அணிவதைத் தவிர்ப்பது நல்லது.

பாத நகங்களில் பூசும் நகப் பூச்சுகளை நீண்ட காலம் விடுவதை தவிர்த்து சில நாட்களில் சுத்தம் செய்யவும். இல்லையெனில் நகங்கள் பாதிக்கப்பட்டு நகத்தின் இயற்கை நிறமும் நீங்கலாம்.

கால் ஆணி

நாம் பாதங்களை சரிவர பராமரிக்காததால் பூஞ்சை தொற்று, கால் ஆணி போன்ற பிரச்சனைகள் நம் உடலில் ஏற்படுகின்றது.

கால் ஆணி ஏற்பட காரணங்கள்

கால் ஆணி உள்ளங்கால்களில் அதிகளவில் ஏற்படுகின்றது. இது கால் விரல்களின் பக்கவாட்டிலும் ஏற்படலாம். அதிகமான உடல் அழுத்தம், குறைந்த அளவிலான காலணிகளை அணிவது, வெறும் கால்களில் நடத்தல், தோல் தடித்து போகுதல், லேசான சிராய்ப்பு போன்ற  பல்வேறு அழுத்தங்கள் கால் ஆணி ஏற்பட முக்கிய காரணங்களாகும். இதன் மேல் எவரும் பெரிதளவில் கவனம் செலுத்துவது  இல்லை.

மேலும் சர்க்கரை நோய் அல்லது பெரிஃபெரல் வாஸ்குலர் நோய் பாதிப்பின் காரணமாகவும் கால் ஆணி ஏற்படலாம்.

அறிகுறிகள்

பாதத்தில் தொடர்ந்து அழுத்தம் ஏற்படுவதால் வெள்ளை நிறத்தில் தோல் தடித்து சிறிய மேடு தோன்றும். தொடர்ந்து மேற்புறத் தோல் உலர்ந்து கொப்புளங்கள் ஏற்படும். சில நேரங்களில் கட்டி  உடைந்து இரத்தப் பெருக்கம் ஏற்படலாம். நடக்கும் போதும், நிற்கும் போதும் தாங்க முடியாத வலி  ஏற்படும்.

வாரத்திற்கு ஒரு முறை நம் பாதங்களை சுத்தம் செய்து, அழுக்குகள் சேர்வதை  தவிர்த்து   வந்தாலே தொற்றுகள்  ஏதும் நேரிடாமல்  பாதுகாக்கலாம்.

நம் வீட்டிலேயே பாதங்களை பெடிக்யூர் சிகிச்சை செய்வதைப் பற்றி பார்க்கலாம்.

பெடிக்யூர் சிகிச்சை

தேவையான பொருட்கள்

பால்            –     2 – 4 கப்

பேக்கிங் சோடா  –     3 டேபிள் ஸ்பூன்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் பால் ஊற்றி நன்கு வெதுவெதுப்பான நிலையில் சூடேற்றவும். பின் ஓர்  அகன்ற பாத்திரத்தில் வெதுவெதுப்பான பாலை ஊற்றி  அதில் சிறிதளவு பேக்கிங் சோடா சேர்த்து நன்கு  கலக்கவும். இதில் 10 முதல் 15 நிமிடங்கள் பாதங்களை நன்கு ஊற வைக்கவும். பின்  ஸ்க்ரப்பர் கொண்டு பாதங்களை தேய்த்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். கழுவியதும் பாதங்களை துணியால் துடைத்து எண்ணெய் அல்லது மாய்ஸ்சுரைசர் தடவவும்.

இவ்வாறாக வாரத்திற்கு ஒரு முறை செய்து வர பாத வெடிப்புகள், பாத வறட்சி நீங்கி  பாதங்களின் அழகும், மென்மைத்தன்மையும் அதிகரிக்கும்.

ஆயுர்வேதம்.காம்


Spread the love